::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

indonesia_map_.gif
இந்தோனேஷியாவின் வடக்கு சுலவேசிதீவில் இன்று காலை மிக பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள், கட்டடங்கள், மருத்துவமனைகள், தேவாலங்கள் இடிந்து விழுந்தன. இதில் 17 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். ஒரு மருத்துவமனை இடிந்ததில் தான் பெரும்பாலானவர்கள் காயமடைந்தனர்.

கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிறிய நில அதிர்வுகள் தொடர்ந்தன. நிலநடுக்கம் ஏற்பட்டதும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். ஆனால் பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

சிம்பாபேயின் புதிய பிரதமராக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் சுவாங்கிராய் பதவியேற்றார்

suvangi.jpgசிம்பாபேயின் புதிய பிரதமராக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் சுவாங்கிராய் பதவியேற்றார்.சிம்பாபே ரொபேர்ட் முகாபோக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சுவாங்கிராய்க்கும் இடையில் கூட்டணி அரசாங்கம் அமைப்பாதாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு நான்கு மாதங்கள் கழிந்த நிலையிலேயே இந்தப் பதவியேற்பு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த வருடம் சிம்பாபேயில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரொபேர்ட் முகாபேயை எதிர்த்துப் போட்டியிட்ட சுவாங்கிராய் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தார். எனினும், ஆட்சி துறப்பதற்கு ரொபேர்ட் முகாபே இணங்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இழுபறிநிலையின் பின்னர் முகாபேயுடன் கூட்டணி அரசாங்கம் அமைக்க சுவாங்கிராய் இணங்கியிருந்தார். இதற்கமைய இரு தலைவர்களுக்கும் இடையில் நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

“நான் ஏன் இவ்வாறு செய்தேன் இதனால் அரசியல் ரீதியாக ஏற்பட்டிருக்கும் கேள்விக்கு என்ன பதில் போன்ற சந்தேகங்களுக்கு விரைவில் விடைகிடைக்கும்” என சாங்கிராய் கூறினார். “இந்த முடிவை நாங்களே எடுத்துள்ளோம். எந்தவிதமான அழுத்தங்களுமின்றி இந்த முடிவைத் தேர்ந்தெடுத்தோம்” என்றார் அவர். அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென சுவாங்கிராய் தனது பதவியேற்வு விழாவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

ராஜீவ் இருந்திருந்தால் இலங்கை பிரச்சினை என்றோ தீர்ந்திருக்கும் கள்ளத் தோணியில் சென்று காரியத்தை கெடுத்தவர் வைகோ – ஸ்டாலின் தெரிவிப்பு

stalin.jpgஅரசியல் பிழைப்பு நடத்தும் அநாதை தலைவர்கள் சிலர் தி.மு.க. ஆட்சியை அகற்ற திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசை கலைக்க துடிப்பவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவள்ளூரில், இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், இலங்கை பிரச்சினைக்கு ஜனநாயக முறையில் தீர்வு காணக் கோரியும் இலங்கை தமிழர் நல உரிமை பேரவை சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது;

இலங்கை பிரச்சினையில் 2 கால கட்டங்கள் உள்ளன. கி.மு. மற்றும் கி.பி. என்பது போல் ராஜீவ்காந்திக்கு முன்பு ராஜீவ்காந்திக்கு பின்பு என்று ஒரு காலகட்டம் ஏற்பட்டுவிட்டது. ராஜீவ்காந்தி மட்டும் கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால் இந்த இலங்கை பிரச்சினை என்றோ தீர்ந்திருக்கும்.

1989 இல் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் கருணாநிதி டில்லியில் சந்தித்தார். அப்போது ராஜீவ்காந்தி, தாங்கள் 2 நாட்கள் தங்கியிருக்க முடியுமா என்று கேட்டார். அப்போது முரசொலி மாறனும் உடன் இருந்தார்.

இலங்கை பிரச்சினையில் தீர்வுகாண முடியுமானால் அது தமிழக முதல்வர் கருணாநிதியால் தான் முடியும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தங்களுக்கு செய்வேன் என்று கூறிய ராஜீவ்காந்தி, மறுநாள் காலை வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வார்சிங்கை சந்திக்க ஏற்பாடு செய்தார். அவர்கள் இரண்டரை மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்காக கருணாநிதியை இலங்கைக்கு சென்று வருமாறும், அதற்கு என்ன தேவையோ அத்தனையும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.

