ஜனாதிபதி தேர்தலும் பொதுத் தேர்தலும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் நடத்தப்படும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று தெரிவித்தார்.
தமது அமைச்சு அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில், அடுத்த மாதம் 15 ஆம் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் இத்தேர்தல்கள் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்படும்.
தென் மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றி வழங்கிய பொது மக்களுக்கு அரசாங்கம் நன்றி தெரிவிக்கின்றது. எதிர்கட்சிகள் படுதோல்வியடைந்தன. மக்கள் விடுதலை முன்னணி அதன் கோட்டையான திஸ்ஸமகாராமையில்கூட தோல்வியடைந்தது. ஆனால் பொது மக்களின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றது என்றார்