அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவை பார்ப்பதற்காக துப்பாக்கியோடு வந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு நேற்று டிரக்கில் வந்தவரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையின் போது ஜனாதிபதி ஒபாமாவிடம் ஒப்படைப்பதற்காக தன்னிடம் ஒரு பார்சல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்டு கேள்விகளை கேட்டபோது, அவருடைய டிரக்கில் துப்பாக்கி வைத்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். அதனையடுத்து அதிகாரிகள் அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். டிரக் வண்டியிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான துப்பாக்கி தோட்டாக்களையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதனையடுத்து லூசியானாவை சேர்ந்த ஆல்பிரட் பிராக் என்ற அந்த நபர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதி இல்லாமல் ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கியோடு வந்ததால் ஜனாதிபதியை கொலை செய்வதற்கான முயற்சியா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.