அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வீதிச் சிறுவர்களை கண்டுபிடிக்க பெண் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவர் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தகவல்

police_man.jpgபாடசா லைக்குச் செல்லாது வீதிகளில் கவனிப்பாரின்றி சுற்றித் திரியும் சிறுவர்களைத் தேடிக் கண்டு பிடிக்க பெண் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பாடசாலை செல்லாதுள்ள அனைத்து சிறுவர்களையும் கண்டுபிடிக்குமாறு கொழும்பு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறான சிறுவர்களை தேடிக்கண்டு பிடிக்கும் பெண் பொலிஸார் அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வார்கள். இரவுவேளைகளில் சிறுவர்கள் பிடிக்கப்பட்டால் அவர்கள் நகரிலுள்ள பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.ஆனால் சிறுவர்கள் விளக்கமறியல் சிறைகளில் அடைத்து வைக்கப்பட மாட்டார்கள். பிடிக்கப்படும் சிறார்களின் பெற்றோரோ பாதுகாவலர்களோ கண்டுபடிக்கப்பட்டால் அவர்கள் அழைப்பாணை விடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள்.

இவ்வாறான சிறுவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் பணிக்கும். அக்குடும்பங்களிடம் அதற்கான பண வசதி இல்லாவிட்டால் அரசாங்கம் அதற்கான பொறுப்பை ஏற்கும். இலங்கையில் 14 வயது பூர்த்தியாகும் வரை அனைத்து சிறார்களும் பாடசாலைக் கல்வியை கட்டாயமாக பெறவேண்டும் என்பது சட்டமாகும் என்றும் அவர் கூறினார்

வடக்கில் இடம்பெயர்ந்தோருக்கு மலேசியா ஒரு லட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி!

malasiia_agre.jpgவடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக மலேசிய அரசாங்கம் ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் ரொஸ்லி இஸ்மாயில் இந்த உதவியை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிடம் இன்று கையளித்தார்.

இது தொடர்பாக வைபவம் வெளிவிவகார அமைச்சில் இன்று காலை இடம்பெற்றது. இலங்கையின் சார்பில் இந்த உதவியைப் பெற்றுக்கொண்ட வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மலேசிய அரசுக்கு நன்றி தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை நடத்திய யுத்தத்திலும் மலேசிய அரசு வழங்கிய உதவிகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.

வடக்கு கிழக்கை மீளக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு மலேசியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்

களனி பல்கலைக்கழகத்துக்கு புதுக்கட்டடம்

wiswa_warnapala_00.jpgகளனி பல்கலைகழத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவப் பீடத்துக்கு புதுக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். அதன்படி 2010 ஆம் ஆண்டில் 600 மீட்டர் சதுர நிலப்பரப்பில் மூன்று மாடிக் கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதுடன் இதற்கு திறைசேரி மூலம் 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

சிறிய கட்சியாக மாறி வரும் ஐ.தே.க – அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா

anura_priyadarshana_yapa00.jpgஐக்கிய தேசியக் கட்சி மிகவும் வேகமாக பிரதேசக் கட்சியின் அளவுக்கு ஒரு சிறிய கட்சியாக மாறி வருகிறது என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த தோல்விகள் மூலம் இது புலனாகிறது என அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலின் போது யாழ்ப்பாண மக்கள் வாக்களித்திருந்தால் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றிருக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றார்கள். அப்படிக் கூறிய அவர்களுக்கு நடந்து முடிந்த யாழ்ப்பாண மா நகரசபைத் தேர்தலில் 83 வாக்குகளே கிடைத்துள்ளன

இந்தத் தோல்விகளையும் பெற்றுவரும் வாக்குகளையும் கவனித்தில் கொள்ளும் போது வெகு விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு சிறிய கட்சியாக ஒரு பிரதேசக் கட்சியாக மாறிவிடும் என்பதை திட்டவட்டமாகக் கூறமுடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ராஜபக்சவை கொல்ல மனித வெடிகுண்டு

