::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

இலங்கை தமிழர்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்…- விஜயகாந்த்

vijayakanth1.jpgஇலங்கை தமிழர்களை அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். அவர்களின் நலனுக்காக வரும் 14ம் தேதி சார்பில் தேமுதிகவினர் கூட்டு பிரார்த்தனை செய்வார்கள் என கட்சி தலைவர் விஜயகாந்த தெரிவித்துள்ளார்.

இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

தேமுதிகவினர் இலங்கை தமிழர்களுக்காக மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் இருந்தனர். அறிவழியில் போராட்டம் நடத்தினர்.

சர்வதேச நாடுகளின் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டு இலங்கை ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. லட்சக்கணக்கான தமிழர்களை இடம் பெயரச் செய்து துன்புறுத்திகிறது. தற்போது யுத்தப்பகுதியில் இருக்கும் சுமார் 1 லட்சம் தமிழ் மக்களை சுட்டுகொன்று மிகப்பெரிய மனித பேரழிவை இன்னும் சில நாட்களில் நடத்தவுள்ளது.

தமிழக அரசோ முதல்வர் கருணாநிதி தலைமையில் பேரணி நடத்துவதும், மத்திய அரசுக்கு மனுபோடுவதும், இலங்கை இறையாண்மையில் இந்திய அரசு தலையிட முடியாது என்றும் தெரிவிக்கிறது.

சோனியாகாந்தி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி போல் செயல்பட வேண்டுமென்று கூறிவிட்டு, தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அடையாளப்படுத்தி கொண்டார்.

விமான சேவையை நிறுத்து…

இலங்கை அரசுக்கு எதிர்ப்பு காட்டும் வகையில் இந்திய அரசு விமான போக்குவரத்தை நிறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இந்திய அரசும், தமிழக அரசும் செயல்படாத நிலையில் தமிழினத்திற்கு மிகப்பெரிய வரலாற்று துரோகத்தை இழைத்து வருகின்றன. ஒருபுறத்தில் ஐயோ என்று கதறும் இலங்கை தமிழ் மக்கள், மறுபுறத்தில் ரத்த கண்ணீர் மட்டுமே வடிக்கும் தமிழ்நாட்டு மக்கள்.

இலங்கை தமிழர்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்…

இலங்கை தமிழ் மக்களை காப்பாற்ற எனக்கு தெரிந்த ஒரேவழி, கடவுளிடம் வேண்டுவது தான். இனி ஆண்டவன் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.

இலங்கை தமிழ் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஏப்ரல் 14ம் தேதி காலை 10 மணி முதல் 11 மணிக்குள் தமிழ்நாட்டு மக்கள் இலங்கை தமிழர்களுக்காக கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆலயங்களிலும், மசூதிகளிலும், மாதாகோவில்களிலும் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் பெருமளவில் இந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டு தங்கள் ஒற்றுமையையும், உணர்வையும் உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்ரு கேட்டுக்கொள்கிறேன். ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்பது பழமொழி என்றார் விஜயகாந்த்.

கருணாநிதியின் அலெக்ஸாந்தர்-போரஸ் ஒப்பீட்டுக்கு எதிராக கண்டனங்கள்

karunanithi.jpgஇலங் கையில் நடைபெறும் சண்டையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால், போரஸ் மன்னரை அலெக்ஸாண்டர் நடத்தியதைப் போல கெளரவமாக நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்த கருத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கிட நடைபெறும் போரைத் தடுத்து நிறுத்துங்கள் என்று வலியுறுத்தி வாதாடுவதை விட்டுவிட்டு, போருக்கு முதல்வரே முடிவுரை எழுத முற்றப்பட்டிருப்பது வெட்கக்கேடானது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பேசிய பேச்சு தொடர்பாக, செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, இது மிகப்பெரிய இனத் துரோகம் என்று கண்டித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஆபத்து ஏற்ப்டடால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றும் இந்தியா ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் பேசிய வைகோ மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த வைகோ, தமிழகம் கொந்தளிக்கும் என்று மத்திய, மாநில அரசுகளை நல்லெண்ணத்தோடு எச்சரித்ததாக விளக்கமளித்துள்ளார்
 

ராமர் கோயில் கட்டியபிறகே ஜெய்ஸ்ரீராம் சொல்வேன்: அத்வானி

advanil000.jpgஅயோத்தி யில் ராமர் கோயில் கட்டி முடித்த பின்னரே பெருமையுடன் ஜெய்ஸ்ரீராம் சொல்வேன் என பா.ஜ.பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார். அலகாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அத்வானி, ராமர் பிறந்த அயோத்தியில் எப்போது கோயில் கட்டி முடிக்கப்படுகிறதோ அப்போது தான் என்னால் மன திருப்தியுடன் பெருமையுடன் ஜெய்ஸ்ரீராம் சொல்ல முடியும். வரும் தேர்தலில் பா.ஜ.கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிக தன்னம்பிக்கை காரணமாக 2004 ல் கோட்டை விட்டோம். அந்த தவறை மீண்டும் செய்து விடக்கூடாது.

