ஐ.சி.ஆர்.சி.யின் குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு பொறுப்புணர்வுடன் செயற்படுமாறும் அரசு அறிவுறுத்து

red-cr.jpgவன்னியில் மோதல்கள் நடைபெறும் பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் நோயாளர்களது வசதிகள் தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக சுகாதார பராமரிப்பு மற்றும் போஷணை அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சினால், இலங்கைக்கான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் போல் காஸ்ற்றெல்லாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் டாக்டர் எச்.எ.பி.கஹந்தா லியனகேயினால் அனுப்பப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வன்னியில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் நடைபெறும் மோதல்களினால் இன்னல்களுக்குள்ளான மக்களினதும் நோயாளர்களதும் மருத்துவ மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகள் தொடர்பாக ஐ.சி.ஆர்.சி.இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. மோதல்களினால் பொதுமக்களும் நோயாளர்களும் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஏனைய வசதிகள் அரசினால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால், மருத்துவம், சுகாதாரம், பாதுகாப்பு, நலன்புரி ஆகிய வசதிகளுடன் ஏனைய அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ள அரச பாதுகாப்புப் பகுதிக்குள் மக்களும் நோயாளர்களும் வருவதற்கு விடுதலைப்புலிகள் தடைவிதித்துவருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சரியான அறிக்கை ஒன்றினை வெளியிடவேண்டும். வன்னிப் பகுதியிலிருந்து மோதல்களால் பாதிக்கப்பட்டு வவுனியாவரும் மக்களுக்கும் நோயாளர்களுக்குமுரிய சகல வசதிகளும் மருத்துவர் குழாமும் எதுவித கட்டுப்பாடுமின்றி வழங்கப்பட்டுள்ளது. அரசினால் வழங்கப்பட்டுள்ள இச்சேவைகள், வசதிகள் அனைத்தையும் பெற்றுக் கொள்ளும் வகையில் மக்களையும் நோயாளர்களையும் மருத்துவ உத்தியோகத்தர்களையும் வவுனியாவுக்கு கொண்டுவருவதற்கு ஐ.சி.ஆர்.சி.அரசுக்கு உதவவேண்டும். மக்களையும் நோயாளர்களையும் ஏனைய மருத்துவ அதிகாரிகளையும் அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்துக்கோ அல்லது வவுனியாவுக்கோ செல்லுமாறு அரசு அறிவித்திருந்ததுடன் அதற்கு உதவுமாறும் ஐ.சி.ஆர்.சி.யிடம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு பிரதேசமென அரசினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு அப்பால் வெகுதொலைவிலுள்ள பகுதியென புதுமாத்தளன் பகுதிக்குச் செல்வதற்கு ஐ.சி.ஆர்.சி. தாமாகவே தீர்மானித்துச் செல்ல வேண்டும்.

பாதுகாப்பு, மருத்துவம், நலன்புரி போன்ற தேவைகளை எதிர்பார்த்து நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் கிளிநொச்சிக்கோ அல்லது வவுனியாவுக்கோ வருகை தந்தவண்ணம் உள்ளனர். புதுக்குடியிருப்பிலிருந்து மக்களும் நோயாளர்களும் மருத்துவ அதிகாரிகளும் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கு அரசினால் ஒழுங்கு செய்யப்பட்ட பாதுகாப்பான வழிமுறைகள் தொடர்பாகவும் ஐ.சி.ஆர்.சி.தனியாகவே செயற்பட்டுள்ளது. இவ்விடயத்தில் முழுப் பொறுப்புடனும் ஐ.சி.ஆர்.சி.யே செயற்பட்டிருக்க வேண்டும்.

இது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அரசுடன் முரண்பாடுகளை தோற்றுவிக்காமல் இணக்கப்பாடொன்றினை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் மோதல்கள் நடைபெறும் பகுதியில் உள்ளவர்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து வரச் செயற்பட்டால் வரவேற்கத்தக்க விடயமாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *