அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இந்தியாவில் ஸ்வைன் பலி 17 ஆனது- மகாராஷ்டிரத்தில் இன்று 3 பேர் சாவு

10092009.jpgஇந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை முதல் பிற்பகல் வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். புனேவில் மட்டும் நேற்று 3 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் முதல் பலி ஏற்பட்டுள்ளது. மும்பையில் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீர், மேகலாயா மாநிலங்களுக்கும் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. ஹைதராபாத்தில் உலக பேட்மிண்டன் போட்டித் தொடரையும் பன்றிக் காய்ச்சல் பீதிக்குள்ளாக்கியுள்ளது. தேசிய அளவில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000த்தைத் தாண்டியுள்ளது. இதனால் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைளை மத்திய அரசு  தீவிரப்படுத்தியுள்ளது. மும்பையில் அரசு மருத்துவமனைகளுக்கு உதவியாக தனியார் மருத்துவமனைகளும் பன்றிக் காய்ச்சல் சிகிச்சை நடவடிக்கைகளில் குதித்துள்ளன.

பல்வேறு நகரங்களில் ஏராளமான பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவையும் ஆங்காங்கு மூடப்பட்டு வருகின்றன. அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை மத்திய குழுக்களை அனுப்பி பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உதவ அனுப்பியுள்ளது.

பன்றிக் காய்ச்சலுக்கு மோசமாக பாதிக்கப்பட்ட நகரம் புனேதான். இங்கு மட்டும் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பம்பைமடு விடுதி காமினி வித்தியாலயத்தில் பரீட்சை எழுதும் சரணடைந்த 166 பேர்

examination_departmentsss.jpgக.பொ.த உயர்தரப் பரீட்சை வவுனியாவில் சுமுகமாக நடைபெற்று வருகிறதாக பரீட்சை இணைப்பாளரும் வலயக்கல்விப் பணிப்பாளருமான திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வோல்ட் தெரிவித்தார்.  நலன்புரி நிலையங்களில் வசிக்கும் 1187 மாணவர்களும் பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 1625 பேரும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

நலன்புரி நிலையங்களில் வசிப்பவர்களில் சரணடைந்த 139 ஆண்களும் 27 பெண்களும் பரீட்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு பம்பைமடு வளாக விடுதியிலும் ஆண்களுக்குரிய காமினி வித்தியாலயத்திலும் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நலன்புரிநிலைய ஏனைய மாணவர்களுக்கு கதிர்காமர், ஆனந்தகுமாரசாமி, இராமநாதன் ,அருணாச்சலம், வலயம்4 ,கல்வியியல் கல்லூரி,வீரபுரம் ஆகிய இடங்களில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நலன்புரி நிலையத்தில் வசிக்கும் பார்வையற்ற ஒரு மாணவனும் பரீட்சை எழுதுகின்றார். அவருக்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு வவுனியாவில் உள்ள 17 நிலையங்களில் பரீட்சைக்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் இணைப்பாளர் தெரிவித்தார்.

ஆங் சான் சூசீக்கு மேலும் 18 மாதம் வீட்டுக் காவல் தண்டனை!

miyanmar_s.pngபர்மாவில் ஜனநாயக ஆதரவு இயக்கத் தலைவி ஆங் சான் சூசீ நாட்டின் பாதுகாப்பு சட்டங்களை மீறினார் என்று தீர்பளித்துள்ள ரங்கூன் நீதிமன்றம் அவருக்கும் மேலும் 18 மாத வீட்டுக்காவல் தண்டனையை விதித்துள்ளது.

இந்தத் தீர்ப்பின் விளைவாக அடுத்த வருடம் நடக்கவிருக்கும் பலகட்சித் தேர்தலில் அவர் கலந்து கொள்ள முடியாமல் இருக்கும். ஏரிக்கரையிலுள்ள அவரது இல்லத்துக்கு அழைப்பு இல்லாமல்,  கடந்த மே மாதத்தில் நீந்திக் கடந்து வந்த அமெரிக்கர் ஒருவரை, தங்க அனுமதித்த்து மூலம் சூசீ வீட்டுக் காவல் விதிமுறைகளை மீறியிருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றம் விதித்த மூன்றாண்டு கால கடுங்காவல் சிறை தண்டனையை, இராணுவ ஆட்சியாளர்கள் பாதியாக குறைத்ததோடு அந்த தண்டனையை வீட்டிலேயே கழிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்கள் கடந்த 20 வருட காலத்தில் 14 ஆண்டுகளாக ஆங் சான் சூசீ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வட மாகாண சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்

computer.jpgவட மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமானது புதிய தொழில்நுட்பத்தின் அடிப் படையில் மீள் வடிவமைக்கப்பட்டு வட மாகாண ஆளுநர் மேயர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியால் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் விணையத்தளத்தில் வட மாகாண சபையின் நிகழ்வுகள், ஆவணங்கள், சுற்று நிருபங்கள்வட மாகாண பிரதேச கோள வரைபடங்கள், பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் வட மாகாணத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றிய விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், வட மாகாணத்தில் அமுல்படுத்தப்படுகின்ற “வடக்கின் வசந்தம்’ தொடர்பாகத் தகவல்களும் வட மாகாணச் செய்திகளும் விரைவில் இதில் வெளியிடப்படவிருக்கிறது.

திங்கள் காலை 9.30 மணிக்கு ஆளுநரின் செயலகத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் மாகாண சபையின் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் தகவல் செயற்பாட்டுக் குழு அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

ஆசியாவில் ஐம்பது மில்லியன் பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்றும் அபாயம்

ஆசிய கண்டத்து நாடுகளில், கணவன்மார் அல்லது காதலர்கள் பாதுகாப்பற்ற பாலியல் நடத்தையில் ஈடுபடுவதால் ஐம்பது மில்லியன் ஆசியப் பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றும் பேரபாயம் இருப்பதாக எய்ட்ஸ் பரவல் பற்றிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
இந்தோனீசிய நாட்டின் பாலி நகரில் நடந்த எச் ஐ வி- எய்ட்ஸ் மாநாட்டில் சமர்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின்படி ஆசிய கண்டத்து நாடுகளில்,  எச் ஐ வி கிருமிகளினால் பீடிக்கப்பட்ட 17 லட்சம் பெண்களில் 90 சதவீதமானவர்கள் அந்த நோயை தமது நீண்ட கால துணைவர்களிடமிருந்து தான் பெற்றார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பெண்களின் பலவீனத்துக்கு காரணமான சமுதாய நடத்தை, கொள்கை ஆகியன மாற வேண்டும் என்று ஐ நா மன்றத்தின் பெண்கள் எய்ட்ஸ் பிரிவின் பிராந்திய இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்சினை பற்றி இனிமேலும் அலட்சியம் காட்ட முடியாது என்றும் ஐ நா வின் எய்ட்ஸ் திட்ட அதிகாரி டாக்டர் பிரசாத் ராவ் கருத்து வெளியிட்டுள்ளார்.

நானே வெளிவிவகார அமைச்சர் கிளின்டன் அல்ல; ஹிலாரி சீற்றம்

hillary-clinton.jpgஆபிரிக்கா வுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அவரது கணவரும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமான பில் கிளின்டன் தொடர்பான கேள்வியொன்றுக்கு கோபமாகப் பதிலளித்துள்ளார். கொங்கோ தலைநகர் கின்ஷாசாவில் பொதுவான கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டிருந்த ஹிலாரியிடம் பல்கலைக்கழக மாணவரொருவர் கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட பல பில்லியன் டொலர்கள் மதிப்பு வாய்ந்த வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் கிளின்டன் என்ன கருதுகிறார் எனக் கேள்வியெழுப்பினார். இக் கேள்வியை எதிர்பார்க்காத ஹிலாரி அந்த மாணவனை நோக்கி;

எனது கணவர் என்ன நினைக்கிறார் என்பதை நான் உமக்குக் கூற வேண்டுமென விரும்புகிறீர். நான் தான் வெளிவிவகார அமைச்சரே தவிர கிளின்டன் அல்ல எனக் கடும் கோபமாகப் பதிலளித்துள்ளார்.

இந்தப் பதிலால் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சில நிமிட நேர அமைதி நிலவியது. தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஹிலாரி நீங்கள் எனது கருத்தைக் கேட்டால் அதனை நான் கூறுவேன். எனது கணவரின் தூதுவராக நான் செயற்படப் போவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பிய ஹிலாரி வேறு விவகாரங்களை நோக்கிப் பேச்சைத் திசை திருப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர் இக் கேள்வியை எழுப்பிய மாணவன் ஹிலாரியை அணுகித் தனது கேள்வி தவறாக மொழிமாற்றம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் சீனாவின் உடன்படிக்கை குறித்து ஜனாதிபதி பராக் ஒபாமா என்ன நினைக்கிறார் என்பதற்குப் பதிலாக கிளின்டன் என்ன நினைக்கிறார் எனத் தவறாகக் கேட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் கவலையடைய வேண்டாமென அம் மாணவனிடம் ஹிலாரி கூறியதாக அவரது நெருங்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார்.

