::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

இந்தியாவிற்கு அல்-கய்டா எச்சரிக்கை

al-qaeda-yazid.jpgபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவை பின் லேடன் தலைமை‌யிலான அல்-கய்டா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் ம‌ற்று‌ம் பாகிஸ்தானில் செயல்படும் அல்-கய்டா பயங்கரவாத அமைப்பின் முஸ்தஃபா அபு யாஸீத் இவ்வாறு விடுத்துள்ள எச்சரிக்கை அடங்கிய வீடியோவை பி.பி.சி. தொலைக்காட்சி வெளியிட்டது.

இந்த 20 நிமிட வீடியோவில் யாஸீத் அரபு மொழியில் கூறியது: “நாங்கள் முஸ்லிம் நாடுகள் எங்கும் உள்ள முஜாஹிதீனையும், தற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதிகளையும் உங்களை எதிர்கொள்ள அழைத்து வருவோம். உங்கள் பொருளாதார மையங்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி அவற்றை மண்ணோடு மண்ணாக்குவர்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில் அவர் கூறிய போது, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவை கொலை செய்ய அல்-கய்டா தலைவர் ஐமான் அல்-ஸவாஹிரி என்பவர் முடிவெடுத்தார் என்றார்.

பாகிஸ்தான் அரசு மற்றும் அதன் ராணுவத்திற்கு‌ம் யாஸீத் கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.

இந்த வீடியோ ஒளிபரப்பினால் பாகிஸ்தான் முன்பு வெ‌ளி‌யி‌ட்ட செய்தி ஒன்றும் பொய் என்று தெரியவந்துள்ளது. அதாவது தற்போது இந்த மிரட்டலை வெளியிட்டுள்ள அபு யாஸீத் என்பவர் 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று பாகிஸ்தான் வெளியுலகிற்கு அனுப்பிய செய்தி பொய்யாகியுள்ளது.

அல் – காய்தா மிரட்டலை சந்திக்க தயார் : ஏ.கே.அந்தோணி

மும்பையில் நடத்தப்பட்டதை போன்ற தாக்குதல் மீண்டும் நடத்தப்படும் என இந்தியாவுக்கு அல் – காய்தா மிரட்டல் விடுத்துள்ள நிலையில், எத்தகைய மிரட்டலையும் சந்திக்க இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் மும்பையில் நடத்தப்பட்டதை போன்ற தாக்குதல் மீண்டும் நடத்தப்படும் என இந்தியாவுக்கு என இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தான் ம‌ற்று‌ம் பாகிஸ்தானில் செயல்படும் அல் – காய்தா பயங்கரவாத அமைப்பின் முஸ்தஃபா அபு யாஸீத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில்  செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியிதம் இந்த மிரட்டல் குறித்து கேட்டபோது,” அல் – காய்தா அமைப்பு இந்தியாவுக்கு விடுத்துள்ள மிரட்டல் குறித்து நான் முழுமையாக பார்க்கவில்லை.இருப்பினும் எந்தப் பகுதியிலிருந்தும் நாட்டுக்கு விடுக்கப்படும் பாதுகாப்பு மிரட்டலை சந்திக்க இந்தியா சந்திக்க தயாராக இருப்பதாகவும், அதை சமாளிக்கும் திறமையும் நம்மிடம் உண்டு ” என்று பதிலளித்தார்.

ரஷ்யாவுடன் ஆக்கபூர்வமானதொரு உறவை தொடர விரும்புவதாக ஹிலாரி தெரிவிப்பு

world-news.jpgரஷ்யா வுடன் ஆக்கபூர்வமானதொரு உறவைத் தொடர விரும்புவதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார். ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் போன்ற விவகாரங்களில் மொஸ்கோவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஹிலாரி குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஈரானின் முதலாவது அணுசக்தி ஆலையை 2009 இற்குள் அமைக்கும் நடவடிக்கைகளைத் தான் ஆரம்பிக்கப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளமை குறித்து ஹிலாரி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதே வெளியுறவு அமைச்சராக ஹிலாரியின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் ஆசியாவுக்கானதாக இருக்குமெனத் தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஜப்பான், இந்தோனேசியா, தென்கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் மேற்கொள்வாரெனத் தெரிவித்துள்ளது. மத்திய ஐரோப்பாவில் ஏவுகணைப் பாதுகாப்புக் கவசத்தை அமைக்கும் அமெரிக்காவின் திட்டம் மற்றும் ஜோர்ஜியா மீதான ரஷ்யாவின் படை நடவடிக்கை போன்ற விவகாரங்கள் தொடர்பில் அண்மைய வருடங்களாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவு விரிசலடைந்திருந்தது.

