அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

விசாரணைக்கு அழைத்துச் சென்றவரைக் காட்டுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரி இடைத்தங்கல் முகாமில் இருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பரமசாமி சந்திரமோகன் (31) காணாத நிலையில் எழுந்த வதந்தியையடுத்து, அவரைக் காட்டுமாறு கோரி அந்த முகாமைச் சேர்ந்த மக்கள் புதனன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரி வளவின் ஒரு பகுதியில் இந்த முகாம் அமைந்துள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து கல்லூரியின் பிரதான நுழைவாயிலில் நின்று ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டிருந்தனர்.

தகவ அறிந்த வவுனியா பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் சமாதான பேச்சுக்களில் ஈடுபட்டனர். அழைத்துச் செல்லப்பட்டவரைக் கொண்டு வந்து காட்டுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சம்பந்தப்பட்ட நபரைப் பொலிசார் அழைத்து வந்து காட்டினர். அதன்பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாகக் கலைந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. . இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து மேலதிக இராணுவத்தினரும் பொலிசாரும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். எனினும் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி நிலைமை சுமுகமானதாகத் தெரிவிக்கப்பட்டது. 

தமிழர்கள் தேசிய அரசியலில் இணைந்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம் முன்னேற்றமடையலாம் – அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

karuna000.jpgதமிழ் மக்கள் தேசிய அரசியலில் இணைந்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தேசிய ரீதியில் முன்னேற்றமடைய முடியுமென அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

300 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாகரை மகா வித்தியாலயத்தை நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்
”இந்நாட்டில் பதினைந்திற்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளன. எனினும் அவற்றுக்கிடையே ஒற்றுமை கிடையாது என தெரிவித்த அமைச்சர், கிழக்கில் அரசாங்கம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதற்காக நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூற அமைச்சர் தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாக ஜனாதிபதி வாகரைக்கு வந்து வாகரை பாடசாலை புனரமைப்புக்கான அடித்தளத்தை இட்டுச் சென்றார். இன்று அனைவரும் பெருமைப்படத்தக்கதாக இப் பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பாரிய கட்டிடத் தொகுதியாக நிர்மாணம் பெற்றுள்ளது.

கிழக்கு மக்கள் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாறியுள்ளனர்.  இப் பகுதி அபிவிருத்தி பற்றி சிந்திக்கும் மக்கள் ஜனாதிபதியையும் அவரது ஆலோசகர் பசில் ராஜபக்ஷவையும் நினைவு கூருகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அன்பும் அரவணைப்பும் கொண்ட ஒரு சிறந்த மனிதர். ஆளும் கட்சியில் நாம் பங்கேற்பதால் நாம் மேலும் முன்னேற்றங்களை அடைய முடியும். நாம் ஜனாதிபதியுடன் உரிமையோடு பழகுகின்றோம்.  இதனைக் கருத்திற் கொண்டு எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் நாம் அனைவரும் அவருக்கு முழுமையான ஆதரவளித்து அவரைப் பலப்படுத்துவோம்” எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மற்றுமொரு பிரதிநிதி இலங்கை விஜயம்

210909walter-kalin.jpgஉள்நாட்டு இடம்பெயர்வுகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் வோல்ட்டர் கலீன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார்.

நிவாரணக் கிராமங்களின் தற்போதைய நிலை குறித்தும் அது தொடர்பாக அவர் தமது விஜயத்தின் போது ஆராயவுள்ளார். அதனடிப்படையில் அவர் வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களுக்கும் விஜயம் செய்து பார்வையிடவுள்ளதாக இடர் முகாமைத்துவம் மற்றம் மனித உரிமைகள் அமைச்சு தெரிவிக்கின்றது. அவர் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பலரை சந்தித்து உரையாடவும் உள்ளார்.

