முல்லைத் தீவிலிருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு புல்மோட்டைக் களவைத்தியசாலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை அனுமதிக்கப்பட்ட 537 காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்களில் 9பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதாரத் திணைக்களம் வெளியிட்ட களநிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 4 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களையும் சேர்த்து புல்மோட்டைக்கு கூட்டிவரப்பட்ட பின்னர் இறந்தவர்களின் எண்ணிக்கை27 ஆக அதிகரித்துள்ளது. கூட்டிவரப்பட்ட காயமடைந்தவர்களில் புல்மோட்டை கள வைத்தியசாலையில் 169 பேருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் 90 ஆண்கள், 55 பெண்கள், 24 குழந்தைகள் அடங்குவர், 147 பேர் (ஆண்கள் 80, பெண்கள் 49, குழந்தைகள் 18) பதவியா அரசினர் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கர்ப்பிணித் தாய். இவர்களுடன் வந்த உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் என்று 386 பேரும் பதவியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
தற்போது புல்மோட்டைக் களவைத்தியசாலையில் 22 காயமடைந்தவர்களும் (10 ஆண்கள், 6 பெண்கள், குழந்தைகள் 6) 22 உறவினர்களுமே தங்கவைக்கப்பட்டுள்ளனர். வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையத்திற்கு 98 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.
16.3.2009 இலிருந்து 8.4.2009 வரை முல்லைத்தீவிலிருந்து புல்மோட்டைக்கு கப்பல் மூலம் கூட்டிவரப்பட்டு ஆஸ்பத்திரிகள், நலன்புரி நிலையங்களில் அனுமதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,468 ஆகும். இவர்களில் 1,164 பேருக்கு புல்மோட்டையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.