அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தேர்தலுக்கு பின் ஈழத்தை பற்றி ஜெயலலிதா பேச மாட்டார்: திருமாவளவன்

thirmavala.jpgராஜபக்சேவின் குரலை பிரதி பலிக்கும் ஜெயலலிதா இன்று ஓட்டுக்காக ஆதாயம் தேடி தனி ஈழம் பெற இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன் என்பது முற்றிலும் மோசடித்தனமான பேச்சு.வருகின்ற 11 ந்தேதிக்கு பிறகு ஈழத்தை பற்றி ஜெயலலிதா பேசவே மாட்டார் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கை முல்லைத்தீவில் இலங்கை ராணுவம் சுற்றி வளைத்து 11/2 லட்சம் ஈழத் தமிழர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். உணவு, உடை, மருந்து மற்றும் இருப் பிடம் இல்லாமல் கொடூரமான முறையில் அல்லலுக்கு ஆட்பட்டு வருகிறார்கள். இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் பெற்றுத் தருவேன் என்று ஜெயலலிதா கூறியது பற்றி கேட்டதற்கு தேர்தலுக்காக எதையும் எப்படியும் பேசுவார் ஜெயலலிதா என்பதற்கு இது சான்று. தனி ஈழத்திற்கு நேர் எதிரான கொள்கைகளை உடையவர் ஜெயலலிதா. புலிகளை பயங்கரவாதிகள் என்றும் புலிகளின் தலைவர் பிரபா கரனை இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என்றும் பேசியவர் ஜெயலலிதா. தேர்தல் நேரத் தில் வாக்குசேகரிக்க தற்போது தனி ஈழம் பற்றி பேசுகிறார். புலிகளை பற்றி தற்போதைய அவர்களின் நிலை என்ன என்பது பற்றி முதலில் விளக்க வேண்டும்.

இன்றும் புலிகளை பயங்கர வாதிகள் என்று கூறுகிறாரா? போராளிகள் என்று கூறு கிறாரா என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். ராஜ பக்சேவின் குரலை பிரதி பலிக்கும் ஜெயலலிதா இன்று ஓட்டுக்காக ஆதாயம் தேடி தனி ஈழம் பெற இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன் என்பது முற்றிலும் மோசடித்தனமான பேச்சு.வருகின்ற 11 ந்தேதிக்கு பிறகு ஈழத்தை பற்றி ஜெய லலிதா பேசவே மாட்டார்.எனவே ஜெயலலிதாவின் மாய் மால ஜாலங்களில் தமிழக மக்கள் ஏமாறக்கூடாது என்று கூறினார்.

தமிழகத்தில் தி.மு.க.வின் வெற்றிவாய்ப்பு பற்றி கேட்டதற்கு தி.மு.க.வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும்,ஈழத்தமிழர் பிரச்சினையை பயன்படுத்தி எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என்று இல்லாதது பொல்லாதது எல்லாம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனக்கே எதிரான கருத்துக்களை சொல்லி வருகி றார். ஆனால் அவருடைய கூட்டணி கட்சியினர் அடிக் கடி தங்களுடைய நிலைப் பாடுகளை மாற்றி கொள்ளக் கூடியவர்கள் என்ற உண்மை மக்களுக்கு தெரிந்துள்ளதால் யாரும் நம்ப தயாராக இல்லை.எனவே இத்தகைய அவதூறு பிரசாரங்களை தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை பாதிப்படை வைக்க முடியாது என்றார்.

வன்னி மக்களுக்கு ஒருவேளையாவது உணவளித்து உயிர்காக்க உதவுங்கள் – திருமலை, மட்டு .மறை மாவட்ட துணை ஆயர் அவசர கோரிக்கை

Wanni_War_IDPsமன்னார் மாவட்டத்தில் தினமும் பஸ்களில் கொண்டுவந்து குவிக்கப்படும் வன்னி அகதிகளுக்கு குடிநீருக்கும் உணவுக்கும் உதவுமாறு திருமலை, மட்டு .மறை மாவட்ட துணை ஆயர் வண. பொன்னையா ஜோசப் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;கடந்த 24 ஆம், 25 ஆம் திகதிகளில் மன்னாருக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டு விட்டு திரும்பிய பின் அவர் மட்டு. ஆயரில்லத்தில் வைத்து இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார்.

வன்னியின் போர் பிரதேசத்துக்குள்ளிருந்து தினம் தினம் வவுனியாவுக்குக் கொண்டுவரப்படும் அகதிகளில் பெரும்பாலானோரை வவுனியா செட்டிகுளம் மன்னார் வீதியின் இரு மருங்கிலுமுள்ள காட்டுப்பிரதேசங்களில் அரசாங்கம் கொண்டுவந்து இறக்கியுள்ளது. இப்பகுதிகளை அரச அதிகாரிகள் இயந்திரங்களை கொண்டு துரிதமாக துப்புரவு செய்துகொடுக்க, அவ்விடங்களில் தற்காலிக கொட்டில்களும் கூடாரங்களும் மலசல கூடங்களும் அமைக்கும் அவசர பணிகளில் யுனிசெப் அமைப்பும் கரித்தாஸ்(செடெக்) நிறுவனமும் இணைந்து செயலாற்றிக்கொண்டிருக்கின்றன.

தாம் மன்னாரில் நின்ற கடந்த 24 ஆம் ,25 ஆம் திகதிகளில் மிகப் பெருந்தொகையான பெண்களும் சிறுவர்களும் சிறுமியர்களும் வயது முதிர்ந்த ஆண்களும் பஸ்களில் கொண்டுவந்து இறக்கப்படுவதைக் கண்டோம். இவர்கள் உடுத்த உடுப்புக்கு மாற்றுடையில்லாமல் வெறும் கையினராகவே காணப்பட்டனர். இவர்கள் மத்தியில் ஆண்கள் தொகை குறைவாயிருந்தது. இறக்கப்பட்டவர்களில் பலரும் காடுமேடென்றும் பாராமல் பசியினாலும் தாகத்தினாலும் மயங்கிவீழ்ந்து கிடக்கக் காணப்பட்டனர். இந்தக்கையறு நிலையில் அவர்களுக்கு எதுவும் வழங்கக்கூடிய நிலையில் யாரும் இருக்கவில்லை. இவர்களுக்கு தினமும் ஆயிரம் உணவுப் பார்சல்களையாவது வழங்கமுடியாத நிலையில் தாங்களிலிருப்பதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் என்னிடம் கூறிக்கண்ணீர் வடித்தார்.

இந்த நேரத்தில் இன,மத பேதங்களுக்குமப்பால் மனிதநேயத்துடன் மற்றவர்கள் அந்த அகதிகளுக்கு உணவளிக்க முன்வரவேண்டும். நாள்தோறும் அவர்களுக்கு உணவளிப்பதே முக்கியம்.அதுவே அவசரம். அதன்பிறகே மற்றதெல்லாம். நேற்றைய நாள் கடந்துவிட்டது. நாளை என்ன நடக்குமோ தெரியாது. இன்றைய நாள் எமது கரங்களில் உள்ளது. இன்று துன்பத்தில் ஓலமிடும் எமது சகோதரர்களின் அவலக்குரலைக்கேட்டும் நாம் உதவிசெய்யமறுத்தால், பின் வாங்கினால் நாம் வாழ்ந்தும் பயனில்லை. நாளைவரை காத்திருக்கவேண்டாம். இன்று அவர்களுக்கு உணவளிக்காவிட்டால் நாளை அவர்கள் இருக்கமாட்டார்கள்.

உணவோடு குடிநீரும் குழந்தைகளுக்காக பால்மா, மருந்துப்பொருட்கள்,உடைகளும் அவர்களுக்குத்தேவை .அவலப்படும் இவர்களுக்கு செய்யும் உதவிகள் அந்த இறைவனுக்கே செய்வதாகுமென்று ஆயர் தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் பிரபாகரனை பாதுகாக்க முயற்சித்தால் அது பகற்கனவாகவே முடியும் – அமைச்சர் முரளிதரன்

Karuna Colதமிழ் மக்களின் எதிர்கால நலன்களுக்கு உதவ சர்வதேச சமூகம் முன்வர வேண்டுமே தவிர பிரபாகரனைப் பாதுகாக்க முயற்சித்தால் அந்த முயற்சி வெரும் பகற்கனவாகவே அமையுமென அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்படும் மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமானதாக்க சகல சர்வதேச நாடுகளும் உதவுவதுடன் யுத்தத்தினால் அழிந்து போயுள்ள பிரதேசங்களைக் கட்டியெழுப்ப முன்வரவேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றுமுன்தினம் அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-சர்வதேச சமூகம் யுத்த நிறுத்தமொன்றைக் கோருகிறது. பிரிட்டிஷ், அமெரிக்க படைகள் ஈராக்கில் யுத்தம் புரிந்த போதும் ஆப்கானிஸ்தானில் படைகள் போராடிய போதும் சர்வதேச சமூகம் அது மனிதாபிமான நடவடிக்கை என்கிறது. அப்படியானால் இன்று வன்னியில் மாபெரும் மனிதாபிமான நடவடிக்கையே நடைபெறுகிறது.

பிரபாகரனிடமிருந்து எஞ்சிய மக்களையும் மீட்கும் மனிதாபிமான நடவடிக்கை இடம்பெறுகிறது. இந்த இராணுவ நடவடிக்கை மிகவும் தேவையானது. இதை உணராது சர்வதேச சமூகம் யுத்த நிறுத்தம் கோருவது தவறானது எனெவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கோவையில் 5 ராணுவ லாரிகளுக்கு தீவைப்பு – வீரர்கள் மீது தாக்குதல்

கோவை அருகே, இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் கொண்டு போகப்படுவதாக பரவிய தகவலைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் வந்த வாகனத்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி தாக்கினர். ராணுவ லாரிகளையும் தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை அருகே மதுக்கரை என்ற இடத்தில் ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத்துக்குப் பயிற்சிக்குச் சென்றிருந்தனர்.

பின்னர் அங்கு பயிற்சியை முடித்து விட்டு இன்று கொச்சி வழியாக கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். மொத்தம் 60 வாகனங்களில் அவர்கள் வந்தனர். இந்த நிலையில், அந்த வாகனங்களில் இலங்கைப் படையினருக்கான ஆயுதங்கள் கொண்டு போகப்படுவதாக தகவல் பரவியது.

இதையடுத்து பெரியார் திராவிடக் கழகத்தினர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் அங்கு விரைந்தனர். நீலாம்பூர் பைபாஸ் சாலையில், ராணுவ லாரிகளை தடுத்து நிறுத்தி தாக்குதலில் இறங்கினர். ராணுவ லாரிகளில் இருந்த பொருட்களை எடுத்து கீழே வீசி சேதப்படுத்தினர். சில ராணுவ வீரர்களும் தாக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் சிலர் லாரிகளுக்குத் தீவைத்தனர். இதி்ல் 5 லாரிகள் தீயில் சேதமடைந்தன. இதையடுத்து ராணுவ வீரர்கள் லத்திகளுடன் கீழே இறங்கி தாக்குதலில் ஈடுபட்டவர்களை மீது தடியடி நடத்த ஆரம்பித்தனர். சரமாரியாக கண்களில் பட்டவர்களையெல்லாம் அவர்கள் தடிகளால் அடித்து விரட்டினர். இதில் பலர் காயமடைந்தனர். தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். அந்தப் பகுதியே கலவரம் நடந்த பகுதி போல காணப்பட்டது. ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

ராணுவ வாகனங்களைத் தாக்கியதும், ராணுவ வீரர்களைத் தாக்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்

mahinda-rajapaksha.jpgபுதுமாத்தளன் பகுதியில் புலிகளின் பிடியில் சிக்கி யிருக்கும் சிவிலியன்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ விடுக்கும் வேண்டு கோள்:-

துரதிஷ்டவசமாக போர் தவிர்ப்பு வலயத்தில் இன் னும் பணயக் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் அனுபவிக்கின்ற சொல்லொண்ணா கஷ்டங்களை நான் நன்கு அறிவேன்.

எல்.ரீ.ரீ.ஈ.யினர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உங்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகின்றமையினால், உங்கள் கஷ்டங்கள் நீடித்துக்கொண்டே போகின்றன.

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வருமாறு உங்கள் ஒவ்வொருவரையும் நான் வேண்டுகின்றேன். உங்கள் ஒவ்வொருவருடைய பாதுகாப்பிற்கும், நலனோம்பலுக்கும் ஆகக் கூடிய முன்னுரிமையை எனது அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கும்.

