அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் வாக்குமூலம்

பொலிசாரின் கடும் தாக்குதலை சகிக்க முடியாமலேயே அவர்கள் கொண்டுவந்த ஆவணங்களில் கையொப்பமிட நேர்ந்ததாக ”நோத் ஈஸ்டன் மன்த்லி” என்ற சஞ்சிகையின் வெளியீட்டாளரான வெற்றிவேல் யசீகரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று சாட்சியமளித்தார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அந்த சஞ்சிகையின் வெளியீட்டாளரான வெற்றிவேல் யசீகரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக நேற்று சாட்சியமளித்தார்.

யசீகரன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கொல்லுரெ என்பவருக்கு வழங்கியதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அவர் சுயேச்சையாக வழங்கியதா என்பதை அறியும் நோக்கில் இந்த விசாரணை நடந்தது. 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி தன்னையும் தனது மனைவியையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்து தன்னை தாக்கி கடும் இம்சைகளுக்குட்படுத்தி பல்வேறு கடதாசிகளில் தனது கையொப்பத்தை பலவந்தமாக பெற்றதாக யசீகரன் சாட்சியில் தெரிவித்தார். தான் ஒருபோதும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கொல்லுரே என்பவருக்கு வாக்குமூலம் அளிக்கவில்லை என்றும் அவரை முதற்தடவையாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில், இந்த வழக்கின்போதே கண்டதாகவும் யசீகரன் அரச சட்டவாதியின் குறுக்குகேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

வவுனியாவில் பெண் தற்கொலைதாரி சந்தேகத்தில் கைது

220909prisoner1.jpgபொலி சாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் செவ்வாயன்று நடத்தப்பட்ட தேடுதலின்போது தற்கொலைதாரி எனச் சந்தேகிக்கப்படும் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகளின்போது இந்தப் பெண் வழங்கிய தகவலையடுத்து தற்கொலைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் 3 அங்கிகளும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். காட்டுப்பகுதி ஒன்றில் இவை ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்தின் பேரில் இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்ததாகத் தெரிவிக்கப்படும் மற்றுமொரு இளம் பெண் சைனைட் அருந்தித் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் விடுதலைப்புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களாக இருக்கலாம் எனப் பொலிஸ் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சவால்களை எதிர்நோக்கினாலும் கொள்கையில் உறுதி : கி.மா. முதலமைச்சர்

210909pillayan.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது கொள்கைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லும் போது பல்வேறு சவால்களை எதிர்நோக்கினாலும் தமது கொள்கையில் உறுதியுடன் இருப்பதாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கிராமிய மட்ட அங்கத்தவர்களுக்கான உறுப்புரிமை வழங்கும் வைபவம் பேத்தாழை குகனேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,

“தமிழ் மக்களின் அரசியல் உரிமை, அபிலாஷை மற்றும் தனித்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கையாகும். சமூக ரீதியான பிராந்திய அரசியல், குறிப்பாக தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்துவதற்குரிய ஒரு கட்சியாகவே இன்று எமது கட்சி விளங்குகின்றது. நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஓர் அரசியல் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது எமது கட்சியாகும். கிழக்கில் இதுவரைக்கும் அரசியல் தலைமைத்துவத்தில் ஸ்திரமற்ற நிலையே காணப்பட்டு வருகின்றது.இதனை மாற்றி அமைக்க வேண்டும். என்றார். 

மது உற்பத்தியும் பாவனையும் 9.5 வீதத்தினால் வீழ்ச்சி – ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய

அரசாங்கத்தின் மது ஒழிப்புத் திட்டத்தின் கீழ் மது உற்பத்தியும், மது பாவனையும் வெகுவாகக் குறைந்து ள்ளது என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப் பிட்டிய தெரிவித்தார். 2007 முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் மது உற்பத்தி 9.5 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. மதுபாவனையும் 2006 முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் 9.42 வீதமாக வீழ்ச்சியடை ந்துள்ளது.

அரசாங்கம் படிப்படியாக மதுவை ஒழிப்பதற்காக எடுத்துவரும் நடவடிக்கையையே இவை காட்டுகின்றன. எனினும், மதுவுக்கான வரி விதிப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மது ஒழிப்புக்கான ஒரு அங்கமாகவே மது வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டுடன் 2009 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது மதுவுக்காக 44 வீத வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மதுவுக்கென 34 வீத வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

பியர் வகைகளுக்கென 28 வீத வரி அதிகரிப்பும், வைன் வகைகளுக்கென 69 வீத வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வரியினூடாக அரசுக்கு கிடைக்கும் பணத்தை விட மது பாவனையை குறைக்கும் நோக்கத்துடனே வரி விதிப்புகளும் செய்யப்படுகின்றன.