2001 இல் பதவி விலகியதைத் தொடர்ந்து சர்வதேச மனிதாபிமான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் கிளின்டன் கடந்த வாரம் வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு அமெரிக்க ஊடகவியலாளர்களின் விடுதலை தொடர்பான விவகாரத்திலும் முக்கிய பங்காற்றியிருந்தாரென்பதும் குறிப்பிடத்தக்கது

யாழ்ப்பாணத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னாலிருந்த கல்வி நிலை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும – யாழ்நகரில் கல்வி அமைச்சர்

யாழ்ப்பாணத்தில் 30 வருடங்களுக்கு முன்னர் நிலவிய மிகச்சிறந்த கல்வி நிலை மீண்டும் உருவாக்கப்படவேண்டும். அதற்கு இங்குள்ள பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் கல்வியியலாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டுமென கல்வியமைச்சர் சுசில்ப்பிறேமஜயந்த தெரிவித்துள்ளார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கல்வியியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது; கடந்த காலங்களில் குழுப்பமான, கஷ்டமான சூழ்நிலையில் இருந்தபோதும் யாழ்.குடாநாட்டில் கல்வி மேம்பாடு அழிந்து விட்டாமல் பாதுகாத்து நின்ற ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவிக்கின்றோம். யாழ்ப்பாணத்தில் 4 வலயங்களில் சுமார் 101 பாடசாலைகள் மிகக் கடுமையான யுத்தத்தால் பாதிக்கப்பட்டு புனரமைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. கல்வி வலய அலுவலகங்கள் புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளன. பாடசாலையில் விஞ்ஞான ஆய்வு கூடங்களிற்கு உபகரணங்களை வழங்கவேண்டும். தளபாடங்கள், ஆசிரியர்கள், சிற்?ழியர்கள் பற்றாக்குறையாகவுள்ள அநேகமான பாடசாலைகள் உள்ளன. அவற்றிற்கு உடனடியாக இவற்றைப் பெற்றுத்தர வேண்டியுள்ளது.

மாகாணக்கல்வியமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளுக்கான வளங்களைப் பெற்றுத்தர ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வட மாகாண விசேட செயலணிக் குழுத்தலைவருமான பசில் ராஜபக்ஷவினால் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பாடசாலைகளுக்கான வளங்களைப் பெற்றுக் கொடுக்க உலகவங்கியுடன் கல்வியமைச்சு பேசி 10 மில்லியன் ரூபாவைப் பெற்றுள்ளது. முன்பு யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்.மத்திய கல்லூரி ஆகியவற்றுக்குச் சென்றபோது கட்டி முடிக்கப்படாத கட்டிடங்கள் காணப்பட்டிருந்தன. அவை விரைவில் பூரணப்படுத்தப்படும். “இசுறு’ பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் 30 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு 1,050 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வட மாகாணத்தில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் இன்மையினாலேயே இந்த நிதி விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பாடசாலை அதிபர்களுக்குப் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இசுறு பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் குடாநாட்டின் 5 வலயங்களைச் சேர்ந்த 75 பாடசாலைகளுக்கு கணினிக்கூடங்கள் அமைத்துக் கொடுக்கப்படும். கடந்த முறை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த போது தங்கள் பாடசாலைகளில் உள்ள பழைய கணினிகளை புதுப்பித்து தரும்படி மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்காக 3 வாரங்களில் நவீன கணினிகளை யாழ்.நகரில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுத்துள்ளோம். இத்தோடு கல்வியமைச்சின் கணினிப்பிரிவு உலக வங்கியுடன் பேசி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலை கணினிக் கூடங்களில் உள்ள பழைய கணினிகளைப் புதுப்பித்து வழங்கவும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளைக் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளுக்கு கணினிகளை வழங்க பல கணினி விற்பனை நிலையங்களிடம் இருந்து கேள்வி அறிவித்தல் பெறப்பட்டுள்ளது. இம் மாத முடிவிற்குள் கணினிகள் வழங்கி முடிக்கப்படும். இதுவரை நியமனங்கள் வழங்கப்படாத 400 வரையான தொண்டர் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கான நியமணங்களை வழங்கும் படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது அமைச்சிடம் கேட்டுள்ளார். இதற்கமைய 296 தொண்ட ஆசிரியர்களுக்கான நியமனங்களை யாழ்.மாநகரசபைத் தேர்தலுக்குப் பின்னர் வழங்கவுள்ளோம். இந்த நியமனங்களோடு 82 பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும்.

தேசிய பாடசாலைகளில் நிலவும் சிற்ழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பாக சமூக சேவைகள் அமைச்சருடன் பேசி தீர்வு காணப்படும். 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி அனைத்து ஆசிரியர்களுக்குமான பதவியுயர்வு பற்றிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான சுற்றறிக்கையும் திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 8 வருடங்களாகத் தீர்க்கப்படாமலிருந்த கல்வி நிர்வாக சேவை தரம் ஐ ற்கான பிரச்சினையும் தீர்க்கப்பட்டு அதிபர் சேவை ஐ இல் இருந்து நிர்வாக சேவை iii ற்கு வரவுள்ள 286 பேரின் பிரச்சினை டிசம்பர் மாதத்திற்குள் தீர்த்து வைக்கப்படும். அத்தோடு, அதிபர் சேவை 2:1 உள்ளவர்களுக்கான பதவி உயர்வுப் பிரச்சினையும் இவ்வாண்டுக்குள் தீர்க்கப்படும். அதிபர் சேவை 2:2, 2:3 உள்ளவர்களின் தேவைகள் செப்டெம்பர் மாதத்திற்குள் தீர்க்கப்படும். வடக்கின் வசந்தம் ஏற்பட இத்தனை வருடம் ஆனது போல் கல்விச் சேவையில் உள்ள சிக்கல்கள் தீர இத்தனை வருடங்கள் ஆகியுள்ளது. ஜனாதிபதியின் உதவியுடன் கல்விச் சேவை இப்பிரதேசத்தில் துரித வளர்ச்சி காணும். ஏ9 வீதி தொடர்பிலான சிக்கல் ஒரு சில நாட்களில் முடியும். முடிந்தவுடன் கொழும்பிலிருந்து கட்டிடப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் புனரமைக்கப்படும் என்றார்.

5 கிலோ எடையுள்ள20 கிளேமோர் குண்டுகள் நேற்று வானிலிருந்து மீட்பு – மன்னார் உப்புக்குளத்தில் சம்பவம்

mannar-van.jpgமன்னார் உப்புக்குளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடையுள்ள 20 கிளேமோர் குண்டுகளுடன் கூடிய வானொன்றை இராணுவத்தினர் நேற்று அதிகாலை மீட்டுள்ளனர்.

கொழும்பு கல்கிஸ்ஸை பகுதியில் கைதான புலி உறுப்பினர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கூறியது.

கல்கிஸ்ஸை, படோபிடிய பகுதியில் வைத்து நேற்று முன்தினம் (10) இரு புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பகுதியில் மற்றொரு புலி உறுப்பினரை கைது செய்யப்பட்டதாக ஊடக நிலையம் கூறியது.

இவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் படி ஹையஸ் வானொன்றில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கிளேமோர் குண்டுகளே மீட்கப்பட்டன.

கொழும்பிலிருந்து சென்ற கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இந்தத் தேடுதலில் ஈடுபட்டனர். இந்த கிளேமோர் குண்டுகள் கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்காக மறைத்து வைக்கப் பட்டிருந்ததாக கைதான புலி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக ஊடக மத்திய நிலையம் கூறியது. கைதான புலி உறுப்பினர்கள் தொடர்ந்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

