கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இலங்கை தமிழருக்காக 2 கோடி கையெழுத்து வேட்டை

united-people.jpgஇலங்கை யில் போரைநிறுத்த ஐ.நா.சபை தலையிட வலியுறுத்தி 2 கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை பட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் ச.ராமதாஸ் சென்னையில் திங்கட்கிழமை தொடக்கி வைத்தார். தமிழ் மக்கள் மீதான போரை நிறுத்த இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என ஐ.நா.செயலாளர் நாயகம் அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி ஆகியோரை வலியுறுத்தி 2 கோடி மக்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பும் இயக்கத்தை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கியுள்ளது.

அதற்கான படிவங்களில் பா.ம.க.நிறுவுனர் ராமதாஸ் முதல் கையெழுத்திட்டு அந்த இயக்கத்தை தொடக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு,  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.

இது குறித்து வைகோ கூறியதாவது; “தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கையெழுத்து படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இடம்பெற்றுள்ள அமைப்புகள் தமிழகம் முழுவதும் 2 கோடி மக்களை சந்தித்து, கையெழுத்து பெறும் பணியில் தீவிரமாக ஈடுபடும். பின்னர் அனைத்து படிவங்களும் தொகுக்கப்பட்டு ஐ.நா.செயலாளர் நாயகம் மற்றும் அமெரிக்க, ரஷ்ய நாட்டு ஜனாதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றார் வைகோ.

386 சிவிலியன் நோயாளர்கள் கப்பல் மூலம் திருமலை வருகை

trico-hospital.gifமுல்லை தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் காயமடைந்த நிலையிலுள்ள 386 சிவிலியன்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஐ. சி. ஆர். சி.யின் கப்பல் ஐந்தாவது தடவையாகவும் சிவிலியன்களை திருகோணமலைக்கு அழைத்து வந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

ஐ. சி. ஆர். சியின் கொடியுடன் கூடிய ‘எம். வி. க்ரீன் ஓசன்’ எனும் கப்பலே கடற்படையினரின் பூரண ஒத்துழைப்புடன் சுகயீனம் மற்றும் காயங்களுக்குள்ளாகியுள்ள 386 சிவிலியன்களை நேற்று முன்தினம் (24) திருகோணமலைக்கு அழைத்து வந்திருந்தது.

திருகோணமலைக்கு வந்த சிவிலியன்களுக்கான உடனடி மருத்துவ சிகிச்சைகளை கடற்படையின் மருத்துவ குழுவினர் அளித்தனர். பின்னர் இவர்கள் உடனடியாக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியக் குழுவினர் இவர்களுக்கான சிகிச்சைகளை முன்னெடுத்து வருகின்றனர். மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான அனைத்து மருந்துப் பொருட்களும் அங்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேநேரம் மருத்துவர்களும் போதியளவில் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐ. சி. ஆர். சி முதல் தடவையாக கடந்த 10ம் திகதி செவ்வாய்க்கிமை 356 சிவிலியன்களையும் இரண்டாவது தடவையாக கடந்த 12ம் திகதி 403 சிவிலியன்களையும் மூன்றாவது தடவையாக கடந்த 16ம் திகதி 440 சிவிலியன்களையும் நான்காவது தடவையாக கடந்த 20ம் திகதி 397 சிவிலியன்களையும் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

காஸாவைக் கட்டியெழுப்ப அமெரிக்கா 900 மில்லியன் டொலர் நிதியுதவி

hamas.jpgகாஸாவைப் புனரமைக்க 900 மில்லியன் அமெரிக்க டொலரை உதவியாக அமெரிக்கா வழங்கவுள்ளது.  மார்ச் மாதம் 2ம் திகதி எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஆரம்ப மாகவுள்ள காஸாவைப் புனரமைக்கும் மாநாட்டில் பங்கேற்கவுள்ள அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்த நிதி உதவிபற்றி அறிவிப்பார். ஆனால் இது எப்போது வழங்கப்படும் என அறிவிக்கப்படவில்லை. இதற்கான அனுமதி காங்கிரஸில் கிடைத்தவுடன் இந்நிதி பற்றிய ஏனைய விபரங்கள் வெளியிடப்படவுள்ளன.

