அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவவேண்டுமென ரணில் கோரவேண்டும்

ranil-wickramasinghe.jpgபேதங்களை மறக்க வேண்டுமென கேட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கு உதவி வழங்க சர்வதேச நாணய நிதியத்தை கோர வேண்டுமென அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊடக அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்தக்கோரிக்கையை விடுத்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

“பேதங்களை மறந்து செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்தார். இவ்வாறு வந்தால் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். இதேநேரம், எச்.எஸ்.பி.சி. வங்கி அரசாங்கத்துக்கு கடன் கொடுத்தால் அதை நாம் பொறுப்பேற்க மாட்டோமென எதிர்க்கட்சித் தலைவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். எனவே, இலங்கைக்கு உதவ வேண்டுமென சர்வதேச நாணய நிதியத்தை எதிர்க்கட்சித் தலைவர் தற்போது கோர வேண்டும்.

நேர்மையாக உதவ முன்வந்தால் எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கத்துக்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியும்’

“இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை கூடிய விரைவில் அவரவரது சொந்த இடங்களில் மீள குடியமர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம். கிழக்கில் எதிர்பார்த்ததை விட குறுகிய காலத்தில் மீள் குடியேற்றங்களை செய்தது போல் வடக்கிலும் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் மக்கள் வெகு விரைவில் மீளகுடியமர்த்தப்படுவார்கள்.

இதேவேளை, அனைவரும் தற்போது முன்வந்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூட முன்னர் போலன்றி தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமாறு இந்தியாவில் சென்று கோரிக்கை விடுக்கின்றனர். ஏனெனில், தனி இராச்சியம் குறித்து பேச அவர்களுக்கு தற்போது சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது.

அத்துடன் இந்தியாவும் எமக்கு மில்லியன் கணக்கில் உதவியுள்ளது. அதுமட்டுமல்லாது இலங்கைக்கு இயன்ற வரை உதவ தயாராக இருப்பதாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரும் தெரிவித்திருக்கிறார். அதன் நோக்கமாகவே ஜனாதிபதியின் இந்திய விஜயமும் அமையவுள்ளது.

இதேவேளை, ஜே.ஆர்.ஜெவர்தனவின் அரசியலமைப்பின் பிரகாரம், 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட (13 ஆவது) அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் குறித்தவொரு காலப்பகுதிக்கு ஒன்றிணைக்கப்பட்டிருந்தது. எனினும் அது தவறென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே நீதிமன்ற தீர்ப்பை எமக்கு மீறி செயற்பட முடியாது.

கிழக்கில் மாகாண சபை செயற்படுத்தப்பட்டது போல, விரைவில் வடக்கிலும் மாகாணசபை செயற்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு சமாந்தரமாக உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தி கூடிய விரைவில் வடக்கிலும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமுல்படுத்தப்படும்’ என்று கூறினார்.

நாட்டை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை மூவின மக்களும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் – அமைச்சர் நிமால் சிறிபால

nimal-siriiii.jpgமூவின மக்களும் ஒன்றிணைந்து இந்நாட்டை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே எமது நாட்டை வளங்கொழிக்கச் செய்யமுடியுமென சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

உலக சுகாதாரப் பேரவையின் தலைவராக சுகாதார அமைச்சர் தெரிவு செய்யப்பட்டதற்காக ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் அவருக்கு கௌரவிப்பு விழாவொன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;

தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் நாட்டின் ஏனைய சமூகத்தினருக்கு நிகராக வாழக்கூடிய சூழலை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதிகள், வீதி புனரமைப்பு ஆகியவற்றின் மேம்பாடுகள் பெருந்தோட்டப் பகுதிகளில் துரிதப்படுத்தப்படும். மேலும் இந் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒரு தாய் மக்கள் போன்று வாழ வேண்டும். அதற்கான அடித்தளமும் பதுளையிலேயே ஆரம்பிக்கப்பட்டு ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படும்.

