அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வன விலங்குகளை தின்றே ஒழிக்கும் வியட்நாமியர்

வியட்நாம் நாட்டு மக்கள் பல வன விலங்குகளை தின்றே அழித்து ஒழித்து விடப் போகிறார்கள் என்று வியட்நாமில் சட்டத்துக்குப் புறம்பாக நடைபெறும் வன விலங்குகளின் வியாபாரம் குறித்து நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் தொலை தூரப்பகுதிகளில் இருக்கும் மலைவாசி மக்களிடமிருந்து வன விலங்குகளின் இறைச்சியை உண்ணும் பழக்கம் நகரங்களில் வசிக்கும் வசதிபடைத்தோர் மத்தியில் பரவிவிட்டதாக வியட்நாம் விலங்கியல் கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

அருகிவரும் 80 வகையான உயிரினங்களின் இறைச்சி அங்கு மக்களால் உண்ணப்படுகிறது. காண்டாமிருகங்கள், டபிர் என்ற பன்றி போன்ற விலங்கு மற்றும் ஒரு வகை குரங்குகளும் இதில் அடங்கும்.

இந்தோனேஷியாவில் சட்டவிரோத குடியேற்றம் : இலங்கையர் நாடு திரும்புவர்

indonesia1111.jpgஇந்தோனே ஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் நாடு திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலரை அந்நாட்டுக் காவல்துறையினர் கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.

இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்ட எட்டு சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களே இவ்வாறு இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதேவேளை, இந்தோனேஷியாவின் ஆச்சே தீவுகளில் கைது செய்யப்பட்ட 55 இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் பேசுவோரை அகதிகளாக ஏற்றதற்காக கனடா வருத்தப்படும் – கனடாவிலுள்ள இலங்கைத் தூதுவர் தெரிவிப்பு

இலங்கையிலிருந்து தமிழ் பேசுவோரை அகதிகளாக ஏற்றுக்கொண்டதற்காக கனடா கவலைப்படும் என்று அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தயா பெரேரா கூறியுள்ளார். ஆங்கிலப் பத்திரிகையொன்றின் இணையத்தள சேவைக்கு வழங்கிய பேட்டியின் போதே தயா பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து 2006 இற்கு முன் அகதிகளாக சென்றோரை கனடா உள்ளீர்த்தமை அந்த நாட்டின் எதிர்கால பொதுத் தேர்தலில் முக்கியமான காரணியாக தோற்றம் பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமைகளை பேணிக்காப்பவர்கள் என்ற பெருமையை கனடா எடுத்துக் கொண்டுள்ளது. இதனால் அகதிகளாக வருவோரில் பெருந்தொகையானோருக்கு அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. கனடா புலிகளை ஊக்குவிக்கவோ அல்லது தாபரிக்கவோ இல்லை. 2006 இல் புலிகளை தடை செய்திருந்தது.

2008 ஜூனில் உலகத் தமிழர் இயக்கத்தை தடை செய்திருந்தது என்றும் தயா பெரேரா கூறியுள்ளார்.  இதேவேளை, கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் கைது தொடர்பாக கனடாவில் பகிரங்கமான எதிரொலி காணப்படவில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார். தமிழ் பேசும் புலம்பெயர் சமூகத்தினர் மத்தியில் செல்வாக்குடையவராக கே.பி. தோன்றவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணமடைந்ததை கே.பி. ஏற்றுக்கொண்டிருந்தார். அதனால், கனடாவில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்வோரின் வருவாய் குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அதேசமயம், மோதலின் இறுதிக்கட்டங்களில் மனிதக் கேடயங்களாக பிரபாகரன் பயன்படுத்தியது குறித்து புலம்பெயர் சமூகத்தின் மத்தியிலிருந்து கண்டனம் தெரிவித்து ஒரு வார்த்தைதானும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று தயா பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இடம்பெயர்ந்த மக்கள் நடத்தப்படும் விதம் குறித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாகவும் ஏனென்றால் தொடர்ந்து பணம் திரட்ட ஆர்ப்பாட்டங்களுக்கான சில அடிப்படைத் தேவை அவர்களுக்கு உள்ளதாகவும் தயா பெரேரா கூறியுள்ளார்.

யாழ். வவுனியா இடையே ஆயிரம் பேர் தினமும் இரு வழிப் பயணம்

bus.jpgயாழ்ப் பாணத்துக்கும் வவுனியாவுக்குமிடையே இருவழிப் பயணமாக தினமும் ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர்.  யாழ். நகரிலிருந்து தினமும் முற்பகல் 11 மணிக்கு ஏழு இ.போ.ச. பஸ்களும் குளிரூட்டப்பட்ட இரு தனியார் சொகுசு பஸ்களும் படையினரின் பாதுகாப்புடன் வவுனியா நோக்கி புறப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் வவுனியா டிப்போவை வந்தடைகின்றன.

