கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

திருமலை ஆஸ்பத்திரிக்குச் சென்று பார்வையிட்ட மட்டு.ஆயர் வேதனை

batticolo1.jpgகடல் கோள் அனர்த்தத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது வன்னியில் யுத்த அனர்த்தத்திற்குள்ளாகி காயமடைந்தவர்களின் நிலை மிக மோசமானதென மட்டக்களப்பு திருகோணமலை ஆயர் கலாநிதி வண. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்துள்ளார். திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்டுத் திரும்பிய பின்பு இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

“”பாதுகாப்புத் தரப்பின் விசேட அனுமதி பெற்றே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டோம். இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படை ஆகியன அங்கு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் வெளியார் எவரும் பார்வையிடுவதற்கு அனுமதியில்லை. இந்நிலையிலேயே இந்த விசேட அனுமதியைப் பெற்று நாம் நோயாளர்களைப் பார்வையிட்டோம்.

காயமடைந்தவர்களைப் பொறுத்தவரை பலரது கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் கைகளையும் கால்களையும் இழந்துள்ளனர். சிலர் எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். சிலரது உடலினுள் இன்னமும் குண்டுகள் அகற்றப்படாமல் இருப்பதை எக்ஸ்ரே மூலம் அறியக்கூடியதாக இருந்தது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது மக்களுக்கு இப்படியும் ஒரு மோசமான நிலை வந்து விட்டதே என்று வேதனையாக உள்ளது. ஏற்கெனவே ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளமையினால் வைத்தியசாலையில் இட நெருக்கடி காரணமாக மெத்தைகள் போடப்பட்டு நோயாளிகள் நிலத்தில் படுக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதனைத் தவிர ஏனைய வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். மேலும், இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நிலைமையைச் சமாளிப்பதற்கு வைத்தியசாலை நிர்வாகம் அங்கு எந்நேரத்திலும் தயார் நிலையிலேயே இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த விடயத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. காயமடைந்து வைத்தியசாலையில் உள்ளவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு எந்தச் சிந்தனையும் இல்லை. அவர்களுடைய உறவினர்களைப் பற்றிய சிந்தனையிலேயே அவர்கள் இருக்கின்றார்கள்.

தங்கள் உறவினர்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றுத் தருமாறு அவர்கள் கோரினாலும் அது உடனடியாக சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. வைத்திய வசதிகளும் ஏனைய வசதிகளும் அவர்களுக்குப் போதியளவு வழங்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது. வைத்தியர்கள், தாதிகள் உட்பட வைத்திய மற்றும் சுகாதார துறையைச் சார்ந்த சகலரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்.

படையினர் அம்பலவான்பொகனை நகருக்குள் நுளைந்துள்ளனர்

truck.jpgமுல்லைத் தீவு புதுக்குடியிருப்பு மேற்கை கைபற்றியுள்ள 58வது டிவிசன் படையினர் நேற்று(பெப்:19)அம்பலவான்பொக்கனை நகருக்குள் நுளைந்துள்ளதாக இராணுவத்தலைமையகம் தெரிவிக்கின்றது.

அம்பலவான்பொகனை நகருக்குள் நேற்று பிற்பகல் நுளைந்துள்ள படையினர் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் மீதிப்பகுதியை கைபற்றும் நோக்குடன் தாக்குதல்கள் தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
 

பொதுமக்கள் கோருவது போர்நிறுத்தமே—இந்தியாவுக்கு விடுதலைப் புலிகள் பதில்

nadesanltte.jpgஇலங்கை யின் வடக்கே போர்பிரதேசத்தில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை வெளியே கொண்டுவருவதற்கு உதவ தாம் தயாராக இருப்பதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள், தம் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுமக்கள் இந்தியாவிடமும், சர்வதேச சமூகத்திடமும் போர் நிறுத்தத்தையே கோருவதாக தெரிவித்தார்.

பிபிசி தமிழோசைக்கு அவர் வழங்கிய சிறப்புச் செவ்வியில் விடுதலைப்புலிகள் போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களை தடுப்பதாகவும், சிலரை சுட்டுக் கொல்வதாகவும் ஐநா மன்றம் கூறியிருந்ததை மறுத்ததுடன், இது குறித்து சர்வதேச நிறுவனங்கள் நேரில் வந்து பார்த்தால் உண்மை நிலைமை அவர்களுக்கு விளங்கும் என்றும் கூறினார்.

”எமது மக்கள் எங்களோடுதான் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக இராணுவ தாக்குதல்கள் நடந்த சமயத்தில் மக்கள், விடுதலை புலிகளின் இன்ப துன்பங்களில் மட்டுமல்லாது போராட்டத்திலும் பங்குபெற்று வருகிறார்கள். அரசு பொய்யான பிரச்சாரத்தை செய்கிறது. சர்வதேச நிறுவனங்களோ ஒரு தலைப்பட்சமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன”, என்றார் நடேசன்.

ஐநா மன்ற ஊழியரை விடுதலைப்புலிகள் கட்டாயமாக ஆள்சேர்த்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்டபோது, தமது அமைப்பு யாரையும் கட்டாயப்படுத்தி ஆட்சேர்ப்பதில்லை என்றும், அதேசமயம் அரச படைகளின் அக்கிரமங்கள் அதிகரிக்கும்போது பொதுமக்களின் சகலதரப்பாரும் தமது இயக்கத்தில் தாமாக முன்வந்து இணைவதாகவும், அப்படி அந்த ஊழியரும் இணைந்திருந்தால் தமது இயக்கம் அவரை இணைத்துக்கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

61 சிவிலியன்கள் நேற்று வருகை

civilians-1002-09.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்லிருந்து பாதுகாப்பு தேடி 61 சிவிலியன்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி நேற்று வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்தை நோக்கி நேற்று முன்தினம் இரவு வருகை தந்த 61 சிவிலியன்களும் ஆரம்பக் கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய ஜனவரி மாதம் முதல் இதுவரை 35,817 பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு பாதுகாப்பு தேடி வருகை தந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

புதுமாத்தளன் மருத்துவ நிலவரம் குறித்து சுகாதார அமைச்சுக்கு கடிதம்

puthumaattalan-hospital.gifமுல்லைத் தீவு மாவட்டத்தில் அரசாங்கம் அண்மையில் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள புதுமாத்தளன் வைத்தியசாலையில் பல்வேறு வசதியீனங்கள், மருந்துத் தட்டுப்பாடு, மன உளைச்சல்களுக்கு மத்தியில் அரச வைத்தியர்கள் பணியாற்றி வருவதாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் துரைராஜா வரதராஜா சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ள அவசர கடிதம் ஒன்றில் தெரிவித்திருக்கி்ன்றார்.

இந்த வாரம் நடத்தப்பட்ட எறிகணை தாக்கதலில் இறந்துபோன பலரது உடல்களும், காயமடைந்தவர்கள் பலரும் புதுமாத்தளன் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மிகவும் குறைவான வைத்திய வசதிகளுடன், பெரும் எண்ணிக்கையில் வந்துள்ள காயமடைந்தவர்களுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்று தெரியாமல் தாங்கள் திகைப்படைந்திருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் டாக்டர் வரதராஜா தெரிவித்திருக்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம் ஆகிய இடங்களில் இயங்கிவந்த வைத்தியசாலைகள் போர்ப்பதட்டம் காரணமாக கைவிடப்பட்டு, தற்போது புதுமாத்தளன் வைத்தியசாலை மாத்திரமே இந்தப் பிரதேசத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கான ஒரேயொரு வைத்தியசாலையாக வசதியீனங்களுக்கிடையில் இயங்கி வருவதனால், இந்தப் பிரதேசத்தின் வைத்தியசேவை நிலைகுலைந்து ஸ்தம்பிதமடையும் அபாய நிலைமை நிலவுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு சிறிய பாடசாலை கட்டிடத்தில் ஆரம்ப வைத்திய நிலையமாக இயங்கி வருகின்ற புதுமாத்தளன் வைத்தியசாலையில் நாளாந்தம் 100 தொடக்கம் 200 வரையில் போர்க்காயங்களுடன் வருகின்ற காயமடைந்தவர்களை அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு இடவசதியோ ஏனைய உட்கட்டமைப்பு வசதியோ இல்லாத நிலையில் வைத்தியர்கள் அங்கு போராடிக்கொண்டிருக்கி்ன்றார்கள் என்றும் டாக்டர் வரதராஜா தெரிவித்திருக்கின்றார்.

வன்னியில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் அதிரடிப்படையின் 25 முகாம்கள் – பிரதிப் பொலிஸ்மா அதிபர் சரத்சந்திர தெரிவிப்பு

sri-lanka-police.jpgவன்னியில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் விசேட அதிரடிப் படையின் 25 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியும் பிரதிப்பொலிஸ்மா அதிபருமான கே.எம்.எல். சரத்சந்திர கூறுகையில்;

தற்போது வன்னியில் 24 பிரதான முகாம்கள் உட்பட 25 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. “ஏ9′ வீதியில் ஓமந்தை முதல் மாங்குளம் வரை முகாம்களும், ஓமந்தை முதல் மணலாறு வரை 8 முகாம்களும், வவுனியா பூந்தோட்டப் பகுதியில் 8 முகாம்களும் , கனகராஜன் குளம் நெடுங்கேணி வீதியில் உப முகாமொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் இவர்கள் இங்கு இராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்கும் உதவி வருவதாகவும் தெரிவித்தார்.

நாயக்கர்சேனை வாக்களிப்பு நிலைய அதிகாரிக்கு எதிராக தேர்தல் திணைக்களம் நடவடிக்கை

sri-lanka-election.jpgவடமேல் மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் நாயக்கர்சேனை பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் பணிபுரிந்த தலைமை அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புத்தளம் கச்சேரியில் இந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குப் பெட்டியை திறந்து வாக்குச் சீட்டுகளை எண்ண ஏற்பாடு செய்யப்பட்ட போது 16 வாக்குச் சீட்டுகள் இரண்டாக மடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.

இது தொடர்பாக புத்தளம் தெரிவத்தாட்சி அதிகாரி தேர்தல் ஆணையாளருக்கு முறையிட்டிருந்தார்.  இதனையடுத்து தேர்தல் ஆணையாளர் இந்த வாக்களிப்பு நிலையத்தில் இடம்பெற்ற வாக்களிப்பு மோசடியால் அதன் வாக்களிப்பை இரத்துச் செய்வதாக அறிவித்திருந்ததுடன், புத்தளம் மாவட்ட முடிவுகளும் வெளியிடப்படவில்லை.

இந்த வாக்களிப்பு நிலைய வாக்குப் பெட்டிக்குள் மோசடியான முறையில் வாக்குச் சீட்டுகள் காணப்பட்டதையடுத்து அந்த நிலைய தலைமை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவர் மதுரங்குளிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் விமானத்தின் பகுதிகள் படையினரால் வட்டக்கச்சியில் மீட்பு!

ltte_aircraft.pngமுல்லைத்தீவு வட்டக்கச்சி பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் புலிகளினது விமானங்களின்; சில பகுதிகளைக் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. விமானத்துக்குரிய சில உதிரிப்பாகங்கள் தப்பியோடிய புலிகளால் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் தொடர்பான கைநூலொன்றும் அவற்றை இயக்கும் முறைகள் அடங்கிய வரைபடங்களும் இப்பிரதேசத்திலிருந்து படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இங்கு விமானங்களை உருவாக்கும் முயற்சியிலும் அவற்றை இயக்கும் பயிற்சியிலும் புலிகள் ஈடுபட்டுள்ளனர் என படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இப்பிரதேசத்திலிருந்து மோட்டார் இயந்திரங்களின் பாகங்கள் அலுமினியத் தகடுகள்,  ஆணிகள் தயாரிக்கும் இயந்திரங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. 

மதுரையிலும் போலீஸ்-வக்கீல்கள் மோதல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும்  இடையே நடந்த வரலாறு காணாத மோதலை அடுத்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவலுக்கு நின்றிருந்த போலீசார்களை தாக்கி தங்களது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டனர்.பதிலுக்கு போலீசாரும் திருப்பி தடியடி கொடுத்தனர். நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால் மதுரையில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

ஏ 35 வீதி படையினர் வசம்!

udaya_nanayakkara_.jpgமுல்லைத் தீவு மாவட்டத்திலுள்ள ஏ 35 வீதியை படையினர் இன்று முழுமையாக கைப்பற்றியுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்

இந்த வீதியை மீட்பதற்காக இடம்பெற்ற மோதலில் புலி உறுப்பினர்கள் 23 பேர் கொல்லப்பட்டனர் எனவும்   கைப்பற்றப்பட்ட பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் மெற்கொள்ளப்பட்டு வருவதோடு படையினர் அங்கு நிலை கொண்டுள்ளனர் எனவும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.