அதனை ஏற்றுக்கொண்டு மறுநாள் சென்னை விமான நிலையத்திற்கு வந்த கருணாநிதியிடம் ஒரு கசப்பான தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது, கோபாலசாமி எம்.பி. கள்ளத்தோணி ஏறி இலங்கை வவுனியா காட்டிற்கு சென்று பிரபாகரனை சந்தித்தார் என்பதுதான் அந்த செய்தி.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பாராளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் கள்ளத்தோணியில் ஏறி இலங்கைக்கு சென்ற அதிர்ச்சியான தகவலை கேள்விப்பட்டதை ராஜீவ்காந்தியிடம் வருத்தத்துடன் தெரிவித்தார். அப்போது நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் ஒரு உறுப்பினர் கோபால்சாமி இலங்கைக்கு சென்றது பற்றி பிரச்சினை எழுப்பினார். அப்போதுகூட ராஜீவ்காந்தி பெருந்தன்மையாக இலங்கைக்கு சென்றவர் பத்திரமாக திரும்பிவர வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். அதன் பின்பும் நீங்கள் முயற்சி செய்தால் இலங்கையில் தமிழர்கள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியும். முயற்சி செய்யுங்கள் என்று ராஜீவ்காந்தி கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டார். அவர் முயற்சி செய்ய சொன்ன பிறகுதான் நமது தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் இரத்தம் சிந்தி கொலையானார். அதனால் தான், இலங்கை பிரச்சினை ராஜீவ்காந்திக்கு முன்பு ராஜீவ்காந்திக்கு பின்பு என்று ஆனது.

ராஜீவ்காந்தி உயிருடன் இருந்திருந்தால் இலங்கை பிரச்சினை எப்போதோ சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டிருக்கும். இருப்பினும் தொடர்ந்து இன்றுவரை இலங்கை பிரச்சினைக்கு தீர்வு கண்டு தமிழர்களை காக்க வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் அனைத்தும் பாடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அரசியல் பிழைப்பு நடத்தும் அநாதை தலைவர்கள் சிலர் தி.மு.க. ஆட்சியை அகற்ற திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு கட்சியோடு சேர்ந்து கொண்டு ஆட்சியைப் பிடிக்கலாம் என்று திட்டம் தீட்டுவோர்களையெல்லாம் மக்களுக்கு நன்கு தெரியும். தொடர்ந்து தமிழக மக்களுக்கு நல்லாட்சி நடத்திவரும் தி.மு.க. அரசை கலைக்க துடிப்பவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

காட்டுத்தீ அனர்த்தத்தை குற்றச்செயலென பிரகடனப்படுத்தியது அவுஸ்திரேலியா

forest_fire.jpg
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பரவும் காட்டுத்தீயினால் பலியானோரின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ள அதேவேளை இத்தீ உண்டாவதற்கு காரணமாகவுள்ள சதிக்கும்பலைத் தேடும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, வேறுபிராந்தியத்திலுள்ள மக்கள் இக்காட்டுத்தீயினால் பாதிக்கப்படும் அபாயமுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.இக்காட்டுத்தீயில் பெரும்பகுதி வேண்டுமென்றே ஏற்படுத்தப் பட்டுள்ளவையென தெரிவித்துள்ள பொலிஸார் காட்டுத்தீ பரவியுள்ள பிரதேசங்களை குற்றவலயமெனவும் பிரகடனப் படுத்தியுள்ளனர்.

இக்காட்டுத்தீயினால் பெருந்தொகையான மக்கள் பலியாவதற்குக் காரணமாக இருந்த சதிகாரர்களை அவுஸ்திரேலியப் பிரதமர் வன்செயல் புரிந்தவர்கள் என்றும் பாரிய கொலைகாரர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். காட்டுத்தீயினை வேண்டுமென்றே திட்டமிட்டு ஏற்படுத்தும் ஒரு நபருக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் அதேநேரம் தவறுதலாக காட்டுத்தீ ஏற்படக் காரணமாக இருந்தவர்களுக்கு ஆகக்கூடியது15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அவுஸ்திரேலியாவில் தற்பொழுது ஏற்பட்டுள்ள காட்டுத்தீ தொடர்பான விசாரணைகளை இராஜாங்க ஆணைக்குழு மேற்கொள்ளுமென விக்டோரியா மாநில பிரதமர் ஜோன் புறும்பி அறிவித்துள்ளார்.

விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட இக்காட்டுத் தீயில் பெரும்பலானோரின் வீடுகள், கட்டிடங்களுக்குள்ளும் வாகனங்களுக்குள்ளேயுமே பலியாகியுள்ளனர்.

இக்காட்டுத் தீயினைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையாகப் போராடிவரும் தீயணைப்புப் படைவீரர்கள் உள்ளிட்ட அவசர உதவி அமைப்புகள் மேலும் பல உடல்களை மீட்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்காட்டுத் தீயினால் இதுவரை 203 பேர் பலியாகியுள்ள அதேவேளை,750க்கும் அதிகமான வீடுகளும் 5 இலட்சத்து 44 ஆயிரம் ஏக்கர் பரப்பளவான நிலப்பரப்பும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

அத்துடன் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை இழந்து நிர்க்கதியாகி வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

காட்டுத் தீ ஏற்பட்டது முதல் இதுவரை 450 பேர் உடலின் 30 வீதமான பகுதிவரை காயமடைந்துள்ளனர்.

இக்காட்டுத் தீயினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் 3,400 தீயணைப்புப் படைவீரர்கள் தொடர்ந்து போராடி வருவதாக தீயணைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இக் காட்டுத் தீயிலிருந்து தப்பியவர்கள் புதர்க்காடுகளின் ஊடாக தீச் சுவாலை கொழுந்துவிட்டு எரிந்தன என்றும் விண்ணிலிருந்து தீ மழை பொழிந்தது போல இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை அனர்த்தம் இதுவெனக் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் வைகோ (13.02.2009) உண்ணாவிரதம்-அத்வானி சந்திப்பு

1102-vaiko.jpgஇலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், இலங்கை ராணுவத்துக்கு இந்தியா செய்து வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வைகோ தலைமையில் அக் கட்சியினர் இன்று (13.02.2009) டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தனர்.

டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் நாடாளுமன்றம் அருகே இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

அத்வானி வாழ்த்திப் பேச்சு:

உண்ணாவிரத மேடைக்கு வந்த பாஜக தலைவர் அத்வானி பேசுகையில்,

இலங்கை தமிழர்களின் நலம் காக்கப்பட வேண்டும். அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக இங்கு உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் இருந்து வந்து கலந்து கொண்டிருப்பதை காணும்போது உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

டெல்லியில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தாலும், உண்ணாவிரதத்தில் இத்தனை பேர் கலந்து கொண்டதை நான் பார்த்ததில்லை. ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்சனையை முக்கிய பிரச்சினையாக கருதி செயல்படவில்லை. தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சனை எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் சீன, இந்திய மக்கள் வாழ்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் வெளிநாடுகளில் குடியேறி விட்டனர்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதை ஏற்க முடியாது. அங்கு மருத்துமனைகள் மீதும் குண்டு வீசப்படுகிறது. இது எங்கும் கேள்விப்படாத விஷயம். இது தமிழர்கள் பிரச்சனையோ, தமிழ்நாட்டு பிரச்சனையோ அல்ல இந்தியாவின் பிரச்சனை .

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காணப்பட வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழர்களுக்கும் பாஜக என்றும் ஆதரவாக இருக்கும் என்றார் அத்வானி.

பின்னர் வைகோ பேசுகையில்,

பாஜக தலைவரும் பிரதமர் வேட்பாளருமான நீங்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஈரோட்டில் மதிமுக நடத்திய மாநாட்டிலும் நீங்கள் கலந்து கொண்டீர்கள்.

1998ல் வாஜ்பாய் ஆட்சி நடந்த போது இலங்கை தமிழர்களுக்கு செய்த உதவிகளை மறக்க முடியாது. இலங்கை தமிழர்கள் மீது பாஜக ஆட்சி அக்கறை காட்டியது. ஆனால் இன்றைய மத்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு உதவுகிறது என்றார்.

வைகோ – ராஜ்நாத் சிங் சந்திப்பு

முன்னதாக வைகோவை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள வைகோவின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

மதிமுக சார்பில் 2,000 தொண்டர்களுடன் டெல்லியில் (13.02.2009 )உண்ணாவிரதம் இருக்க போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை அரசின் கொடூர ராணுவத் தாக்குதலுக்கு ஆளாகும் தமிழர்களை நினைத்து ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமுதாயத்தின் நெஞ்சில் வேதனைத் தீ பற்றி எரிகிறது. ஐநா சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன், ராணுவத்தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள் என்றும், சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை, இலங்கை அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, இந்திய அரசு தலையிட வேண்டும் என கனடாவின் வெளி விவகார அமைச்சர், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் வற்புறுத்தியுள்ளார். போர் நிறுத்தம் செய்யுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்டும் கூட்டு அறிக்கை விடுத்த பின்னரும் தாக்குதல்கள் தொடர்கின்றன.

புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மீது, சிங்கள ராணுவமும், விமானப்படையும் ஏவுகணைத் தாக்குதலும், குண்டு வீச்சும் நடத்தியதில், மருத்துவமனையில் இருந்த 116 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 260 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.  உலக நாடுகளின் கண்டனத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகி வரும் இலங்கை அரசு அதிலிருந்து தப்பிக்க விடுதலைப்புலிகள் தான் அப்பாவித் தமிழர்களைக் கொன்றார்கள் என்று கோயபெல்ஸ் பாணி பொய்ப் பிரசாரத்தை இரண்டு நாட்களாக செய்து வருகிறது.

இலங்கை அரசின் அராஜகத்தை, வெளி உலகத்துக்குத் தெரிவித்ததற்காக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் 300 பேர்களை, முல்லைத் தீவில் இருந்தே வெளியேற்றப்பட்டனர். மொத்தமாகத் தமிழ் இனத்தைக் கொன்று தமிழ் ஈழத்தையே சுடுகாடக மாற்ற ராஜபக்சே திட்டம் போட்டுவிட்டார். போர் நிறுத்தம் தான் ஒரே வழி என்பதை நன்றாக அறிந்திருந்தும், இந்திய அரசு அதை சொல்லத் தயாராக இல்லை.

ஏனெனில், விடுதலைப்புலிகளை அழிப்பது தான் இந்திய அரசின் நோக்கம். நான் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகக் குற்றம் சாட்டுகின்றபடி, இலங்கையில் கொல்லப்படுகின்ற ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும், அவன் சிந்துகின்ற ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும், இந்திய அரசு, குறிப்பாக தலைமை தாங்குகிற காங்கிரஸ் கட்சி தான் பொறுப்பாளி ஆகும். எனவே, இந்திய அரசின் துரோகத்துக்குக் கண்டனம் தெரிவிக்கவும், வதைபடும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க, அகில இந்திய அளவில், ஆதரவு திரட்டவும், உண்மை நிலைமையை இருட்டடிப்புச் செய்யும் டெல்லி ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்தைக் கடந்து, இந்திய மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்கவும், தலைநகர் டெல்லியில் இந்திய நாடாளுமன்றத்துக்கு அருகில் ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 13-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, மதிமுக சார்பில், என்னுடைய தலைமையில், மிகப் பெரிய உண்ணாநிலை அறப்போர், காலை எட்டு மணி முதல் நடைபெறுகிறது.

இந்த அறப்போரில் பங்கு ஏற்பதற்காக, ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து 2000க்கும் மேற்பட்டோர் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றுவிட்டார்கள். பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த உண்ணா நிலை அறப்போருக்கு ஆதரவு தெரிவித்து, ஈழத்தமிழர்களைக் காக்க உரை ஆற்றுவார்கள் என்று கூறியுள்ளார் வைகோ.

தீக்குளிப்போருக்கு நிதியுதவி இல்லை

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக உயிர் துறப்போரின் குடும்பத்தினருக்கு இனி நிதியுதவி அளிப்பதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக முதன் முதலில் சென்னையில் இளைஞர் முத்துக்குமார் தீக்குளித்து உயிர் நீத்தார்.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி, சீர்காழியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், சென்னையைச் சேர்ந்த அமரேசன் ஆகியோர் தீக்குளித்து உயிர் நீத்தனர். இவர்களில் ரவி, அமரேசன் ஆகியோர் தற்கொலை குறித்து சர்ச்சை இருந்தது.