இந்த பஸ்கள் மாலை 4 மணிக்கு மீண்டும் வவுனியா றம்மியா கவுஸ் இராணுவ முகாம் முன்பாகவிருந்து புறப்பட்டு இரவு 8 மணியளவில் யாழ் நகரை சென்றடைகின்றன.

வவுனியாவிலிருந்து பயணம் செய்வோர் உரிய பத்திரத்தினை சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். யாழ். நகரிலிருந்து வந்தவர்கள் பயண அனுமதிப் பத்திரத்தை சமர்ப்பித்து பஸ் பதிவுகளை மேற்கொள்ளலாமென அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமும் இந்த சேவை நடைபெற்று வருகின்றது. இதில் சுமார் ஆயிரம் பேர் போக்குவரத்து செய்கின்றனர்.

‘மத சுந்திரத்துக்கு எதிரான நாடுகளின் பட்டியலில் இந்தியா’

மத ரீதியான சிறுபான்மையினரை பாதுகாப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்காத நாடுகளின் பட்டியலில் இந்தியாவை அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற குழு ஒன்று சேர்த்திருக்கிறது.

இந்தியாவில் மத வன்செயல்கள் கணிசமான அளவுக்கு அதிகரித்து வருவதன் காரணமாகவே அதனை அந்த பட்டியலில் சேர்த்ததாக சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணைக்குழு கூறியுள்ளது.

2008 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் ஒரிசா மற்றும் குஜாரத் மாநிலங்களில் நடந்த கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான வன்செயல்களை அந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.

இந்தக் குழு ஒவ்வொரு வருடமும் மத சுதந்திரம் குறித்த அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளும் இடம்பெறுகின்றன.

இந்த பட்டியலில் தமது நாட்டின் பெயரைக் குறிப்பிட்டது குறித்து இந்திய தரப்பில் இருந்து இதுவரை பதில் கருத்து எதுவும் வரவில்லை.

வடக்கில் 20 ஆயிரம் ஏக்கரில் மரமுந்திரிகை பயிரிட நடவடிக்கை!

cashew_s.pngவடக்கின் வசந்தம் கருத்திட்டத்தின்கீழ் வடக்கில் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மரமுந்திரிகையைப் பயிரிட இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மன்னார் பிரதேசத்தில் 6000 ஏக்கரில் நடப்பட்டிருந்த மரமுந்திரிகை மரங்களை புலிகள் தறித்து அழித்துள்ளனர். இதன்பின்னர் இப்பிரதேசத்தில் மரமுந்திரிகைப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படவில்லை என மரமுந்திரிகைக் கூட்டுத்தாபன பிரதித் தலைவர் பிரியநாத் பியதாச தெரிவித்தார்.

நாட்டில் தற்போது வருடமொன்றுக்கு 11ஆயிரம் தொன் மரமுந்திரிகை உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனை எதிர்வரும் ஐந்து வருட காலத்துக்குள் 50 ஆயிரமாக உயர்த்தவும் மரமுந்திரிகை உற்பத்தி நாடுகளில் முதல் 10 நாடுகளுக்குள் இலங்கையை உள்ளடக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு பணியகம் முன்னால் போலி வெளிநாட்டு முகவர் நிலையம் – பெண் உட்பட பலர் கைது பஜரோ வாகனமும் கைப்பற்றப்பட்டது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு முன்னால் சிறிய கடையொன்றுக்குள் நடத்தப்பட்டு வந்த போலி வெளிநாட்டு முகவர் நிலையம் நேற்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டது.

இப் போலி வெளிநாட்டு முகவர் நிலையத்தை நடத்திவந்த பெண் ஒருவரும் பலரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். புதிய ரகபஜரோ வாகனமொன்றையும் பொலிஸார் கைப்பற்றியிருப்பதாகவும் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு முன்பாகவிருக்கும் சிறிய கடையொன்றுக்குள் வைத்து கும்பலொன்று நீண்ட காலமாக போலி முகவர் நிலையமொன்றை நடத்தி வந்துள்ளது. பணியகத்தின் கீழ் தாங்கள் செயற்பட்டு வருவதாகக் கூறி, மக்களை ஏமாற்றி இந்தக் குழு பணம் பறித்து வந்துள்ளது.