இலங்கையின் தெற்கு மாகாண கவுன்சிலர் டேன்னி ஹிதித்தேதியாகே கொலை தொடர்பாக மதுஷா லட்சுமணன் என்பவரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் ஜனாதிபதி ராஜபக்சவின் சொந்த ஊரான அங்குனாகோலபெலீசாவில் மனித வெடிகுண்டாக செயல்பட்டு ராஜபக்சவை கொல்ல முயன்றது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்துஇ லட்சுமணனை விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசு நீதிமன்றத்தில் விசேஷ மனுதாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிவான்  எதிர்வரும் 17-ந்தேதி லட்சுமணனை கோர்ட்டில் ஆஜர் செய்யும்படியும்இ அதன் பின் அவரை பொலிஸ் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் உத்தரவிட்டார்.

இது குறித்து மூத்த சட்டத்தரணி திலீபா பெய்ரிஸ் நீதிமன்றில் கூறுகையில்இ மஹிந்த ராஜபக்சவை கொல்வதற்காக ஜனாதிபதியின் ஊரில் உள்ள ஒருவர் உதவியுடன் இந்த சதித்திட்டத்தை நிறைவேற்ற விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு லட்சுமணன் செயல்பட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது’ என்று தெரிவித்தார்.

முன்னணி பாடசாலை அதிபர் நாடு கடத்தப்பட்டார்

கொழும்பிலுள்ள முன்னணிப் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். விஸாக் காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருந்ததால் அவர் நாட்டைவிட்டுத் திருப்பி அனுப்பப்பட்டதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அதிபர் காணாமல் போய்விட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் கண்டுபிடிக்கப்பட்டு கனடாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருக்கும் போது அவரின் அடையாளத்துவம் வெளியிடப்பட்டிருக்கவில்லையென்றும் 3 மாத விஸா பெற்று வந்திருந்ததாகவும் ஆகஸ்ட் 9 உடன் அவரின் விஸாக்காலம் முடிவடைந்துவிட்டதாகவும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பி.பி.அபேயக்கோன் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலையா பாராளுமன்றத் தேர்தலையா முதலில் நடத்துவது? – சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறே அது குறித்து முடிவு செய்யப்படும்.

election000.jpgஜனா திபதித் தேர்தலையா பாராளுமன்றத் தேர்தலையா முதலில் நடத்துவது என்பது குறித்து அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறே அது குறித்து முடிவு செய்யப்படும். ஆனால், ஐ. ம. சு. முன்னணி எந்தத் தேர்தலுக்கும் தயாராகவே உள்ளதென ஐ. ம. சு. முன்னணி தலைவர்கள் நேற்று (12) தெரிவித்தனர்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டிலும் அரசாங்கம் 2/3 பெரும்பான்மை பலத்துடன் வெற்றியீட்டுமெனவும் ஊவா தேர்தல் முடிவு இதனை உறுதிப்படுத்துகிறது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (12) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது :-

சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஜனாதிபதித் தேர்தலையா பாராளுமன்றத் தேர்தலையா முதலில் நடத்துவது என்பது குறித்து அரசாங்கம் முடிவு செய்யும். எந்தத் தேர்தல் நடத்தவும் நாம் தயாராகவே உள்ளோம். ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் நாம் 2/3 பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறுவோம்.

யுத்த வெற்றி காரணமாக மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொண்டு வரும் பாரிய அபிவிருத்திகள் காரணமாகவுமே மக்கள் ஐ. ம. சு. முன்னணிக்கு வாக்களித்து வருகின்றனர். தமிழ், முஸ்லிம் மக்களும் அரசாங்கத்துடனேயே உள்ளனர்.

பாராளுமன்றத் தேர்தல் துரிதமாக நடத்தப்பட வேண்டுமென்றே விரும்புகிறோம் என்றார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும, ஆரம்ப முதல் ஐ. தே. க. வே தேர்தல் நடத்துமாறு கோரி வருகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் கூட ஐ. தே. க. பொதுத் தேர்தல் நடத்த வேண்டுமென கோரியது.

ஊவா மாகாண தேர்தல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஐ. தே. க. செயலாளர், பாராளுமன்றத் தேர்தலில் அரசாங்கத்துக்கு நல்ல பாடம் புகட்டுவதாக கூறியுள்ளார். ஐ. தே. க. கோரும் எந்தத் தேர்தலையும் முதலில் நடத்தத் தயார் என ஜனாதிபதி கூறியுள்ளார் என்றார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால சிரிசேன.

ஊவா மாகாண மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான தமது நம்பிக்கையை வெளிக்காட்டியுள்ளனர். அரசியல் யாப்பின் பிரகாரம் எந்தக் கட்சிக்கும் 2/3 பெரும்பான்மை பெறமுடியாது என்ற கருத்தே இத்தனை காலமும் காணப்பட்டது. அந்த நிலைப்பாட்டை எமது அரசாங்கம் பொய்யாக்கியுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் எமக்கு 2/3 பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் 2/3 பெரும்பான்மை பலத்தை பெற்றுத் தந்தது போல பாராளுமன்றத் தேர்தலிலும் மக்கள் ஐ. ம. சு. முன்னணிக்கு 2/3 பெரும்பான்மை பலத்தை பெற்றுத் தருவது உறுதி. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் குறித்து மக்களுக்கு பூரண நம்பிக்கை உள்ளது என்றார். இங்கு அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த, தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவங்ச ஆகியோரும் உரையாற்றினர்.

ஆங் சாங் சுயியை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு ஐ. நா., ஐரோப்பிய யூனியன் கடும் அழுத்தம்

miyanmar_s.pngமியன்மார் ஜனநாயகக் கட்சியின் தலைவி ஆங் சாங்சுயி மீதான நீதிமன்றத் தீர்ப்பை அநீதியானதெனக் குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவரை உடனடியாக எவ் வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யுமாறு கோரியுள்ளார்.

மியன்மார் இராணுவ அரசு தொடர்ந்தும் ஜனநாயக விரோதச் செயல்களை முன்னெடுப்பதை ஐ. நா. செயலாளர் பான் கீ மூன் கண்டித்துள்ளதுடன் ஐரோப்பியன் யூனியன் மியன்மார் மீது அவசரத் தடைகளைக் கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

மியன்மார் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆங்சாங்சுயி (64) மேலும் 18 மாதங்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட வேண்டுமென நேற்று முன் தினம் மியன்மார் நீதி மன்றம் உத்தரவிட்டது.

தடுப்புக் காவலில் இருந்த வேளை தனது வீட்டுக்குள் அமெரிக்கர் ஒருவரை வைத்திருந்ததாகக் கூறியே இந்தப் புதிய தீர்ப்பை மியன்மார் நீதிமன்றம் வெளியிட்டது. சுமார் இருபது வருட அரசியல் வாழ்க்கையில் 14 வருடங்களை ஆங் சாங் சுயி சிறையிலும், வீட்டுக் காவலிலும் கடத்தி வருகின்றார்.

மியன்மாரில் 2010 ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஆங் சாங்சுயியை போட்டியிடாமல் தடுக்கும் நோக்குடனே மியன்மார் இராணுவ அரசு இத் தீர்ப்பை வெளியிட்டுள்ளதாக உலக நாடுகள் விமர்சித்துள்ளன.  மியன்மார் மீதான கண்டனங்கள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா இது குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளது.