ஆரம்ப காலம் முதல் தோட்டத் தொழிலாளர்களும் கிராமவாசிகளும் மிகுந்த ஐக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். இவ்விரு சமூகங்களுக்கிடையிலும் பரஸ்பர ஒற்றுமையும் இருந்து வந்தது. ஆனால், யுத்த சூழலின் போது ஏற்பட்டிருந்த பரஸ்பர ஒற்றுமையில் இரு சமூகங்களுக்கிடையில் விரிசல்கள் ஏற்பட்டன. தற்போது யுத்தத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ் யுத்தமானது தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தம் அல்ல. பயங்கரவாதத்திற்கெதிராகவே மேற்கொள்ளப்பட்டதாகும். இனிமேல், யுத்தமோ, பயங்கரவாதமோ எமது நாட்டிற்குத் தேவையில்லை. மூவின மக்களும் ஒன்றிணைந்து இந்நாட்டினை துரிதமாக அபிவிருத்தி செய்யும் யுத்தத்தை முன்னெடுப்பதன் மூலமே இந் நாட்டை வளங்கொழிக்கச் செய்ய முடியும்.

இந்நாட்டின் அனைத்து மக்களும் சமமாக மதிக்கப்படல் வேண்டும். பாகுபாடுகள், பாரபட்சங்கள் எவ்வகையிலும் இடம்பெறக்கூடாது. பெருந்தோட்டப் பகுதி மக்களினது கல்வி, சுகாதாரம், வீதிபுனரமைப்பு, குடிநீர் விநியோக வசதிகள் என்பவற்றை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையில் புதியதோர் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான விசேட திட்டத்தினை முன்வைத்துள்ளேன். ஏனைய சமூகத்திற்கு நிகராக பெருந்தோட்ட சமூகம் இருக்கவேண்டும். இதனை பதுளை மாவட்டத்திலிருந்தே நடைமுறைப்படுத்தவுள்ளேன்.

ஊவா மாகாண மக்கள் இவ்வருடத்தின் மூன்று தேர்தலை எதிர்கொள்ள் வேண்டியுள்ளது. முதலாவதாக வருவது ஊவா மாகாணசபைத் தேர்தல், அதையடுத்து ஜனாதிபதி தேர்தல், அதன்பின்னர் நாடாளுமன்ற தேர்தல், இத்தேர்தல் அனைத்திலுமே அதிகப் பெரும்பான்மைப் பலத்துடன் ஸ்ரீ.ல.சு. கட்சியே வெற்றியடையும். ஆகையினால் அனைத்து மக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையே ஆதரிக்க முன்வந்துள்ளனர். நடைபெறும் தேர்தல்கள் அனைத்திலுமே பெருந்தோட்டத்துறை மக்கள் அனைவரும் ஸ்ரீ.ல.சு.கட்சியையே பூரணமாக ஆதரித்து அதிகப் பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றியடைய வைப்பர். இதுவிடயத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.

காத்தான்குடியில் இளம் வர்த்தகர் கடத்தல்

witevehicle.jpgமட்டக் களப்பு காத்தான்குடியில் நேற்று நள்ளிரவு இளம் வர்த்தகர் ஒருவர் வீட்டிலிருந்த வேளை, வெள்ளை வேனில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.  கலந்தர் லெப்பை அஜ்மத்(வயது 38) என்ற பாதணி தயாரிக்கும் நிறுவனமொன்றின் உரிமையாளரான வர்த்தகரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார்.

நள்ளிரவு உறக்கத்திலிருந்த வேளை கதவைத் தட்டியெழுப்பிய சம்பந்தப்பட்ட நபர்கள் பலவந்தமாக இவரை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகின்றது. இது குறித்து காத்தான்குடி பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களோ இதற்கான பின்னணியோ இது வரை வெளியாகவில்லை.

தமிழ் கூட்டமைப்பை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றும் கருத்து குறித்து கவலைப்படவில்லை – ஸ்ரீ காந்தா பா.உ.

srikanthaa.jpgதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென கூறப்படும் கருத்துகளையிட்டு நாம் கவலைப்படவில்லையென அக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; பாராளுமன்றத்திலிருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்ற முடியுமென்று எவராவது நம்பினால் அந்த அரசியல்வாதிகள் இலங்கையின் சாசனத்தைப் படித்து பார்ப்பது நல்லது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பொறுத்த மட்டில் நாம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து எமது மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றோம். எமது வெற்றி தொடர்பாக தரக்குறைவான அரசியல் விமர்சனங்களை இப்போது முன்வைப்பவர்கள். யாழ். குடாநாட்டில் 1994 மற்றும் 2000 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் என்ன நடைபெற்றது என்பதை தயவுசெய்து நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

அது ஒருபுறம் இருக்க அரசியல்சாசனத்துக்கு விரோதமாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவராவது செயற்பட்டிருந்தால், அதற்கான ஆதாரங்கள் முதலில் சமர்ப்பித்து சட்டரீதியாக சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர, கூட்டமைப்பை கூண்டோடு பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றமுடியாது.

