அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவை தொடர்ந்தும் ஸ்தம்பிதம் – ரோமிலிருந்து இருநூறு பயணிகளுடன் ஸ்ரீலங்கன் விமானம் இலங்கை வருகை

iceland.jpgஐஸ்லாந்து நாட்டின் எரிமலைக் குமுறல் காரணமாக கொழும்புக்கும், ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான விமான சேவைகள் நேற்று நான்காவது நாளாகவும் இடை நிறுத்தப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கன் எயார் நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்தார்.

எனினும் இத்தாலியின் ரோம் நகர விமான நிலையத்திலிருந்து இருநூறுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஸ்ரீலங்கன் எயார் விமானமொன்று நேற்று நண்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் அவ்வதிகாரி கூறினார். என்றாலும் ஐரோப்பிய நாடுகளுக்கு விமான சேவைகளை நடத்துவது தொடர்பாக அந்நாடுகளின் நிலைமைகளுக்கு ஏற்பவே முடிவு எடுக்கப்படும் எனவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார். ஐஸ்லாந்து நாட்டின் எரிமலை குமுறல் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.

முறைகேடுகளை அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள்

வாக்கெடுப்பு ரத்துச் செய்யப்பட்ட நாவலப்பிட்டி மற்றும் திருகோணமலை ஆகிய வாக்கெடுப்பு நிலையங்களில் மீண்டும் இன்று மு.ப. 7.00 மணி முதல் பி.ப. 4.00 மணிவரை வாக்கெடுப்பு நடத்தப்படும். வாக்கெடுப்பு தொடர்பாக முறைப்பாடுகளை தேர்தல்கள் ஆணையாள ருக்கு முன்வைப்பவர்கள் கீழ்க்காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் கோரியுள்ளார்.

நாவலப்பிட்டி வாக்கெடுப்புப் பிரிவு – 011-2877608
திருகோணமலை வாக்கெடுப்புப் பிரிவு – 011-2877609

கண்டி, இரத்தினபுரி, அநுராதபுரம் பகுதிகளில் கடும் காற்றுடன் மழை – ஐம்பதுக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்

rain.jpgகண்டி,  இரத்தினபுரி மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் வீசிய கடும் காற்று காரணமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. கடும் காற்றுடன் கூடிய மழை சில தினங்கள் நீடிக்கும் எனவும் காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மழையுடன் வீசிய கடும் காற்றினால் நேற்று முன்தினம் அநுராதபுரம் நுவரகம்பலாதவில் 8 வீடுகளும் கண்டி தொலுவ பகுதியில் 30 வீடுகளும் கண்டி உடஒவிட பகுதியில் 8 வீடுகளும் சேதமானதாக இடர் முகாமைத்துவ நிலைய பேச்சாளர் என். கே. கொடிப்பிலி தெரிவித்தார்.

இது தவிர, மின்னல் தாக்கி அநுராதபுரம் ஆஸ்பத்திரி சேதம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் இடி மின்னல் தாக்கி 5 பேர் இறந்த தாகவும் அவர் கூறினார். நேற்று முன்தினம் குருணாகல் பகுதியில் ஒரு பெண் இறந்துள்ளார்.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாகவும் மே நடுப்பகுதி வரை மழை தொடரும் எனவும் கால நிலை அவதான நிலையம் கூறியது. மழை பெய்வதற்கு முன்னர் கடும் காற்று வீசும் நிலை சில தினங்கள் தொடரும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

உஷ்ண காலநிலை சில நாட்களில் குறைவடையும் எனவும் அவதான நிலையம் தெரிவித்தது.

ஜனாதிபதி- ரணில் இன்று சந்திப்பு – ஜனாதிபதி செயலகம் தெரிவிப்பு

ra-mahi.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றதாக ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றது. 2010 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தோதல் நடந்ததன் பின்னர் இரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற  முதலாவது சந்திப்பு இதுவாகும்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான இச்சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாகவும் சமகாலப் பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆரயப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

க.பொ.த. சா/த பரீட்சை முடிவு: தேவிபாலிகா மாணவி சசித்ரா அகில இலங்கை ரீதியில் முதலிடம்

01-ol.jpgக.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற பத்து மாணவர்களின் பெயர்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

தேவிபாலிக்கா வித்தியாலயத்தைச் சேர்ந்த சசித்ரா சாமளி குணவர்தன எனும் மாணவி இலங்கையிலேயே முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். அம்பலாங்கொடை தர்மசோக்கா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சரித் கெளசல்ய விமலரட்ண இரண்டாம் இடத்தையும் காலி சவுத்லண்ட்ஸ் பாடசாலையைச் சேர்ந்த திரித்தி உபேக்ஷ ரணவீர மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். அதே பாடசாலையைச் சேர்ந்த ஹசீதா லங்சினி லியனாரச்சி நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

best-ol-results-2009.jpg

மஹிந்த சிந்தனை வேலைந் திட்டத்தின் ஒரே இலக்கு நாட்டின் அபிவிருந்தியாகும்- ஐ. ம. சு. மு. புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி

mainpic.jpgமக்கள் நாட்டுக்காக தமது கடமையை நிறைவேற்றியுள்ளனர். இப்போது நாட்டுக்கும் மக்களுக்கும் உங்கள் கடமையை நிறைவேற்றும் காலம் வந்துள்ளது.  மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் இந்த பயணத்தின் ஒரே இலக்கு நாட்டின் அபிவிருத்தியாகும். இதற்கு நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ. ம. சு. மு. சார்பாக 7 ஆவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு கூறினார்.

ஐ. ம. சு. மு. சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 7 ஆவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். அச் சமயம் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களிடையில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர் மேலும் கூறியதாவது:- இந்த நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிறைந்துள்ள அபிவிருத்தி அபிலாஷைகளை செயற்படுத்துவதே பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உங்கள் அனைவரினதும் அர்ப்பணிப்பாக இருக்க வேண்டும். அவ்வாறன்றி உல்லாசமாகவும் குடிகாரனாகவும் பொழுதைக் கழிக்காமல் தமது சுய மரியாதையை பாதுகாத்துக் கொண்டு செயற்பட வேண்டும்.

நாட்டு மக்கள் தமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கைக்கு மாறாக செயற்பட எந்த உரிமையும் இல்லை. சிரேஷ்ட அமைச்சரொருவரின் வழிநடத்தலில் தாம் பிறந்த நாட்டுக்காக சேவையாற்ற நீங்கள் அனைவரும் அணி திரள வேண்டும் என்று ஜனாதிபதி புதிய உறுப்பினர்களுக்கு கூறினார்.

நான்கு வருடங்களின் பின் நாம் தேர்தலுக்கு முகம் கொடுத்த போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் நிறைவேற்றியதன் காரணமாகவே மக்கள் எமக்கு மீண்டும் ஆதரவு வழங்கியுள்ளனர். நாம் இந்த நாட்டை ஒன்றிணைத்தோம். அவ்வாறு ஒற்றிணைக்கப்பட்ட நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தினோம். அபிவிருத்தியின் பெறுபேறுகளை கிராமத்துக்கு எடுத்துச் சென்றோம். அபிவிருத்தியை நகரத்துக்கு மட்டுமோ அல்லது ஒரு பிரதேசத்துக்கு மட்டுமோ நாம் கட்டுப்படுத்தவில்லை.

இதனைக் செயற்படுத்தும் போது நாம் பல சவால்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. எனினும் நாம் அவற்றை வெற்றி கொண்டோம். நாம் ஒரு நாளாவது மின்சார வெட்டை மேற்கொள்ளவில்லை. எனவே அபிவிருத்தி யுகம்தான் எமது அடுத்த இலக்கு. இதற்கு நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும். அதற்கான பொருளாதார திட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்த தகவல் உங்கள் மனதில் இருந்தால் நீங்கள் முன்னே செல்லலாம். இந்த நாட்டு மக்கள் உங்களுக்கு வழங்கியிருப்பது மிகப் பாரிய பொறுப்பாகும்.  இதனை நிறைவேற்றும் கடமை உங்களுக்கு இருக்கிறது.

அன்று நாம் 7 வருடங்கள் பின் வரிசை உறுப்பினர்களாக இருந்தோம். அப்போது நாம் அரசியல் பற்றிப் படித்தோம். அதற்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் எமக்கு உதவினர். இதுதான் அன்று இருந்த நிலை. ஆனால் இன்று அந்த நிலை மாறியுள்ளது. உங்களுக்கு எந்தவொரு பிரச்சினை ஏற்பட்டாலும் எந்தவொரு நேரத்திலும் என்னிடம் வரலாம். அத்துடன் எமது சிரேஷ்ட உறுப்பினர்களும் உள்ளனர். பிரச்சினைகளைப் பற்றிப் பயமின்றி பேசலாம்.

இந்த நாட்டு மக்களுக்காக உங்கள் சேவையை உயர்ந்த மட்டத்தில் நிறைவேற்ற நீங்கள் தயாராவீர்கள் என்பது எமது நம்பிக்கையாகும் என்றார்.

“வட, கிழக்கு மக்களின் ஜனநாயக தீர்ப்பை அங்கீகரிக்க வேண்டும்”

Sambanthan_R_TNAவடக்கு, கிழக்கு மக்கள் அளித்த ஜனநாயகத் தீர்ப்பை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும். எமது மக்கள் அளித்த ஜனநாயகத் தீர்ப்பு மதிக்கப்படும் இடத்து அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற முறையில் எம்மை அரசியல் தீர்வொன்றைக் காணவும் வடக்குகிழக்கு மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, மீள்நிர்மாணம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளவும் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

