தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் நிஸாந்த முத்துஹெட்டிகம எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமாகிய நிமல் மெதிவக்க தெரிவித்தார்.
காலி மாவட்ட வேட்பாளராகப் போட்டியிடும் இவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபருக்கும் பொலிஸாருக்கும் எதிராகக் கருத்து தெரிவித்தமையால் அவர் நேற்று முன்தினம் (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். காலி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவர் செப்டம்பர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இவரது வழக்கை நேற்று மீள விசாரணைக்கு எடுத்துக்கொண்ட காலி மஜிஸ்திரேட் நீதவான் மீண்டும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். வேட்பாளர் நிஷாந்த, அதே கட்சியில் போட்டியிடும் பிரபல நடிகை அனார்க்கலி ஆகர்ஷாவுக்கு இடையூறு ஏற்படுத்தினாரென அவர் மீது நடிகை பொலிஸாரிடம் புகார் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய பொலிஸார் செயற்பட்டு நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக செய்தியாளர் மாநாடொன்றை நடத்திய நிஷாந்த, பொலிஸ் தம்மிடம் அடாவடித்தனமாக நடந்து கொண்டதாகக் கூறி தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டார். பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸாருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களையடுத்தே இவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிய வருகிறது.