மலையகத் தொழிற்சங்கங்கள் தமக்கிடையில் மோதிக்கொள்வதைத் தவிர்த்து ஓரணியில் திரண்டு அடுத்த பொதுத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே மலையக பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியுமென மத்திய மகாணசபை உறுப்பினர் எஸ்.இராஜரட்ணம் தெரிவித்தார்.
கண்டி நில்லம்ப ஹார்ல் ஓயாவில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் போராட்டத்தின் பின் மலையக தொழிற்சங்கங்கள் தமக்கிடையில் மோதிக்கொள்வதையே காணக்கூடியதாகவுள்ளது. இச்சங்கங்கள் தமக்கிடையிலுள்ள வேற்றுமையைத் தவிர்த்து ஓரணியன் கீழ் திரள்வதன் மூலமே அடுத்த பொதுத்தேர்தலை சந்திக்கவேண்டும். அவ்வாறு ஒன்று திரள்வதன் மூலம் மட்டுமே மலையக பிரதிநிதித்துவத்தினை காப்பாற்றிக்கொள்ளமுடியும்.
மலையகத்திலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தோட்டத்தொழிலாளர் சங்கம், ஐக்கிய தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பினை உருவாக்கவேண்டும். இக்கூட்டமைப்பு பொதுத்தேர்தலில் தனியாக போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களுக்காக பேரம் பேசும் சக்தியினை மீண்டும் பெறவேண்டும். வெற்றிபெற்ற பின் எந்தக்கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தாலும் பரவாயில்லை. ஆனால், தேர்தலை கூட்டாக சந்தித்து தமிழரின் வாக்குகள் சிதறாமல் பிரதிநிதித்துவத்தினைப் பாதுகாக்கவேண்டும்