யாழ்ப் பாணத்தில் முதற்தடவையாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு வெளிநாட்டுக் கைத்தொழிலாளர்கள் பங்குகொள்ளும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஆரம்பமாகின்றது.
இருநூறுக்கும் அதிகமான கைத்தொழிலாளர்கள் இக்கண்காட்சியில் தமது காட்சியறைகளை திறந்துள்ளனர்.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியையும் அதனோடு கூடிய விளையாட்டரங்கையும் மையப்படுத்தி இக்கண்காட்சித்திடல் அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை இலங்கைக்கான இந்தியத்தூதுவர் அசோக் கே.காந்த் இன்று காலை 10 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பார்.
மூன்று நாட்களும் தொழில்சார் கருத்தரங்கு, கலைநிகழ்ச்சிகள், களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.”யாழ்ப்பாணத்துக்கான உங்கள் நுழைவாயில்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இவ்வர்த்தகக் கண்காட்சி குடாநாட்டில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக பெரும் பொருட்செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.இக்கண்காட்சியை யாழ்ப்பாணம் வர்த்தக,கைத்தொழில் மன்றமும் வரையறுக்கப்பட்ட இலங்கை கண்காட்சி மற்றும் மகாநாடுகள் சேவை அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.