மரபு ரீதியான யுத்த ஆற்றலை இழந்திருக்கும் விடுதலைப் புலிகள் கெரில்லா உபாயத்தைப் பயன்படுத்திப் போரிடுவார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இராணுவத்தின் நடவடிக்கை முடிவுறும் நிலைக்கு வந்து விட்டது. ஆனால், மோதல் தொடரும் என்று கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீடத் தலைவரான கலாநிதி ஜயதேவ உயன்கொடவை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி.செய்திச் சேவை தெரிவித்தது.
முன்னர் இருந்தது போன்று அரசியல் மற்றும் இராணுவ ரீதியான பலத்தை புலிகள் பெற்றுக்கொள்ள முடியாது. ஆதலால் அவர்கள் கெரில்லா தந்திரோபாயத்திற்கு திரும்புவார்கள் என்றும் உயன்கொட தெரிவித்துள்ளார். அதேவேளை, புலிகள் தற்போதும் கணிசமான அளவுக்கு வெளிநாட்டு வலைப்பின்னல் அமைப்பை கொண்டிருப்பதாகவும் அதன் மூலம் கெரில்லாப் போருக்கு நிதியுதவி பெற்றுக்கொள்ளக்கூடும் என்றும் முன்னாள் இலங்கை இராஜதந்திரியான நந்தகொடகே கூறியுள்ளார். மோதலின் ஆரம்ப நாட்களில் இருந்த பயங்கரவாதத் தாக்குதல் போன்றவற்றை நாம் எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் விதியே எதிர்கால கெரில்லா போராளிகளுக்கு ஊக்குவிப்பளிப்பதற்கான முக்கியமான காரணியாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.