மத்தியில் காங்கிரஸ் அல்லது பா.ஜ. உதவி இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது. எனவே மத்தியில் ஆட்சியைப் பிடிப்போம் என 3 வது அணியினர் கூறுவதை சீரியசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளின் வங்கிகளில் மறைந்து கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களில் அவை முதலீடு செய்யப்படும்.

பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்த போது பொடா போன்ற தீவிரவாத தடுப்பு சட்டங்களால் தீவிரவாத குழுக்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வாக்குவங்கி அரசியலுக்காக பொடாவை ரத்து செய்துவிட்டது.

அப்சல் குருவின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்த பின்னரும் மத்திய அரசு நிறைவேற்றாமல் நிறுத்தி வைத்துள்ளது. அப்சலை தூக்கிலிடக்கூடாது என எந்த முஸ்லிமும் கோரிக்கை வைக்கவில்லை. அப்சலை தூக்கு தண்டனையை தள்ளிப்போட்டால் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என அரசு நினைக்கிறது. உண்மையில் இது முஸ்லிம்களை அவமதிக்கும் செயலாகும் என்றார்.

ஹரியானா-காங். எம்பி நவீன் மீது ஷூ

10-naveen.jpgஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்.பி நவீன் ஜின்டால் மீது ஷூ வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் ஷூ விசியவரை கைது செய்தனர்.

சமிபத்தில் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீது சீக்கிய நிருபர் ஜர்னைல் சிங் ஷூவை விசி இந்திய அரசியலை பரபரப்பாக்கினார். இந்நிலையில்  காங்கிரஸ் எம்.பி ஜின்டால் இம்முறை தான் மீண்டும் போட்டியிடும் குருஷேத்ரா தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது கூட்டத்துக்கு வந்திருந்த ராம் குமார் என்ற ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஜின்டால் மீது ஷூ வீசினார். ஆனால், ஷூ அவர் மீது படாமல் சென்றது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அந்த நபரை கைது செய்து, கூட்டத்தில் இருந்து தூக்கி சென்றனர்.

அப்போது ராம் குமார் கூறுகையி்ல, காங்கிரசின் கொள்கைகள் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் ஷூ வீசினேன் என்றார்.

வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குப் பதிவு

1102-vaiko.jpg“பிரபாகரனுக்கு ஏதாவது ஏற்பட்டால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும். இந்தியா ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது” என்று உரையாற்றிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது பொலீஸார் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது.

வைகோ மீது சென்னை வடக்கு கடற்கரை போலீஸார், இந்திய தண்டனை சட்டம் 505 (1) (பி) மற்றும் 2004 சட்டவிரோத செயல்கள் தடுப்பு திருத்த சட்டம் 13 (1) (பி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் வைகோ கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதேவேளை வைகோவின் இந்தப் பேச்சு சட்டம் ஒழுங்கு தொடர்பானது என்று கூறிய மத்திய துணைத் தேர்தல் ஆணையர் பிரகாஷ், வைகோ மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சேவை சரித்திரம் மன்னிக்காது: கலைஞர்

karunanithi.jpgஇலங் கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்தக் கோரி சென்னையில் திமுக சார்பில் தமிழர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி, மன்றோ சிலையில் தொடங்கி, சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே முடிவடைந்தது. பேரணி முடிந்தவுடன் பேசிய கலைஞர்,

இந்த போரில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் ஒரு வேளை ஏற்படாவிட்டால் ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் என்ன முடிவாக இருக்கும்? அது இங்கே சட்டமன்றத்திலே சில ஆண்டுகளுக்கு முன்பு அம்மையார் ஜெயலலிதா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாரே, அந்தத் தீர்மானத்தை போல பிரபாகரனை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிப்பதாக இருக்கும்.

இதைத்தான் ஜெயலலிதா, முதல் அமைச்சராக இருந்தபோது தீர்மானமாக முன் மொழிந்து அதை நிறைவேற்றினார்கள். இந்த போரின் முடிவு நமக்கு தோல்வியாக இருந்தால்  தமிழர்களுக்கு தோல்வியாக இருந்தால்  பிரபாகரன் தலைமையிலே உள்ள அந்த புலிகளுக்கு தோல்வியாக இருந்தால்  ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானப்படி இங்கே பிரபாகரனை அழைத்து வந்து தண்டனை கொடுக்க வேண்டும். நான் இப்போதும் கேட்கின்றேன். ராஜபக்சேவுக்கு சொல்கிறேன். சரித்திரத்தை புரட்டிப் பாருங்கள்.

