அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

SMS அச்சமூட்டிய குறுந்தகவல்: சூத்திரதாரிகளை கண்டுபிடிக்குமாறு தொ.தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு

hand-phone.jpgஅநாம தேய குறுந்தகவல்கள் மூலம் பொதுமக்களை வீண் பீதிக்கு உட்படுத்தியவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தொலைத் தொடர்பு நிறுவனங்களைக் கோரியுள்ளது.

இது தொடர்பில் நேற்றுத் தகவல் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ்பெல்பிட்ட குறுந்தகவல்கள் மூலம் புரளியைக் கிளப்பியவர்களைக் கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொலைத் தொடர்பு நிறுவனச் செயற்பாட்டாளர்களுக்கு விசேட பணிப்புரைகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு உறுதிப்படுத்தப்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார். இதேவேளை மேற்படி புரளிகளைக் கிளப்பியவர்கள் சம்பந்தமாகத் தகவல்களைத் தெரிவிக்க முன்வருவோர் பொலிஸ் நிலையங்களில் தமது தகவல்களைத் தெரிவிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

7.4 ரிச்டர் பூமியதிர்ச்சி இந்தோனேஷியாவை தாக்கியது – இலங்கைக்குப் பாதிப்பில்லை

இந்தோனேசியாவில் நேற்று (9) காலை 7.4 ரிச்டர் அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டது.

அஷே மாகாணத்தின் தலைநகரான பண்டா அஷேக்கு 21 கிலோ மீட்டர் தூரத்தில் 61.4 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டது. பூமியதிர்ச்சி ஏற்பட்டதும் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் பூமியதிர்ச்சியின் மையத்துக்கு கிட்டிய நகரமான மீலாபோவில் 7.9 அங்குல (20 சென்றி மீட்டர்) உயரத்துக்கான சுனாமி அலை மட்டுமே ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப் பட்டது. இதனால் இலங்கைக்கு எத்தகைய பாதிப்புக்களும் ஏற்படாதென அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

கல்விக்கென தனியான தொலைக்காட்சி

tv.jpgகல்விக் கெனத் தனியான தொலை க்காட்சி அலைவரிசையொன்றை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.

இது தொடர்பில் தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச் சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கல்விக்கான தனித் தொலைக் காட்சி அலைவரிசைக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க ‘யுனெஸ்கோ’ நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் கூறினார்.

புசல்லாவை நயபனை தோட்டத்தில் மின்னல் தாக்கி 7 பேர் ஆஸ்பத்திரியில்

lightning-01.jpgபுசல்லாவை நயபனை மேமலை தோட்டம் மற்றும் நயபனை தோட்டத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை மின்னல் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட 7 பேர் புசல்லாவை வகுகபிடிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நயபனை மேமலை தோட்டத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களில் 6 பேர் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி மயக்கமடைந்தனர். இவர்கள் 6 பேரும் பின்னர் வகுகபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேநேரம் நயபனை தோட்டத்தில் வீட்டு முற்றத்தில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த என்.பிரபாளினி (21 வயது) என்னும் குடும்பப் பெண் மின்னலினால் தாக்குண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேமலை தோட்டத்தச் சேர்ந்த ஆர்.முத்தாய் (47 வயது), கே.ராஜமணி (48 வயது), எம்.ஞானேஸ்வரி (43 வயது), எம்.சரஸ்வதி (33 வயது), கே.வரதலட்சுமி (36 வயது), ஏ.உதயகுமார் (22 வயது) ஆகியோரே மின்னல் தாக்குதலினால் அதிர்ச்சிக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மிகவும் கஷ்டப்பட்ட பிரதேசமான நயபனை மேமலை தோட்டத்திலுள்ள தொழிலாளர்கள் அடிக்கடி இவ்வாறான சம்பவங்களுக்கு முகம் கொடுத்து வருவதால் காலநிலை சீரற்றிருக்கும் நாட்களில் வேலை நேரம் குறைக்கப்பட்டு நிவாரணங்களை தோட்ட நிர்வாகம் வழங்க வேண்டுமென்றும் தொலைவில் இருக்கும் நயபனை தமிழ் வித்தியாலயத்திற்கு சென்று வருவதற்கு தமது பிள்ளைகள் அஞ்சுவதாகவும் இதனால், மேமலை தோட்ட மாணவர்களுக்கு நேர காலத்தோடு பாடசாலையிலிருந்து வீடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென்றும் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.நேற்று முன்தினம் சில மணித்தியாலங்களுக்கு புசல்லாவை பகுதியில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்த கடும் மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதோடு இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