வன்னி மாணவர்களின் நலன்களுக்கான கல்வியமைச்சின் குழுவில் தமிழர்கள் இல்லை

வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக செயற்படுவதற்கு கல்வியமைச்சின் செயலாளர் நியமித்த குழுவில் பெரும்பான்மையினத்தவர்கள் பெருமளவில் நியமிக்கப்பட்டுள்ளதுடன் தமிழர்கள் எவருமே நியமிக்கப்படாதது குறித்து தமிழ்க் கல்விமான்கள் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர். இக்குழுவில் ஏழு பெரும்பான்மையின அதிகாரிகளும் மூன்று முஸ்லிம் அதிகாரிகளும் உள்ளனர். முஸ்லிம் அதிகாரிகள் வடமாகாணத்தைச் சேராதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்குழுவினர் நலன்புரி நிலையங்களுக்கு ஆரம்பத்தில் நேரடியாகச் சென்றிருந்தனர். ஆனால் மொழிப் பிரச்சினையால் உரிய முறைப்படி இவர்களால் செயற்பட முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே இக்குழுவில் வடமாகாணத்தைச் சேர்ந்த கல்வி அதிகாரிகளை நியமித்தாலே வன்னி மாணவர்களின் பிரச்சினைகள், தேவைகளைக் கண்டறிந்து விரைவாகச் செயற்பட முடியும் என வன்னி மக்களின் புனர்வாழ்வு மீள்குடியேற்ற, மீள் நிர்மாணத்துக்கான அமைப்பு கல்வியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக இந்த அமைப்பு தற்போது செயற்பட்டுவருகிறது

மடுமாதா திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ், ரயில் சேவை

madu_church.jpgமடுத் திருப்பதியின் வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டு இன்று (12) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் நேற்று தெரிவித்தது.

இதன் பிரகாரம் மாத்தறை, புறக்கோட்டை, மொறட்டுவ மற்றும் நீர்கொழும்பு ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து மதவாச்சி வரை விசேட ரயில் சேவைகள் இடம்பெற உள்ளதோடு மதவாச்சியில் இருந்து மடு வரை விசேட இ. போ. ச. பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது.

இதேவேளை மதவாச்சியில் இருந்து புறக்கோட்டை, நீர்கொழும்பு, மாத்தறை ஆகிய இடங்களுக்கும் விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஆகஸ்ட் 12 மற்றும் 14 ஆம் திகதிகளில் நீர் கொழும்பில் இருந்து காலை 7.45 மணிக்கு விசேட ரயில் சேவையொன்று இடம்பெறவுள்ளதோடு இந்த ரயில் பகல் 1.43 மணிக்கு மதவாச்சியை சென்றடையும்.

* ஆகஸ்ட் 13 மொறட்டுவையில் இருந்து காலை 7.50 மணி – பி.ப. 1.43 மணிக்கு மதவாச்சி.

* ஆகஸ்ட் 15 மதவாச்சியில் இருந்து பி.ப. 3.15 மணி மொறட்டுவைக்கு இரவு 9.00 மணி

ஆகஸ்ட் 15 மதவாச்சியில் இருந்து பி.ப. 4.45 மணி – இரவு 10.50 மணிக்கு நீர்கொழும்பு

* ஆகஸ்ட் 16 மதவாச்சியில் இருந்து பி.ப. 4.45 மணி இரவு 10.53 மணிக்கு நீர்கொழும்பு

பின்வரும் ரயில் சேவைகள் தினமும் மதவாச்சி வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு இவற்றுக்கு மேலதிக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

* மாத்தறை – வவுனியா மாத்தறையிலிருந்து காலை 9.30 மணி – மதவாச்சிக்கு இரவு 7.43 மணி.

* புறக்கோட்டை – தாண்டிக்குளம் புறக்கோட்டையில் இருந்து காலை 5.45 மணி – மதவாச்சிக்கு காலை 10.00 மணிக்கு
* புறக்கோட்டை – மதவாச்சி புறக்கோட்டையில் இருந்து காலை 6.05 மதவாச்சிக்கு நண்பகல் 12.11 மணி
* வவுனியா – மாத்தறை மதவாச்சியில் இருந்து காலை 3.52 மாத்தறைக்கு பகல் 2.26 மணி
* வவுனியா – புறக்கோட்டை மதவாச்சியில் இருந்து பி.ப. 4.15 புறக்கோட்டைக்கு இரவு 8.30 மணி
* மதவாச்சி – புறக்கோட்டை மதவாச்சியில் இருந்து பகல் 12.25 மணி புறக்கோட்டைக்கு இரவு 7.00 மணி.

இது தவிர தினமும் புறக்கோட்டையில் இருந்து வவுனியா வரை இரவு 10 மணிக்கு இரவு நேர தபால் ரயில் சேவை இடம்பெறும். இந்த ரயில் மறுநாள் காலை 4.29 மணிக்கு மதவாச்சியை வந்தடையும். இந்த ரயில் மதவாச்சியில் இருந்து இரவு 10.35 மணிக்கு பயண மாகி மறுநாள் காலை 4.35 மணிக்கு புறக்கோட்டையை வந்தடையும்.