அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இடம்பெயர்ந்த மக்களுக்காகப் பிரார்த்தித்தார் அமெரிக்கா உதவிச் செயலாளர்

us_ass_sec.pngவவுனியா, நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் சனத்தொகை, அகதிகள் மற்றும் குடியேற்றம் தொடர்பான உதவி இராஜாங்கச் செயலாளர் எரிக் பி.ஸ்க்வார்ட்ஸ் அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களிடம் நீங்கள் விரைவில் உங்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட வாழ்த்துவதுடன் அதற்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க உதவி அமைச்சர், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளை நேரில் கண்டறிவதற்காக நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்தார்.
நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்ட குழுவினரும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர். நிவாரணக் கிராமங்களுக்குச் சென்ற அமெரிக்க உதவிச் செயலாளர் அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்.

வவுனியா சென்ற அமெரிக்க உதவி அமைச்சர் தலைமையிலான குழுவினரை மெனிக்பாமில் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வரவேற்றார். நிவாரணக் கிராமங்களில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் ரிஷாத் மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் சார்ள்ஸ் ஆகியோர் அமெரிக்க உதவிச் செயலாளருக்கு விளக்கமளித்தனர்.

நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதையிட்டு திருப்தி தெரிவித்த அமெரிக்க உதவிச் செயலாளர், இதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் ரிஷாதிடம் கூறினார்.

நிவாரணக் கிராமங்களில் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ள சுகாதார வசதிகள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்ட அமெரிக்க உதவிச் செயலாளர்,  அங்கிருக்கும் வைத்தியசாலையை பார்வையிட்டதுடன் வைத்தியர்களுடனும் உரையாடினார்.

அருணாச்சலம் நிவாரணக் கிராமத்திலுள்ள மக்கள், தாங்கள் விரைவில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவதையே விரும்புவதாக அமெரிக்க உதவிச் செயலாளரிடம் தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த அவர்,  உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து இடம்பெயர்ந்த மக்களின் ஆசையும் இதுவே எனக் கூறினார். 

குறைந்த கட்டணத்தில் யாழ். நகருக்கான முதலாவது உள்ளுர் விமான சேவை இன்று ஆரம்பம்

flight_domestic.jpgகட்டணம் குறைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்துக்கான முதலாவது உள்ளுர் விமான சேவை இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமானதாக இலங்கை விமானப் படைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.  இதுபற்றி அவர் மேலும் தகவல் தருகையில், இந்த விமான சேவை திங்கள், புதன்,  மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் வாரத்துக்கு மூன்று தடவைகள் நடத்தப்படவுள்ளதோடு இருவழிப் பாதைக்குமான கட்டணமாக 19 ஆயிரத்து 100 ரூபா அறவிடப்படும்.

திருகோணமலை மற்றும் சீகிரியா ஆகிய நகரங்களுக்கும் விமான சேவைகள் நடத்தப்படவுள்ளன. வாரமொருமுறை நடத்தப்படவுள்ள இச்சேவை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8.00 மணிக்கு ரத்மலானையிலிருந்து ஆரம்பமாகும். திருகோணமலைக்கு இருவழிப் பாதைக் கட்டணமாக 15, 300 ரூபாவும் சீகிரியாவுக்கு இருவழிப் பாதைக் கட்டணமாக 9000 ஆயிரம் ரூபாவும் அறிவிடப்படும்.
 
கொழும்பிலுள்ள விமானப் படைத் தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விமான சேவை அனுமதிப்பத்திர கருமபீடத்தில் தினமும் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை சகல விமான சேவைகளுக்குமான அனுமதிப்பத்திரங்களையும் பெற்றுக்கொள்ளலாம். இதேவேளை,  இவ்வாரம் யாழ். அதிஉயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியிலும் விமான அனுமதிப்பத்திர கருமபீடமொன்று திறக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிறை வைக்கப்பட்டுள்ள 1850 படை வீரர்கள் விடுதலை!

சிறை வைக்கப்பட்டுள்ள 1850 படை வீரர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி. சில்வா தெரிவித்தார். சேவையில் இருந்து தப்பிச்சென்று மீண்டும் சேவைக்கு சமூகமளிக்காததால் யுத்த நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் காணப்பட்ட முப்படை வீரர்களே இவ்வாறு சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

நாட்டுக்காக போராடிய  இவர்கள் மீது கருணைகாண்பிக்கப்பட வேண்டும் என்ற சிபாரிசு முன்வைக்கப்பட்டதையடுத்து அதனைக் கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இந்தியாவுக்கு இடையில் மீண்டும் கப்பல் மற்றும் ரயில் சேவை!

ship121212.jpgஒருங்கி ணைக்கப்பட்ட கப்பல் மற்றும் ரயில் சேவையை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மீண்டும் ஆரம்பிப்பது  தொடர்பாக சார்க் போக்குவரத்து அமைச்சர்களின் மாநாட்டில் இலங்கை முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார். இதனால்,  சாதாரண வருமானம் பெறும் பிரிவினரும் இலகுவாக இரு நாடுகளுக்குமிடையில் சென்று வர முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் இம்மாநாட்டு அமர்வின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கப்பல் சேவையையும் அத்துடன் இணைக்கப்பட்ட ரயில் சேவையையும் இரு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்துவதான யோசனை முன்வைக்கப்பட்டது. இது ஏற்றுக் கொள்ளப்பட்டதால் ஜனாதிபதியின் 25 வருட கனவு நனவாகப் போகின்றது.