மீள்குடியேற்றத்தை துரிதமாக்க ரூ.35கோடி குறைநிரப்பு பிரேரணை: சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்

26parliament.jpgஇடம் பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீளக் குடியமர்த்துவதற்கேதுவாக 35 கோடி ரூபாவுக்கான குறைநிரப்புப் பிரேரணையொன்று நேற்று (22) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு இந்த நிதியை வழங்க சபை அங்கீகாரம் வழங்கியது.

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சமர்ப்பித்த பிரேரணை விவாதத்தின் பின்னர் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 இற்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் கூடியது.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் நிறைவடைந்ததும் அமைச்சர் பதியுதீன் குறைநிரப்புப் பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றினார். மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகளைத் திட்டமிட்டு செயற்படுத்தி வருவதாகக் கூறிய அமைச்சர் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் வெகுவிரைவாக தமது சொந்த மண்ணில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார்.

மீளக் குடியமர்த்தும் பணிகளை மிகவும் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றோம். முதலில் வயது முதிர்ந்தவர்களை விடுவித்தோம். தற்போது காயமுற்றோர் மற்றும் பெண்களை அனுப்பி வருகின்றோம். அதே நேரம், கிளிநொச்சி – முல்லைத்தீவு தவிர்ந்த பகுதிகளைச் சார்ந்தவர்கள் கிழக்கு மற்றும் வடக்கிலிருந்து சிக்குண்டோர்கள் எனப் பெருந்திரளானோரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம் என்று தெரிவித்த அமைச்சர், மனசாட்சியுடனும், நேர்மையுடனும் மீள்குடியேற்றப் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கி, வவுனியா அரசாங்க அதிபரின் ஊடாகச் செயற்படுத்தி வருவதாகக் கூறினார்.

நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்களை உறவினர்கள் பொறுப்பேற்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பதியுதீன் கூறினார். அதேநேரம், இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தமது உறவினர்கள் ஈடுபட்டிருப்பதாக ஐ. தே. க. உறுப்பினர் பாலித ரங்கே பண்டார முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். மக்களை மீளக்குடியமர்த்தும் திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் விளக்கியுள்ளாரென்றும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் வைத்து அரசியல் நடத்தும் நோக்கம் அரசாங்கத்திற்குக் கிடையாதென்றும் அவர் குறிப்பிட்டார்

யாழ். குடாநாட்டுக்கு 10 இலட்சம் பாடநூல்கள் இன்று அனுப்பிவைப்பு. கல்வியமைச்சு அறிவிப்பு

150909sri-lankas-students.jpgயாழ்.  குடாநாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்காக கல்வியமைச்சு இன்று 10 இலட்சம் பாடப்புத்தகங்களை தரைவழியாக அனுப்பி வைக்கவுள்ளது.

தரைவழியாக அனுப்பி வைப்பதன் மூலம் அதற்கான செலவினம் அரைவாசியாகக் குறைந்துள்ளது என கல்வி அமைச்சு அறிவிக்கின்றது.
முந்தைய வருடங்களில் யாழ். குடாநாட்டுக்கு கப்பல் மூலம் புத்தகங்களை எடுத்துச் செல்வதற்கு மூன்று மில்லியன் ரூபா செலவாகியதாகவும் இம்முறை  ஏ-9 வீதியினூடாக இவற்றைக் கொண்டுசெல்வதால் 1.3 மில்லியன் ரூபாவே செலவாகுவதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

28 வருடங்களுக்குப் பின்னர் இன்று முதல் தடவையாக யாழ். குடாநாட்டு மாணவர்களுக்கு  அடுத்த ஆண்டுக்குத்  தேவையான பாடப்புத்தகங்கள் ஏ-9 வீதியினூடாக எடுத்துச் செல்லப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. பாடப் புத்தகங்களை எடுத்துச் செல்லும் லொறிகள் இன்று காலை 10.30 க்கு கல்வி யமைச்சிலிருந்து யாழ். குடாநாடு நோக்கி புறப்படுகின்றது.

நளினி- ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம் வாபஸ்

nalini-111.jpgராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் வைக்கப்பட்டிருந்த நளினி, தன்னை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் வேலூர் மகளிர் சிறை அதிகாரி ஜெயபாரதி அளித்த உறுதிமொழியின் பேரில் அவர் இன்று காலை உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

நளினி விடுதலை குறித்து ஆராய அரசு கமிட்டி ஒன்று அமைத்திருந்தது. இந்த கமிட்டி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதே போன்று, ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரொபர்ட் பயஸ் நேற்றிரவு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இவர் ராஜீவ் ‌கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பி‌டத்தக்கது

தாய்நாட்டிற்கு துரோகமிழைக்காது சகலரும் ஒன்றிணைந்து வாழ்வோம் – ஜனாதிபதி

slpr080909.jpgசயனைட் யுகத்துக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது. தாய்நாட்டிற்குத் துரோகமிழைக்காது சகலரும் ஒன்றிணைந்து வாழ்வோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதெரிவித்தார். 300 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாகரை மகா வித்தியாலயத்தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, மஹிந்த சிந்தனை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணம் முழுமையான அபிவிருத்திக்கு உட்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது; வாகரை பிரதேசம் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பின்னர் நான் இரண்டாவது தடவையாக இங்கு வந்துள்ளேன். சுனாமியால் பாதிக்கப்பட்ட வாகரை மகா வித்தியாலயம் மீள புனரமைக்கப்பட்டு இயங்கி வந்த வேளை பயங்கரவாதத்தினால் மீண்டும் சீரழிக்கப்பட்டது.  அதன்போது படைவீரர்களே, அதனை மீளத் திருத்தியமைந்துள்ளனர். அவர்களை இத்தருணத்தில் நாம் பாராட்ட வேண்டும். இன்று பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. வாகரை மகா வித்தியாலயம் கிழக்கு மாகாணத்தில் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலையாக உருவாக்கப்பட்டுள்ளது.

உலகில் கல்வி மட்டுமே எவராலும் களவாடப்பட முடியாதது. அந்த வகையில் இப்பாடசாலையில் பயிலும் மாணவர்கள் பெரும் பாக்கியசாலிகள். நாம் அனைவரும் ஒருதாய் மக்கள். நம் மத்தியில் எவ்வித பேதமும் கிடையாது. அன்பான உங்கள் தாய்நாட்டை நீங்கள் ஒரு போதும் மறந்து விடக்கூடாது. நாடு நமக்கு என்ன செய்தது என யோசிக்காமல் நாம் தாய்நாட்டுக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும்.

தமிழ், சிங்களம், முஸ்லிம் என இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை. இனி சிறுபான்மை என்ற இனமே இந்த நாட்டில் இல்லை. நாம் அனைவரும் இலங்கைத் தாயின் மக்களே. எனது முதல் விருப்பும், இரண்டாவது விருப்பும், மூன்றாவது விருப்பும் என் தாய்நாடே. அவ்வாறே நீங்களும் சிந்திக்க வேண்டும்.

சயனைட் யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாம் நமது தாய்நாட்டுக்குத் துரோகமிழைக்காது இணைந்து ஒற்றுமையாக வாழ்வோம். ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது. காகத்துக்கு இரவில் கண்தெரியாது. கல்லாதோருக்குப் பகலிலும் இரவிலும் கண் தெரியாது. எனவே நாம் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எந்த தீர்மானத்தையும் புத்தியுடனும் தெளிவுடனும் மேற்கொள்ள வேண்டும். அப் போதுதான் நாம் சுதந்திரமாக வாழ முடியும்.

இன்றைய மாணவர்களே நாளைய மன்னர்கள். நீங்களே இந்த நாட்டைப் பாதுகாத்து கட்டியெழுப்ப வேண்டும். உங்கள் ஒளிமயமான எதிர்காலத்துக்கு எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள். இப்பாடசாலையை இந்தளவு சிறப்பாக உருவாக்குவதில் கல்வியமைச்சும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயற்பட்டுள்ளன.

