::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

புலிகளுக்கு ஆதரவில்லை: முதல்வர்

0302-karunanidhi.jpgஇலங்கை தமிழர்களுக்காக மத்திய ஆட்சியிலிருந்து விலக மாட்டோம்; மாநில அரசையும் இழக்க மாட்டோம்; திமுகவை பொறுத்தவரை இலங்கை தமிழர் பிரச்சனை தான் முக்கியம்; பிரபாகரனையோ மற்ற தமிழர் தலைவர்களையோ ஆதரிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இந்த பிரச்சனையில் ராமதாஸ், ஜெயலலிதா போன்றவர்களின் சதிச் செயல்களுக்கு ஆளாக மாட்டோம் என்றும் கருணாநிதி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
.
சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக செயற்குழுவில் முதலமைச்சர் கருணாநிதி பேசியதாவது: இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து திமுக கடந்த பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறது. அதற்காக வாதாடியும், போராடியும் வருகிறது. என்றும் இந்த நிலையில் தொடர்வோம்.

இப்போது தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்காக புதிய குரல் கிளம்பி இருக்கிறது. 1956 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக பல்வேறு தலைவர்கள் தமிழ்நாட்டை நாடி வந்திருக்கிறார்கள். அப்போது தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் பெரியார், அண்ணா, நான் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார்கள்.

அதனடிப்படையில் அவர்களுக்காக குரல் கொடுத்துள்ளோம். அதனை தொடர்ந்து 198384 கால கட்டத்தில் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்டோர் கொடூரமான படுகொலைக்கு ஆளாகி சிங்கள ராணுவத்தின் தமிழர் அழிப்பு நடவடிக்கை நடந்தது.
அப்போது மீண்டும் அமிர்தலிங்கம் தமிழகத்திற்கு வந்து ஆதரவு கோரினார். தமிழனுக்கு தமிழன் உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தோம். அதன் பின்னர் விடுதலைப் போராட்ட இயக்கங்கள் தோன்றின.

அவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போராடியிருந்தால் அவர்கள் விரும்பியபடி தமிழீழம் என்றைக்கோ மலர்ந்திருக்கும். ஆனால் பிரபாகரனை ஒரு சர்வாதிகாரியாக ஏற்றுக் கொள் பவர்கள் மட்டுமே அங்கு செயல்பட முடியும் என்ற நிலை அங்கே உருவானது. இதனை தொடர்ந்து பலர் அழித்தொழிக்கப்பட்டனர்.

திமுகவை பொறுத்தவரை இலங்கை தமிழர்களுக்காகத்தான் எங்களுடைய குரல் ஒலிக்கும். பிரபாகரனையோ அல்லது எந்த தனிப்பட்ட தமிழர் தலைவர்களையும் நாங்கள் ஆதரிக்க வில்லை.

புலிகளின் நடவடிக்கைகளை ஏற்காமல் முகுந்தன், கருணா உள்ளிட்ட பலர் வெளியேறி இருக்கிறார்கள். இப்படி சகோதர யுத்தம் போன்ற கொடுமை களை நாங்கள் மறப்பதற்கு காரணம் அங்குள்ள தமிழர்கள் உரிமை பெற்று வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து பத்திரிகையின் ஒரு சகோதர இதழான பிரண்ட்லைன் இதழில் பிரபாகரனின் அட்டைப் படம் போட்டு ஒரு பேட்டியை வெளியிட்டி ருந்தார்கள்.

அதனை கண்டு நான் திடுக்கிட்டுப்போனேன். என் விழிகள்  ஆச்சரியத்தால் விரிய அதனை பார்த்தேன்.  அதில் ஒரு கேள்வி பிரபாகரனிடம் கேட்கப்பட்டது. நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் ஆட்சி எப்படி இருக்கும் என்பதே அந்த கேள்வி. அது சர்வாதிகார ஆட்சியாக இருக்கும் என்று பிரபாகரன் பதிலளித்திருந்தார். அப்போதே அவர்களுடைய போராட்டம் புளித்துப் போய் விட்டது.

சகோதர யுத்தம் நடத்திய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக் கான ஆதரவு குறைந்தும், மறைந்தும் போனது. ஆனால் இன்று பச்சை குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட இலங்கை தமிழர்கள் கொல்லப்படு கிறார்கள். தாய்மார்கள் இழிவுப் படுத்தப்படுகிறார்கள். இதனை தாங்காமல் கதறி அழும் அவர்கள் தமிழகம் நம்மை காப்பாற்றாதா என்று அவலக் குரல் எழுப்புகிறார்கள்.

