கண்டி, இரத்தினபுரி மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் வீசிய கடும் காற்று காரணமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. கடும் காற்றுடன் கூடிய மழை சில தினங்கள் நீடிக்கும் எனவும் காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மழையுடன் வீசிய கடும் காற்றினால் நேற்று முன்தினம் அநுராதபுரம் நுவரகம்பலாதவில் 8 வீடுகளும் கண்டி தொலுவ பகுதியில் 30 வீடுகளும் கண்டி உடஒவிட பகுதியில் 8 வீடுகளும் சேதமானதாக இடர் முகாமைத்துவ நிலைய பேச்சாளர் என். கே. கொடிப்பிலி தெரிவித்தார்.
இது தவிர, மின்னல் தாக்கி அநுராதபுரம் ஆஸ்பத்திரி சேதம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் இடி மின்னல் தாக்கி 5 பேர் இறந்த தாகவும் அவர் கூறினார். நேற்று முன்தினம் குருணாகல் பகுதியில் ஒரு பெண் இறந்துள்ளார்.
இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாகவும் மே நடுப்பகுதி வரை மழை தொடரும் எனவும் கால நிலை அவதான நிலையம் கூறியது. மழை பெய்வதற்கு முன்னர் கடும் காற்று வீசும் நிலை சில தினங்கள் தொடரும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
உஷ்ண காலநிலை சில நாட்களில் குறைவடையும் எனவும் அவதான நிலையம் தெரிவித்தது.