அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

திஸ்ஸநாயகம் பிணையில் செல்ல சட்டமா அதிபர் இணக்கம்

tissa.jpgஊடக வியலாளர் ஜே.எஸ் திஸ்ஸநாயகத்திற்கு பிணை வழங்கப்படுமிடத்து அதயை தாம் ஆட்சேபிக்கப் போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நேற்று அறிவித்திருந்தார்.

2008 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஜே.எஸ் திஸ்ஸநாயகத்து 20 வருட கடுழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியமை தெரிந்ததே.

நோத்ஈஸ்ட் மாதாந்த இதழின் செம்மையாக்கல், பதிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றை மேற்கொண்டதன் மூலம் பயங்கரவாதத்திற்கு உதவியளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் திஸ்ஸநாயகம் கைதுசெய்யப்பட்டார்

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நீடிப்பு

2010 ஏப்ரல், மே, ஜுன் மாதங் களில் முடிவுறுவதற்காகவுள்ள உள் ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் 2011 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு ள்ளதாக மாகாண சபைகள், உள்ளூ ராட்சி சபைகள் அமைச்சு அறிவித்து ள்ளது.

மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகள் சிலவற்றின் பதவிக் காலம் 2010 ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் முடிவுறுகிறது. இதன்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் அமைச்சருக்குள்ள அதிகாரங்களைக் கொண்டு மேற்படி உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை அமைச்சர் ஜனக பண்டார தென்ன கோன் நீடித்துள்ளார்.

வெளிநாட்டு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட புலிகளின் பாரிய கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

ltte-ship.jpgதேசிய புலனாய்வு துறையினரின் தகவலுக்கமைய வெளிநாட்டு கடற் பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட புலிகளுக்குச் சொந்தமான ‘பிரின்ஸஸ் கிரிஸான்டா’ என்ற பாரிய கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கடற்படை கப்டன் டி. கே. பி. தஸநாயக்க தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினரால் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட இந்தக் கப்பலை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் திஸரசமரசிங்க தலைமையிலான உயர் அதிகாரிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஆயிரக் கணக்கான கடல் மைல்களுக்கு அப்பால் கைப்பற்றப்பட்ட இந்தக் கப்பல் மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தின் போது பிரபாகரன் உட்பட புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் தப்பிச் செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவித்தார்.

எல்.ரி.ரி.ஈ. இயக்கத்திற்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆயுதங்களை கடத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட இந்தக் கப்பல் இலகுரக விமானம் இறங்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. 90 மீட்டர் நீளமும் 33 மீட்டர் உயரமும் கொண்ட இந்தக் கப்பலில் 5000 மெற்றிக் தொன் எடையுள்ள பொருட்கள் கொண்டுசெல்ல முடியும்.

புலிகளிடமிருந்த பல கப்பல்கள், கடற்படையினரால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டன. புலிகளிடமிருந்த மிகப் பெரிய கப்பல் இது என்று கடற்படைத் தளபதி சுட்டிக் காட்டி னார். கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த ஆழ்கடலில் தரித்து நின்ற கப்பலை பார்வையிடுவதற்கென கொழும்பு துறைகத்திலிருந்து இரண்டு டோராக்களில் ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் கொழும்பு துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிடப்பட்ட பின்னர் கடற்படைத் தளபதி தலைமையில் ஊடகவியலாளர் குழுவினர் கப்பலை சென்று பார்வையிட்டனர். வெற்றிகரமாக கப்பலை துறைமுகத்திற்கு கொண்டு வந்ததை பாராட்டும் வகையில் கப்டன் தஸநாயக்கவிடம் கடற்படைத் தளபதி நற்சான்று பத்திரத்தை சமர்ப்பித்தார்.

இந்தக் கப்பல் ஆயுதக் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் செயற்பாடுக ளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளமை புலனாய்வு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் மூலமும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் மூலம் கடற்படையினர் வெற்றிகரமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்ததுடன் புலிகளின் கப்பல்களை இதுபோன்று கொழும்புக்கு கொண்டுவரவும் முடிந்தது என்று கடற்படைத் தளபதி குறிப்பிட்டார். இலங்கை கடற்படையினரின் பாவனைக்கு இந்த கப்பல் பயன்படுத்தப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொன்சேகாவின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் கோருகிறது ஐ.நா

_philipalston.jpgமுன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கடந்த 13ஆம் திகதி ‘சன்டே லீடர்’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கூறியிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் நீதி விசாரணைக்குப் புறம்பான உடனடி மற்றும் விசாரணையின்றி மேற்கொள்ளப்படும் மரண தண்டனை விவகாரங்களுக்கு பொறுப்பான விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்டன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

சரணடைந்தவர்களை சுடுமாறு இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிக்கு பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்குமாறு அக்கடிதத்தில் அவர் கேட்டிருக்கிறார்.

பாலசிங்கம் நடேசன், சீவரட்னம் புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூன்று புலி இயக்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2009 மே 17 ம் 18ஆம் திகதி இரவு மரணமுற்ற சூழ்நிலை தொடர்பாகவே ஐக்கிய நாடுகள் சபை விசாரணை செய்கிறது.

தனக்கு கிடைத்துள்ள தகவல் மேற்குறிப்பிட்ட பேட்டியில் சரத் பொன்சேகா விடுத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாக தனது கடிதத்தில் பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நடேசன், புலித்தேவன், ரமேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உயிரிழந்த சூழ்நிலை தொடர்பாக விடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் சிலவற்றை 58 ஆவது படைப்பிரிவுடன் அப்போது இருந்து வந்த ஊடகவியலாளர்களின் கூற்றுக்கள் உறுதி செய்வதாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

அனைத்து ஆயுத மோதல்களுக்கும் பொருத்தமான சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் குறிப்பாக 1949 இன் ஜெனீவா ஒப்பந்தத்தின் 5 ஆவது ஷரத்தை சுட்டிக்காட்டும் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தனது கடிதத்தில் குற்றச்சாட்டுகளின் சரியான தன்மை பற்றி கேட்டுள்ளதுடன் அக்குற்றச்சாட்டுகள் சரியானவை அல்ல என்று கூறுமிடத்து அது பற்றிய தகவல் மற்றும் ஆவண சான்றுகளையும் கேட்டுள்ளார்.

அத்துடன் நடேசன், புலித்தேவன், மற்றும் ரமேஷின் குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பான தகவல்களும் அக்கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளரின் கடிதத்துக்கு உத்தியோகபூர்வ பதில் அனுப்புவது மற்றும் தேவையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தீர்மானிக்கும் முன்னர் அக்கடிதம் தொடர்பாக அரசாங்கம் கவனமாக பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழர்கள் இனிமேல் பொலிஸில் பதிவு செய்ய வேண்டியதில்லை – பசில் ராஜபக்ஷ

basil.jpgதமிழர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை ரத்துச் செய்யப்படும். பொலிஸ் மா அதிபர் இது பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஹட்டனில் நேற்று முன்தினம் (20) நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் பொதுச் சபை கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரனின் தலைமையில் நேற்று முன்தினம் ஹட்டனில் மலையக மக்கள் முன்னணியின் பொதுச் சபை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் விசேட விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது:-

பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் இணைந்து கொண்ட சந்திரசேகரன் மலையக மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்தும், மலையக மக்களின் இனத்துவ, தனித்துவத்தை நிலைநாட்டுவதிலும், தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பவர்.

அமைச்சரவையில் இருந்து கொண்டு சந்திரசேகரனும், பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணனும் அவசரகால சட்டத்திற்கு அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருக்கின்றார்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். இவர்களை விசாரிக்க வேண்டும் என்று கேட்டார்கள்.

இப்படி ஒரு சங்கடமான நிலைமை எமக்கு ஏற்பட்டது. ஜனாதிபதி இது தொடர்பாக சந்திரசேகரனுடன் பேசினார். அமைச்சர் தனது நிலைப்பாட்டினை எடுத்துக்கூறி விளக்கமளித்தார். மனசாட்சியின்படி நடக்க இடமளித்து மஹிந்த சிந்தனையில் மனசாட்சிக்கு மதிப்பளிப்பது என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி உங்கள் தலைவரின் கருத்தினை ஏற்றுக்கொண்டார்.

அரசில் பங்குவகித்து அமைச்சராக இருந்தாலும் தமது நிலைப்பாட்டில் நின்று மனசாட்சியின்படி நடப்பதையிட்டு பெருமைப்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார். உங்கள் தலைவர் மலையக மக்களின் மேம்பாடு மட்டுமல்ல இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்தும் உரத்து குரல் எழுப்புபவர். கடந்த காலங்களில் பொதுஜன ஐக்கிய முன்னணி கூட்டு அரசாங்கம் என்றவகையில் உங்கள் கோரிக்கைகளை ஏற்று செயற்பட்டுள்ளோம்.

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதேச செயலகங்களை உருவாக்குவதைப் பற்றி வேண்டுகோளை முன்வைத்துள்ளார்கள். இதுபற்றி நடவடிக்கை எடுக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு இவ்விடயத்தை ஆராய்ந்து சட்டப்படியான தீர்மானங்களை எடுக்க செயற்பட்டு வருகின்றது.

தமிழர்கள் பொலிஸில் பதிவு செய்யும் நடைமுறை ரத்துச் செய்யப்படும். இனி பொலிஸ் பதிவினை தமிழர்கள் செய்யத் தேவையில்லை. பொலிஸ் மா அதிபர் இந்த பேச்சு முடிந்த பின்னர் உத்தியோகபூர்வமாக உங்களுக்கு இதனை அறிவிப்பார். 1988, 1989 கால கட்டத்தில் சிங்கள மக்களுக்கும் இந்த தொல்லை இருந்தது.

சிங்கள மக்களும் வெகுவாக சிரமப்பட்டார்கள். அப்போது மறித்து சோதனை செய்யும் போது கிளிநொச்சி அடையாள அட்டை அல்லது தமிழர்கள் என்றால் எவ்வித தடங்கலோ சோதனையோ இன்றி பயணித்தார்கள். பின்னர் இந்நிலைமை மாறி அன்று சிங்கள மக்கள் அனுபவித்த சங்கடங்களை இன்று தமிழ் மக்கள் அனுபவிக்க வேண்டியதாயிற்று. அம்பாந்தோட்டை அடையாள அட்டை என்றால் இன்முகத்துடனான புன்சிரிப்பும் மேலதிகமாகவே கிடைத்தன.

ஒரு சிலர் ஜனாதிபதியின் ஊரா, உறவினரா? என்று ஒரு மரியாதையும் செலுத்தினர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் பட்டியல் கிடைத்தவுடன் நீதியான விசாரணை இடம்பெற்று விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பேன். மலையக மக்கள் முன்னணி விடுத்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலனை செய்து இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு அச்சாணியாகத் திகழும் மலையக மக்களின் மேம்பாட்டிற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஒரு போதும் பின்னிற்காது.

எத்தகைய தடைகள் நேரிடினும் உலகின் முன்னணி நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதே எமது நோக்கம் – ஜனாதிபதி மஹிந்த

எத்தகைய தடைகள் வந்தாலும் உலகின் முன்னணி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது இலக்காக வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த நான்கு வருடங்க ளில் பாரிய சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்த எம்மால் முடிந்துள்ளது என தெரி வித்த ஜனாதிபதி, எம்மை முன்னுதார ணமாகக் கொண்டு உலக நாடுகள் செயற்பட ஆரம்பித்துள்ளன எனவும் தெரிவித்தார்.

எமது மக்களைப் பற்றிய பெரும் நம்பிக்கை எனக்குண்டு. அவர்கள் இன, மத மொழி, பேதங்களுக்கப்பால் தாய் நாட்டைப் பெரிதும் நேசிப்பவர்கள் என் பதும் எனக்குத் தெரியும் எனவும் ஜனா திபதி தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் விருதுகளைப் பெற்ற இலங்கையின் புத்தாக்குனர்களைக் கெளரவிக்கும் நிகழ்வொன்று நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்கள் ஜீ. எல். பீரிஸ், திஸ்ஸ விதாரண, ராஜித சேனாரத்ன ஆகியோருடன் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

கடந்த நான்கு வருடகாலமானது முக்கியமான காலகட்டமாகும். பயங்கரவாத த்தை முற்றாக ஒழிந்த எம்மை முன்னு தாரணமாகக் கொண்டு முழு உலகமும் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளது. நாம் எம் தாய் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். எமது நாடு முழு உலகிலும் முன்னணி நாடாகத் திகழ வேண்டும். எத்தகையத் தடைகள் வந்தாலும் நாம் எமது இலக்கை அடைய வேண்டும்.

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் கிராமத்து இளைஞர், யுவதிகளே. புதியதைச் செய்ய புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அவர்கள் தயாராக உள்ளனர். இலங்கையை உலகின் முன் அடையாளப்படுத்த அவர்கள் தயாராகியுள்ளனர்.

எமது நாட்டை மிகவும் நேசித்த குமாரதுங்க முனிதாச என்பவர் “புதியதைக் கண்டுபிடிக்காதவர்களை உலகம் கண்டு கொள்ளாது” என்று கடந்த காலங்களில் பட்டத்தைக்கூட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்த யுகமொன்றிருந்தது. புதிய கண்டுபிடிப்புகள் சம்பந்தமாக எவரும் சிந்திக்கவில்லை.

வாடகை வீட்டில் வாழ்வது போலவே எம்மக்கள் அப்போது வாழ்ந்துள்ளனர். முடிவில்லாத பயங்கரவாத யுத்தத்தைப் போன்றே நாட்டிற்கும் எதிர்காலமில்லை என எண்ணிய புத்தாக்குனர்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புறப்பட்டனர். இத்தகைய நிலையை கடந்த நான்கு வருடங்களில் எம்மால் மாற்ற முடிந்துள்ளது.

“நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் 25 சதவீதம் கிழக்கில் இருந்து”

1976 ஆம் ஆண்டின் பின்னர் நாட்டின் மொத்த நெல் உற்பத் தியில் 25சத வீதம் இம்முறை கிழக்கில் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்த வருட முதல் போகத்தில் ஒரு இலட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் மேலதிக காணியில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட் டதையடுத்தே இவ்வாறான அமோக விளைச்சலை பெற முடிந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார, தகவல், தொழில்நுட்ப அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண அமைச்சர் மேலும் கூறியதாவது, மோதல் காரணமாக அழிந்திருந்த கிழக்கு மாகாணம் இன்று துரிதமாக அபிவிருத்தி அடைந்து வருகிறது. சகல கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. 25 ற்கும் அதிகமான பாலங்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. பொருளாதார ரீதியில் கிழக்கு பிரதேசம் முன்னேற்றம் கண்டு வருகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவு நாளை.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை மீண்டும் கூடி இறுதி முடிவெடுக்கவுள்ளனர் என்று தெரியவருகிறது. நாளைய குழுக் கூட்டத்திற்குச் சமுகமளிக்குமாறு சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித முடிவுகளையும் எடுக்காத நிலையில் அக்கட்சிக்குள் தற்போது நெருக்கடி நிலை எழுந்துள்ளதாலேயே நாளை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடுகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கட்சியின் தீர்மானத்தை மீறி சுயேட்சையாகப் போட்டியிடுவது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து நாளை  கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எம்.கே. சிவாஜிலிங்கம் தற்போது லண்டன் சென்றுள்ளார்.

A-9 தனியார் வாகனங்கள் இன்று முதல் பாதுகாப்பு அனுமதி பெறத் தேவையில்லை

buss.jpgகொழும் பிலிருந்து யாழ். நகருக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கும் ஏ-9 பாதையூடாக பயணம் மேற்கொள்ளும் பொது மக்களின் வாகனங்கள் இன்று திங்கட்கிழமை முதல் எந்தவித பாதுகாப்பு அனுமதியும் பெறத்தேவை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கில் இருந்து கொழும்பு வரும் வாகனங்கள் எந்தவித பதிவுகளையோ அல்லது அது தொடர்பான நடைமுறைகளையோ மேற்கொள்ளாமல் பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் பஸில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அனுமதி (கிளியரன்ஸ்) பெறும் நடைமுறை கடந்த மாதம் முழுமையாக நீக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் ஏ 9 பாதையூடாக சுதந்திரமாகப் பயணம் மேற்கொண்டு வந்தனர். பொதுமக்கள் அரச போக்குவரத்து சேவையினூடாக இதுவரை காலம் சென்று வந்தனர்.  ஏ-9 பாதை ஊடாக சொகுசு போக்குவரத்து சேவையும் நடத்தப்பட்டு வந்தது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ஏ-9 பாதையூடாக செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டு இருந்தது மதவாச்சி சோதனைச் சாவடியூடாக தனியார் வாகனங்களும் வவுனியா வரை செல்லலாம் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஏ9 பாதையூடாக தனியார் வாகனங்களிலேயே பொதுமக்கள் சென்று வரலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏ-9 பாதையூடாக இராணுவத்தினரின் தொடர் அணியுடனேயே இந்த பொதுமக்களின் வாகனங்களும் அழைத்துச் செல்லப்படவுள்ளன.

