வாகனம் நீரினுள் பாய்ந்து விபத்து; இரு வெளிநாட்டு பிரஜைகள் கிண்ணியாவில் மரணம்

திருகோணமலை – மூதூர் கரையோரப் பாதையிலுள்ள கெங்கை துறையில் இடம்பெற்ற விபத்தொன்றில் அரசசார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்த இரு வெளிநாட்டவர்கள் மரணமடைந்துள்ளனர்.

நேற்றுக்காலை 10.30 மணியளவில் கெங்கை துறையை கடப்பதற்காக மிதவைப் படகில் ஏற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் தற்செயலாக கடலில் பாய்ந்ததில் ஜெய்க்கா நிறுவனத்தின் ஜப்பான் நாட்டவரான குஜிவாரா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவரான ஆனோல்வலதே ஆகிய இருவருமே இறந்தவர்களாவர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

சாரதி மற்றும் இலங்கை பொறியியலாளர் உட்பட நால்வர் வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். மூதூருக்கும், கிண்ணியாவிற்கும் இடையிலுள்ள கெங்கை துறை மிதவை படகு பாதையில் வாகனத்தை ஏற்றிய பின் சாரதியும், பொறியியலாளரும் கீழே இறங்கி நின்றபோது, வாகனம் திடீரென கடலினுள் சரிந்துள்ளது.

இதனால் இருவரும் உயிர் தப்பியுள்ளனர். வெளிநாட்டவர்களான இருவரினதும் சடலம் வாகனத்துடன் அரைமணி நேரத்தின் பின் பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளது. சடலம் தற்போது (நேற்று 1.30 வரை) கிண்ணியா தள வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *