அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

எல்லைக்கிராமங்கள் வரைபடத்தில் நீக்கப்பட்டிருப்பதுபோல் பின் தங்கியகிராம அடையாளமும் நீக்கப்படும் – அ’புரத்தில் ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgபயங்கர வாதம் முழுமையாக ஒழித்துக் கட்டப்பட்டு எல்லைக் கிராமங்கள் இந்நாட்டின் வரைபடத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பது போல் சகல பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு பின்தங்கிய கிராமங்கள் என்ற அடையாளமும் இல்லாமலாக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அனுராதபுரத்தில் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு அஞ்சி தம் இருப்பிடங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் விட்டு வடமத்திய மாகாண மக்கள் வெளியேறாததன் பயனாக பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த முடிந்ததாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்திய ஜனாதிபதியின் தலைமைத்துவத்தையும், முப்படையினரதும் பொலிஸாரினதும் தன்னலமற்ற அர்ப்பணிப்புக்களைக் கெளரவிக்கும் வகையில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அனுராதபுரம், சிறிமகாபோதி விகாரை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழு மண்டபத்தில் (மகுல்மடுவ) இடம்பெற்ற இவ்வைபவத்தில் வடமத்திய மாகாண சங்க நாயக்கர்களினதும் சர்வ மதத் தலைவர்களினதும், வட மத்திய மாகாண மக்களினதும் கெளரவிப்புக்கள் இடம்பெற்றன.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலகிலுள்ள முக்கியத்துவம் மிக்க புனித நகரிலிருக்கும் அட்டமஸ்தான மண்டபத்தில் வைத்து அளிக்கப்படும் இக்கெளரவத்தை முழு நாட்டையும் மீட்டெடுத்த படை வீரர்களுக்கும், அவர்களுக்குத் தலைமையும், வழிகாட்டலும் வழங்கிய எமக்கும் அளிக்கப்படும் ஒன்றாகவே பார்க்கிறேன்.

இந்நாடு விடுவிக்கப்பட்டதும் இங்கு வாழுகின்ற எல்லா மக்களுமே சந்தோஷப்பட்டார்கள், மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்நாட்டின் கெளரவமும், மகத்துவமும் உலகிற்கு எடுத்துக் கூறப்படும் போது ரஜரட்டவும், எடுத்துக் கூறப்படும், ஆனால் பயங்கரவாதம் வளர்ச்சி பெறத் தொடங்கியது முதல் வடமத்திய மாகாண மக்கள் பெரும் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்தார்கள், தாக்கப்பட்டார்கள்.

பயங்கரவாதிகளின் வரைபடத்தில் ஹம்பாந்தோட்டைதான் இறுதி இடமாக இருந்தது. என்றாலும் அவர்கள் வடமத்திய மாகாணத்தையும் ஆக்கிரமிப்பதற்கே முயற்சி செய்தார்கள். இதனால் தான் வடமத்திய மாகாண மக்களைத் தாக்கினர். படுகொலை செய்தனர். இருப்பினும் இம்மாகாண மக்கள் தங்கள் இருப்பிடங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் விட்டு வெளியேறவில்லை. அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். இதன் பயனாக பயங்கரவாதத்தைத் துரிதமாக ஒழித்துக்கட்ட முடிந்தது.

இந்நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சகல மக்களும், மதத்தவர்களும், அச்சம், பீதியின்றி வாழவேண்டும். அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பது எமது பொறுப்பாகும். ரஜரட்ட என்ற பெயரைக் கொண்டிருக்கும் இம்மாகாணம் தன்னிறைவு கொண்டதாக மேம்படுத்தப்படும். எல்லா பின்தங்கிய கிராமங்களும் அபிவிருத்தி செய்யப்படும். இதற்கான திட்டங்கள் மஹிந்த சிந்தனையில் முன்மொழியப் பட்டிருக்கின்றன.

ஷங்ஹாய் ஓத்துழைப்புக்கான அமைப்பில் இலங்கை அங்கத்துவம்!

18rohitha_bogollagama_.jpgஷங்ஹாய் ஒத்துழைப்புக்கான அமைப்பில் இலங்கை அங்கத்துவம் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சமர்பித்திருந்தார்.

