அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அரசாங்க ஊழியர்களுக்கு இலகு கடனில் வீட்டு வசதி

sarath.jpgஅரசாங்க ஊழியர்களுக்கு குறைந்த வட்டியுடன் இலகு கடன் முறையில் வீடொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப் படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

இதற்கிணங்க தற்போது, 1,500 வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் கொழும்பிலும் கண்டியிலும் புதிய வீட்டுத் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப் படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வீடொன்றைப் பெற்றுக்கொள்ள விருபும் அரச ஊழியர்கள் அரச சேவையில் நிரந்தர நியமனத்தைக் கொண்டவராகவும் ஐந்து வருடத்தை நிறைவுசெய்தவராகவும் இருத்தல் வேண்டும். இவர்களுக்கு அரசாங்கம் குறைந்த வட்டி வீதத்தில் சகல வசதிகளையும் கொண்ட வீடுகளைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானித்துள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பொதுநிர்வாக அமைச்சுக்கு ஏற்கனவே கிடைத்துள்ளதுடன் இதற்கிணங்க காலியில் 1,500, வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. கொழும்பில் கெப்பொட்டிபொல மாவத்தையிலும் கண்டி குண்டசாயிலும் இத்தகைய வீட்டுத் திட்டங்களுக்கான நிர்மானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் அமுனுகம அரசாங்கம் நகரங்களைப் போன்றே கிராமியப்புறங்களையும் அபிவிருத்தி செய்வதில் முனைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

நலன்புரி நிலையங்களுக்கு தொலைபேசி வங்கி வசதிகள்

imobile-phone.jpgயாழ் மாவட்டத்தில் வன்னியில் இருந்து இடம்பெயாந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களுக்கு தொலைபேசி சேவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு மொத்தமாக உள்ள 12 நலன்புரி நிலையங்களில் 8 நலன்புரி நிலையங்களுக்கு சிடிஎம்ஏ தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தபால் மற்றும் வங்கிச் சேவைகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 11 ஆயிரத்தி 79 பேர் இடம்பெயர்ந்து வந்து முகாம்களில் தங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

சப்ரகமுவ ஆளுநரின் இறுதிக் கிரியை இன்று

ellawala.jpgசப்ரகமுவ மாகாண ஆளுநர் காலஞ்சென்ற மொகான் சாலிய எல்லாவளவின் இறுதிக் கிரியைகள் இன்று (16) சனிக்கிழமை பலாங்கொடையில் நடைபெறுகின்றன.

சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டிருந்த மொகான் எல்லாவள கடந்த செவ்வாய்க்கிழமை (12) காலமானார்.

2008 ஒக்டோபர் மாதம் இரண்டாந் திகதி ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர், மாகாண சபை உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளருக்கு அதிபர்களுக்கான தரம் உயர்வு

susilpremjayanth.jpgஅரச சேவைகள் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை கல்வி அமைச்சின் செயலாளருக்கு பாடசாலை அதிபர்களுக்கான தரம் உயர்வு வழங்குவதற்கான அதிகாரம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். நிலவும் வெற்றிடங்கள் அனைத்துக்கும் ஏற்ற வகையில் தரம் உயர்வு வழங்கப்படவுள்ளது.

“எமது கடைசி வேண்டுகோள்…..” : புலிகள்

Eelamவிடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன், வன்னிப்பகுதியில் பாதுகாப்பு வலையம் மீது இன்று இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்திவருவது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும், ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ மீது படையினர் இன்று வெள்ளிக்கிழமை  ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களையும் வெள்ளைப் பொஸ்பரஸ் அடங்கிய இரசாயன ஆயுதங்களையும் கொண்டு தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது.  இதனால் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதி தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.

உயிரிழந்த மக்களின் உடல்கள் வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன. படுகாயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்கான எந்தவித வசதியும் இங்கு இல்லை.

மருத்துவமனைகள் இல்லாத நிலையிலும் மருத்துவ வசதிகள் இல்லாத நிலையிலும் படுகாயமடைந்த மக்கள் வீதிகளில் கிடந்தவாறு கெஞ்சி அழுதவண்ணம் உள்ளனர்.

ஆனால் எந்த வசதியும் இல்லாத நிலையில் அவர்களுக்கு எதுவுமே செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.

இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். இன்னும் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இங்குள்ள ஒரு லட்சத்து 65 பேரை காப்பாற்ற வேண்டுமானால் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இதனை எமது கடைசி வேண்டுகோளாகக் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்

பாதுகாப்பு வலையப் பகுதியில் கடும் போர் – பெரும் உயிரிழப்பு அபாயம்!

விடுதலைப் புலிகள் வசம் உள்ள மிகக் குறுகிய பகுதியைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் இறுதிக் கட்ட தாக்குதலில் இறங்கியுள்ளது. பல முனைகளிலிருந்து, கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்துள்ள பாதுகாப்பு வலையப் பகுதியில் தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் பெரும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

இன்னும் 48 மணி நேரத்தி்ல விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விடுவார்கள் புலிகள் வசம் உள்ள அனைத்து அப்பாவி மக்களும் மீட்கப்பட்டு விடுவார்கள் என இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை முதல் பாதுகாப்பு வளையப் பகுதி முழுவதிலும் இருந்து கரும்புகை வெளிவந்த வண்ணம் உள்ளது. மிகக் குறுகிய கடற்பரப்பான பாதுகாப்பு வளையப் பகுதியை அழிக்கும் வகையில் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்குள் இந்தப் பகுதியை கைப்பற்றும் முடிவில் ராணுவம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரின் விபரங்களை அரசு வெளியிட வேண்டும்: மனோ

mano-2.jpg“இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரின் விபரங்களை அரசு வெளியிட வேண்டும்” என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சுதந்திரத்திற்கான மேடையின் அரங்கம் எனும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் இன்று தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யுத்த வலய பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் விபரங்களை அரசு இரகசியமாக வைத்திருக்கின்றது. பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விடுதலைப்புலிகளிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பதைக் காரணம் காட்டி அழைத்து வரப்படுகின்றனர். இவர்கள் கம்பஹா, கண்டி போன்ற பிரதேசங்களிலுள்ள சிறைச்சாலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களின் விலாசம் மற்றும் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். முகாம்களில் பல மக்கள் சிக்கியுள்ளதால் தமது உறவினர்கள் உயிருடன் உள்ளார்களா? இல்லையா? என இலட்சகணக்கான மக்கள் பதறுகின்றனர். அவர்களுடைய வேதனையை தொலைபேசி வாயிலாக எமக்கு கூறுகிறார்கள்.எனவே முகாம்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் உள்ள மக்களின் விபரங்களை அரசு வெளியிட வேண்டும்” என்றார்.

வெள்ளவத்தையில் தற்கொலை அங்கிகள் மீட்பு!

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள ஏழு மாடிக் கட்டிடம் ஒன்றில் நான்கு தற்கொலை அங்கிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருமான  ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

புலிகளின் பிடியிலுள்ள பொது மக்களை இன்னும் 48 மணி நேரத்துக்குள் மீட்போம் – ஜேர்தானில் ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgமுல்லைத்தீவில் குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கியுள்ள புலிகளை இன்னும் 48 மணி நேரத்துக்குள் முழுமையாகத் தோற்கடித்து புலிகளின் பிடியிலுள்ள பொது மக்களை படை வீரர்கள்  விடுவித்துவிடுவார்களென நம்புகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு தொழில் புரியும் இலங்கையர்கள் மத்தியில் நேற்று உரையாற்றியபோதே இவ்வாறு கூறியுள்ளார். ஜேர்தானில் உள்ள தொழில் பேட்டையில் கெஷ வல் வெயா ஆடை உற்பத்தி நிலையத்தில் இது தொடர்பான வைபவம் நடைபெற்றது. இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது.

இலங்கையில் இப்போது என்ன நடக்கின்றது என்பதை அறிய வெளிநாட்டில் உள்ளவாகள் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது எனக்குத் தெரியும்.

2005 ஆம் ஆண்டு நான் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மகிழ்சியைக் கொண்டாட புலிகள் இடம்தரவில்லை. நிராயுதபாணிகளான படை வீரர்களை அவர்கள் படுகொலை செய்தனர். எனினும் பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்போம் என புலிகளை நாம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். ஜெனீவாவிலும் ஒஸ்லோவிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எனினும் இப்பேச்சுவார்த்தையை புலிகள் இடையில் முறித்துக்கொண்டனர்.

