அயோத்தி யில் ராமர் கோயில் கட்டி முடித்த பின்னரே பெருமையுடன் ஜெய்ஸ்ரீராம் சொல்வேன் என பா.ஜ.பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார். அலகாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அத்வானி, ராமர் பிறந்த அயோத்தியில் எப்போது கோயில் கட்டி முடிக்கப்படுகிறதோ அப்போது தான் என்னால் மன திருப்தியுடன் பெருமையுடன் ஜெய்ஸ்ரீராம் சொல்ல முடியும். வரும் தேர்தலில் பா.ஜ.கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிக தன்னம்பிக்கை காரணமாக 2004 ல் கோட்டை விட்டோம். அந்த தவறை மீண்டும் செய்து விடக்கூடாது.
மத்தியில் காங்கிரஸ் அல்லது பா.ஜ. உதவி இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது. எனவே மத்தியில் ஆட்சியைப் பிடிப்போம் என 3 வது அணியினர் கூறுவதை சீரியசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளின் வங்கிகளில் மறைந்து கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களில் அவை முதலீடு செய்யப்படும்.
பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்த போது பொடா போன்ற தீவிரவாத தடுப்பு சட்டங்களால் தீவிரவாத குழுக்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வாக்குவங்கி அரசியலுக்காக பொடாவை ரத்து செய்துவிட்டது.
அப்சல் குருவின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்த பின்னரும் மத்திய அரசு நிறைவேற்றாமல் நிறுத்தி வைத்துள்ளது. அப்சலை தூக்கிலிடக்கூடாது என எந்த முஸ்லிமும் கோரிக்கை வைக்கவில்லை. அப்சலை தூக்கு தண்டனையை தள்ளிப்போட்டால் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என அரசு நினைக்கிறது. உண்மையில் இது முஸ்லிம்களை அவமதிக்கும் செயலாகும் என்றார்.