மலையக மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த தற்போதைய அரசு முன்வந்துள்ளது.- அமைச்சர் சந்திரசேகரன்

chandirasekaran.jpgமலையக மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களது சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தவும் பல அடிப்படை கோரிக்கைகளை பிரதான அரசியல் கட்சிகளிடம் முன்வைத்ததையடுத்து இக் கோரிக்கைகளை தற்போதைய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதனை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடைமுறைப்படுத்தவும் இணங்கியிருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் நேற்று (20) ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சியின் கூட்டத்தில் பேசும்போது கூறினார்.

பசில் எம்.பியும் பங்குகொண்ட இக் கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசியபோது மேலும் கூறியதாவது, மலையக மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவும் மலையக மக்களின் சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தவும் பல அடிப்படை கோரிக்கைகளை பிரதான அரசியல் கட்சிகளுக்கு முன்வைத்தோம். ஜனாதிபதி வேட்பாளர்களைப் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்களும் அர்த்தமுள்ள அரசியல் பார்வையும் தமிழ் மக்களுக்கு இருந்தாலும் மலையக மக்களின் தேவைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே நாம் எதையும் சாதிக்க முடியும்.

எவர் ஆட்சி அமைத்தாலும் அவர்கள் மூலமே மலையக மக்களின் அபிலாஷை களை நிறைவேற்ற முடியும் என்பதே யதார்த்த நிலையாகும். இந்த நிலைப் பாட்டை அடித்தளமாகக் கொண்டுதான் மலையக மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தலை கவனிக்கின்றது. எமது கோரிக் கைகளை தற்போதைய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதோடு குறிப்பிட்ட காலை வரையறைக்குள் அதனை நடைமுறைப்படுத்தவும் இணங்கியிருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளை மாற்றி சொந்தக் காணியில் தனித்தனி வீடுகளில் வாழ்கின்ற மாற்றத்தை ஏற்படுத்தி லயன் முறை வாழ்க்கையிலிருந்து நமது மக்களை மீட்டெடுக்க வேண்டும்.

மலையக இளம் சந்ததியினர் மத்தியில் பூதாகரமாக உருவாகி வரும் வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தியாக வேண்டும். மலையக சமூகத்தை பொருளாதார ரீதியில் மேம்படுத்த தொழில் முயற்சிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

பின்தங்கிய சமூகமாக இருக்கின்ற நமது சமூகத்தை தரமுயர்ந்த சமூகமாக மாற்றுவதற்கு சகல வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதிகார பரவலாக்களில் மலையக மக்களும் இணைந்துகொள்ளும் விதத்தில் புதிய பிரதேச செயலகங்களும் போதிய உள்ளூராட்சி சபைகளும் ஏற்படுத்தப்படுவதோடு நமது மக்கள் சனத் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பாராளுமன்றம் தொடங்கி சகல ஆட்சி சபைகளிலும் எமது பிரதிநிதித்துவம் உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும். அவசரகால தடைச் சட்டத்தின் கீழும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முடிந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அப்பாவி தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்.

அந்த சட்டத்தின் 23ம் விதியை நீக்குவதன் மூலம் தற்போது இன்னல்களுக்கு உள்ளாகி வரும் தமிழர்களுக்கு சுதந்திர வாழ்வுரிமையை ஏற்படுத்தியாக வேண்டும். புதிய தொழில் நியமனங்களிலும் பதவி, தரம் உயர்த்தப்படுதலும் பின் தங்கிய சமூகம் என்ற ரீதியில் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களுக்கு விசேட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டும். மலையக மக்களுக்காக நுவரெலியா மாவட்டத்தில் தனியான தமிழ் பல்கலைக் கழகம் ஒன்று அமைக்கப்படல் வேண்டும்.

இத்தகைய கோரிக்கைகளில் நாம் வெற்றி பெற்றால்தான் ஏனைய சமூகங்களுக்கு நிகரான எமது சமூகத்தையும் உறுமாற்ற முடியும். இந்த தெளிவோடும் உறுதியோடும் ஜனாதிபதி தேர்தலில் அரசோடு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம்.