அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

நிலாவெளி முதல் முசல்பிட்டி வரை சூரியன் இன்று உச்சம்

ஏப்ரல் மாத உஷ்ணம் நிலவுகின்ற இக்காலப்பகுதியில் இன்று (12ம் திகதி) இலங்கையின் முசல்பிட்டி, கெப்பித்திகொல்லாவ, கோமரங்கடவல, நிலாவெளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என்று வானிலை அவதான நிலைய அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

புவிச் சுழற்சியின் அடிப்படையில் இக்காலப் பகுதியில் இலங்கைக்கு நேர் உச்சத்தில் சூரியன் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றது எனவும் அவ்வதிகாரி கூறினார். ஏப்ரல் மாதம் 5ம் திகதி முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன் இன்று முசல்பிட்டி, கெபத்திகொல்லாவ, கோமரங்கடவல, நிலாவெளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சஞ்சரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இடி, மின்னல் குறித்து எச்சரிக்கை

lightning.jpgஇடைப் பருவப் பெயர்ச்சி மழைக்காலம் ஆரம்பமாகியுள்ளதால் இடி, மின்னல் தாக்கம் குறித்து முன்னெடுச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையமும், வானிலை அவதான நிலையமும் நாட்டு மக்களிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

இடி, மின்னல் தாக்கம் காரணமாக இம் மாதத்தின் முதல் பத்து தினங்களிலும் சுமார் ஐவர் உயிரிழந்துள்ளனர்.  இது தொடர்பாக வானிலை அவதான நிலைய த்தின் வானிலையாளர் சமிந்த பெரேரா, குறிப்பிடுகையில், தற்போது இடைப் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காலம் ஆரம்பமாகியுள்ளதால் தான் இடி, மின்னல் மோசமாக காணப்படுகின்றது.

இதன் காரணத்தினால் இடி, மின்னலுடன் மழை பெய்யும்போது திறந்த வெளியில் நடமாடுவது, விளையாடுவது, நீர் நிலைகளுக்கு அருகில் இருப்பது, வீட்டில் மின்சார பொருட்களைப் பாவிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, வானொலி கேட்பது, உயரமான பச்சை மரங்களுக்கு கீழ் நிற்பது என்பவற்றைத் தவிர்த்துக்கொள்ளுவது மிக, மிக அவசியம் என்றும் அவர் கூறினார்.

24வது வயதில் நாமல்

namal.jpgஅம்பாந் தோட்டை மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. சார்பில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ நேற்று 24வது வயதில் காலடி பதித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ 1,47,568 வாக்குகளைப் பெறும் போது அவருக்கு வயது 23 ஆகும். நேற்று அவர் தனது 24வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார்.

தந்தையின் வழியில் அரசியலுக்குள் கால்பதித்துள்ள இவர், அவரைப் போலவே 24வது வயதில் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கிறார்.

ரோஹித, மிலிந்த, பேரியல், அமீர் அலி உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், எம்.பி.க்கள் தோல்வி

ஆறாவது பாராளுமன்றத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் எம்.பி. க்களாக அங்கம் வகித்த பலர், ஏழாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படாது இப் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.  ஆறாவது பாராளுமன்றத்தின் அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராக அங்கம் வகித்த ரோஹித்த போகொல்லாகம, விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே, நீதியமைச்சர் மிலிந்த மொறகொட, வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் நஜீப் ஏ. மஜீத், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர்களான வடிவேல் சுரேஷ், புத்திரசிகாமணி உள்ளிட்டோர் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் எம்.பி. க்களான மொஹமட் மஹ்ரூப், சபீக் ரஜாப்டீன், சாஹல ரத்னாயக்க, ஜோன் அமரதுங்க உள்ளிட்டோரும் தோல்வியடைந்துள்ளனர்.

ஜே.வி.பி. யில் இருந்து விலகி தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டு, பின்னர் ஆளும் கட்சியில் இணைந்த முன்னாள் எம்.பி. நந்தன குணதிலக்க தோல்வியடைந்துள்ளதுடன் ஜனநாயக தேசிய கூட்டணியின் சார்பில் கிண்ணம் சின்னத்தில் போட்டியிட்ட ஜே.வி.பி. யின் முன்னாள் எம்.பி. க்கள் பலரும் இத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்க் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி வேறு கட்சிகளில் போட்டியிட்ட சகலரும் படுதோல்வி

Pathmini Sithambaranathanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று வேறு கட்சிகளில் போட்டியிட்ட எம்.பி.க்கள் அனைவரும் இம்முறை தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் (2004) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 22 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. ஆனால், இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய எம்.பி.க்கள் யாழ்.மாவட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டனர்.

