தாய்நாட்டிற்கு துரோகமிழைக்காது சகலரும் ஒன்றிணைந்து வாழ்வோம் – ஜனாதிபதி

slpr080909.jpgசயனைட் யுகத்துக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது. தாய்நாட்டிற்குத் துரோகமிழைக்காது சகலரும் ஒன்றிணைந்து வாழ்வோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதெரிவித்தார். 300 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாகரை மகா வித்தியாலயத்தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, மஹிந்த சிந்தனை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணம் முழுமையான அபிவிருத்திக்கு உட்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது; வாகரை பிரதேசம் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பின்னர் நான் இரண்டாவது தடவையாக இங்கு வந்துள்ளேன். சுனாமியால் பாதிக்கப்பட்ட வாகரை மகா வித்தியாலயம் மீள புனரமைக்கப்பட்டு இயங்கி வந்த வேளை பயங்கரவாதத்தினால் மீண்டும் சீரழிக்கப்பட்டது.  அதன்போது படைவீரர்களே, அதனை மீளத் திருத்தியமைந்துள்ளனர். அவர்களை இத்தருணத்தில் நாம் பாராட்ட வேண்டும். இன்று பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. வாகரை மகா வித்தியாலயம் கிழக்கு மாகாணத்தில் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலையாக உருவாக்கப்பட்டுள்ளது.

உலகில் கல்வி மட்டுமே எவராலும் களவாடப்பட முடியாதது. அந்த வகையில் இப்பாடசாலையில் பயிலும் மாணவர்கள் பெரும் பாக்கியசாலிகள். நாம் அனைவரும் ஒருதாய் மக்கள். நம் மத்தியில் எவ்வித பேதமும் கிடையாது. அன்பான உங்கள் தாய்நாட்டை நீங்கள் ஒரு போதும் மறந்து விடக்கூடாது. நாடு நமக்கு என்ன செய்தது என யோசிக்காமல் நாம் தாய்நாட்டுக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும்.

தமிழ், சிங்களம், முஸ்லிம் என இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை. இனி சிறுபான்மை என்ற இனமே இந்த நாட்டில் இல்லை. நாம் அனைவரும் இலங்கைத் தாயின் மக்களே. எனது முதல் விருப்பும், இரண்டாவது விருப்பும், மூன்றாவது விருப்பும் என் தாய்நாடே. அவ்வாறே நீங்களும் சிந்திக்க வேண்டும்.

சயனைட் யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாம் நமது தாய்நாட்டுக்குத் துரோகமிழைக்காது இணைந்து ஒற்றுமையாக வாழ்வோம். ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது. காகத்துக்கு இரவில் கண்தெரியாது. கல்லாதோருக்குப் பகலிலும் இரவிலும் கண் தெரியாது. எனவே நாம் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எந்த தீர்மானத்தையும் புத்தியுடனும் தெளிவுடனும் மேற்கொள்ள வேண்டும். அப் போதுதான் நாம் சுதந்திரமாக வாழ முடியும்.

இன்றைய மாணவர்களே நாளைய மன்னர்கள். நீங்களே இந்த நாட்டைப் பாதுகாத்து கட்டியெழுப்ப வேண்டும். உங்கள் ஒளிமயமான எதிர்காலத்துக்கு எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள். இப்பாடசாலையை இந்தளவு சிறப்பாக உருவாக்குவதில் கல்வியமைச்சும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயற்பட்டுள்ளன.

பயங்வரவாதப் பிடியிலிருந்து வாகரைப் பிரதேசத்தை மீட்டபோது நான் இங்கு வருகை தந்தேன். அப்போது எனக்குத் திலகமிட்டு வரவேற்ற குருக்களைப் பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர். முப்பது வருடகால பயங்கரவாத யுகம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று அனைவரும் பயமின்றி சுதந்திரமாக வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஒளிமயமான எதிர்காலம் அனைவருக்கும் கிட்டுவது நிச்சயம். வாகரைப் பிரதேசத்திலும் தயிர், தேன், போன்றவை உள்ளன. எனது ஊரான அம்பாந்தோட்டையிலும் தயிரும் தேனும் உள்ளது. இதனால் அந்த நெருக்கமான நினைவுகளை நான் மீட்ட முடிகிறது.

உங்கள் எதிர்கால வெற்றி உங்கள் பிள்ளைகளினதும் வெற்றியாகும். இந் நாட்டின் வெற்றியும் அதுவே. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அழகிய தேசத்தைக் கட்டியெழுப்புவோம். “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Visuvan
    Visuvan

    தாய்நாட்டுக்கு துரோகம்?

    தாய்நாட்டில் பற்று வைத்து தாய்நாட்டின் நலனுக்காக வேலைசெய்யும் பத்திரிகையாளர்களை கொல்வது சிறையில் அடைப்பது துரோகமா தியாகமா?

    எந்த குற்றமும் செய்யதர் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த மக்களை அகதிகளாக்கி அவர்களின் சுதந்திர நடமாட்டத்தைப் பறித்து மந்தைகள் போல் அடைத்து வைப்பது தாய் நாட்டு மக்களிற்கு செய்யும் துரோகமா? தியாகமா?

    சொந் மக்களின் கலாச்சார அழிவை திட்டமிட்டு அழிப்பதுட்ன அவர்களின் அடையாளங்களை பறிப்பது தாய் நாட்டுக்கு செய்யும் துரோகமா? தியாகமா?

    புரியவில்லை!!!!

    பிரபகரனும் இதை தான் சொன்னர் ஒன்றில் நீங்கள் துரோகிகள் இல்லையேல் தியாகிகள்!

    Reply