முள்வேலி முகாம்களில் அவதிப்படும் ஈழத்தமிழர்களின் மனித உரிமை அவலங்களை மூடி மறைக்கவும், உலகத்தை ஏமாற்றவும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை சென்றிருப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ குற்றம் சாற்றியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு என் மீது ஒரே குற்றச்சாற்றுக்காக 2 முறை வழக்கு தொடர்ந்திருப்பது விசித்திரமானது. இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை ம.தி.மு.க அற வழியில் எதிர்கொள்ளும். அவற்றை கண்டு கவலைப்பட மாட்டோம்.
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தின. சென்னையிலும் வழக்கறிஞர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது மிருகத்தனமாக தாக்குதல் நடத்தி தமிழக அரசு அந்த அறப்போராட்டத்தை ஒடுக்கியது.
இலங்கையில் நடைப்பெற்ற போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தின. தமிழக சட்டமன்றத்திலும் இந்த கோரிக்கையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்திய அரசு ஒப்புக்காகக்கூட போரை நிறுத்த வேண்டும் என்று கூறவில்லை.
ஏனென்றால், அந்தப் போரை நடத்தியதும், போருக்கு திட்டமிட்டதும், போரை வழிநடத்தியதும் இந்தியாதான். ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரின் சாவுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் பொறுப்பாகும். யுத்தத்தை நிறுத்த குரல் கொடுக்காத மத்திய அரசு, தற்போது ஈழத்தமிழர்களின் ரத்தம் தொய்ந்த கரத்தையுடைய ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று தமிழக எம்.பி.க்களின் குழுவை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
போருக்கு பிறகு ஐ.நா பார்வையாளர்களும், சர்வதேச பொது மன்னிப்பு சபையும் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்கள் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளனர். முள்வேலி முகாம்களில் அவதிப்படும் ஈழத்தமிழர்களின் மனித உரிமை அவலங்களை மூடி மறைக்கவும், உலகத்தை ஏமாற்றவும் இப்போது தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றிருக்கின்றனர்.
இவர்களை அங்குள்ள அனைத்து முகாம்களுக்கும் செல்ல சிங்கள அரசு அனுமதிக்கப் போவதில்லை. இந்த குழுவின் பயணத்தால் ஈழத்தமிழர்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை இக்குழுவின் பயணம் ஒரு கண்துடைப்பு நாடகம் என்று வைகோ கூறினார்.