எனினும், மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்று படுதோல்வியடைந்தனர்.

இதேபோல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.க்களான எம். கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் இடதுசாரி முன்னணியின் குடைச் சின்னத்தில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்ட போதும் மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்று படுதோல்வியடைந்தனர். கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.க்களான சிவநாதன் கிஷோரும் ரி.கனகரட்ணமும் இம்முறை வன்னி மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட போதும் அவர்களும் படுதோல்வியடைந்தனர்.

இதேநேரம், கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான செல்வி கே.தங்கேஸ்வரி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட போதும் அவரும் தோல்வியடைந்தார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ்.மாவட்டத்தில் புதுமுகங்களாக ஈ.சரவணபவன், எஸ்.சிறிதரன் ஆகியோரும் மட்டக்களப்பில் பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்று நன்றிக்கடனோடு மக்கள் வாக்களிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் வேண்டுகோளை ஏற்று நன்றிக் கடனோடு நாட்டு மக்கள் வாக்களித்திருப்பதையே பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிப்படு த்துவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டளஸ் அழகப் பெரும தெரிவித்தார். அதேநேரம் எதிர்வரும் சிங்கள-தமிழ் புத்தாண்டு ஏற்பாடுகளில் மக்கள் அதிக ஆர்வம் காட்டியதன் விளைவாகவே வாக்களிப்பு மந்தமாக இடம்பெற்றதாகக் கருதுவதாகவும் அவர் கூறினார்.

பொதுத் தேர்தல் முடிவுகள் குறி த்து மேற்கண்டவாறு குறிப்பிட்ட அமைச்சர் டளஸ் அழகப் பெரும மேலும் கூறுகையில், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.மு. பெற்ற வாக்குகளை விடவும் அதிக ப்படியான வாக்குகளை பல தொகு திகளில் இம் முன்னணி பெற்றிருக் கின்றது.

இதனை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், ஐ.ம.சு. முன்னணியினதும் வேண்டுகோளை ஏற்று நன்றிக் கடனோடு நாட்டு மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.

இதேநேரம் இத்தேர்தலில் எதிரணியினர் பாரிய தோல்வியைத் தழுவுவதற்கு அவர்கள் தங்களது பொறுப்புக்களிலிருந்து விலகிச் செயற்பட்டதே காரணமாகும். இதற்காக அவர்கள் மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களாவர். முப்பது வருட காலப் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்ட பின்னர் மக்கள் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக இத்தேர்தலில் வாக்களித்தனர். அதற்குரிய வாய்ப்பு எமது ஜனாதிபதியினாலேயே பெற்றுக்கொடுக்கப்பட்டது என்றும் கூறினார்.

தமிழ் மக்களின் கரத்தைப் பற்றிப்பிடிக்க ராஜபக்ஷவுக்கு இதுதான் சந்தர்ப்பம் அமெரிக்கா கூறுகிறது

2010 General Election SLஇலங்கையில் புதிய அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் கரங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பற்றிப்பிடிக்க வேண்டுமென்ற கருத்தை அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. “ராஜபக்ஷவின் நிர்வாகமானது தமிழ் மக்களைச் சென்றடைய வேண்டியது முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். உண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சமீபத்தில் அவர் (ராஜபக்ஷ) விஜயம் மேற்கொண்டிருந்தார் என்று அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியாவுக்குப் பொறுப்பான உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
நம்பிக்கையான எதிர்காலத்துடன் தாங்கள் வாழப்போகிறார்கள் என்று அவர்கள் (தமிழர்கள்) கருதுவது மிக முக்கியமானதாகும். இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 1 இலட்சம் பேர் தற்போதும் முகாம்களில் உள்ளனர். அவர்கள் தமது வீடுகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பிளேக் கூறியுள்ளார். இந்த விடயங்கள் யாவும் வென்றெடுக்கப்பட்டால் மனித உரிமைகளுக்கு அதிகளவில் மதிப்பளிப்பதாக அமையும். அத்துடன் கடந்த கால உரிமை மீறல்கள் தொடர்பாக பதிலளிக்கும் கடப்பாடுகள் சில இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இவை யாவும் நான் கூறும் இந்த நல்லிணக்கம் தொடர்பாக விடயங்களைக் கையாள்வதில் பாரியளவுக்குப் பங்களிப்பைச் செலுத்தும் என்று நினைக்கிறேன் என்றும் பிளேக் தெரிவித்திருக்கிறார்.