குடாநாட்டில் ஏமாற்றிப் பணம் பறிக்கும் மோசடிப் பேர்வழிகள் குறித்து எச்சரிக்கை

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது நிலவும் அமைதிச்சூழலைப் பயன்படுத்தி வெளியிடங்களைச் சேர்ந்த சிலர் பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவதுடன், அவர்களில் சிலர் கொள்ளைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் மன்னாரிலிருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணம் வந்த யாழ்ப்பாண வாசி ஒருவருடன் கூடப்பயணம் செய்த மன்னாரைச் சேர்ந்த ஒருவர் நட்பாக பழகியுள்ளதுடன் தனக்கு யாழ்ப்பாணத்தைச் சுற்றிப்பார்க்க உதவுமாறும் கேட்டுள்ளார்.

அந்த மன்னார் வாசி நட்பு முறையில் பழகியதால் அதனை நம்பிய யாழ்.வாசி அவரை யாழ்ப்பாணத்தில் 2 ஆம் குறுக்குத் தெருவிலுள்ள தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். அவரும் வீட்டில் உள்ளவர்களுடன் அன்பாகப் பழகி அவர்களையும் நம்பவைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சுற்றிப்பார்க்க வந்தவர் வியாழக்கிழமை இரவு தானே இரவு சாப்பாடு வாங்கித் தருவதாகக்கூறி வாங்கி வந்துள்ளார். இரவு சாப்பாட்டில் அவர் மயக்க மருந்தை கலந்திருப்பதை அறியாத யாழ்ப்பாண வாசியின் குடும்பத்தினர் அதனை உண்ட பின்னர் மயங்கிவிட்டனர். இதையடுத்து, மன்னாரிலிருந்து வந்தவர் அந்த வீட்டிலிருந்த பணம் , நகை மற்றும் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களையும் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.

மறுநாள் இவர்கள் எழுந்துபார்த்த போது தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதேபோல, சிலர் நிவாரணம் தருவதாக போலி விண்ணப்பப்படிவங்களை ஒன்று 100 ரூபா வீதம் வழங்கி பலரிடம் பணமோசடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வேறு சிலர் கைத்தொலைபேசி போன்ற பொருட்களை மலிவு விலைக்குத் தருவதாகவும் தாம் ஒரு நிறுவனத்தின பிரதிநிதிகள் என்றும் கூறி முற்பணம் பெற்றுவிட்டு தலைமறைவாகியுள்ளனர். எனவே, இவ்வாறானவர்கள் குறித்து குடாநாட்டு மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டுமென அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மகாவலி “ஜி-27 வலயம் என்ற பெயரில் வவுனியா வடக்கில் குடியேற்ற முடிவு

மகாவலி “எச்-27 வலயத்தில் மக்கள் குடியிருப்பதற்கு காணிப் பற்றாக்குறை ஏற்பட்டுவருவதாக நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.மகாவலி வலயங்களில் குடியிருப்பவர்களின் மூன்றாம் பரம்பரை உறுப்பினர்களுக்குக் காணிகளை வழங்க முடியாதுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிடுகிறது.

இதனால் வவுனியா வடக்கு கால்வாயை அண்மித்த பகுதிகளில் இவர்களுக்குக் காணிகளை வழங்க நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார்.மகாவலி “ஜி-27 வலயம் என இதற்குப் பெயரிட்டு இங்கு மக்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்களுக்கு விவசாயம் செய்ய உரிய வசதிகள் மற்றும் உதவிகள் செய்து கொடுக்கப்படவுள்ளது.இதேவேளை, தனியாரிடம் குத்தகைக்கு விடப்பட்டு விவசாயம் செய்யப்படாத காணிகளை அமைச்சு பொறுப்பேற்கவுள்ளது. இவற்றை காணிகள் இல்லாதவர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிவரை உஷ்ணம் நீடிக்கும்

தற்போதைய கடும் வெப்பமான நிலைமை மே மாதஇறுதியில் மாற்றமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதுவரை உஷ்ணமான காலநிலையே நீடிக்குமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் கருத்து தெரிவிக்கையில்;தற்போதைய உஷ்ணமான காலநிலைக்கு இடைப்பட்ட பருவப்பெயர்ச்சி காலநிலையே காரணமாகும். இக்காலநிலை தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை உருவாகும் வரை நீடிக்கும்.பொதுவாக தென்மேல் பருவப்பெயர்ச்சி மே முதல் செப்டெம்பர் வரை காணப்படும்.

இந்நிலையில் மே மாத இறுதியில் இந்த இடைப்பட்ட காலநிலை மாற்றமடையுமென எதிர்பார்க்கின்றோம்.இக்காலநிலையின் போதே அதிக உஷ்ணம் காணப்படும். அதேநேரம் இலங்கை முழுவதும் பரவலாக மழை கிடைக்கும் காலப்பகுதியாகும்.

 உஷ்ணத்தினால் நீர் நிலைகளிலிருந்து நீர் ஆவியாகி மழையாக பொதுவாக மாலை வேளைகளில் நாடு முழுவதும் மழை திடீரென பெய்வது இக்காலநிலையில் வழமையானதாகும்.தென்மேல் பருவப்பெயர்ச்சி ஆரம்பமாகியதுமே தென்மேற்கு பகுதிகளான கொழும்பு, காலி போன்ற இடங்களில் மழை பெய்யும்.அதேநேரம் கிழக்குப் பகுதியில் உஷ்ணமான காற்று வீசுமென அவர் தெரிவித்தார்.

‘மரண அழைப்பு’ குறுந் தகவல் (SMS) பொய்யானவை

hand-phone.jpgநாடெங்கும் பரவலாக தற்போது குறுங்செய்திகள் மூலமான உயிர் அச்சுறுத்தல்கள் கையடக்கத் தொலைபேசியூடாக அனுப்பப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முதல் கையடக்கத் தொலைபேசிகளுக்கு 7888308001, 9316048121, 9876266211, 9888854137, 9876715587 எனும் இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். இந்த இலக்கங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அழைப்புக்களை ஏற்கும்போது அவற்றில் இருந்து வரும் உயர் ஒலி அதிர்வு (High frequency) காரணமாக மூளை வெடித்து பாதிப்புக்குள்ளாகினர் என்றும், உலகளாவிய ரீதியில் மேற்படி இலக்கங்களுக்குப் பதில் வழங்கிய நபர்கள் இது வரையில் 27 பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. தவிர, மூளைக்கு வழங்கப்படும் உயர் அழுத்தம் காரணமாகவே மேற்படி இறப்புக்கள் இடம்பெற்றதாகவும் செய்திகள் வெளிவந்தன.  என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுந் தகவல் (SMS) அனுப்பப்பட்டது.

அக்குறுந்தகவலில் இதனை டயலொக் நியூஸ் சேவை (DD News) உறுதி செய்வதாகவும், இதனை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உடனடியாக அறிவியுங்கள் எனவும் மேலும் கூறப்பட்டிருந்தது. இத்தகவல்களால் பீதியடைந்த மக்கள் பலரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலரிடமும் விசாரித்ததுடன் தமது தொலை பேசிகளையும் நிறுத்தி வைத்தனர்.

இலங்கையில் தொலைத் தொடர்புச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், இவ்வாறு பரவலாகப் பேசப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளன. இது மக்களை ஏமாற்றுவதற்காக பரப்பப்படும் வதந்திகள் என வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

‘மரண அழைப்பு’ என அழைக்கப்படும் இந்த குறுஞ்செய்திகள், கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி பாகிஸ்தானில் அனுப்பப்பட்டுள்ளன. அவ்வேளை, ஆண்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் அந்தக் குறுஞ்செய்திகள் மூலம் பாதிப்பு ஏற்படுவதாக அச்சுறுத்தப்பட்டிருந்தது. அதன்பின்னர் மின்னஞ்சலிலும் அவ்வாறான அச்சுறுத்தல் செய்திகள் வெளியாகியுள்ளன. அவை இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கும் பரவத் தொடங்கியதாக அச்செய்திகளில் தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் பீதியடையத் தொடங்கியதால் இது தொடர்பான ஆய்வுகளில் தொலைத்தொடர்புத் துறையினர் ஈடுபட்டபோதுதான் அது பொய்யான செய்தி எனத் தெரியவந்துள்ளது.