ஏழு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்கரையும் விடுதலை செய்யும்படி பராக் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.  மியன்மார் இராணுவ அரசின் மிலேச்சத்தனமான இந்நடவடிக்கைகளைக் கண்டித்து உலகத் தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். நேற்று முன்தினம் இத் தீர்ப்பு வெளியானதையடுத்து ஐ. நா. செயலாளர் பான் கீ மூன் மியன்மார் அதிகாரிகளுடன் அவசரமாகத் தொடர்பு கொண்டு நீதி மன்றத் தீர்ப்பை நிராகரித்தார்.

பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் இத் தீர்ப்பைக் கேள்வியுற்றதும் தான் திடீரெனக் கோபமடைந்ததாகக் கூறினார்.  இவ்வாறான நிலைமையில் மியன்மார் மீது புதிய தடைகள், அழுத்தங்களைக் கொண்டு வர ஐ. நா., ஐரோப்பிய யூனியன் என்பன ஆலோசித்து வருகின்றன.  சீனா இவ்விடயத்தில் மியன்மாரின் பக்கம் சாய்ந்துள்ளமை அதன் நடவடிக்கைகளிலிருந்து தெரிய வருகிறது.

தொழிற் சங்கங்கள் அசமந்தம் அடுத்த வாரம் கூடி ஆராய முடிவு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அது இன்னமும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது.

இது தொடர்பாக அடுத்த வாரமளவில் தொழிற்சங்கங்கள் கூடி ஆராயுவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து அதில் கைச்சாத்திடும் சங்கங்கள் சம்மேளனத்துடன் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. அதன்போது தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை ஐநூறு ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென சங்கங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

எனினும், இதனை நிராகரித்த முதலாளிமார் சம்மேளனம், நாளொன்றுக்கு 200 ரூபாவை வழங்க முடியுமெனத் தெரிவித்துவிட்டது. இது குறித்து தொழிற் சங்கங்கள் மீண்டும் அடுத்த வாரம் கூடி ஆராய்ந்து சம்மேளனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்று காங்கிரஸ் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், சங்கங்கள் ஊவா மாகாண சபைத் தேர்தலில் மூழ்கிவிட்டன. தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கப்போவதாக பிரதியமைச்சர் சிவலிங்கம் தெரிவித்தார்.

முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டி ஆகிய அமைப்புகள் கைச்சாத்திட்டு வருகின்றன.

இந்தச் சங்கங்கள் அடுத்த வாரம் கூடி ஆராய்ந்து மீண்டும் பேச்சுவார்த்தையை உயிர்ப்பிக்கவுள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு மணி நேரத்தில் 261 வாகனங்கள் நேற்று மடு பிரதேசத்தினுள் பிரவேசம்

madu_church.jpgமடு தேவாலய உற்சவத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ரயில் சேவைகள் நேற்றுக் காலை முதல் ஆரம்பமாகின. முதலாவது ரயில் நேற்றுக் காலை 7.45க்கு நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

இதேவேளை நேற்று மடு தேவாலயத்திற்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்ட ஒருமணி நேரத்துள்ளேயே 261 வாகனங்கள் மடு தேவாலய பகுதிக்குள் சென்றதாக தேவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான சேவைகள் அமைச்சர் சரத் குமார குணரட்ண அவரது பாரியார் சகிதம் மடு புறப்பட்டுச் செல்லும் முதலாவது ரயிலில் பயணித்தனர். நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் நேற்றுக் காலை புறப்பட்டுச் செல்லும் யாத்திரிகர்களுக்கும், ரயிலுக்கும் ஆசிவேண்டி விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டதுடன் மடு மாதா மீதான துதிப்பாடல்களும் பாடப்பட்டன.

கொழும்பு கோட்டையிலிருந்தும் நேற்று விசேட ரயில்கள் புறப்பட்டுச் சென்றன. நாளை காலை கொழும்பு கோட்டையிலிருந்து காலை 5.45க்கும், 6.05க்கும், 8.45க்கும் பகல் 1.45க்கும் மாலை 4.20க்கும் இரவு 10.00 மணிக்கும் விசேட ரயில்கள் புறப்படுகின்றன.