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னருடனான சந்திப்பைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஹலாரி; ஈரானின் அணுவாயுத விவகாரம் தொடர்பில் எமது பரஸ்பர அக்கறையின் அடிப்படையில் சர்வதேச சமூகத்துடன் ஒரு சிறந்த இராஜதந்திர அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்கிறோம். இதனால் ரஷ்யாவுடன் ஆக்கபூர்வமான உறவினைத் தொடர விரும்புவதன் மூலம் இவ் விடயத்தில் ரஷ்யாவையும் ஒரு கூட்டாளியாக இணைக்க விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் ஆசியாவுக்கான தனது முதலாவது சுற்றுப்பயணத்தை ஹிலாரிஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோர்ட் முன் தீக்குளிக்க காங். வக்கீல் முயற்சி

 நாகர்கோவில் கோர்ட் முன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க வக்கீல் ஒருவர் முயன்றதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் கோர்ட் வாளகத்தின் முன் வக்கீல் ஒருவர் பெட்ரோல் நிரம்பிய பாட்டில் ஒன்றுடன் வந்தார்.

பின்னர் அவர் இலங்கை தமிழர் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க போவதாக அறிவித்தார். இதையடுத்து கோர்ட் வளாகத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பறித்தனர். விசாரணையில் அவர் நாகர்கோவிலை சேர்ந்த வக்கீல் கோசல்ராம் என்றும் அவர் ஒரு காங்கிரஸ் பிரமுகர் என்பது தெரிய வந்தது

ஆஸ்திரேலியா காட்டுத்தீ: பலி 173 ஆக உயர்வு

forest_fire.jpgஆஸ்தி ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு இறந்தோர் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. தீயை அணைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள காடுகளில் கடந்த சனிக்கிழமை அன்று தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வீசும் அனல் காற்று, வெப்பம் காரணமாக தீ மேலும் பல இடங்களுக்கு பரவியது. சுமார் 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தொலைவுக்கு தீ கொளுந்து விட்டு எரிந்தது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும் உடனடியாகப் பலன் உண்டாகவில்லை.

இந்த தீ விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இதுவரை 173 பேர் உயிரிழந்திருப்பது தெரிய வந்திருப்பதாக, காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், 750-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின. பொது மக்களின் உடமைகளுக்கும் பலத்த சேதம் உண்டானது. காட்டுத் தீயில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த 100 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் இந்த அளவுக்கு பெரிய தீவிபத்து ஏற்பட்டதில்லை என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் தெரிவித்துள்ளது. காட்டுத் தீயால் கடும் பாதிப்பை சந்தித்திருக்கும் மேரிஸ்வில்லி, கிங்ஸ்லேக் ஆகிய இரு நகரங்களுக்கும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஊர்களிலும்தான் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

பாக். விஞ்ஞானி விடுதலைக்கு அமெரிக்கா, பிரான்சு எதிர்ப்பு – மீண்டும் அணு ஆயுதத்தை விற்பார் என ஒபாமா சந்தேகம்

obama-2001.jpgபாகிஸ் தான் அணு விஞ்ஞானி விடுதலைக்கு அமெரிக்கா, பிரான்சு ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவர் தொடர்ந்து அணு ஆயுதத்தை பரப்பும் அபாயம் உள்ளதாக ஒபாமா அரசு கூறியுள்ளது.  அணு ஆயுத தொழில்நுட்பத்தை வடகொரியா, ஈரான், லிபியா ஆகிய நாடுகளுக்கு விற்றதால் 5 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்த பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல்காதிர்கான் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார். இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ரொபர்ட் கிப்ஸ் கூறியதாவது:-  அப்துல் காதிர்கான் விடுதலை பற்றி பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. அணு ஆயுத பரவல் குறித்து ஜனாதிபதி ஒபாமா பல தடவை கவலை தெரிவித்துள்ளார். காதிர்கான், அவரது வீட்டுக்காவலுக்கு காரணமான அணு ஆயுத தொழில்நுட்பத்தை விற்கும் செயலில் மீண்டும் ஈடுபட மாட்டார் என்று பாகிஸ்தான் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஒபாமாவும், அவரது அரசும் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கார்டன் துகுயிட் கூறியதாவது:- அப்துல் காதிர்கான் விடுதலை மிகவும் வருந்ததக்கது. அவர் இன்னமும் அணு ஆயுதங்களை பரப்பும் ஆபத்தானவராக இருந்து வருகிறார். அவர் வடகொரியாவுக்கும், ஈரானுக்கும் அணு ஆயுத தொழில்நுட்பங்களை விற்றதால் சர்வதேச பாதுகப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகள், இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்.  அப்துல் காதிர்கான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலை, பாகிஸ்தானுக்கு நன்றாகவே தெரியும். அதையும் மீறி அவரை விடுவித்தது துரதிருஷ்டவசமானது. இவ்வாறு அவர் கூறினார்.