கல்வித்துறையை மறுசீரமைக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு – மூன்று மாதத்தினுள் புதிய சட்டம் – கல்வி அமைச்சர் பந்துல

bandula.jpgகல்வித் துறையை முழுமையாக மறுசீரமைக்கும் வகையில் புதிய கல்விச் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கெனப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை அமைப்பதற்காக கொள்கைத் திட்டங்கள் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கை ஒன்றை மூன்று மாத காலத்திற்குள் தயாரித்து சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகளை இந்தப் பாராளுமன்ற தெரிவுக்குழு மேற்கொள்ளுமென அமைச்சர் கூறினார்.

புதிய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றதன் பின்னர் நேற்று அமைச்சில் முதலாவது செய்தியாளர் மாநாட்டை அமைச்சர் நடத்தினார். இந்தச் செய்தியாளர் மாநாட்டில் பிரதி கல்வி அமைச்சர் ரி. பி. ஏக்கநாயக்க புதிய கல்விச் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன மற்றும் மேலதிகச் செயலாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கல்வித் துறை தொடர்பான உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சகல அரசியல் கட்சிகளையும் சார்ந்த பிரதிநிதிகளும் உள்வாங்கப்படுவார்கள். இந்தத் தெரிவுக் குழுவின் முன் சகல தரப்பினரும் தமது சாட்சியங்களை வழங்கி மறுசீரமைப்புக்கான யோசனைகளை முன்வைக்க முடியும் என்று தெரிவித்த அமைச்சர் குணவர்தன, சகல மட்டத்திலும் ஆலோசனைகள் பெறப்பட்டு மூன்று மாத காலத்தில் சட்ட மூலம் நிறைவேற்றப்படும் எனக் குறிப்பிட்டார். புதிய சட்ட மூலத்தின் ஊடாக கல்வித் துறையில் நிலவும் சகலவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுமென்று கூறிய அமைச்சர் 2011 ஆண்டு முழுமையாக மறுசீரமைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

சம்பள உயர்வு, சம்பள முரண்பாடு, இடமாற்றம், பதவி உயர்வு, பெற்றார் மாணவர், ஆசிரியர்களுக்கிடையிலான சிக்கல்கள், பாடசாலைகளைத் தரப்படுத்தல், புலமைப் பரிசில் பரீட்சை, முதலாம் ஆண்டுக்கு மாணவர்களைச் சேர்த்தல், தனியார் சர்வசேத மற்றும் அறநெறிப் பாடசாலை பிரச்சினைகள் எனப் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் அதேநேரம், அரசாங்கமும், அமைச்சரும் மாறும்போது கல்விக் கொள்கையை மாற்றாதிருக்கும் வகையில் தேசிய கொள்கை வகுக்கப்படுவதாகக் கூறினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழிகாட்டலின்படி நாட்டின் மனித வளத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு: மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்ற கூடியதாக அமைய வேண்டும் – சம்பந்தன்

Sambanthan_R_TNAஅரசாங்கம் நியமிக்க உத்தேசித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு மக்கள் அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்றக்கூடியதொன்றாக அமைய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த கால நடவடிக்கைகளில் உண் மைத் தன்மை குறித்த மூலகாரணங்களை இனங்கண்டு அவற்றுக்குத் தீர்வு காணப்படாவிட்டால் அர்த்த புஷ்டியான நல்லிணக்கம் ஏற்பட முடியாதெனவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று, முன்னாள் அமைச்சர் அமரர் ரிச்சட் பத்திரனவின் அனுதாபப் பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில், உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பது தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு கருத்துக்கள் வெளிவருகின்றன.

கடந்த கால நடவடிக்கைகளைக் கண்டறியவும் அவ்வாறான தவறுகள் இனியும் இடம்பெறாமல் தடுப்பது தொடர்பில் ஆராயவுமே இந்த நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. தமக்கான கெளரவம் மீள நிலைநாட்டப்பட வேண்டும். ஆட்சியதிகாரம் நல்லிணக்கம் போன்றவற்றையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மத்தியில் இருக்கின்ற அதிகாரங்கள் பிராந்திய ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் சட்டம், ஒழுங்கு, காணி, கல்வி உள்ளிட்ட அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற முற்போக்குச் சிந்தனை கொண்டவராக ரிச்சட் பத்திரன திகழ்ந்தார் எனவும் சம்பந்தன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.