காலஞ் சென்ற முன்னாள் அமைச்சர் அமரசிறி தொடங்கொடவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் காலி, சமனல மைதானத்தில் பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது.
அமைச்சரின் பூதவுடல் காலி, கராப்பிட்டியிலுள்ள அன்னாரது இல்லத்திலிருந்து இன்று பிற்பகல் 1.00 மணிக்கு வாகன பவனியுடன் ரிச்மன் சந்திவரை எடுத்து வரப்பட்டு அங்கிருந்து கால்நடையாக சமனல மைதானத்துக்குக் கொண்டுசெல்லப்படும். அண்மைக் காலமாக சுகயீனமுற்றிருந்த அமைச்சர் தொடங்கொட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 30ஆம் திகதி இரவு காலமானார்.
காலஞ்சென்ற முன்னாள் அமைச்சரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த முதலாம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொழில் ரீதியாக சட்டத்தரனியாக இருந்த அமைச்சர் தொடங்கொட, 1983ஆம் ஆண்டு வத்தேகம ஆசனத்துக்காக இடம்பெற்ற இடைக்காலத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாகப் போட்டியிட்டு முதற்தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். பின்னர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1993ஆம் ஆண்டு தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமாச் செய்த அமைச்சர் தொடங்கொட தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஐ.ம.சு.முன்னணிக்கு மகத்தான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.
இவர் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் உள்ளுராட்சி, உள்நாட்டு, கூட்டுறவு, தொழிற்பயிற்சி மற்றும் சுதேச வைத்தியத்துறை ஆகிய அமைச்சுப் பொறுப்புக்களை வகித்துள்ளார். பின்னர் ஐ.ம.சு.முன்னணி அரசாங்கத்தில் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக அரும்பணியாற்றிய அமைச்சர் கட்சியின் உபதலைவராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.