1985 ஆண்டுக்கு முன் போக்குவரத்து சேவை இடம்பெற்ற நிலையில் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது. இதன்படி கொழும்புக்கும் கொச்சினுக்குமிடையில் போக்குவரத்து இடம்பெறுவதற்கு இலங்கை ரயில்வே திணைக்களம் தலைமன்னார் வரை ரயில் தண்டவாளம் போடும் அதேநேரம் இந்திய ரயில்வே பிரிவினர் ராமேஸ்வரம் வரை விஸ்தரிப்பர் இந்நிலையில் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்குமிடையில் கப்பல் சேவை இடம்பெறும்.

தெற்காசியாவில் பல்வேறுபட்ட சமூகங்கள் உள்ள நிலையில் பிணைப்பை ஏற்படுத்த இது வழிவகுக்கும். தெற்காசிய அமைப்பில் இலங்கையும் மாலைதீவும் தவிர ஏனையவை நிலத் தொடர்புடையவையாகும். இதேவேளை இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், அப்கானிஸ்தான் ஆகியவற்றுக்கு ரயிலூடாக நேரடியாக செல்வதற்கும் யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இராணுவ தளபதி வன்னி விஜயம்

vanni-a-h-q.jpgஇராணவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய வன்னி கட்டளையிடும் தலைமையகத்துக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்தார். வன்னியின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் அரசு முன்னெடுக்கும் வடக்கின் வசந்தம் திட்டத்திற்கு படையினர் சார்பாக வழங்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய கட்டளையிடும் தளபதிகளுடன் கலந்தாலோசித்தார்.

வன்னி மாவட்ட கட்டளையிடும் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண, இராணுவத் தளபதியை வரவேற்றார்.இராணுவ தளபதிக்கு வன்னி இராணுவ தலைமையகத்தில் இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டதுடன் இராணுவ தளபதியின் தலைமையில் விசேட கூட்டமும் நடைபெற்றது.

இராணுவத் தளபதியின் வன்னி விஜயத்தின் போது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வன்னி மற்றும் கிழக்கு மாகாண கட்டளையிடும் தளபதிகளும் கலந்துகொண்டனர். மேற்படி கட்டளையிடும் தளபதிகள் அனைவரும் ஒரே சமயத்தில் இராணுவத் தளபதியை சந்தித்தமை இதுவே முதற்தடவை என்றும் இராணுவ தலைமையகம் தெரிவிக்கிறது.

பேருவளை கோஷ்டி மோதல்: சம்பவத்துடன் தொடர்புடைய 28 பேர் மஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்

beruwela.jpgபேருவளை மஹகொடை பகுதியில் இரு முஸ்லிம் கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என் சந்தேகிக்கப்படும் 28 பேர் நேற்று களுத்துறை மஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இரு கோஷ்டிகளுக்கிடையே கடந்த சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற மோதலில் மூவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 11 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் 26 பேர் அளுத்கமவிலும் இரண்டு பேர் பேருவளையில் வைத்தும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 கைதுசெய்யப்பட்ட 28 பேரும் நேற்று களுத்துறை மஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். மோதல் இடம்பெற்ற பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, அமைதி நிலவுவதாகவும் பொலிஸார் கூறினர்.  இப்பகுதியில் தற்போது கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டிருப்பதுடன், மக்கள் வழமைபோல் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுவதனைக் காணமுடிவதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை நேற்று காலை 10 மணிமுதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று கண்டி எசல பெரஹரா ஆரம்பம்

kandy-parahara.jpgவரலாற்று புகழ்மிக்க கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு கண்டி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வர்த்தக நிலையங்கள் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கண்டி மாநகரசபை வீதி ஓரங்களின் இரும்பு வேலிகளுக்கு பூச்சுப் பூசியுள்ளதுடன் தண்ணீர், மலசல கூட வசதிகளை மேற்கொண்டுள்ளது. விசேட ரயில் சேவைகளும் விசேட பஸ் சேவைகளும் இ.போ.சபையாலும் தனியார் போக்குவரத்து அதிகாரசபையினாலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இரவு நேரம் 45 பஸ் சேவைகள் நடைபெறவுள்ளன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு 6500 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் சமாதான சூழ்நிலை காணப்படுவதால் 10 இலட்சம் மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டியை சூழவுள்ள பகுதிகளில் மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இறுதி பெரஹரா ஆகஸ்ட் 6 ஆம் திகதி பகல் பெரஹராவுடன் முடிவுபெறவுள்ளது. இம்முறை அதிக சுற்றுலாப் பயணிகள் பெரஹராவை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காணிவேல் கண்காட்சி நிகழ்வு கண்டி கெட்டம்ப மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை முதல் நடைபெறவுள்ளது.