அதற்கு நாம் உதவ வேண்டாமா  என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த கூட்டத்தை இன்று நாம் கூட்டியிருக்கிறோம்.

ஆதரவு என்றால் ஆயுதமேந்தியோ, போர் தொடுத்தோ ஆதரவை அளிக்க முடியாது. தமிழக சக்தியை ஒன்று திரட்டுவதன் மூலமாகவே ஆதரவை அளிக்க முடியும். ஜனநாயக ரீதியில் தான் அந்த சக்தியை நாம் திரட்ட முடியும்.

அந்த வகையில்தான் இன்றைக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டி ருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள் ஏதோ தாங்கள்தான் இலங்கை தமிழர்களின் பிரதிநிதி களைப் போல காட்டிக் கொள் கிறார்கள். நாம் இலங்கை தமிழர் களுக்கான போராட்டத்தை கைவிட்டு விட்டது போல பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் தலைமையில் எல்லோரும் போராட்டம் நடத்துவோம் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். எதற்கு சொன்னார் என்று இன்றுதான் புரிகிறது.

எனக்கும், மத்திய அரசுக்கும் விரோதத்தை ஏற்படுத்தி இவர் செல்வாக்கை பெருக்கிக் கொள் வதற்காக இந்த செயலில் ராமதாஸ் ஈடுபட்டிருக்கிறார். அவர் ஆதரவு பத்திரிகைகள் மூலமாக இந்த செய்திகளை அவர் பரப்பி வருகிறார்.

இன்று கூட நாம் ஆட்சியை கலைத்து விட்டு வெளியேறி விடுவோம் என்று ஒரு பத்திரிகை ஆசையோடு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு திமுக ஆட்சி போய் விடும்; அடுத்த ஆண்டு அதிமுக ஆட்சி ஏற்படும் என்று ஜெயலலிதா சொல்வதற்கு காரணம், இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் நடத்தி மத்தியில் திமுக ஆதரவை வாபஸ் பெற்று விடும்.

இங்குள்ள ஆட்சியை கலைத்து விட்டு வெளியேறி திண்ணை காலியாகி விடும். நாம் வந்து படுத்துக்கொள்ளலாம் என்று அவர் கனவு காண்கிறார்.

அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் உங்களை நம்பி சொல்கிறேன். இந்த அண்ணன் சாக மாட்டான்; திண்ணையும் காலியாகாது என்று அவர்களுக்கு உணர்த்தும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களோடு பேசக் கூடியதும், அவர்கள் மீது பற்றும்,பாசமும் வைக்கக் கூடிய ஒரே கட்சி திமுகதான். வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற புறப்படுவது போல சிலர் நாடகமாடுகின்றனர். அவர்களை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல நாம் எப்படி செயல்படுவது என்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை ஏற்று நீங்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக செயற்குழுவில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இலங்கையில் தமிழர்களை பாதுகாக்க இந்தியா, ஐ.நா.முயற்சிக்க வேண்டும்

prakas.jpgமார்க் சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரகாஷ் கரத், மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் இரண்டரை லட்சம் தமிழர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அந்த மக்களை வெளியேற்றி பாதுகாக்க இந்திய அரசும், ஐ.நா. சபையும் முயற்சிக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையும், சுதந்திரமும் கிடைக்க அரசியல் தீர்வு ஏற்படவேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்திலும், ஆணையர்களை நியமிப்பதிலும் சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் வலியுறுத்தி வருகிறது.

இதில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது.

முத்துக்குமார் கொலை செய்யப்பட்டாரா? சுப்ரமணியசாமி சந்தேகம்

muthukumar-30011.jpgஇலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

முத்துக்குமாரின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற சந்தேகம் எங்களுக்கு வந்திருக்கிறது. முத்துக்குமாரிடம், தீக்குளிக்க முன்வா. நாங்கள் உன்னை தடுத்து விடுவோம் என்று சிலர் அவருக்கு வாக்குறுதி கொடுத்ததாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது.முத்துக்குமார் எழுதியதாக வெளியான நான்கு பக்க கடிதம் விடுதலைப்புலிகள் தொடர்பாளர் எழுதியது போல இருக்கிறது. அது நம்நாட்டு தமிழ் அல்ல, இலங்கை தமிழ் போல இருக்கிறது.

அவரது மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அவர் கொலை செய்யப்பட்டார் என்றால், அதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றும் கண்டுபிடிக்க வேண்டும். பந்த் நடத்துவது தேசத்துரோக முடிவு. அதனை வாபஸ் பெற வேண்டும். அப்படி பந்த் நடத்தும் தலைவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார் சுப்பிரமணிய சாமி.

சீனப்பிரதமர் மீது செருப்பு வீச்சு

china-pm.jpgகடந்த ஆண்டு இறுதியில், அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் பாக்தாத் சென்றபோது அவர் மீது செய்தியாளர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் வீசிய சம்பவம் உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் மறைவதற்குள் லண்டனில், சீன பிரதமர் வென் ஜியாபோ மீது ஷூ வீசப்பட்டுள்ளது.

சீன பிரதமர் வென் ஜியாபோ 3 நாள் பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது, திடீரென எழுந்த ஒரு வாலிபர், வென் ஒரு சர்வாதிகாரி. இந்த சர்வாதிகாரிக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எப்படி பேச அனுமதி கொடுக்கலாம் என்று ஆவேசமாக கூறியபடி தன் ஷூவை கழற்றி வீசினார். ஆனால் வென் ஜியாபோ மீது ஷூ படவில்லை. வென் ஜியாபோ இருந்த மேடைக்கு முன்பாகவே விழுந்து விட்டது.

உடனடியாக பாதுகாப்புப் படையினர் அந்த நபரை மடக்கிப் பிடித்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

ஈழத்தில் போரை நிறுத்தாவிட்டால் குண்டை வெடிக்கச் செய்வதாக மிரட்டியவர் கைது

tinakaran.jpgஇலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் கல்லூரியை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டிய வாலிபரை கடலூர் போலீசார் கைது செய்தனர். இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி கடலூர் பெரியார் கல்லூரி மாணவர்கள் வளாகத்துக்குள் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கு வந்து மாணவர்களை சந்தித்து பேசினார். பின்னர் ஈழம் மலரட்டும், மத்திய அரசே இலங்கையில் போரை நிறுத்து என்று கோஷமிட்டபடி கல்லூரியின் அலுவலகத்துக்குள் நுழைந்தார். அப்போது அங்கே இருந்த பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கல்லூரியை வெடிகுண்டு வைத்து தகர்க்க போகிறேன் என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர்கள் அவரை மடக்கிபிடிக்க முயன்றனர். அப்போது அவர், என்னை பிடிக்காதீர்கள் வெடிகுண்டு வைத்துள்ளேன் வெடித்துவிடும் என்று கையில் மஞ்சள் நிறத்தில் இருந்த ரிமோட் போன்ற கருவியை காண்பித்து பயமுறுத்தியுள்ளார். இதையடுத்து அலுவலகத்துக்குள் இருந்த பேராசிரியர்களும், ஊழியர்களும் ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதை கண்ட வாலிபர் அங்கிருந்து தப்பியோட முயன்றான்

ஆனால் போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், கையில் வைத்திருந்தது ரேடியோ, டி.வி. போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை பழுது பார்க்க பயன்படும் `மல்டி மீட்டர்’ என்றும் தெரியவந்தது.

பின்னர் அவரை கைது செய்த போலீசார், மல்டிமீட்டர் கருவியையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் டெய்லர் என்றும், கடலூருக்கு அருகே உள்ள ரெட்டிச்சாவடி கிளிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் தினகரன் என்றும் தெரியவந்தது.

தீவிரவாதிகளை விருந்தாளிகளைப் போல் பாகிஸ்தான் நடத்துகிறது இந்தியா குற்றச்சாட்டு – எம்.கே. நாராயணன்

mk-narayanan.jpgவீட்டுக் காவலில் உள்ள விருந்தாளிகளை வீட்டு விருந்தாளிகளைப் போல் பாகிஸ்தான் நடத்துகிறது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் குற்றம் சாட்டினார்.  மும்பையில் கடந்த நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இவர்களுக்கு பின்னணியாக இருந்தவர்கள் பாகிஸ்தானில்  உள்ளனர். இதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது.

இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் வரவில்லை. அவர்கள் கேட்டால் இன்னும் அதிக தகவல்களை தரவும் இந்தியா தயாராக உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் கூறினார்.  இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டி:  இந்தியா அளித்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் இதற்கு மாறாக பாகிஸ்தான் இந்தியாவிடமே இருமுறை கேள்விக் கணைகளை தொடுத்தது. ஒருமுறை கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டோம். லஷ்கர் இயக்கத்தின் தலைவர் லக்வி உள்ளிட்ட சில தீவிரவாத தலைவர்கள வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், இந்த தீவிரவாதிகள் வீட்டு விருந்தாளிகளைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள்.

மசூர் அசாத் என்ற தீவிரவாதி தெற்கு ஆப்கானிஸ்தானில் இருக்கலாம். அவர் எங்கிருக்கிறார் என்பது பாகிஸ்தான் அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவரை பிடிக்கவில்லை. குற்றம் செய்தவர்களை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு என்ன தயக்கம் என்பது தெரியவில்லை.

மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படவில்லை என்று லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதர் வாஜித் சம்சல் கூறியிருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. பாகிஸ்தான் அரசு இன்னும் செயல்படவில்லை என்று தான் என்னால் கூற முடியும். இவ்வாறு எம்.கே. நாராயணன் கூறினார்.

முழு அடைப்பு போராட்டத்திற்கு பிஜேபி ஆதரவு.

eela-ganash.jpgஇலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நாளை  நடத்த உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு பிஜேபி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் 4ஆம்  தேதி நடத்துவதாக அறிவித்துள்ள முழு கடையடைப்புக்கு பிஜேபி ஆதரவு  தருகிறது.

தற்போது பத்திரிகைகளில்  வரும் செய்திகள், இலங்கையில் தவிக்கும் தமிழர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு நிரந்தரமாக சமஉரிமை பெற்றுத்தரவும் ஒவ்வொருவரும் தன் பங்குக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று கருதுகிறார்கள் என்பதை உணர்த்துகிறது. சிலர் உணர்ச்சிவரப்பட்டு தங்களை  மாய்த்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். செய் அல்லது செத்து மடி என்பது ஏற்புடையதல்ல. மாறாக “வாழ்ந்து லட்சியத்தை அடைந்து காட்டு’ என்பதில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பங்குக்கு செய்ய வேண்டியவைகளை செய்தும், மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசின் செயல்பாடு இந்தவிஷயத்திலும் திருப்திகரமாக இல்லை. எனவே மக்கள் அனைவரும் பங்கேற்கும் ஒரு சாத்வீக போராட்டம் நடத்துவதால் மக்களுக்கு தங்களது உணர்வுகளை வெளியிட ஒரு வடிகால் கிடைக்கும். இந்த அறிவிப்பை வெற்றிகரமாக்கிட மக்கள் தானாக முன் வர வேண்டும். தங்களது ஆதரவை ஒன்றுபட்டு மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும்.

பிஜேபியின் தொண்டர்கள் இந்த முழு அடைப்புக்கு ஒத்துழைப்பார்கள். மக்கள் தானாக முன் வந்து தங்களது உணர்வை வெளிப்படுத்தும் வாய்ப்பு இது என்பதால் கட்சியின் தொண்டர்கள் தெருவில் இறங்கி எவரையும் வற்புறுத்த மாட்டார்கள்.
இது அச்சுறுத்தி வெற்றிகரமாக்கிய போராட்டம் என்கின்ற அவப்பெயர் வராது, தானாக வெற்றி பெறுவது சிறப்பாகும்.

ஆனால் அதே நேரத்தில், மாநில அரசும் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்க முனைவதும் கூடாது. எந்தவிதமான வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாது. அமைதி காக்கும் பணியினை அரசு செய்யட்டும். ஆனால் போராட்டம் வெற்றி பெற்றால் அதன் காரணமான அரசியல் லாபம் யாருக்குப் போகும் எனக் கணக்கிட்டு தடுக்க முனைதல் கூடாது என அரசை வற்புறுத்துகிறேன். தமிழர்கள் அனைவரும் இலங்கை தமிழர்களை காக்கவும், அவர்களுக்கு சம உரிமை பெறவும் முனையும் விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஈராக் மாகாண சபை தேர்தல் முடிவுகள் அடுத்த வாரம்

iraq-elc.jpgஈராக்கில் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலின் முடிவுகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த தேர்தல் அலுவலகம் முழு முடிவுகளையும் அறிவிக்கப் பல வாரங்கள் தேவைப்படும் எனத் தெரிவித்தது. புதுவகையான தேர்தல் முறை என்பதால் வாக்குகளை எண்ண பல நாட்கள் எடுக்கும். மற்றும் எண்ணுவதில் பெரும் சிக்கல்களும் உள்ளதென்றும் செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த மாகாண சபைத் தேர்தல்களில் 15 மில்லியன் மக்கள் வாக்களித்தனர்.