காஸாவைப் புனரமைக்க வழங்கப்படவுள்ள இந்நிதி ஹமாஸிடம் கையளிக்கப்பட மாட்டாது. அமெரிக்காவுக்கும் ஹமாஸ¤க்குமிடையே உறவுகள் இல்லை. இதனால் அமெரிக்க சார்பு அமைப்பிடம் அல்லது அரசிடம் இது கையளிக்கப்படலாம். காஸா புனரமைப்பு மாநாட்டில் பங்கேற்கவரும் ஹிலாரி கிளிண்டன், இஸ்ரேல் மேற்குக் கரைக்கும் விஜயம் செய்யவுள்ளார். ஹிலாரி கிளிண்டனின் விஜயத்தை இஸ்ரேல் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. அங்கு புதிய அரசாங்கம் இதுவரை அமைக்கப்படாத போதும் பெரும்பாலும் பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்படும் பென்ஜமின் நெதன்யாஹு உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் ஹிலாரி கிளிண்டன் சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் புதிய அரசாங்கத்தில் வெளிநாட்டமைச்சரான ஹிலாரி கிளிண்டன் மத்திய கிழக்கிற்கு செய்யும் முதல் விஜயம் இதுவாகும். புஷ்ஷின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அரபு அமைச்சர்கள் மாநாடு அனோபெலிஸ் மாநாடுகள் தோல்வியுற்ற பின்னர் மீண்டும் மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியாக அமெரிக்காவின் இந் நிதியுதவி உள்ளது. காஸாவில் கட்டுமானப் பணிகள், மருத்துவ உதவிகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.  காஸா மீது 22 நாட்களாக இஸ்ரேல் தொடுத்த தாக்குதல்களை அமெரிக்கா கண்டுகொள்ளாமல் நடந்தது.

இதனால் அரபுலகின் அதிருப்தியை அமெரிக்கா ஈட்டிக்கொண்டமை தெரிந்ததே. யுத்தம் நடந்த காலப் பகுதியில் (2008 டிசம்பர்) ஒபாமா பதவி யேற்காதபோதும் காஸாவில் ஏராளமான அப்பாவி மக்கள் பலியானதைக் கண்டிக்க உடனடியாக முன்வரவில்லை. பின்னர் அரபுலகில் கொதிப்பும், ஆத்திரமும் அதிகரிக்கவே அப்பாவிகள் கொல்லப்படுவது கவலையளிப்பதாகச் சொன்னார். அரபுலகிலும் முஸ்லிம்கள் மத்தியிலும் நல்லெண்ணத்தை உருவாக்கும் முயற்சியாக இந்நிதியை அமெரிக்கா வழங்கவுள்ளபோதும் காஸாவை ஆளும் ஹமாஸ் அமைப்பிடம் இந்நிதி வழங்கப்படமாட்டாது. மேற்குக் கரைக்குச் செல்லவுள்ள ஹிலாரி கிளிண்டன் ஜனாதிபதி மஃமூத் அப்பாஸையும் சந்திப்பார். இஸ்ரேல் மேற்கு க்கரை மற்றும் அரபு நாடுகளின் மேற்பார்வையில் காஸா புனரமைக்கப்படலாம்.

நிவாரண கிராமங்களுக்கு மகப்பேற்று மருத்துவ நிபுணர் அனுப்பி வைப்பு

pregnant-lady.jpgவவுனியா வில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கிய நலன்களைக் கவனிக்கவென சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்கு துறை அமைச்சு விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் மருத்துவ நிபுணரொருவரும் உடனடியாக கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இருவர் கடமையில் உள்ளனர்.