பொதுத் தேர்தலில் அரசாங்கம் தனது சொந்த வெற்றியைக் கௌரவித்துக் கொண்டாடுவதைப் போன்று வடக்கு, கிழக்கு மக்களின் ஜனநாயகத் தீர்ப்பையும் அங்கீகரிக்க வேண்டும் என்று பாராளுமன்றக் குழுவின் முதலாவது கூட்டத்தின் முடிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேற்கூறப்பட்ட விடயங்களை நிறைவேற்ற அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் அவ்வாறான செயற்பாடு தமிழ் மக்களின் நலன்களையும் முழுநாட்டின் நலன்களைப் பேணுவதாகவும் அமையும். இது குறித்து அரசாங்கத்தின் சமிக்ஞையை எதிர்பார்க்கின்றோம் என்று பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவோ மோசமான நெருக்கடி நிலைவரங்களுக்கு மத்தியிலும் எமது மக்கள் எமக்குத் தெளிவான ஆணையைத் தந்திருக்கிறார்கள். எம் மீது நம்பிக்கை வைத்துள்ள எமது மக்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவணங்குகிறது. எமக்கு வழங்கப்பட்ட ஆணையை நிறைவேற்ற நாம் அயராது உழைப்போம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இன்று

sarath_fonseka-02.jpgமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

கடற்படைத் தலைமையகத்தில் இன்று காலை நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணைக்கு மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் தலைமைவகிப்பார். மேஜர் ஜெனரல் எஸ். டபிள்யூ. எல். தவுலகம, மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுரு சிங்க ஆகியோர் இந்த இராணுவ நீதிமன்றத்தின் ஏனைய அங்கத்தவர்களாக கலந்து கொள்ளவுள்ளதுடன் நீதவான் அட்வகேட்டாக ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னாண்டோ செயற்படவுள்ளார்.

இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை என்ற அடிப்படையில் நான்கு குற்றச் சாட்டுகள் தொடர்பில் இன்றைய நீதிமன்ற விசாரணை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

புதிதாக மீண்டும் நியமிக்கப்பட்ட இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூடிய போது அடுத்த விசாரணையை இன்று (19) திகதி நடத்துவது என அறிவித்தது.

நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டி மீள் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

gamini.jpgநாவலப் பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டிய மீள்தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் நேற்று கூறியது. தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நேற்று முன்தினம் (17) நள்ளிரவு பூர்த்தியடைந்ததோடு தேர்தல்கள் நாளை நடைபெறவுள்ளன.

பாதுகாப்புக் கடமைகளில் சுமார் இரண்டாயிரம் பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் இன்று முதல் (19) வாக்கு நிலையங்களுக்கு செல்ல உள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வாக்குப் பெட்டிகளும் இன்று (19) வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.

நாவலப்பிட்டியிலும் கும்புறுப்பிட்டியிலும் அமைதியான தேர்தல்களை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் கூறியது. விசேட அதிகாரிகள் குழு இன்று (19) நாவலப்பிட்டிக்கு செல்கிறது எனவும் திணைக்கள உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

மக்கள் எதுவித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் உச்ச பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான பாதுகாப்பு அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன கூறினார். 1200 இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு தேர்தல் தினத்தில் மேலும் 800 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை விடுமுறை தினமான நேற்று (18) விசேட வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெற்றதோடு இன்றும் (19) வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் கூறியது.

நாவலப்பிட்டியவில் 37 வாக்களிப்பு நிலையங்களிலும் கும்புறுப்பிட்டியவில் ஒரு வாக்களிப்பு நிலையத்திலும் மீள் தேர்தல் நடைபெறுகிறது.

நாவலப்பிட்டிய வாக்குகள் கண்டி மாவட்ட செயலகத்திலும் கும்புறுப்பிட்டிய வாக்குகள் திருகோணமலை கச்சேரியிலும் எண்ணப்படவுள்ளன. கும்புறுப்பிட்டிய வாக்குகள் அதே வாக்களிப்பு நிலையத்தில் எண்ணுவதற்கே முன்னர் தீர்மானிக்கப் பட்டிருந்தது.

யாழ்நகரில் இன்று முதல் 3 நாட்கள் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

jaffna.jpgயாழ்ப் பாணத்தில் முதற்தடவையாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு வெளிநாட்டுக் கைத்தொழிலாளர்கள் பங்குகொள்ளும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஆரம்பமாகின்றது.

இருநூறுக்கும் அதிகமான கைத்தொழிலாளர்கள் இக்கண்காட்சியில் தமது காட்சியறைகளை திறந்துள்ளனர்.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியையும் அதனோடு கூடிய விளையாட்டரங்கையும் மையப்படுத்தி இக்கண்காட்சித்திடல் அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை இலங்கைக்கான இந்தியத்தூதுவர் அசோக் கே.காந்த் இன்று காலை 10 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பார்.

மூன்று நாட்களும் தொழில்சார் கருத்தரங்கு, கலைநிகழ்ச்சிகள், களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.”யாழ்ப்பாணத்துக்கான உங்கள் நுழைவாயில்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இவ்வர்த்தகக் கண்காட்சி குடாநாட்டில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக பெரும் பொருட்செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.இக்கண்காட்சியை யாழ்ப்பாணம் வர்த்தக,கைத்தொழில் மன்றமும் வரையறுக்கப்பட்ட இலங்கை கண்காட்சி மற்றும் மகாநாடுகள் சேவை அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.