நாட்டில் சமாதானம் ஏற்படுமென உண்மையான எதிர்பார்ப்பைத் தான் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். “இப்போது உண்மையான வாய்ப்புக்கிட்டியிருப்பதாக நான் நினைக்கிறேன். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி எப்போதும் கூறியிருந்தார். அவ்வாறு பெற்றுக்கொள்வதானது இலங்கையின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கு அவருக்கு இடமளிக்கும்%27 என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதில் தான் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக அவர் (ராஜபக்ஷ) கூறியுள்ளார். இந்த 13 ஆவது திருத்தமானது மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும். வடமாகாணம் உட்பட மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாக அது அமையும். நல்லிணக்கம் தொடர்பாக எப்போதும் அவர் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதனை இப்போது முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அவரின் (ஜனாதிபதியின்) கட்சியானது பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளுமென தோன்றுகிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அவர் பெற்றுக்கொள்வாரென்பது தொடர்பாக இப்போது கூறுவது உரியகாலத்திற்கு முந்தியதாக அமையுமென நான் கருதுகிறேன். ஆனால் கட்சியிலிருந்து மாறுவோர்கள் சிலரிடமிருந்து அவர் அனுகூலத்தைப் பெற்றுக்கொள்ளும் சாத்தியமும் காணப்படுகிறது. ஆதலால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டத்தை அவர் எட்டுவதற்கான சாத்தியம் உள்ளது என்றும் பிளேக் கூறியுள்ளார். அதேசமயம் இலங்கை சட்டத்தின் பிரகாரம் பொன்சேகா மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தான் எதிர்பார்ப்பதாகவும் பிளேக் கூறியுள்ளார்.

இலங்கையில் குடும்ப செல்வாக்கு அதிகரித்து வருவது தொடர்பாக அவர் கவலைப்படுகிறாரா என்று கேட்கப்பட்டபோது நாட்டில் இந்த மாதிரியான குடும்ப அலுவல்கள் இருந்து வருவது நீண்டகால பாரம்பரியமாக இருப்பதாக பிளேக் கூறியுள்ளார். “ராஜபக்ஷவுக்கு முன்னர் பண்டாரநாயக்காக்கள் மற்றும் பல குடும்பங்கள் இந்த மாதிரியான தன்மையில் இருந்துள்ளன. இலங்கை விடயத்தில் இது அசாதாரணமானதொன்றல்ல என்று நான் நினைக்கிறேன். தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் இடம்பெற்றது என்பது தொடர்பாக அதாவது நீதியான முறையில் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது என்ற அபிப்பிராயத்தை இலங்கை மக்கள் கொண்டிருக்க வேண்டும் என்று பிளேக் கூறியுள்ளார்.

கண்டி, திருமலை மாவட்டங்களில் 35 வாக்களிப்பு நிலையங்களுக்கு மீள்வாக்குப் பதிவு

கண்டி மற்றும் திருமலை மாவட் டங்களிலுள்ள 35 வாக்களிப்பு நிலையங்களுக்கு மீண்டும் வாக்கு பதிவு நடாத்தப்படவிருக்கின்றது.

இந்த 35 வாக்களிப்பு நிலையங்களுக்கும் எதிர்வரும் 16ம் திகதிக்கும் 22ம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் தேர்தல் நடாத்தப்படும் என்று தேர்தல் செயலக அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இந்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்கு மோசடி இடம்பெற்றது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவ்வாக்களிப்பு நிலையங்களின் வாக்களிப்பை தேர்தல் ஆணையாளர் ரத்து செய்ததுடன் அவற்றுக்கு மீண்டும் வாக்குப்பதிவு நடாத்துவதற்கும் அவர் முடிவு செய்துள்ளார்.