அரசாங்கம் மது வகைகளின் உற்பத்தி, வெளிநாட்டு மது வகைகளின் இறக்குமதி சகல மது வகைகளின் பாவனையை கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

ஐ.தே.க. எம்.பி. ரஞ்ஜித் அலுவிகாரே கேட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போது ரவி கருணாநாயக்க மேலதிக கேள்வியொன்றை எழுப்பிய போதே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மலையக தொழிற்சங்கங்கள் ஓரணியில் திரண்டு பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவேண்டும் – இராஜரட்ணம்

080909teawomen.jpgமலையகத் தொழிற்சங்கங்கள் தமக்கிடையில் மோதிக்கொள்வதைத் தவிர்த்து ஓரணியில் திரண்டு அடுத்த பொதுத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.  அவ்வாறு செய்வதன் மூலமே மலையக பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியுமென மத்திய மகாணசபை உறுப்பினர் எஸ்.இராஜரட்ணம் தெரிவித்தார்.

கண்டி நில்லம்ப ஹார்ல் ஓயாவில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் போராட்டத்தின் பின் மலையக தொழிற்சங்கங்கள் தமக்கிடையில் மோதிக்கொள்வதையே காணக்கூடியதாகவுள்ளது.  இச்சங்கங்கள் தமக்கிடையிலுள்ள வேற்றுமையைத் தவிர்த்து ஓரணியன் கீழ் திரள்வதன் மூலமே அடுத்த பொதுத்தேர்தலை சந்திக்கவேண்டும். அவ்வாறு ஒன்று திரள்வதன் மூலம் மட்டுமே மலையக பிரதிநிதித்துவத்தினை காப்பாற்றிக்கொள்ளமுடியும்.

மலையகத்திலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தோட்டத்தொழிலாளர் சங்கம், ஐக்கிய தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பினை உருவாக்கவேண்டும்.  இக்கூட்டமைப்பு பொதுத்தேர்தலில் தனியாக போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களுக்காக பேரம் பேசும் சக்தியினை மீண்டும் பெறவேண்டும். வெற்றிபெற்ற பின் எந்தக்கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தாலும் பரவாயில்லை. ஆனால், தேர்தலை கூட்டாக சந்தித்து தமிழரின் வாக்குகள் சிதறாமல் பிரதிநிதித்துவத்தினைப் பாதுகாக்கவேண்டும்

போலி புகைப்படம் வெளியிட்ட மூவருக்கு அக்டோபர் 6 வரை விளக்கமறியல்

காலி ஹிக்கடுவை கடற்கரைப் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற ‘ஹிக்கா’ பண்டிகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என போலியானவற்றை வெளியிட்டார்கள் என்ற  குற்றச்சாட்டின் பேரில் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரையும்  எதிர்வரும் அக்டோபர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த அதிகாரிகள் என்று பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கடந்த ஜுன் மாதம் அரசின் அனுசரணையின் பேரில் இடம்பெற்ற இந்த ‘ஹிக்கா’ பண்டிகையின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் சில வெளியிடப்பட்டன. போலியாகத் தயாரிக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை சுற்றுலா சபை அதிகாரிகள் சிலர் இரகசிய பொலிஸாரிடமும் பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரிடமும் முறையிட்டனர். அவர்கள் நடத்திய விசாரணைகளின் அடிப்படையிலேயே அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு தாய்லாந்து கடற்கரைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவமொன்றின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டே ‘ஹிக்கா’ பண்டிகையின் போது எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் புகைப்படங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

முன்னாள் போராளிகளின் மனித உரிமைகளை பாதுகாக்கும் யோசனைகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

