வவுனியா வில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கிய நலன்களைக் கவனிக்கவென சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்கு துறை அமைச்சு விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் மருத்துவ நிபுணரொருவரும் உடனடியாக கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இருவர் கடமையில் உள்ளனர்.
இதேநேரம், நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள கர்ப்பிணிகளை பிரசவத்திற்கென வவுனியா போதனா வைத்தியசாலைக்கும் செட்டிகுளம், பூவரசங்குளம் ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இப்பெண்களின் பிரசவத்திற்கு ஏற்ப இந்த ஆஸ்பத்திரிகளின் வசதிகளை துரிதமாக மேம்படுத்துமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்த சுமார் 750 கர்ப்பிணிப் பெண்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் 14 நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவசேவை வழங்கவென வவுனியா ஆயுர்வேத ஆஸ்பத்திரியின் ஒரு பகுதி சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ மாதுகளின் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொடுக்கவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.