இதேநேரம், நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள கர்ப்பிணிகளை பிரசவத்திற்கென வவுனியா போதனா வைத்தியசாலைக்கும் செட்டிகுளம், பூவரசங்குளம் ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இப்பெண்களின் பிரசவத்திற்கு ஏற்ப இந்த ஆஸ்பத்திரிகளின் வசதிகளை துரிதமாக மேம்படுத்துமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்த சுமார் 750 கர்ப்பிணிப் பெண்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் 14 நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவசேவை வழங்கவென வவுனியா ஆயுர்வேத ஆஸ்பத்திரியின் ஒரு பகுதி சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ மாதுகளின் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொடுக்கவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை விரைவில் குறையும். அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு

bandula_gunawadana.jpgஅரிசி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இன்னும் இரண்டொரு வாரங்களுக்குள் வெகுவாகக் குறைவடையும் என்று வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அதேநேரம் சமையல் எரிவாயுவின் விலையில் மார்ச் மாதமளவில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

பணவீக்கம் குறைவடைந்து வருவதால் நூற்றுக்கு 28 ஆக விருந்த வாழ்க்கைச் செலவுப் புள்ளிவீதம் வெகுவாகக் குறைவடைந்து வருகிறது. எதிர்வரும் இரண்டு வாரங்களில் நூற்றுக்கு எட்டு அல்லது ஒன்பது வீதமாக இது குறைவடையுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.எதிர்வரும் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கான எவ்வித தட்டுப்பாடும் இருக்கமாட்டாதென தெரிவித்த அமைச்சர், குறைந்த விலையில் சகல பொருட்களையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நெல் அறுவடைக்காலம் என்பதால் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியின் விலையில் வீழ்ச்சி ஏற்படும். பயங்கரவாதிகளிடமிருந்து கிழக்கு மாகாணம் மீட்கப்பட்ட பின் இம்முறை ஒரு இலட்சத்து இருபதினாயிரம் ஏக்கரில் புதிதாக நெற்செய்கை செய்யப்பட்டுள்ளது. இதனால் போதுமானளவு அரிசி கையிருப்பில் வருவதுடன் குறைந்த விலையிலும் அரிசியை விற்பனை செய்ய முடியும்.

அண்மைக்காலங்களில் சமையல் எரிவாயு, பெற்றோல், டீசல் உட்பட எரிபொருட்கள் மற்றும் பஸ், ரயில் கட்டணங்கள் குறைவடைந்துள்ளதால் வாழ்க்கைச் செலவுப் புள்ளிவீதம் குறைந்து வருகிறது. எதிர்வரும் இரண்டொரு வாரங்களில் வீழ்ச்சியும் பணவீக்கத்திற்கமைய நூற்றுக்கு எட்டு அல்லது ஒன்பது வீதமாக வாழ்க்கைச் செலவு குறைவடையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

135 பேருடன் துருக்கி விமானம் விழுந்து நொறுங்கியது.

flight_.jpg135 பயணிகளுடன் சென்ற துருக்கி விமானம் விழுந்து நொறுங்கியது. நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் 3 துண்டுகளாக நொறுங்கியது.

இந்த விபத்தில் ஒருவர் பலியானர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். விமானம் தீ பிடிக்காததால் விமானத்தில் பயணம்  செய்த பயணிகள் பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருதுநகர் திமுக தொண்டர் தீக்குளித்து சாவு

இலங்கைத் தமிழர்களைக் காக்கக் கோரி திமுகவைச் சேர்ந்த தொண்டர் கோகுல்ரத்தினம் என்பவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தார். கடந்த சில நாட்களில் இதுபோல தீக்குளித்து உயிரிழந்த இரண்டாவது திமுக தொண்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு, சென்னை தரமணியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்ற திமுக தொண்டர், சென்னையில் திமுக இளைஞர் அணி நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டத்தின்போது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், இன்னும் ஒரு திமுக தொண்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிவகாசி அருகே உள்ள ஆனையூரைச் சேர்ந்தவர் கோகுல்ரத்தினம் (44). தி.மு.க. தொண்டரான இவர் இன்று மதியம் விருதுநகர் ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தார். கையில் மண்ணெண்ணையை வைத்திருந்தார். உள்ளே வந்த அவர் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். தீப்பற்றிய உடலுடன் தி.மு.க. கொடியை பிடித்தபடி ஓடி வந்தார். அப்போது அந்தப் பகுதி வழியாக ரோந்து வந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்து கோகுல்ரத்தினத்தை காப்பாற்ற முயன்றனர்.  ஆனால் உடல் முழுவதும் கருகிப் போன கோகுல் ரத்தினம் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