இந்திய சரித்திரத்தில் அலெக்சாண்டர் படையெடுத்து வந்தபோது, அக்ரோணி கணக்கிலே சைனியங்களையெல்லாம் அழித்து  பல நாடுகளை கவர்ந்து  பல பூமிகளை தன்னுடைய காலடியிலே போட்டு மிதித்து வந்தபோது போரஸ் மன்னன் எதிர்ப்பை துச்சமாக கருதி  போரஸ்’ என்று அழைக்கப்பட்ட புருஷோத்தமனை வென்றபோது  பெருந்தன்மையோடு கேட்டான்  உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று  அந்த நிலையிலும் போரஸ் மன்னன்,   என்னை ஒரு மன்னனைப் போல் நடத்த வேண்டும்” என்று சொன்னான். அவனுடைய பெருந்தன்மைக்கு  அலெக்சாண்டரின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக அலெக்சாண்டர், போரஸ் மன்னனின் வீரத்தை பாராட்டி, தனக்கு நிகராக  தனக்கு சமமாக ஒரு மன்னனாக உட்கார வைத்தான்.

போரின் முடிவு எப்படியிருந்தாலும்  ராஜபக்சே எண்ணுவதைப்போல இருந்தாலும்  நான் தமிழ் மக்கள் சார்பாக சொல்லுகிறேன்  போரின் முடிவில் பிரபாகரனின் படைக்கு அழிவு ஏற்பட்டாலும்  பிரபாகரன் தோல்வியுறுத்தாலும்  போரஸ் மன்னனை அலெக்சாண்டர் நடத்தியதைப்போல் நடத்த முன்வருக என்று ராஜபக்சேவுக்கு நான் எங்கள் தமிழர்களின் நலன் கருதி சொல்லி கொள்கிறேன்.

இது தனிப்பட்ட ஒரு பிரபாகரனுக்காக சொல்லப்படுவதல்ல  கடந்த காலத்திலே ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் மத்திய அரசு அண்மையிலே வெளியிட்ட கருத்துக்கள்  பிரணாப் முகர்ஜி வெளியிட்ட கருத்தானாலும், குடியரசு தலைவர் வெளியிட்ட கருத்தானாலும், அதைத் தொடர்ந்து சோனியா காந்தி வெளியிட்ட கருத்தானாலும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட கருத்தானாலும்  இந்த கருத்துக்கள் எல்லாம் தமிழர்களை  தமிழ் மக்களை சம அதிகாரம் கொடுத்து அவர்களுக்கு ஆட்சியிலே சம சுதந்திரம் கொடுத்து அவர்களை நடத்த வேண்டும் என்ற கருத்துத்தான் அந்த கருத்தின் அடிப்படையில் என்ன முடிவானாலும் அந்த முடிவை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு ராஜபக்சே நடந்து கொள்வாரேயானால், சரித்திரம் அவரை மன்னிக்காது.

சரித்திர பள்ளத்தாக்கிலே எங்கோ ஒரு மூலையில்தான் அவர் தள்ளப்படுவார். அதை ஞாபகத்திலே வைத்துக் கொண்டு தமிழன், தன்மானம் உள்ள தமிழனாக  தமிழன் தரணி போற்றும் தமிழனாக வாழ  தமிழன் சுயமரியாதை உள்ள தமிழனாக வாழ எங்களை அனுமதியுங்கள் என்று வீரசபத முழக்கமிட்டு பேரணியில் கலந்து கொண்ட லட்சோப லட்சம் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

வைகோ பேச்சில் உடன்பாடு இல்லை: தா.பா

1102-vaiko.jpgஇலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சில் உடன்பாடு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஏதேனும் நேர்ந்தால், தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்று சென்னையில் நடந்த கூட்டத்தில் வைகோ பேசியிருக்கிறாரே என்று நெய்வேலி வந்த தா.பாண்டியனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அவர்,  நானும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். வைகோ அப்படி பேசியிருக்கக் கூடாது. அவரது பேச்சில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தமிழகத்தில் எப்போதும் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். 50 ஆண்டுகளாக இலங்கையில் நடந்து வரும் இனச்சிங்கலைத் தீர்க்கத்ததன் விளைவாக, அது இனப் படுகொலையாக அரசு பயங்கரவாதமாக மாறி இருக்கிறது. இனப் படுகொலைக்கு தீர்வு காணாமல் இந்திய அரசு ராணுவ ஆலோசனை மற்றும் போர் தளவாடங்களைக் கொடுத்து உதவுகிறது. இதனல் இந்தியாவின் பெருமையை பாழடித்து விட்டது மத்திய அரசு என்றார்.

நான் இலங்கைக்கு செல்வதற்கு அந்த அரசாங்கம் அனுமதி தரவில்லை:கலைஞர்

karunanithi.jpgஇலங்கையில் போரை நிறுத்துமாறு கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மன்றோ சிலையில் இருந்து முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக பேரணி தொடங்கியது. இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  இப்பேரணி சேப்பாக்கத்தில் முடிந்தது.

பின்னார் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, ’’ ஈழப்பிரச்சனை தொடர்பாக நான் இலங்கைக்கு செல்வதற்கு பலமுறை முயற்சி செய்தேன்.  அதற்கு அந்த அரசாங்கம் அனுமதி தரவில்லை. அதனாலென்ன..உணர்வால், உள்ளத்தால், ஈழத்தமிழர்களை காண்கிறேன்.  இலங்கை தமிழர்களுக்கு காவலர்களாக, தூதுவர்களாக இருப்பவர்களுக்கு நான் தோழராக இருக்கிறேன்” என்று பேசினார்.

ரத்த ஆறு ஓடும் என சொன்னது ஏன்?: வைகோ விளக்கம்

1102-vaiko.jpgசென்னை யில் ம.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி பொதுச் செயலர் வைகோ, தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என நான் சொன்னது, மத்திய அரசை எச்சரிக்கை செய்யத்தான்.

இந்த வாசகத்தை முதல்வர் கருணாநிதி எத்தனையோ முறை கூறியிருக்கிறார். 1965ம் ஆண்டு ஏற்பட்ட நிலையை மறுபடியும் தமிழகத்தில் ஏற்படுத்தி விடாதீர்கள் என்பதற்காகத் தான் இந்திய அரசை எச்சரித்தேன்.

இப்படியே போனால், இந்திய அரசு மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விடும். சோவியத் யூனியன் சிதறுண்டு போகுமென, நான் 1990ம் ஆண்டு திருச்சியில் நடந்த தி.மு.க., கூட்டத்திலே சொன்னேன். சொன்னது போலவே, சோவியத் யூனியனின் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி நாடாக சிதறுண்டு போனது.

ம.தி.மு.க., வன்முறை மேல் நம்பிக்கை இல்லாத இயக்கம். எங்கள் கட்சியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருந்தும், இதுவரை ஒரு சிறிய வன்முறையில் கூட ஈடுபட்டதில்லை. நான் பல முறை கைது செய்யப்பட்ட போதும், அவர்கள் ஒரு கல்லெறி சம்பவத்தில் கூட ஈடுபட்டதில்லை. இனியும் அவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள். என்னை கைது செய்யப்போவதாகக் கூறப்படும் வதந்திக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. போலீசார் விசாரணை மேற்கொண்டால், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்னை தீர தனி ஈழம் தான் ஒரே தீர்வு என, நாங்கள் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அதையே தான் இப்போதும் வலியுறுத்துகிறோம். விடுதலைப் புலிகளை தடை செய்த நாடுகள் கூட, “இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஏழு கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழகத்தின் சட்டசபையில் இயற்றப்பட்ட இலங்கை போர் நிறுத்த தீர்மானத்தை, மத்திய அரசு குப்பைக் கூடையில் வீசி விட்டது என்றார்.

தவறுதலாக ரகசியம் கசியவிட்ட பிரிட்டிஷ் அதிகாரி இராஜினாமா

robert_quick.jpgபிரிட்ட னின் மிக மூத்த பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு காவல்துறை அதிகாரியான பாப் குவிக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மிக ரகசியமாக வைக்கப்பட வேண்டிய ஆவணம் ஒன்றை வெளியிலே தெரிவது மாதிரி அவர் தவறுதலாக கையிலெடுத்து சென்றமை புகைப்படம் எடுக்கப்பட்டதையடுத்து அவர் பதவி விலகினார்.

புதன்கிழமை லண்டனிலுள்ள பிரிட்டிஷ் பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது அவர் செய்த இந்த பிழையின் விளைவாக, வடமேற்கு இங்கிலாந்தில் பயங்கரவாத சந்தேக நபர்களை பொலிஸார் கண்காணித்துவந்த நடவடிக்கையை அவர்கள் கைவிடவும், திட்டமிட்டிருந்த நேரத்திற்கு முன்பாக அவர்கள் அதிரடி சோதனைகளை மேற்கொள்ளவும் நேர்ந்தது.

இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரில் 11 பேர் பாகிஸ்தான் பிரஜைகள் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

இறுதிக்கட்ட ஏற்பாடுகளில் இருந்த ஒரு பெரிய பயங்கரவாதச் சதித் திட்டத்தினை தாங்கள் ரகசியமாகக் கண்காணித்து வந்ததாகவும் இந்தச் சதியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் அல்கைதாவினருக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது என்றும் பொலிசார் கூறுகின்றனர்.