விடுதலைப் புலிகளுடன் ஆயுத விற்பனையில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் மூவரை தாய்லாந்துப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், அமெரிக்காவில் 9/11 பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துடனும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிப்பட்டுள்ளது. முகமட் அலி ஹுசெய்ன் , பாபுஜி அல்லது முகமட் மத்பாருகம், சுப்ரி அவே ஆகிய மூவரும் தாய்லாந்தின் ஆயுதப் படைகளின் பாதுகாப்பு நிலையம், தேசிய புலனாய்வு முகவரமைப்பு, தாய்லாந்து அரச பொலிஸார் விசேட விசாரணை திணைக்களம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டதாக பாங்கொக் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் தென்பகுதியிலுள்ள செல்வாக்கு மிக்கவர்களுடன் கைது செய்யப்பட்ட இந்த மூன்று ரோசிங்சியா நபர்களுக்கும் தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக விசேட விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொல் கொல் தாவே சொட் சொப் கூறியுள்ளார். போலி பயண ஆவணங்கள் மற்றும் ஆயுத விற்பனை என்பவற்றில் சம்பந்தப்பட்ட குழுவின் தலைவரென முகமட் அலி ஹுசெய்ன் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் இவர் ஆயுத விற்பனையில் ஈடுபட்டதாகவும் அத்துடன் அமெரிக்காவில் 9/11 தாக்குதலை நடத்துவதற்கு அல்ஹைடா குழு உறுப்பினர்களுக்கு இவர் போலி ஆவணங்களை வழங்கியதாகவும் பொல் கொல் தாவே கூறியுள்ளார்.
மலேசியாவுக்குச் சென்ற போது முகமட் அலி ஹுசெய்ன் கைது செய்யப்பட்டு 2 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். விடுதலையான பின் தாய்லாந்துக்குச் சென்ற அவர் யுத்த ஆயுத விற்பனையாளர்கள், போதைப் பொருள் வர்த்தகர்கள், தென்பகுதியிலுள்ள (தாய்லாந்தின்) கிளர்ச்சியாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளார் என்றும் பொல் கொல் தாவே கூறியுள்ளார்.