சீனா, ரஷ்யா, கஸகஸ்தான்,  கரிகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் தற்போது அங்கம் வகிக்கின்றன.

அகதிமுகாம்களில் தனது 3 பிரஜைகளை தேடிக்கொண்டிருக்கின்றது அவுஸ்திரேலியா

australia.jpgவவுனியா அகதிமுகாம்களிலுள்ள 3 இலட்சம் பேரில் 3 அவுஸ்திரேலியர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இரு பெண்களும், 62 வயதுடைய முதியவரும் இலங்கையில் முகாம்களில் இருப்பதாக நம்பப்படுவதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இல்லை என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை என்றும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் நிருபர்களிடம் தெரிவித்ததாக “த ஏஜ் கொம்’ இணையத்தளம் தெரிவித்தது.

இந்த மூன்று அவுஸ்திரேலியப் பிரஜைகளும் அகதிமுகாம்களில் ஒன்றில் இருப்பதாக நாம் நம்புகிறோம். இலங்கையின் வடபகுதியில் அதிகாரிகள் தற்போது உள்ளனர். அவுஸ்திரேலியப் பிரஜைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர்களின் கவனத்திற்கு ஸ்மித் கொண்டுசென்றுள்ளார். ?எமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் பாதுகாப்புடன் இல்லை என்று நாம் நம்புவதற்கான காரணமாக இது உள்ளது. அவர்களை இப்போது எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. யு.என்.எச்.சி.ஆர். மூலமாகவோ இலங்கை அதிகாரிகள் ஊடாகவோ எம்மால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை கண்டுபிடிக்க தீவிரமாக முயன்று வருகிறோம் என்றும் ஸ்மித் கூறியுள்ளார்.

அதேசமயம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கும் யு.என்.எச்.சி.ஆர், ஐ.சி.ஆர்.சி ஆகியவற்றை முழு அளவில் அனுமதிக்க வேண்டும் என்று இலங்கையிடம் ஸ்மித் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரிய அரசாங்கத்துடன் உடன்படிக்கை!

ranjith_siyambalapitiya.jpgநாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு பாரிய அளவில் உதவி வழங்கி வரும் நாடுகளின் ஒன்றான தென் கொரியாவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனப் பிரதிநிதிகளுக்கு தங்கியிருந்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு வசதிகள், வரப்பிரசாதங்கள் மற்றும் வரிச்சலுகை வழங்குவதற்கான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் பதில் நிதியமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டியவே சமர்பித்திருந்தார்.

தாய்லாந்தில் கைதான மூவருக்கு புலிகளுடன் ஆயுத விற்பனையில் தொடர்பு

விடுதலைப் புலிகளுடன் ஆயுத விற்பனையில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் மூவரை தாய்லாந்துப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், அமெரிக்காவில் 9/11 பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துடனும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிப்பட்டுள்ளது. முகமட் அலி ஹுசெய்ன் , பாபுஜி அல்லது முகமட் மத்பாருகம், சுப்ரி அவே ஆகிய மூவரும் தாய்லாந்தின் ஆயுதப் படைகளின் பாதுகாப்பு நிலையம், தேசிய புலனாய்வு முகவரமைப்பு, தாய்லாந்து அரச பொலிஸார் விசேட விசாரணை திணைக்களம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டதாக பாங்கொக் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

தாய்லாந்தின் தென்பகுதியிலுள்ள செல்வாக்கு மிக்கவர்களுடன் கைது செய்யப்பட்ட இந்த மூன்று ரோசிங்சியா நபர்களுக்கும் தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக விசேட விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொல் கொல் தாவே சொட் சொப் கூறியுள்ளார். போலி பயண ஆவணங்கள் மற்றும் ஆயுத விற்பனை என்பவற்றில் சம்பந்தப்பட்ட குழுவின் தலைவரென முகமட் அலி ஹுசெய்ன் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் இவர் ஆயுத விற்பனையில் ஈடுபட்டதாகவும் அத்துடன் அமெரிக்காவில் 9/11 தாக்குதலை நடத்துவதற்கு அல்ஹைடா குழு உறுப்பினர்களுக்கு இவர் போலி ஆவணங்களை வழங்கியதாகவும் பொல் கொல் தாவே கூறியுள்ளார்.

மலேசியாவுக்குச் சென்ற போது முகமட் அலி ஹுசெய்ன் கைது செய்யப்பட்டு 2 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். விடுதலையான பின் தாய்லாந்துக்குச் சென்ற அவர் யுத்த ஆயுத விற்பனையாளர்கள், போதைப் பொருள் வர்த்தகர்கள், தென்பகுதியிலுள்ள (தாய்லாந்தின்) கிளர்ச்சியாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளார் என்றும் பொல் கொல் தாவே கூறியுள்ளார்.

யுத்த கால மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச ரீதியில் விசாரணை நடத்தப்பட வேண்டும் : மனித உரிமை கண்காணிப்பகம்

HRW Logoஅரசாங் கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், நாட்டில் பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை குறித்து சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமை பாரதூரமான ஒரு நிலைமையாகும் என மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதென மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பிரதிப் பணிப்பாளர் எலாயன் பியர்சன் (Elaine Pearson) தெரிவித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற பல்வேறு பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் பல வழிகளில் அழுத்தம் கொடுத்திருந்தனர். இதன் காரணமாக முன்னாள் நீதவான் நிஷாங்க உதாலகம தலைமையில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. எனினும், கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் மேற்படி விசாரணை குறித்த ஆணைக்குழுவின் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன.

இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றச் செயல்கள் உள்ளிட்ட சகல மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாகவும் சர்வதேச ரீதியில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து சுயாதீனமான முறையிலான விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது

தேசிய தொடர்புசாதன வலையமைப்பு

mahinda-rajapaksha.jpgதேசிய தொடர்புசாதன வலையமைப்பை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

தொலைத் தொடர்புகள் கட்டளைகள் ஆணைக்குழுவுக்கு இதனை அமுல்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்படுகிறது. அத்துடன் தகவல் மற்றும் தொடர்புசாதன தொழில்நுட்ப நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஈரானில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் – ஈரான் விடயத்தில் தலையிடவில்லையென அமெரிக்கா அறிவிப்பு

president-ahamadinejad.jpgஈரான் அரசாங்கத்தின் உத்தரவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் நேற்று வியாழக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டமொன்றுக்குத் தயாராகினர். தேர்தலில் தோல்வியடைந்த ஹுஸைன் மூஸாவி ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பை விடுத்தார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைக் கண்டித்து அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் 07 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பலியானோருக்கு துக்கம் தெரிவிக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அனைவரையும் கறுப்பு நிற ஆடைகளை அணியுமாறு ஹுஸைன் மூஸாவி கேட்டுள்ளார். அரச தொலைக் காட்சியொன்று ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்த சனக் கூட்டத்தைக் காட்டியது. ஆனால் வெளிநாட்டு ஊடகங்கள் ஆர்ப்பாட்டக் காரர்களின் செய்திகளைத் திரட்டவோ அல்லது அவ்விடங்களுக்குச் செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.

ஈரானில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் முறைகேடாக நடந்தது. வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டுமென மூஸாவியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பல நாட்களாக இந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுகின்றன. அரசாங்கத்தின் உத்தரவை மீறியும் வன்முறைகளும், ஆர்ப்பாட்டங்களும் இடம் பெறுகின்றன.

ஜனாதிபதி அஹ்மெதி நெஜாதுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் வாக்குகளை மீள்எண்ணும்படி ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமெய்னி உத்தரவிட்டுள்ளார்.

ஈரானில் இரண்டு தடவைக்கு மேல் ஒருவர் ஜன திபதியாக முடியாது. அஹ்மெதி நெஜாத், இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாகியுள்ளார். இவரின் வெற்றியை ஹுஸைன் மூஸாவியால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. அமெரிக்கா, மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் மூஸாவி ஈரானின் அமைதியைக் குழப்புவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா இதை நிராகரித்துள்ளது. ஈரானின் உள் விவகாரங்களில் தலையிடும் தேவையோ, நோக்கமோ எமக்கில்லையென அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானில் நடப்பதை அவதானிக்கின்றோம். ஆனால் அதில் தலையிடவில்லையென ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். வாக்குகள் மீள எண்ணப்பட்டாலும் அஹ்மெதி நெஜாதே வெல்வார் என நம்பப்படுகின்றது.