கிழக்கில் விவசாயத்தை நம்பி வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்களுக்கு புலிகள் தண்ணீர் வழங்க மறுத்து மாவில் ஆறு அணைக்கட்டை மூடினர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக படையினர் மனிதாபிமான நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து புலிகளை தோற்கடித்து மக்களுக்கு நீர் வழங்கினர்

மூதூர் மூஸ்லிம்களை தமது சொந்த இடங்களிலிருந்து புலிகள் விரட்டியபோது படையினர் அங்கிருந்து புலிகளை விரட்டியடித்து 40 நாட்களுக்குள் முஸ்லிம் மக்களை மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தினர். அதேபோன்று கிழக்குப் பிரதேசம் முழுவதையும் மீட்டு அங்கு ஜனாநாயத்தை உருவாக்கினோம். 2001 ஆம் ஆண்டில் புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வடக்கையும் கிழக்கையும் புலிகளுக்கு சட்டரீதியாக ஒப்படைத்தார்.

இப்போதும் அவர் மேற்குலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் புலிகளுக்கு சார்பான அந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்தோம்.

சில நாடுகள் இலங்கை போன்ற சிறிய நாடுகள் மீதே அழுத்தங்களைக் கொடுக்க முயற்சித்துவருகின்றன. இலங்கை மக்கள் நாட்டின் கௌரவத்தையும் கீர்த்தியையும் பேணிப்பாதுகாக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

வடக்கிலே இடம்பெயர்ந்த 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை நாம் ஏற்கெனவே எடுத்துள்ளோம். இந்த விடயத்தில் இதுபோன்ற யுத்தநிலைமைகள் ஏற்பட்டுள்ள ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகின்றபோது நாம் மிகவும் விரைவாக அவற்றை மேற்கொண்டுள்ளோம்.

அடுத்த கட்டமாக நாடு துண்டாடப்படுவதைத்; தவிர்க்கின்றவகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு அரசியல் தீர்வு வழங்கப்படும். எல்லா மக்களும் கௌரவத்தோடும் தன்மானத்தோடும் வாழ்வதற்கான ஒரு சுதந்திர தேசத்தைக் கட்டியெழுப்புவதே எனது நோக்கமாகும். எமது மக்களுக்கு அத்தகையதொரு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தந்த எமது படைவீரர்களை நாம் பாராட்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார். 

தப்பிச் செல்ல முயன்ற சூசையின் குடும்பத்தினர் கடற்படையினரால் கைது!

sri_lanka_navy_logo.pngபடகொன்றின் மூலம் தப்பிச் செல்ல முயன்ற கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி, மகன்,  மகள்,  மற்றும் இரு உறவினர்கள் இன்று மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் ஊடகப் பேச்சாளர் கெப்டன் டீ.கே.பி. தஸநயாக்க தெரிவித்தார். புலிகளின் பிரதேசத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேகத்துக்கிடமான படகை கடற்படையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோதே சூசையின் குடும்பத்தினர் பற்றி தகவல் கிடைத்துள்ளது.

சூசையின் மனைவி,  அவரது மகன்,  மகள்,  மற்றும் இரு உறவினர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளர். சூசை இன்னமும் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருப்பதாக சூசையின் குடும்ப உறுப்பினர்கள் படையினரிடம் தெரிவித்துள்ளனர். எந்தவொரு புலி உறுப்பினருக்கும் கடல் மூலம் தப்பிச் செல்ல முடியாதவாறு கடற்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் கெப்டன் டீ.கே.பி. தஸநயாக்க கூறினார். 

நாளை வாக்கு எண்ணிக்கை: ஏற்பாடுகள் தயார்

india-elc.jpgமக்களவைக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே ஆட்சியமைப்பதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பெற்று, மாநில கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைப்பது குறித்த முயற்சிகளில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் தனித்தனியாக ஈடுபட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், முடிவுகள் பிற்பகலுக்குள் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடுமுழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான முடிவுகளை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தேர்தல் முடிவுகளை தெரிவிக்க ஏதுவாக சுமார் ஆயிரத்து 80 பத்திரிகை தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணைய நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் பணிகளிலும், முடிவுகளைத் தெரிவிக்கும் பணிகளிலும் நாடு முழுவதும் சுமார் 60 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இரு மின்னணு தகவல் பலகைகள் வைக்கப்பட்டு, அவ்வப்போது வெளியாகும் முடிவுகள் வெளியிடப்படும். மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒரிஸ்ஸா மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் வெளியாகின்றன.