ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பிலிப் அல்ஸ்டனை இலங்கைக்கு வரவழைப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை. அவர் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு எவ்விதமான நம்பிக்கையும் கிடையாது என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை விடுத்த வேண்டுகோள்களை இலங்கை அரசாங்கம் அலட்சியம் செய்துவிட்டது என்று ஐ.நா.வின் விசேட நிபுணர் பேராசிரியர் பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் சிவில் யுத்தத்தின் இறுதி மாதங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் பல சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்கென இலங்கைக்கு செல்ல தாம் நீண்ட நாட்களாக அரசாங்கத்திடம் அனுமதி கோரி வருவதாகவும் பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.