முன்னாள் போராளிகளின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி அவர்களை சிவில் வாழ்வில் மீள ஒருங்கிணைப்பதற்கான யோசனைகளை உள்ளடக்கிய தேசிய கொள்கைகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பல்வேறுபட்ட தரப்பினருடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டு இந்த யோசனைகள் தயாரிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் விவகார அமைச்சு நேற்று திங்கட்கிழமை இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தத் தேசிய கட்டமைப்பு யோசனைகளில் முக்கியமாக வடிவமைக்கப்பட்டிருப்பது முன்னாள் போராளிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயமாகும். இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் அரசின் சர்வதேச கடப்பாடுகளின் பிரகாரம், முன்னாள் போராளிகளுக்கு உதவுதல், பாதுகாப்பு அளித்தல் என்பனவற்றுக்கான பொறுப்பும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நிலையான சமாதானம், நல்லிணக்கம், சமூகத் தொடர்பாடல், முன்னாள் போராளிகளுக்கான தொழில் வாய்ப்பை அதிகரித்தல், சமூக, பொருளாதார ரீதியில் அவர்கள் ஓரம்கட்டப்படும் ஆபத்தைக் குறைத்தல், அத்துடன் போருக்குப் பின்னர் இலங்கையில் பொருளாதார மறுமலர்ச்சிக்கான சந்தர்ப்பங்களை உருவாக்குதல் என்பனவும் இந்தக் கட்டமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய கட்டமைப்பு மற்றும் முன்னாள் போராளிகளை சிவில் வாழ்வில் மீள ஒருங்கிணைத்தலின் முக்கியத்துவம் என்பன இலங்கை அரசும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனும் கடந்த மே மாதம் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் 27 ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை சுற்றுலாவாரம் அனுஷ்டிக்க ஏற்பாடு

sri-lanka-hotels.jpgஉலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சு நாடு தழுவிய ரீதியில் இம்மாதம் 27 ஆம் திகதி முதல் அக்டோபர் 3 ஆம் திகதி வரை சுற்றுலா வாரத்தை கொண்டாட தீர்மானித்துள்ளது.  இவ்வாரத்தினுள் சுற்றுலா மற்றும் உல்லாசப் பயணத்துறை தொடர்பாக சூழலுடனும் அதனை சார்ந்த சமூகத்துடனும் நல்லுறவை பேணிப்பாதுகாப்பதுடன் உல்லாசப் பயணத்துறையை பிரபல்யப்படுத்துவதுமே இதன் பிரதான நோக்கமாகும்.

வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தற்போது ஓரின சுமுக நிலை ஏற்பட்டுவருவதால் வெளிநாட்டு மற்றும் உள்ளூரைச் சேர்ந்த உல்லாசப் பிரயாணிகள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மேலும், மகிந்த சிந்தனையின் அடிப்படையில் தேசிய அபிவிருத்தி கொள்கைக்கு அமைவாகவே சுற்றுலாத்துறை அமைச்சு பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் உல்லாசப் பிரயாணிகளை கவரக்கூடிய இடங்களை மேலும் அபிவிருத்தி செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சு பாடசாலை மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் நடத்திய சித்திரம், கட்டுரை மற்றும் சுவரொட்டி போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசில்கள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள சுற்றுலா வாரத்தின் இறுதிநாள் நிகழ்வின் போது வழங்கப்படும்.

ஐ.நா.விசேட நிபுணர் அல்ஸ்டனை வரவழைக்க அரசாங்கம் தயாரில்லை: அமைச்சர் சமரசிங்க

minister-mahinda-samarasinghe.jpgஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பிலிப் அல்ஸ்டனை இலங்கைக்கு வரவழைப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை. அவர் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு எவ்விதமான நம்பிக்கையும் கிடையாது என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை விடுத்த வேண்டுகோள்களை இலங்கை அரசாங்கம் அலட்சியம் செய்துவிட்டது என்று ஐ.நா.வின் விசேட நிபுணர் பேராசிரியர் பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் சிவில் யுத்தத்தின் இறுதி மாதங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் பல சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்கென இலங்கைக்கு செல்ல தாம் நீண்ட நாட்களாக அரசாங்கத்திடம் அனுமதி கோரி வருவதாகவும் பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.

இன்று பிற்பகலில் பேராதனையில் ஏழரை லட்சம் ரூபா கொள்ளை

பேராதனை கலகா சந்தியில், இன்று பிற்பகலில் ஏழரை லட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் வங்கியில் மேற்படித் தொகையை வைப்பிலிடச் சென்ற போதே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள், ஏழரை லட்சம் ரூபாவைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் எனப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்துள்ளார்.