காதிர்கான் விடுதலைக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும் கவலை தெரிவித்துள்ளார். இது பற்றி பிறகு விரிவாக பேசுவதாகவும் அவர் கூறினார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ரிச்சர்டு ஹால்ப்ரூக், அடுத்த வாரம் பாகிஸ்தான் செல்கிறார். அப்போது அவர் இவ்விவகாரம் குறித்து பாகிஸ்தான் அரசிடம் பேசுகிறார். காதிர்கான் விடுதலை குறித்து பிரான்சு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எரிக் செவாலியரும் கவலை தெரிவித்துள்ளார். அணு ஆயுத பரவலில் காதிர் கான் ஈடுபடக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, இவ்விவகாரத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் பதில் அளித்துள்ளது. பாகிஸ்தான் அணு ஆயுத தொழில்நுட்பங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், எனவே, காதரிர்கான் இனிமேல் அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயங்களை நோக்கி தாக்குதல்களை நடத்த வேண்டாம்

pranaf.jpgதமிழ்க் குடிமக்களையும் விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்தி பார்க்குமாறு இலங்கை அரசிடம் பிரணாப் முகர்ஜி கோரிக்கை இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தமிழ்க் குடிமக்களையும் விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்றும் பாதுகாப்பான வலயங்கள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் நோக்கி தாக்குதல்களை நடத்தக் கூடாது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் காங்கிரஸ் தொண்டர்களின் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய முகர்ஜி, விடுதலைப் புலிகள் இயக்கம் மீது இந்தியாவுக்கு எந்த அனுதாபமும் இல்லை என்றும் அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாடுகடத்துமாறு வருடாந்தம் இலங்கை அரசாங்கத்தை புதுடில்லி கேட்டுக் கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார். காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்தியும் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் முகர்ஜி மேலும் கூறியதாவது;

“பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகள் மீது இந்தியாவுக்கு எந்தவிதமான அனுதாபமும் இல்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது. இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் தமிழ்க் குடிமக்கள் பாதிக்கப்படாதிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை இந்தியா கேட்டிருக்கிறது. தமிழ்க் குடிமக்களையும் விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்திப் பார்க்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாம் கேட்டுக் கொள்கிறோம்.

அண்மையில் நான் கொழும்புக்கு விஜயம் செய்த பின்னர் 48 மணிநேர போர் நிறுத்த அறிவிப்பைச் செய்த இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான வலயங்களுக்கு வருமாறு தமிழ்க் குடிமக்களைக் கேட்டுக் கொண்டது. உணவையும் பாதுகாப்பையும் அந்த மக்களுக்கு வழங்குவதற்காகவே இலங்கை அரசாங்கம் அத்தகைய ஏற்பாடொன்றைச் செய்தது. பாதுகாப்பான வலயங்களை நோக்கி தாக்குதல்களை நடத்த வேண்டாம். மனிதாபிமான உதவிகள் குடிமக்களைச் சென்றடைய வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பதவிக் காலத்தில் 1987 ஜூலையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்’.

இலங்கைத் தமிழர்களுக்கு அனுதாபம் – ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து.

jaya.jpgஇலங் கைத் தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

கடந்த ஆறு மாத கால மாக இலங்கையில் வாழும் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவர்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்காகவும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளையும், உயிர்களையும் பாதுகாப்பதற்காகவும் மத்திய அரசால் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அ.தி.மு.க. முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கைத் தமிழர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்ற இந்த சோதனையான தருணத்தில், இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என நான் முடிவு செய்துள்ளேன்.

