களனி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவங்களையடுத்து அங்கு பொலிஸார் மாணவிகளுடன் நடந்துகொண்ட முறை குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென மாணவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த மோதலில் மூன்று மாணவர்களும் நான்கு பொலிஸாரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதமும் இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல்களின் போது 40 மாணவர்கள் காயமடைந்தனர்.
கடந்த செப்டெம்பர் மாதமும் இதேபோல் மோதல்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தின் போது பொலிஸார் சில மாணவிகளை தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்றது மற்றும் கைது செய்து வாகனத்தில் ஏற்றும் போது தள்ளிஏற்றியமை போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வுகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளதால் ஆண் பொலிஸார் மாணவிகளைக் கைது செய்யும் போது நடந்து கொண்டுள்ள முறைகள் தெரியவந்துள்ளன.