வருண் காந்தி பேசிய பேச்சு வருத்தம் தருகிறது. அவர் முதலில் பகவத் கீதைய சரியாக படித்துப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்திரா குடும்பத்தின் பாரம்பரியத்தை சிதைப்பது போல உள்ளது வருணின் பேச்சு என்று வருணின் பெரியம்மா சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
தனது தாயார் போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்கு விசிட் அடித்துள்ளார் பிரியங்கா. அங்கு தொகுதி மக்களை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் பக்கத்தில் இருக்கும் தம்பி ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதிக்கும் பிரியங்கா செல்கிறார்.
ரேபரேலி வந்த பிரியங்காவிடம், வருண் காந்தி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த பிரியங்கா, வருண் காந்தி பேசியது நிச்சயம் இந்திரா குடும்பத்தின் கொள்கைகளுக்கும், பாரம்பரியத்திற்கும் உகந்ததல்ல, அவற்றுக்கு முரணானது. வருண் இப்படிப் பேசியிருப்பதைப் பார்த்து நான் வருத்தமடைந்தேன்.
வருண் பகவத் கீதைய முழுமையாக படித்து, அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என நான் அட்வைஸ் செய்கிறேன் என்றார் பிரியங்கா.