440 ஆசனங்களுக்கு 14 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 400 கட்சிகள் களத்தில் குதித்தன. ஈராக்கிற்கான ஐ. நா. வின் தூதுவர் முஸ்தபாமிஸ்டிரா இதுபற்றிக் கூறுகையில் :- ஈராக்கில் இறுதியாக நடந்த தேர்தல் முடிவுகள் கணக்கிடப்பட்ட விதம் பூரண திருப்தியில்லை. விகிதாசாரம் முறையாகப் பேணப்படவில்லை.எனவே இம்முறை இந்தத் தவறுகள் இடம்பெறாமல் தவிர்க்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மீள் புனரமைப்புப் பணிகள், வெளிநாட்டு உதவிகள் என்பவற்றை மாகாண சபை முன்னெடுப்பதுடன், ஆளுநர்களையும் நிர்வாகமே தெரிவு செய்கின்றது. 2.5 பில்லியன் ரூபா புனரமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் 8 நாள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் – 2 வாரத்தில் அலுவலகம் செல்வார்

sing.jpgஇதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், 8 நாள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று வீடு திரும்பினார். இன்னும் 2 வாரத்தில் அவர் வழக்கமான பணிகளை கவனிப்பார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டதால், ஜனவரி 23ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் 14 மணி நேரம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன் பிறகு பிரதமரின் உடல்நிலை வேகமான முன்னேறியது. 28ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.  எட்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று காலை 8 மணிக்கு மருத்துவமனையில் இருந்து மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். புறப்படும் முன்பு,  சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்ஸ்களுக்கு, பிரதமர் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தார்.

 டிஸ்சார்ஜ் செய்வதற்கு முந்தைய பரிசோதனைகளை மும்பை டாக்டர் ராம்காந்த் பாண்டா தலைமையிலான குழு செய்தது.  நேற்று அதிகாலை பிரதமர் எழுந்ததும் டீ குடித்தார். மருத்துவமனை வளாகத்தில் சிறிது தூரம் வாக்கிங் சென்றார். பின்னர் பத்திரிகைகள் படித்தார். சிற்றுண்டி கொடுக்க தயாரானபோது வீட்டுக்குப் போய் சாப்பிட விரும்புவதாக கூறினார். பிரதமர் நேற்று உற்சாகமாக காணப்பட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

‘இப்போது, வீட்டில் இருந்தபடியே பிரதமர் பணியாற்றுவார். 2 அல்லது 3 வாரத்தில் அலுவலகம் வந்து வழக்கமான பணிகளை கவனிப்பார். பிரதமர் பூரண குணமடையும் வரை டாக்டர் பாண்டா தலைமையிலான குழு அவரை கவனித்து வரும்’ என்று மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சர் அன்புமணி கூறினார். பிரதமரின் ஊடகத்துறை செயலாளர் தீபக் சாந்து விடுத்த அறிக்கையில், அடுத்து வரும் வாரங்களில் உணவு அளவு மற்றும் உடற்பயிற்சியை படிப்படியாக அதிகரிக்கும்படி டாக்டர்கள் ஆலோசனை கூறி உள்ளனர். தான் விரைவில் குணமடைய வேண்டி நாடு முழுவதும் மக்கள் பிரார்த்தனை செய்ததற்காக பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். என்று கூறப்பட்டுள்ளது.

தீக்குளித்த பள்ளப்பட்டி ரவி மரணம்: தலைவர்கள் அஞ்சலி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் சனிக்கிழமை அன்று உடல் கருகிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இவர் இலங்கையில் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றக் கோரியும், இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தியும் தீக்குளித்ததாக ரவியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆனால் காவல்துறையினர், ரவி இலங்கை தமிழருக்காக தீக்குளிக்கவில்லை என்றும் ரவி 2 வழக்குகளில் ஏற்கனவே சிறைத் தண்டனை பெற்றவர் என்றும், இன்னும் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறினார். அவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே தீக்குளித்துள்ளார் என்றும் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வாசுகி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழருக்காக பள்ளப்பட்டி வாலிபர் ரவி தீக்குளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரவி இலங்கை தமிழர்களுக்காகத்தான் தீக்குளித்தான் என்று வைகோ, திருமாவளவன் மற்றும் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தினரும் அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.  இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரவி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மரணம் அடைந்த ரவியின் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, பழ.நெடுமாறன் மற்றும் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் உள்பட தமிழின ஆதரவாளர்கள் மதுரை விரைந்துள்ளனர்