எனவே, கழக உடன் பிறப்புகள் எனது பிறந்த நாளன்று என்னை சந்திப்பதை தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் தண்டனையில் இருந்து தப்பிய இரட்டையர்கள்

drugs.jpgமலேசியாவில் ஒரே மாதிரியான உருவ அமைப்பைக் கொண்ட இரட்டையர்களில் எவர் குற்றவாளி என்பதை நீதிமன்றம் ஒன்று கண்டுபிடிக்க முடியாது போனதால், போதை மருந்து கடத்திய குற்றவாளி ஒருவர் தூக்குக் கயிற்றில் இருந்து தப்பியுள்ளார்.

இந்த வழக்கு முன்னெப்போதும் இல்லாத வகையைச் சேர்ந்தது என்று கூறிய மலேசிய நீதிபதி ஒருவர், அதனால், தன்னால், தவறான நபரை தூக்குமேடைக்கு அனுப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டில் ஒரு வீட்டிலும், காரிலும் போதை மருந்தை பதுக்கி வைத்திருந்த ஒருவரை மலேசிய பொலிஸார் கைது செய்தனர். ஆனால், சில நிமிடங்களுக்குப் பிறகு, அதே இடத்துக்கு வந்த அவரைப் போன்று உருவ ஒற்றுமை கொண்ட அவரது இரட்டைச் சகோதரரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இருவரில் எவர் முதலில் கைது செய்யப்பட்ட குற்றவாளி என்று அரச தரப்பு சட்டவாதிகள் நிரூபிக்கத் தவறிவிட்டார்கள் என்று நீதிமன்றத்தில் நீதிபதி அறிவித்தபோது, இரட்டையர்கள் இருவருமே அங்கு அழுதனர்.

அமைச்சரவை நியமனத்தில் தவறு: ஒப்புக்கொண்டார் பராக் ஒபாமா

obama-2001.jpgஅமைச் சர்கள் நியமனத்தில் தவறு நடந்துவிட்டது உண்மையே. இனி இதுபோல் நடக்காது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு வாரமாகிறது.

இந்நிலையில் அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட டாம் டேசஸ் மற்றும் வெள்ளை மாளிகை தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட நான்சி சில்லிபெர், தங்களின் வரிகளை செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் பதவி விலகினர். இந்த விஷயத்தில் தான் தவறு செய்துவிட்டதை ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “டாம் டேசஸ் மற்றும் நான்சி சில்லிபெர் நியமனத்தில் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு செயல்பட்டு விட்டேன். செய்த தவறுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன். சாதாரண மக்களுக்கு ஒரு விதி, பிரபலமானவர்களுக்கு ஒரு விதி என்ற இரு விதமான விதிமுறைகளை எனது நிர்வாகம் கடைபிடிப்பது போன்ற தவறான செய்தி மக்களை சென்றடைய நான் அனுமதிக்க மாட்டேன்” என்றார்.

காங்கிரஸ் நகரச் செயலாளர் தீக்குளித்து மரணம்

ravichandran-1.jpgநாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ரவிச்சந்திரன் இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைப்பதாக கூறி இன்று காலையில் தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். சீர்காழி நகர 17-வது வார்டு காங்கிரஸ் இணை செயலாளராக இருந்தவர் ரவிச்சந்திரன். தலைஞாயிறு அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேவைபார்த்து வந்தார்.

இன்று அதிகாலை ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த மண்எண்ணை கேனையும், தீப்பெட்டியையும் கையில் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியில் ஓடினார். நடுத்தெருவில் வைத்து இலங்கையில் போரை நிறுத்து….தமிழ் வாழ்க.. என்று கோஷம் போட்டபடியே தன் உடலில் மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்து விட்டார்.

உடனே ரவிச்சந்திரன் உடலில் பிடித்த தீயை அணைத்து அவரை தூக்கிச்சென்று சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ரவிச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால் தஞ்சைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் டாக்டர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என கூறி விட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று மாலை உயிரிழந்தார் ரவிச்சந்திரன்.  மரணவாக்கு மூலத்திலும் ரவிச்சந்திரன் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்தாக கூறி உள்ளார்.