செஸ் ஜாபவான்களான ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் மற்றும் அனாடோலி கார்போவ் இருவரும் வாலென்சியா நகரில் இன்று துவங்கும் செஸ் போட்டியில் மோதுகின்றனர். கடந்த 1984ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கு இடையே நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடர், 5 மாதங்களாக நடந்தது. இதில் 48 போட்டிகளின் முடிவில் யார் வெற்றி பெற்றவர் என முடிவு செய்ய முடியாததால், வீரர்களின் நலன் கருதி போட்டியை கைவிடுவதாக உலக செஸ் கூட்டமைப்பு அறிவித்தது.
இந்தத் செஸ் தொடர் நடந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், செஸ் ஜாம்பவான் யார் என்பதை நிரூபிக்க இருவரும் மீண்டும் விளையாடுகின்றனர். இப்போட்டி ஸ்பெயினின் வாலென்சியா நகரில் இன்று துவங்குகிறது.
இப்போட்டி குறித்து தற்போது 46 வயதாகும் காஸ்பரோவ் பேசுகையில், “சர்வதேச தர செஸ் விளையாட்டை வெளிப்படுத்தும் திறமை எங்கள் இருவரிடமும் இன்னும் இருக்கிறது” என்றார். கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச செஸ் போட்டிகளில் இவர் பங்கேற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காஸ்பரோவை எதிர்த்து விளையாட உள்ள கார்போவுக்கு தற்போது 58 வயதாகிறது. எனவே, காஸ்பரோவின் நகர்த்தலுக்கு கார்போவால் ஈடுகொடுக்க முடியாது என இத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.