![]()
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பரவும் காட்டுத்தீயினால் பலியானோரின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ள அதேவேளை இத்தீ உண்டாவதற்கு காரணமாகவுள்ள சதிக்கும்பலைத் தேடும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, வேறுபிராந்தியத்திலுள்ள மக்கள் இக்காட்டுத்தீயினால் பாதிக்கப்படும் அபாயமுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.இக்காட்டுத்தீயில் பெரும்பகுதி வேண்டுமென்றே ஏற்படுத்தப் பட்டுள்ளவையென தெரிவித்துள்ள பொலிஸார் காட்டுத்தீ பரவியுள்ள பிரதேசங்களை குற்றவலயமெனவும் பிரகடனப் படுத்தியுள்ளனர்.
இக்காட்டுத்தீயினால் பெருந்தொகையான மக்கள் பலியாவதற்குக் காரணமாக இருந்த சதிகாரர்களை அவுஸ்திரேலியப் பிரதமர் வன்செயல் புரிந்தவர்கள் என்றும் பாரிய கொலைகாரர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். காட்டுத்தீயினை வேண்டுமென்றே திட்டமிட்டு ஏற்படுத்தும் ஒரு நபருக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் அதேநேரம் தவறுதலாக காட்டுத்தீ ஏற்படக் காரணமாக இருந்தவர்களுக்கு ஆகக்கூடியது15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அவுஸ்திரேலியாவில் தற்பொழுது ஏற்பட்டுள்ள காட்டுத்தீ தொடர்பான விசாரணைகளை இராஜாங்க ஆணைக்குழு மேற்கொள்ளுமென விக்டோரியா மாநில பிரதமர் ஜோன் புறும்பி அறிவித்துள்ளார்.
விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட இக்காட்டுத் தீயில் பெரும்பலானோரின் வீடுகள், கட்டிடங்களுக்குள்ளும் வாகனங்களுக்குள்ளேயுமே பலியாகியுள்ளனர்.
இக்காட்டுத் தீயினைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையாகப் போராடிவரும் தீயணைப்புப் படைவீரர்கள் உள்ளிட்ட அவசர உதவி அமைப்புகள் மேலும் பல உடல்களை மீட்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இக்காட்டுத் தீயினால் இதுவரை 203 பேர் பலியாகியுள்ள அதேவேளை,750க்கும் அதிகமான வீடுகளும் 5 இலட்சத்து 44 ஆயிரம் ஏக்கர் பரப்பளவான நிலப்பரப்பும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
அத்துடன் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை இழந்து நிர்க்கதியாகி வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
காட்டுத் தீ ஏற்பட்டது முதல் இதுவரை 450 பேர் உடலின் 30 வீதமான பகுதிவரை காயமடைந்துள்ளனர்.
இக்காட்டுத் தீயினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் 3,400 தீயணைப்புப் படைவீரர்கள் தொடர்ந்து போராடி வருவதாக தீயணைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இக் காட்டுத் தீயிலிருந்து தப்பியவர்கள் புதர்க்காடுகளின் ஊடாக தீச் சுவாலை கொழுந்துவிட்டு எரிந்தன என்றும் விண்ணிலிருந்து தீ மழை பொழிந்தது போல இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை அனர்த்தம் இதுவெனக் கூறப்பட்டுள்ளது.