எந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவிருந்தாலும் கூட அந்த விவகாரம் நீதி மன்றத்திலேயே முடிவு செய்யப்பட வேண்டிய விடயமாகும். எனவேதான் கூட்டமைப்பை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றவேண்டுமென கூறப்படும் கருத்துகளையிட்டு நாம் கவலைப்படவில்லை என்றார்.

வட மாகாண மாதிரிக் கிராம மக்களுக்கு வீடமைப்புத் திட்டம் – வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தகவல்

north_.jpgவட மாகாணத்திலுள்ள மாதிரிக் கிராமங்களில் வாழும் மக்களுக்காக வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்த வீடமைப்புத் திட்டங்களை முன்னிட்டு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம்,  மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக் காரியாலயங்களில் உள்ள அலுவலர்களிடமிருந்தும் இதற்கான ஒத்துழைப்புக்கள் பெறப்படவுள்;ளன.

இதுதவிர முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள அலுவலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதோடு வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சின் பணிப்புரைக்கமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பு அரச அதிபரின் வீட்டில் கொள்ளை

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் வீட்டிற்குள் நேற்று நண்பகல் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் பணம், நகை உட்பட சுமார் 15 லட்சம் பெறுமதியான உடைமைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளன. அரசாங்க அதிபர் தனது கடமையின் நிமித்தம் மாவட்ட செயலக அலுவலகத்தில் இருந்தவேளை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உப்போடையிலுள்ள அவரது இல்லத்திற்குள் நுழைந்த குறிப்பிட்ட ஆயததாரிகள் தங்களை அடையாளம் காண முடியாதவாறு ஹெல்மெட்டினால் முகத்தை மறைத்திருந்ததாகவும், கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஆகியன வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பிட்ட ஆயுததாரிகள் வீட்டிற்குள் நுழைந்து அவரது மனைவி,மற்றும் விருந்தினராக வந்திருந்த உறவினர்கள் உட்பட அங்கிருந்தவர்களை மிரட்டி அறையொன்றினுள் வைத்துப் பூட்டி விட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகளையும் வைத்திருந்த ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அமைச்சர் தொடங்கொடவின் இறுதிக் கிரியைகள் இன்று அரச மரியாதையுடன்

dodangoda.jpgகாலஞ் சென்ற முன்னாள் அமைச்சர் அமரசிறி தொடங்கொடவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் காலி, சமனல மைதானத்தில் பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

அமைச்சரின் பூதவுடல் காலி,  கராப்பிட்டியிலுள்ள அன்னாரது இல்லத்திலிருந்து இன்று பிற்பகல் 1.00 மணிக்கு வாகன பவனியுடன் ரிச்மன் சந்திவரை எடுத்து வரப்பட்டு அங்கிருந்து கால்நடையாக சமனல மைதானத்துக்குக் கொண்டுசெல்லப்படும். அண்மைக் காலமாக சுகயீனமுற்றிருந்த அமைச்சர் தொடங்கொட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 30ஆம் திகதி இரவு காலமானார்.

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர்,  அமைச்சர்கள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த முதலாம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொழில் ரீதியாக சட்டத்தரனியாக இருந்த அமைச்சர் தொடங்கொட, 1983ஆம் ஆண்டு வத்தேகம ஆசனத்துக்காக இடம்பெற்ற இடைக்காலத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாகப் போட்டியிட்டு முதற்தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். பின்னர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1993ஆம் ஆண்டு தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமாச் செய்த அமைச்சர் தொடங்கொட தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஐ.ம.சு.முன்னணிக்கு மகத்தான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

இவர் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் உள்ளுராட்சி, உள்நாட்டு, கூட்டுறவு,  தொழிற்பயிற்சி மற்றும் சுதேச வைத்தியத்துறை ஆகிய அமைச்சுப் பொறுப்புக்களை வகித்துள்ளார். பின்னர் ஐ.ம.சு.முன்னணி அரசாங்கத்தில் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக அரும்பணியாற்றிய அமைச்சர் கட்சியின் உபதலைவராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