நேற்றைய தினம் சுமார் 50 பேர் வரையில் இந்த சிறிய கடைக்கு முன்பாக சூழ இருந்துள்ளனர். கூட்டத்துக்கான காரணத்தை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தேடிப் பார்த்தபோதே சந்தேக நபர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டனர். பிறேசிலில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்றிருந்த 50 பேரினதும் பெயர்கள் பணியகத்தில் பதிவுசெய்யப்பட வேண்டுமெனக் கூறியே நேற்று அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்படும்வேளை அவர்களிடம் 50 இலட்சம் ரூபா பணம் இருந்ததாகவும் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறினார். போலி முகவர் நிலையத்தினால் ஏமாற்றப்பட்ட 50 பேரும் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்கள் ஒவ்வொருவரும் பிறேசிலில் வேலை பெற்றுக்கொள்வதற்காக குறித்த முகவர் நிலையத்துக்கு ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ரூபா வீதம் வழங்கியிருப்பதாக கூறியுள்ளனர். பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

புலிகளின் உலக வலையமைப்பின் முக்கிய தகவல்கள் அம்பலம் – கே.பி மீதான விசாரணை குறித்து பாதுகாப்பு செயலர் கூறுகிறார்

pathmanathan.jpgநீண்ட காலமாக அரும்பாடுபட்டு பொருத்தமான பல திட்டங்களை வகுத்துச் செயற்பட்டதாலேயே கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி (சிங்கள ஒலிபரப்பு) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனைக் கூறினார்.

நாட்டின் புலனாய்வுத் துறை உட்பட பாதுகாப்புப் படையினர் பத்மநாதன் பற்றிய தகவல்களை ஏற்கனவே அறிந்திருந்தனர் எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலிகளின் தலைவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அந்த அமைப்பின் சர்வதேச பலத்தை ஒழிக்க வேண்டிய தேவை இலங்கை அரசுக்கு இருந்தது. கே.பி.யை விசாரணை செய்வதன் மூலம் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் முக்கியமான தகவல்களைப் பெறமுடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் கொலைசெய்யப்பட்ட பின்னர் அந்த இயக்கத்தின் தலைவராக தன்னைத் தானே கே.பி. அடையாளப்படுத்தி உலகிலுள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் பாதுகாப்பமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

முப்பது வருடகாலமாக இயங்கி வந்துள்ள புலிகள் இயக்கம் உலகிலுள்ள வல்லரசு நாடுகளுக்குக் கூட அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வலுவடைந்திருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் ஆரம்பமானது. இதனையடுத்து சர்வதேச ரீதியாக பாரிய அழுத்தங்கள் விடுக்கப்பட்டமை இதற்கு சிறந்த உதாரணமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் ஜனாதிபதியின் நேரடியான தலைமைத்துவம் காரணமாக இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் உட்பட பல குழுக்கள் ஜனாதிபதிக்கோ அரசாங்கத்துக்கோ வெளிநாட்டுத் தொடர்புகள் கிடையாதென விமர்சனம் செய்து வந்துள்ளன.

ஆனால் தற்போது இலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்குமிடையில் உயர்மட்டத்திலான நல்லுறவு பேணப்படுகிறது. கே.பி.யைக் கைது செய் வதற்கும் இந்த சர்வதேச நல்லுறவுகள் துணைபுரிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மெனிக்பாம் முகாமுக்கு 500 கழிவறைகள்!

rajitha_senarathna.jpg செட்டிக் குளம் மெனிக் பாம் முகாமில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை வசதி கருதி 500 கழிவறைகளை உடனடியாக அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிர்மானத்துறை மற்றும் பொறியியல் சேவைத் துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

இத்திட்டத்துக்கு 2 கோடியே 5 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று வாரங்களில் நிர்மானப் பணிகளைப் பூர்த்திசெய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சை 23ம் திகதி: நிவாரண கிராமங்களிலிருந்து 6000 மாணவர் தோற்றுவர்; பதிவு நடவடிக்கை ஆரம்பம்

examination_departmentsss.jpgநிவா ரணக் கிராமங்களிலுள்ள 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குரிய சுட்டிலக்கங்கள் வழங்குதல், பதிவு செய்தல் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு நிவாரணக் கிராமங்களிலிருந்து சுமார் 6000 மாணவ, மாணவிகள் தோற்றவுள்ளனர்.

இவர்களுக்கென நிவாரணக் கிராமங்களுக்குள்ளேயே சுமார் 48 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தவும் வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சில நிவாரணக் கிராமங்களிலிருந்து வேறு இடைத்தங்கல் முகாம்களுக்கு மக்களை இடமாற்றும் நட வடிக்கைகள் செய்யப்பட்டு வருவதால் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களை கண்டறியும் வேலைகளில் கல்வித் திணை க்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி பரீட்சைக்குத் தோற்றும் மாண வர்களை கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவு னியா, மன்னார் என மாவட்ட ரீதியாக பிரித்து மாவட்ட ரீதியாகவே பரீட்சை நிலை யங்களை ஏற்படுத்துவதும், பதிவுகளை மேற் கொள்வதும் என வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.

இதேவேளை நிவா ரணக் கிராமங்களில் அல்லாத வவுனியா மாவட்ட பாடசாலைகளில் 5ஆம் ஆண்டு புலமைப் பரீட்சைக்காக சுமார் 2200 மாணவர்களும் தோற்றவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.