ரஷ்யா வுடன் ஆக்கபூர்வமானதொரு உறவைத் தொடர விரும்புவதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார். ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் போன்ற விவகாரங்களில் மொஸ்கோவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஹிலாரி குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஈரானின் முதலாவது அணுசக்தி ஆலையை 2009 இற்குள் அமைக்கும் நடவடிக்கைகளைத் தான் ஆரம்பிக்கப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளமை குறித்து ஹிலாரி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இதே வெளியுறவு அமைச்சராக ஹிலாரியின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் ஆசியாவுக்கானதாக இருக்குமெனத் தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஜப்பான், இந்தோனேசியா, தென்கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் மேற்கொள்வாரெனத் தெரிவித்துள்ளது. மத்திய ஐரோப்பாவில் ஏவுகணைப் பாதுகாப்புக் கவசத்தை அமைக்கும் அமெரிக்காவின் திட்டம் மற்றும் ஜோர்ஜியா மீதான ரஷ்யாவின் படை நடவடிக்கை போன்ற விவகாரங்கள் தொடர்பில் அண்மைய வருடங்களாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவு விரிசலடைந்திருந்தது.
பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னருடனான சந்திப்பைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஹலாரி; ஈரானின் அணுவாயுத விவகாரம் தொடர்பில் எமது பரஸ்பர அக்கறையின் அடிப்படையில் சர்வதேச சமூகத்துடன் ஒரு சிறந்த இராஜதந்திர அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்கிறோம். இதனால் ரஷ்யாவுடன் ஆக்கபூர்வமான உறவினைத் தொடர விரும்புவதன் மூலம் இவ் விடயத்தில் ரஷ்யாவையும் ஒரு கூட்டாளியாக இணைக்க விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் ஆசியாவுக்கான தனது முதலாவது சுற்றுப்பயணத்தை ஹிலாரிஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.