நல்லூர் கந்தன் இன்று கொடியேற்றம்

nallur-kovil.jpgவரலாற் றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் நாளை இன்று திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 தினங்கள் உற்சவம் நடைபெறவுள்ளது. கொடியேற்றம் இன்று  10 மணிக்கு நடைபெறவுள்ளது. கடந்த காலங்களைப் போல இம்முறையும் உற்சவத்தை முன்னிட்டு ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள 6 வீதிகளும்  நண்பகல் 12 மணிமுதல் 25 நாட்கள் போக்குவரத்துக்கு மூடப்படவுள்ளன.

இப்பாதைகள் மூடப்படுவதால் பொதுமக்களும் வாகனங்களும் போக்குவரத்துக்கு மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலை போக்குவரத்துப் பொலிஸார் வேண்டியுள்ளனர். இம்முறை தென்னிலங்கை வர்த்தக நிறுவனங்கள் ஆலய வளாகத்தில் காட்சியறைகள் விற்பனை நிலையங்களைத் திறக்க முடிவு செய்துள்ளன.

தேர் உற்சவம் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதியும் மறுநாள் தீர்த்தோற்சவமும் இடம்பெறும். உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கப்படவுள்ளது. தேர், தீர்த்த தினங்களில் குடாநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கப்படவுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மீள்குடியேற்றம் – முதற்கட்டமாக 3000 குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை

வவுனியா வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை ஆகஸ்ட் முதல் வாரத்திற்கு முன்னர் குடியமர்த்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ள 35 கிராமங்களையும் உள்ளடக்கிய பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அலுவலர்கள் மற்றும் அரச நிறுவனங்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் ஆகியோரை அழைத்தே அரச அதிபர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

ஓகஸ்ட் முதல்வாரத்தில் மக்கள் குடியமரும் வகையில் சகல உட்கட்டமைப்பு வளங்களையும் பூர்த்தி செய்யுமாறு இவர்களுக்கு அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் பணிப்புரை வழங்கியிருக்கிறார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரிலும் அவரது சிரேஷ்ட ஆலோசகர் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரச அதிபர் தெரிவித்தார்.

வவுனியா வடக்கில் முதற்கட்டமாக மூவாயிரம் குடும்பங்கள் குடியமர்த்தப்படவுள்ளன. இவர்களைக் குடியமர்த்தவென இனங்காணப்பட்ட கிராமங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளைப் பூர்த்தி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு ஓகஸ்ட் முதல்வாரத்திற்கு முன்னர் பூர்த்தி செய்ய அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். இதேவேளை நெடுங்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு காணி விடுவிக்கப்பட்டதற்கான சான்றிதழ் கிடைக்கப்பெற்றதும் அந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றப் பணிகள் மேற்கொள்ளப்படுமெனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னதாக வவுனியா தெற்கு, செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ எம்.பி. அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அடுத்தடுத்ததாக மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்தும் வகையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள மடுத்தேவாலய உற்சவத்திற்கு பெருந்திரளான மக்கள் வருகை தரவுள்ளதால் வீதி உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மடு கோயில் சுற்றுப்புற வீதி அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாக. பிரதான பாதைகள் விரிவுபடுத்தப்பட்டு கார்பட் செய்யப்பட்டுள்ளன. இதற்கென 124.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

மடு தேவாலயத்திலிருந்து நாலாபுறமும் சுமார் 1 1/2 கிலோ மீற்றர் தொலைவிற்குள்ள பகுதிகளில் மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றும் வேலைகளும் பூர்த்தியான நிலையில் உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நீர்கொழும்பில் டெங்கு தீவிரமாக பரவுகிறது பல பகுதிகளிலும் சிரமதானப் பணிகள்

mosquitfora.jpgநீர் கொழும்பு பிரதேசத்தில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதால் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரியமுல்ல பகுதியில் சனிக்கிழமை சிரமதானப் பணிகள் நடைபெற்றது. மாநகரசபை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுவரை 154 பேருக்கு டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் நால்வர் மரணமடைந்துள்ளதாகவும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நீர்கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் லக்ஷ்மன் தெரிவித்தார்.  இவர்களில் 90 வீதமானவர்கள் முஸ்லிம்கள் என்றும் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் நீர்கொழும்பு மேயர் ஹேர்மன் குரே, மாநகரசபை உறுப்பினர் எம்.ஏ.சற். பரீஸ், கட்டான பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி விஜித குரே ஆகியோரும் கலந்துகொண்டனர். தெப்பாஎல வாவி நீர்கொழும்புக்கும்கட்டானைக்கும் எல்லையாக உள்ளதால் அதனைச் சுத்தம் செய்து நீர் விரைவாக செல்ல ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

ஜும்மா மஸ்ஜித் மாவத்தை, ராசிக் பரீத் மாவத்தை, லாசரஸ் வீதி, மூர்வீதி, மொஸ்க் வீதி, ஐயூப் ஹாஜியார் மாவத்தை, ரகுமானா பாத் வீடமைப்புத் திட்டம் ஆகிய இடங்களில் இந்தச் சிரமதானப் பணிகள் நடைபெற்றன.