இலங்கைத் தமிழருக்கு நிவாரணம் திரட்ட சோனியா அறிவுறுத்தல்

soniya2.jpgஇலங்கையின் வடபகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்குமாறு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நேற்று முன்தினம் திங்கட்கிழமை தனது கட்யின் தென்மாநிலப் பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தூர விலகி நிற்பதாக ஆத்திரமடைந்துள்ள தமிழ்நாட்டின் விசனத்தைத் தணிப்பதற்காகவே அவர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நம்பப்படுகின்றது.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டு அமைச்சுடன் இணைந்து பணியாற்றும்படி தனது சகாக்களுக்கும் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் அவல நிலை தொடர்பாக தமிழ் நாட்டில் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வகட்சிக்குழு இவ்வாரம் முக்கிய தீர்மானம்; ஐ.தே.கவுடன் பேசவும் முடிவு

Minister Tissa Vitharanaஇனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இவ்வாரம் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இவ்வாரத்துடன் குழுவின் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகக் கூறிய அமைச்சர் விதாரண, அதன் பின்னர் ஐ. தே. க. வின் கருத்தை அறிய, அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவுள்ளதாகக் கூறினார்.  சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டம் கடந்த இரு வாரங்களாக நடைபெறவில்லை. எனவே, இந்த வார இறுதிக்குள் கூடி கட்சிகளிடையே இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த எதிர் பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

தீர்வுத் திட்டம் தொடர்பில் ஐ. தே. க. வுடன் பேச்சு நடத்தப்பட்டதன் பின்னர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை அழைத்துப் பேச உள்ளதாக அமைச்சர் கூறினார். அதனைத் தொடர்ந்து தீர்வு யோசனைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்தார்.

வன்னியிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற பொருத்தமான ஏற்பாடு வேண்டும்; உதவத்தயார் – டில்லி கொழும்புக்குத் தெரிவிப்பு

navy_rg.jpgஇலங்கையில் மோதல் பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்குப் பொருத்தமானதும் நம்பிக்கையூட்டுவதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பைக் கேட்டிருக்கும் இந்திய அரசாங்கம் இதற்கு உதவியளிக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. மோதல் பகுதியில் அகப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதியளிக்க வேண்டுமென்று சர்வதேச ரீதியாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கான விருப்பத்தைப் புலிகள் தெரிவித்திருப்பதாக செய்திகளில் நாம் பார்த்தோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறார்.

இதனடிப்படையிலேயே இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்குப் பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கையையும் அக்கறையுடைய ஏனையவர்களையும் இந்தியா கேட்டுக் கொள்கின்றது என்றும் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.

அதேசமயம் இடம்பெயர்ந்தவர்கள் வெளியேற்றப்படுவதை சர்வதேச நிறுவனங்களும் மேற்பார்வை செய்யும் ஏற்பாடுகளும் உள்ளடக்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, பாதுகாப்பு வலயங்களுக்கு இருதரப்பும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் சிறிய தொகையினர் கடல் மார்க்கமாக வெளியேற்றப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியிருப்பதுடன் தரை, கடல்மார்க்கமாக அதிக எண்ணிக்கையானோரை வெளியே கொண்டு வரும் நடவடிக்கையை சாத்தியமானதாக மாற்றுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் புதுடில்லி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அதேவேளை, அப்பாவிப் பொதுமக்களை வெளியே கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க இந்தியா ஆயத்தமாக இருப்பதாகவும் அத்துடன், அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள், மருந்துகள், மருத்துவ உதவிகளை வழங்கத் தயாரெனவும் வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் கூறியுள்ளார். மேலும், காயமடைந்த மற்றும் நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் ஏற்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.