பயங்வரவாதப் பிடியிலிருந்து வாகரைப் பிரதேசத்தை மீட்டபோது நான் இங்கு வருகை தந்தேன். அப்போது எனக்குத் திலகமிட்டு வரவேற்ற குருக்களைப் பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர். முப்பது வருடகால பயங்கரவாத யுகம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று அனைவரும் பயமின்றி சுதந்திரமாக வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஒளிமயமான எதிர்காலம் அனைவருக்கும் கிட்டுவது நிச்சயம். வாகரைப் பிரதேசத்திலும் தயிர், தேன், போன்றவை உள்ளன. எனது ஊரான அம்பாந்தோட்டையிலும் தயிரும் தேனும் உள்ளது. இதனால் அந்த நெருக்கமான நினைவுகளை நான் மீட்ட முடிகிறது.

உங்கள் எதிர்கால வெற்றி உங்கள் பிள்ளைகளினதும் வெற்றியாகும். இந் நாட்டின் வெற்றியும் அதுவே. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அழகிய தேசத்தைக் கட்டியெழுப்புவோம். “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஐ. ம. சு. மு. வேட்பாளர் நிஷாந்த விளக்கமறியலில்

southern_province2.jpgதென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் நிஸாந்த முத்துஹெட்டிகம எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமாகிய நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

காலி மாவட்ட வேட்பாளராகப் போட்டியிடும் இவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபருக்கும் பொலிஸாருக்கும் எதிராகக் கருத்து தெரிவித்தமையால் அவர் நேற்று முன்தினம் (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.  காலி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவர் செப்டம்பர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இவரது வழக்கை நேற்று மீள விசாரணைக்கு எடுத்துக்கொண்ட காலி மஜிஸ்திரேட் நீதவான் மீண்டும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். வேட்பாளர் நிஷாந்த, அதே கட்சியில் போட்டியிடும் பிரபல நடிகை அனார்க்கலி ஆகர்ஷாவுக்கு இடையூறு ஏற்படுத்தினாரென அவர் மீது நடிகை பொலிஸாரிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய பொலிஸார் செயற்பட்டு நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக செய்தியாளர் மாநாடொன்றை நடத்திய நிஷாந்த, பொலிஸ் தம்மிடம் அடாவடித்தனமாக நடந்து கொண்டதாகக் கூறி தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டார். பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸாருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களையடுத்தே இவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிய வருகிறது.

இலங்கை தமிழர் விவகாரம் குறித்து மன்மோகன் மற்றும் சோனியாவிடம் பேச்சு

இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை அவர்களது இருப்பிடங்களுக்கு செல்ல அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய பிரதமரை வலியுறுத்தியுள்ளனர்.

திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களே இது தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இந்தியாவின் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து நேற்று பேசியுள்ளார்கள்.

இலங்கைப் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்வதாகவும், அதனை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் அவர்கள் இந்திய பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.மாவட்டத்துக்கு 17 வைத்திய அதிகாரிகள்

doctors.jpgஇலங் கையிலுள்ள வைத்தியசாலைகளில் தமது மருத்துவ உள்ளக பயிற்சிகளைப் பூர்த்தி செய்த பதினேழு வைத்தியர்கள் யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.  நியமனம் பெற்றவர்களில் ஐந்து பேர் சிங்கள வைத்தியர்களாவர்.

இவர்களுக்கான நியமனம் கடந்த பதினாறாம் திகதியென அறிவிக்கப்பட்டுள்ள போதும் இன்றுவரை எவரும் தமது பதவிகளைப் பொறுப்பேற்கவில்லையென யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் முப்பத்தேழு வைத்தியசாலைகள் செயல்படுகின்றபோதும் பெரும்பாலான வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர்கள் நியமிக்கப்படாமல் வெற்றிடமுள்ளது.