பன்றிக் காய்ச்சல் குறித்து அச்சப்படத்தேவை இல்லை – மருந்து தயாராக இருப்பதாக அறிவிப்பு

19swine-flu.jpgஇலங் கையில் முதலாவது பன்றிக்காய்ச்சல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்து வகைகள் தயாராக உள்ளதெனவும் இது குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லையெனவும் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு வைத்திய அதிகாரி ரிசின பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதாரக் கல்விப் பணியகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே டாக்டர் ரிசின பிரேமரத்ன இவ்வாறு தெரிவித்தார். பன்றிக்காய்ச்சல் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

பன்றிக்காய்ச்சல் குறித்து நாம் ஏற்கனவே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அத்துடன், சிகிச்சை அளிப்பதற்குரிய மருந்துவகைகளும் தருவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வந்த 8 வயதுச் சிறுவனுக்கு பன்றிக்காய்ச்சல் வைரஸ் உள்ளமை அடையாளங் காணப்பட்டுள்ளது.

இச்சிறுவனுக்கு வைத்தியசாலையின் பிரத்தியேக அறை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. பன்றிக்காய்ச்சல் ஏற்பட்ட ஒருவருக்கு சாதாரண காய்ச்சலின் போது ஏற்படும் அறிகுறிகளான தடிமன், இருமல், உடல்வலி, வாந்தி என்பவற்றுடன் டயறியாவும் காணப்படலாம். பன்றிக்காய்ச்சலுக்குரிய மருந்துவகைகள் தயாராக உள்ளபோதும் இதற்குரிய ஊசி மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பன்றிக்காய்ச்சல் தொற்றிலிருந்து எம்மைநாமே பாதுகாத்துக்கொள்ள சுகாதாரத்தை அதிகூடியளவில் கடைப்பிடிக்க வேண்டும். உணவருந்த முன்னர் கைகளை சவர்க்காரத்தால் கழுவும் அதேநேரம், அடிக்கடி கைகளால் முகத்தை தொட்டுக் கொள்வதையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அத்துடன், சன நெருசல் மிகுந்த இடங்களிற்குச் செல்வதை தவிர்ப்பதுடன், கட்டாயமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படின் வாய் மூக்குப்பகுதியை துணிகளால் மூடிக்கட்ட வேண்டும்.

அத்துடன் சுத்தமான கைக்குட்டைகளையே பயன்படுத்த வேண்டும். இதேவேளை, அதிக போஷாக்குள்ள சுத்தமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்ச்சலை அடையாளங்காண்பதற்குரிய சாதனமே விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது

இச்சாதனத்தின் மூலம் காய்ச்சலுகுக்கு உள்ளானவர்களை மாத்திரம்தான் கண்டுபிடிக்க முடியும். ஆனால், பன்றிக்காய்ச்சல் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரை கண்டுபிடிக்க முடியாது. பன்றிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டவரிலிருந்து 5 அல்லது 7 நாட்கள் கடந்த நிலையிலேயே சரியான தாக்கத்துக்கு உள்ளானதை கண்டுபிடிக்க முடியும்.

பனடோல் உட்கொண்ட ஒருவர் இச்சோதனைச் சாதனங்களூடு சென்றால் கண்டுபிடிக்க இயலாதெனத் தெரிவித்தார்.

கல்வி நிருவாக சேவையில் பதவி உயர்வு

teacher.jpgகல்வி நிருவாக சேவையில் முதலாம் தர உத்தியோகத்தர்களுக்கான 24 வெற்றிடங்களையும் நிறப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அதன்படி கல்வி நிருவாக சேவையில் இரண்டாம் தராத்திலுள்ள 24 பேருக்கு முதலாம் தரத்துக்கான  பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சமர்பித்திருந்தார்.