முத்துக்குமார் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் நிதியுதவியை அறிவித்தது. ஆனால் அதை அவரது குடும்பத்தினர் நிராகரித்து விட்டனர். இந்த நிலையில் தீக்குளித்து இறந்த மற்றவர்களுக்கும், இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை பேரணியில் கலந்து கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மன்னை பாண்டியன் குடும்பத்திற்கோ தமிழக அரசு நிதியுதவி எதையும் அறிவிக்கவில்லை.

அவ்வாறு செய்தால், தற்கொலை செய்வதை ஊக்கப்படுத்துவது போல் ஆகிவிடும் என தமிழக அரசு கருதுவதால், நிவாரண நிதி அறிவிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்க ஜனாதிபதியைக் காண வந்த துப்பாக்கி நபர் கைது!

obama-2001.jpgஅமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவை பார்ப்பதற்காக துப்பாக்கியோடு வந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு நேற்று டிரக்கில் வந்தவரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

விசாரணையின் போது ஜனாதிபதி ஒபாமாவிடம் ஒப்படைப்பதற்காக தன்னிடம் ஒரு பார்சல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்டு கேள்விகளை கேட்டபோது, அவருடைய டிரக்கில் துப்பாக்கி வைத்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். அதனையடுத்து அதிகாரிகள் அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். டிரக் வண்டியிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான துப்பாக்கி தோட்டாக்களையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதனையடுத்து லூசியானாவை சேர்ந்த ஆல்பிரட் பிராக் என்ற அந்த நபர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுமதி இல்லாமல் ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கியோடு வந்ததால் ஜனாதிபதியை கொலை செய்வதற்கான முயற்சியா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு உறவுகளில் புதிய கொள்கையை பின்பற்றப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு

hillary.jpgஉலக நாடுகளுடனான உறவில் புதிய கொள்கையொன்றைக் கடைப்பிடிக்க அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தீர்மானித்திருப்பதாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அண்மைய வருடங்களாக விரிசலடைந்திருந்த ரஷ்யாவுடனான உறவை மீண்டும் புதுப்பிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள பைடன் ஈரானுடன் பேச்சுகளை ஆரம்பிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல விவகாரங்களை சாதகமான அணுகுமுறையினூடாக கையாள்வதற்கு அமெரிக்கா தயாராகவுள்ள அதேவேளை நட்பு நாடுகளும் இவ்வாறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக பைடன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானை தவிர்த்து ஆப்கானிஸ்தானில் எந்தவொரு தந்திரோபாய வெற்றியையும் அடைய முடியாதென எச்சரித்துள்ள பைடன் இப்பிராந்தியத்தின் நிலைமை மோசமடைந்து வருவது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்குமே பாதுகாப்பு அச்சுறுத்தலை தோற்றுவிக்குமென தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டில் சர்வதேச தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் உரையாற்றிய பைடனின் உரையில் ஒபாமா நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை, காலநிலை மாற்றம் மற்றும் உலக பொருளாதார நெருக்கடி போன்ற முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

உலக நாடுகளுடனான உறவில் புதிய அணுகுமுறையொன்றைக் கடைப்பிடிப்பதென்ற புதிய நிர்வாகத்தின் தீர்மானத்துடன் நான் ஐரோப்பாவுக்கு வந்துள்ளேன். உலக நாடுகளின் விவகாரங்களை உள்வாங்கி அதனை அவதானித்து இது தொடர்பில் ஆலோசனை நடத்துவோம். அமெரிக்காவுக்கு உலகம் தேவை. உலகத்திற்கு அமெரிக்கா தேவையென கருதுகிறேன். எமது அரசாங்கம் மிக உயர்ந்த இலக்குகளைக் கொண்டுள்ளது. எமது நாட்டுக்கு வெளியில் படைப்பலத்தை பிரயோகிக்காமல் ஜனநாயக ரீதியில் விவகாரங்களைக் கையாள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா தொடர்பில் அதனுடனான உறவை மீள சீரமைக்க ஜனாதிபதி ஒபாமா விரும்புகிறார். பல விவகாரங்கள் தொடர்பில் எம்மால் இணைந்து பணியாற்ற முடியும். ஆனால், ஒவ்வொரு விடயத்திலும் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து செயற்படுவது சாத்தியமற்றது. சில விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால், பொதுவாக எமக்கிடையில் இணக்கம் ஏற்படும் விடயங்களில் நாம் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டும்.

மத்திய ஐரோப்பாவில் ஏவுகணைப் பாதுகாப்பு கவசத்தை அமைக்கும் திட்டத்தை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுக்கும். இதேவேளை, ஈரானின் நடவடிக்கைகளுக்கேற்ப அந்நாட்டுடனான தொடர்புகள் பேணப்படும். நேட்டோ கூட்டமைப்பு மற்றும் ரஷ்யாவுடன் நாம் அதிகளவான ஆலோசனைகளை நடத்தும் அதேவேளை எமது நட்பு நாடுகளிடமிருந்து அமெரிக்கா உதவிகளை எதிர்பார்க்கும். உதாரணத்திற்கு குவாண்டனாமோ தடுப்பு முகாம் மூடப்படும்போது அங்கிருக்கும் கைதிகளை ஏனைய நாடுகள் ஏற்றுக்கொள்வது போன்ற விடயங்களில் நாம் ஏனைய நாடுகளுடன் தீவிர ஆலோசனைகளை நடத்துவதுடன் அவற்றிடமிருந்து உதவிகளையும் எதிர்பார்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு இன்று புதன்கிழமை அறுவை சிகிச்சை

0302-karunanidhi.jpgமுதுகுவலி குறையாத காரணத்தினால் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு இன்று (புதன்கிழமை) அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது என டாக்டர்கள் குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் காணப்படுவதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் முதுகில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக 15 நாட்களுக்கு மேலாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வலி குறையாத காரணத்தினால் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்பட்டு, அவரது தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள வலியை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்வதென்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்துள்ளார்கள்.

இதுகுறித்து 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து வந்த டாக்டர் ஏ.ஜெய்ஸ்வாலும், மற்ற டாக்டர்களும் கலந்து பேசி அறுவை சிகிச்சை செய்வதென்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். இந்த அறுவை சிகிச்சை இன்று (11.2.2009) புதன்கிழமை  நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் கருணாநிதியின் நலனை கவனிக்க விசேட டாக்டர்களைக் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல்-அமைச்சர் கருணாநிதி விரைவில் நலம் பெற்றிடும் வகையில் பார்வையாளர்கள் கண்டிப்பாக ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்திய பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டம் – மக்களவை நாளை கூடுகிறது

lok-saba.jpgஇந்திய பொதுத் தேர்தலுக்கு முந்தைய மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இதய அறுவை சிகிச்சைக்குப் பின் ஓய்வெடுத்து வருவதால் இந்த கூட்டத் தொடரில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளமாட்டார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவையின் பதவிக் காலம் மே மாதம் முடிகிறது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 14வது மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரையாற்றுகிறார்.

வழக்கமாக பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தேர்தல் நடக்க உள்ளதால், புதிய அரசு அமைந்த பிறகே முழுமையான பட்ஜெட்  தாக்கல் செய்யப்படும். அது வரை அரசின் செலவுக்காக 16ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 14வது மக்களவையின் கடைசிக் கூட்டம் என்பதாலும் தேர்தலுக்கு முந்தைய கூட்டத் தொடர் என்பதாலும் மக்களின் கவனத்தை கவர, முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கைப் பிரச்சினையும் எடுத்துக் கொள்ளப்படலாமென கருத்துக்கள் தெரிவிக்கின்றன. 

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் 26ம் தேதி வரை நடக்கிறது. இதில் விடுமுறை போக, 10 நாட்களுக்கு நாடாளுமன்றம் செயல்படும்.

இப்போதைய மக்களவையின் கடைசிக் கூட்டத் தொடர் என்பதால் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பற்றிய மதிப்பீடுகளையும் கூற  உறுப்பினர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படும். கூட்டத்  தொடரை அமைதியாக நடத்த எல்லா எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.