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புல்மோட்டை முகாம்களில் தங்கியுள்ளோர் மத்தியில் வாந்திபேதி, பொக்குளிப்பான் தீவிரமாகப் பரவும் அபாயம்

flee0009.jpg
புல்மோட்டையில் தற்காலிகமாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பொதுமக்கள் மத்தியில் வாந்திபேதி, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் பரவிவருவதாகவும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காவிட்டால், இந்நோய்கள் பெரிய அளவில் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் அங்கு தங்கியுள்ள பொதுச் சுகாதாரக்குழு தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட சுகாதாரத்தைப்பேணும் வசதிகள் செய்து கொடுக்கப்படாமை, குறுகிய இடத்தில் நெருக்கமாக மக்களை தங்கவைத்திருப்பது ஆகியனவே நோய்பரவுவதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மக்கள் முல்லைத்தீவிலிருந்து உடுத்தியிருந்த உடுப்புடன் மட்டுமே வந்துள்ளனர். அவர்களுக்கு உள்ளாடைகள் உடனடியாக வழங்கப்படவேண்டம். சவர்க்காரம், பற்பசை, பல்பிரஷ், சுகாதாரத்துணிகள், செருப்புகள், எல்லாருக்கும் உடைகள், குழந்தைகளுக்கு பால்மா உணவு மற்றும் அத்தியாவசிய உணவுகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடியாக வழங்கப்படவேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் – தலைமன்னார் சோதனைச்சாவடி இடமாற்றம்

sri-lanka-army.jpgமன்னார் தலைமன்னார் பிரதான வீதியின் 3ஆம் மைல்கல் பகுதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பயிற்சி நிலையத்தில் கடந்த பல வருடங்களாகக் கடற்படையினர் முகாமிட்டு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த சில தினங்களாக மேற்படி மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின் 3ஆம் மைல்கல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனை நடவடிக்கைகள் குறைந்துள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

மேற்படி 3ஆம் மைல்கல் பகுதியில் அமைந்திருந்த கடற்படையினரின் சோதனைச் சாவடி தற்போது மன்னார் நுழைவாயிலில் உள்ள கோட்டை சோதனைச்சாவடியுடன் இணைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சிசபை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு நுவரெலியா மாநகரசபையில் தீர்மானம்

sri-lanka-upcountry.jpg அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருக்கும் உள்ளூராட்சிசபை சட்டமூலத்திற்கு எதிர்புத் தெரிவித்து நுவரெலியா மாநகரசபையின் ஏப்ரல் மாதத்திற்கான பொதுக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்ன தலைமையில் கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகரசபை உறுப்பினர் எல்.நேருஜி மேற்படி தீர்மானத்தை சபைக்கு சமர்ப்பித்தார்.

அவர் அங்கு உரையாற்றுகையில்;

அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருக்கும் உள்ளூராட்சிசபை சட்டமூலம் அமுலுக்கு வந்தால் சிறுபான்மையினரதும் சிறுபான்மை கட்சிகளினதும் பிரதிநிதித்துவம் குறையும். குறிப்பாக நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை போன்ற மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் மாத்திரமல்லாமல் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவங்களும் குறைவடையும். எனவே உள்ளூராட்சி சபைகளும் மாகாணசபைகளும் இந்த புதிய சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் இந்த புதிய சட்டட மூலத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்ற போது மாகாண சபைகளின் தீர்மானத்துடன் மீண்டும் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே மாகாணசபைகளும் இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்.

கடந்த 1978 ஆம் ஆண்டிலிருந்து நுவரெலியாவில் வருடம் தோறும் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்டுவந்த ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகள் அரசியல் தலையீட்டால் இம் முறை சிறப்பாக நடைபெறவில்லை. மலர்க் கண்காட்சியை தவிர ஏனைய நிகழ்ச்சிகள் முறையாக நடைபெறவில்லை. ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகள் நடத்துவதற்கு நகரமுதல்வருக்கு சகல அதிகாரங்களும் வழங்கவேண்டும்.

நுவரெலியாவில் காணிவேல் களியாட்ட விழாக்கள் நடத்துவதற்கு பாதுகாப்பு சூழ்நிலையை காரணம்காட்டி பொலிஸார் அனுமதிவழங்கவில்லை. ஆனால், பண்டாரவளையில் காணிவேல் களியாட்ட விழா நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நுவரெலியாவிற்கு வருகை தந்த உல்லாச பிரயாணிகள் அதிகமானோர் பண்டாரவளைக்குச் சென்றனர். இதனால், நுவரெலியா வாழ் மக்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. எனவே எதிர்வரும் வருடங்களில் அரசியல் தலையீடு இல்லாமல் நகரமுதல்வர் சகல அதிகாரங்களையும் பெற்று சிறந்த முறையில் வசந்த கால நிகழ்வுகள் நடத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றார்.

இக்கூட்டத்தில் பிரதி நகர முதல்வர் கிருஷ்ணசாமி சந்திரசேகரன் உரையாற்றுகையில் ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகள் சிறந்த முறையில் நடத்தமுடியாமல் போனதற்கான காரணத்தை நகரமுதல்வர் பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலம் தெரிவிக்கவேண்டும்.

வழமையாக ஏப்ரல் வசந்தகாலம் தற்காலிக கடைகளை மாநகரசபைதான் வழங்கி வந்தது. ஆனால், இம்முறை வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் நகர அபிவிருத்தி அதிகார சபையினரும் தற்காலிக கடைகள் அமைத்து குத்தகைக்கு கொடுத்தனர். இதனால் மாநகர சபைக்கு கிடைக்கும் வருமானமும் இல்லாமல் போயுள்ளது. எனவே எதிர்வரும் வருடங்களில் இடையூறு செய்யாமல் வசந்த கால நிகழ்வுகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக்கூறினார்.

புல்மோட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டோரில் ஒரு பகுதியினர் தம்புள்ள வைத்தியசாலைக்கு மாற்றம்

icrc.jpgபுல்மோட்டை வைத்தியசாலையிலிருந்து தம்புள்ள வைத்தியசாலைக்கு செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் காயமடைந்தவர்கள், நோயாளர்கள் மற்றும் அவர்களின் உதவிக்கென வந்த 66 பேர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.  புதன் 28 பேரும் செவ்வாய் 38 பேரும் இவ்வாறு கொண்டுவரப்பட்டதாக தம்புள்ள வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த 27 ஆம் திகதி பதவியா வைத்தியசாலையிலிருந்தும் 52 நோயாளர்கள் இவ்வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட 118 பேரும் தம்புள்ள வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், காயமடைந்த 34 ஆண்களும் 26 பெண்களும் 9 குழந்தைகளும் காணப்படுகின்றனர். இக்குழந்தைகளில் ஒன்று மட்டுமே ஆண் குழந்தையாகும். ஏனைய 49 பேரும் அவர்களுக்கு உதவிக்கென வந்த குடும்பத்தவர்களாவர்.

இவர்கள் நெடுங்கேணி, முல்லைத்தீவு, கிளிநொச்சி, சண்டிலிப்பாய் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்படுகின்றது. புதன் காலையும் செவ்வாய் இரவும் இந்நோயாளருக்கு உணவுகள் ஏதும் வழங்கப்படாமையால் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் சில தனியார் ஸ்தாபனங்கள் தம்புள்ள நகர உணவகங்களிலிருந்து அவர்களுக்கான உணவைப் பெற்றுக்கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தம்புள்ள வைத்தியசாலை புதிய கட்டிடத் தொகுதியில் நோயாளர்கள் தங்குவதற்குரிய ஏற்பாடுகளை வைத்தியசாலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளதுடன், அவர்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்கும் புகைப்படம் எடுப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.  வைத்தியசாலை புதிய கட்டிடத் தொகுதியைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவியை கடத்தி துஷ்பிரயோகம் சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்

ரத் தோட்டை பல்லேதென தோட்டத்தைச் செர்ந்த 14 வயது பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ரத்தோட்டை பொலிஸார் சந்தேக நபர்களை தேடிவருகின்றனர். கடந்த 27 ஆம் திகதி புதன்கிழமை இம்மாணவி பாடசாலைக்கு சென்றபோது இனம் தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை வீட்டிற்கு முன்பாக கொண்டுவரப்பட்டு விடப்பட்டார்.

இதேவேளை, மாணவி புதன்கிழமை இரவு வரை வீடு திரும்பாததால் உறவினர்கள் ரத்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர். வியாழக்கிழமை காலை வீடு வந்த மாணவியிடம் எங்கே போனாய், என்று கேட்டபோது, தன்னை சிலர் கடத்தியதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியாது என்றும் கூறினார்.

கடத்தியவர்களையும் தெரியாது எனவும் எங்கே கடத்திச்சென்றனர் என்றும் தெரியாது என்றும் மாணவி தெரிவித்தார். மனநிலை பாதிக்கப்பட்ட இம் மாணவி முதலில் ரத்தோட்டை ஆஸ்பத்திரியல் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாத்தளை ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இம்மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதில் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இவரின் தாயார் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணி புரிந்துவருகிறார்.