40 மில்லியன் ரூபாவில் 22 வீதிகள் யாழ். மாவட்டத்தில் புனரமைப்பு

sri-lankan-road.jpgயாழ்.  மாவட்டத்தில் சேதமடைந்த இருபத்திரெண்டு வீதிகள் நாற்பது மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளன.
கடல்கோளால் பாதிக்கப்பட்ட பிரதேச மீள்கட்டுமானத்திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தில், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பிரிவில் பருத்தித்துறை பிரதேச சபைக்குட்பட்ட எரிந்த அம்மன் கோயில் வீதி, மேலைப்புலோலி பாடசாலை வீதி, வலிக்கண்டி உள்ளக வீதி மற்றும் கல்லூரி வீதி, சுப்பர் மடம் வீதி, மணல் ஒழுங்கை வீதி ஆகியவை புனரமைக்கப்படவுள்ளன.

வல்வெட்டித்துறை நகரசபைப் பகுதியில் காத்தவராயன் வீதி, சமத்தணை வீதி, நெடியகாடு பிள்ளையார் கோவில் வீதி, மயிலியதனை வீதி, தொண்டமனாறு எல்லை வீதி, முருகையன் கோயில் வீதி, தொண்டமனாறு கெருடாவில் வீதி, புற்றளை பிள்ளையார் கோயில் உபய கதிர்காமம் வீதி ஆகியன புனரமைக்கப்படவுள்ளன.

இதேவேளை, நெடுந்தீவு துங்காலை கிராம வீதியும் பருத்தித்துறை புனித சேவியர் கடற்கரை வீதியும் புனரமைக்கப்படவுள்ளன. வீதிப்புனரமைப்பு வேலைகளை தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்க கேள்விகள் கோரப்பட்டுள்ளன. வேலைகள் இம்மாத இறுதியில் ஆரம்பமாகும்.

வடக்கில் மீன்பிடித்துறையை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம் – அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தகவல்

fishing_peoples.jpgவடக்கில் மீன்பிடித்துறையை மேம்படுத்த 180 மற்றும் 200 நாட்கள் கொண்ட விசேட வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக மீன்பிடி,  நீரியல்வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். 

‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ்  மீன்பிடி,  நீரியல்வளத்துறை அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டத்தின் கீழேயே இந்த விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பவுள்ளது. வட மாகாணத்தில் 219 மீனவக் கிராமங்களில் இருந்து 15000 மெற்றிக் தொண்னையும் விடக் கூடுதலான மீன்கள் பெறப்பட்டுள்ளது.

‘வடக்கின் வசந்தம்’  திட்டத்தின் கீழ் கடற்றொழில்துறையை அபிவிருத்தி செய்வதற்கு பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்கள் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

பொசன் நிகழ்வுகள் 6ஆம் திகதி மிஹிந்தலையில் ஆரம்பம் – சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

poson_s.jpgபொசன் நிகழ்வுகள் அநுராதபுரம்,  மிஹிந்தலையில் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகின்றன. மூன்று தினங்களாக நடைபெறவுள்ள பொசன் நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர மாவட்ட செயலாளரும் பொசன் குழுவின் தலைவருமான எச்.எம்.கே. ஹேரத் தெரிவித்தார்.

அநுராதபுர மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொசன் நிகழ்வுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், பொசன் நிகழ்வுகளை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவையை வழங்க இலங்கை போக்குவரத்துச் சபை இணக்கம் தெரிவித்துள்ளது. இதுதவிர மூலம் மலசலகூட வசதிகளை வழங்க அநுராதபுரம் மாநகர சபையும் நீர் சுத்திகரிப்பு வேலைகளை மேற்கொள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் இணங்கியுள்ளன.

இதேவேளை,  பொசன் நிகழ்வுகள் நடைபெறும் மூன்று தினங்களிலும் அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நகரங்கள், பௌத்த விகாரைகள் என்பவற்றை மின் விளக்குகளால் அலங்கரிப்பதற்குரிய ஏற்பாடுகளை இலங்கை மின்சார சபை மேற்கொண்டு வருகின்றன.நிகழ்வுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி அநுராதபுரம் பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.