கண்டி மாவட்டத்திலுள்ள நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியிலுள்ள 34 வாக்களிப்பு நிலையங்களுக்கும், திருமலை மாவட்டத்திலுள்ள கும்புறுப்பிட்டி வாக்களிப்பு நிலையத்திற்கும் மீண்டும் வாக்குப் பதிவு நடாத்தப்படவிருக்கின்றது.

இந்த 35 வாக்களிப்பு நிலையங்களுக்கும் மீண்டும் வாக்குப் பதிவு நடாத்தப்பட்டு அவற்றின் முடிவுகள் வெளியிடப்படும் வரையும் இவ்விரு மாவட்டங்களுக்குமான இறுதி முடிவு அறிவிக்கப்படமாட்டாது என்றும் தேர்தல் செயலக அதிகாரி கூறியதுடன் நாடளாவிய ரீதியிலான முடிவும் வெளியிடப்படாது என்றும் குறிப்பிட்டார்.

ஜே.வி.பிக்கு படுதோல்வி: கோட்டைகள் சரிந்தன

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி.பி) பாரிய பின்னடைவைச் சந்தித்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். கடந்த ஆறாவது பாராளுமன்றத்தில் 39 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஜே.வி.பி. ஏழாவது பாராளுமன்றத்திற்காக நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐந்து ஆசனங்களையே வெற்றி பெற்றிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இதேநேரம், 1994ம் ஆண்டு முதல் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாராளுமன்ற ஆசனமொன்றை தமதாக்கிக் கொண்டிருந்த இக்கட்சி இத் தேர்தலில் அந்த ஆசனத்தையும் இழந்திருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், தென் பகுதியில் ஜே.விபி.யின் ஆதரவு தளம் இத்தேர்தலில் பாரிய சரிவுக்கு முகம் கொடுத்துள்ளது. இத்தேர்தலில் ஹம்பாந்தோட்டை, மாத்தறை, இரத்தினபுரி, பதுளை, மொனறாகலை, குருணாகல அநுராதபுரம், பொலன்னறுவை, நுவரெலியா, மாத்தளை போன்ற மாவட்டங்களில் ஜே. வி.பி. உறுப்பினர் எவரும் எம்.பியாகத் தெரிவு செய்யப்படவில்லை.

கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த ஜே.வி.பி முக்கியஸ்தர்களான இராமலிங்கம் சந்திரசேகர், கே.டி.லால காந்த, ஜினதாச கித்துலேகொடை, நிஹால் கலப்பதி, பிமால் ரட்நாயக்கா, எஸ். கே. சுபசிங்க, காமினி ரட்நாயக்கா போன்ற முக்கியஸ்தர்கள் எவரும் இத்தேர்தலில் எம்.பியாகத் தெரிவு செய்யப்படவில்லை. 1994ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை வெற்றி பெற்ற ஜே. வி.பி, 2000ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பத்து ஆசனங்களையும், 2001ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 16 ஆசனங்களையும் வெற்றிபெற்றது.

என்றாலும் 2004ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு 39 ஆசனங்களை ஜே. வி.பி. தனதாக்கிக் கொண்டிருந்தது. இருப்பினும் ஏழாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனநாயக தேசிய கூட்டணி தலைமையில் போட்டியிட்ட ஜே. வி.பியால் ஐந்து ஆசனங்களையே வெற்றிபெற முடிந்திருக்கின்றது. இதன்படி இத்தேர்தலில் ஜே. வி.பி. பாரிய பின்னடைவை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

301 சுயேச்சைகளும் கட்டுப் பணம் இழந்தன

Independent Group SL General Election 2010பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 301 சுயேச்சைக் குழுக்களும் படுதோல்வியைத் தழுவி கட்டுப் பணத்தை இழந்துள்ளன.

எந்தவொரு மாவட்டத்திலும் சுயேச்சைக் குழுவில் போட்டியிட்ட வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்கவில்லை சில சுயேச்சைக் குழுக்கள் ஒன்று அல்லது இரண்டு வாக்குகளையே பெற்றிருந்தன. அநேகமானவை எந்த வாக்கையும் பெற்றிருக்கவில்லை.

இதனால் அவை செலுத்திய கட்டுப் பணத்தை மீளப்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது