கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

20 ஓவர் உலக போட்டி 216 நாடுகளில் ஒளிபரப்பு

second-world-cup-of-twenty20.jpg12 நாடுகள் பங்கேற்கும் 2 வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜுன் 5 ந் தேதி முதல் 21 ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியின் ஒளிபரப்பு உரிமையை இ.எஸ்.பி.என்.நிறுவனம் பெற்றுள்ளது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த போட்டி பல்வேறு டெலிவிஷன் சேனல்கள் மூலம் 216 நாடுகளில் ஒளிபரப்பாகிறது.

இந்திய அமைச்சரவை இன்று விஸ்தரிக்கப்படுகிறது: 59 புதிய அமைச்சர்கள் நியமனம்

pm-manmogan.jpgபிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் திமுகவைச் சேர்ந்த ஏழு அமைச்சர்கள் உள்பட, 59 புதிய அமைச்சர்கள் இன்று வியாழக்கிழமை பதவியேற்க உள்ளனர். திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா, தயாநிதி மாறன், அழகிரி ஆகிய மூவரும் காபினட் அமைச்சர்களாகவும், எஸ்.எஸ். பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன், நெப்போலியன், காந்தி செல்வன் ஆகிய நால்வரும் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்க உள்ளனர்.

அதேபோல், தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில், ப. சிதம்பரம் ஏற்கெனவே உள்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், ஜி.கே. வாசன் புதிய காபினட் அமைச்சராக நாளை பதவியேற்க உள்ளார். மன்மோகன் சிங்கின் கடந்த அமைச்சரவையில், வாசன், இணை அமைச்சர் தனிப்பொறுப்பு வகித்து வந்தார்.

மன்மோகன் சிங்கின் கடந்த அமைச்சரவையில், தமிழகத்தின் சார்பில் அதிகபட்சமாக 13 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். திமுகவின் சார்பில் மீண்டும் ஏழு பேர் அமைச்சர்களாக இடம் பெறும் நிலையில், காங்கிரஸின் சார்பில் இரண்டு பேருக்கு மட்டுமே வாய்ப்புக் கிடைத்துள்ளது. மணிசங்கர் அய்யர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் இந்த முறை தேர்தலில் தோல்வியடைந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வியாழக்கிழமை பதவியேற்கும் அமைச்சர்களுடன் சேர்த்து, மன்மோகன் சிங் அமைச்சரவையின் பலம் 79 ஆக இருக்கும். அதில், 9 பேர் பெண்கள். ஆனால், தமிழகத்திலிருந்து பெண்கள் யாரும் இல்லை.  புதுவையைச் சேர்ந்த வி. நாராயணசாமி, மீண்டும் இணை அமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

2008ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி யாழ்ப்பாணம், வவுனியா தேர்தல்

north_.jpgயாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைக்கான தேர்தல்கள் 2008 ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படி நடத்தப்பட உள்ளதாக யாழ்., வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் நேற்று தெரிவித்தனர்.

இதன்படி யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்க ஓர் இலட்சத்து 417 பேர் தகுதி பெற்றுள்ளதோடு, வவுனியா நகர சபைத் தேர்தலில் போட்டியிட 24 ஆயிரத்து 626 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

யாழ். மாநகர சபைக்கு 11 வருடங்களின் பின்னர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தல் மூலம் 23 உறுப்பனிர்கள் யாழ். மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட உள்ளதாக யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார். யாழ். மாவட்ட 2008க்கான வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்பட்டுள்ளதோடு மே 30 ஆம் திகதி இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது. வாக்காளர்களின் பெயர்ப் பட்டியல் அடுத்த மாத முதல் வாரத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளதாகவும் உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபைத் தேர்தலையொட்டி 67 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதேவேளை, புத்தளம், வவுனியா, அனுராதபுரம் மற்றும் கொழும்பு மாவட்டங்களிலுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்கள் கோரினால் கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். மாநகர சபைக்கு 1998 ஆம் ஆண்டு இறுதியாகத் தேர்தல் நடைபெற்றது. யாழ். மாநகர சபை மேயராக எஸ். கந்தையா பணிபுரிந்தார்.

வவுனியா நகர சபை

இதேவேளை வவுனியா நகர சபைத் தேர்தல் 2008ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படியே நடத்தப்படும் எனவும் வாக்களிக்க 24 ஆயிரத்து 626 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி கூறினார். இத்தேர்தல் மூலம் இம்மாநகர சபைக்கு 12 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

வவுனியா மாநகர சபைக்கு 2000ஆம் ஆண்டு இறுதியாகத் தேர்தல் நடைபெற்றது. தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், நகர சபை மேயராக பணிபுரிந்தார்.

இதேவேளை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஜூன் 17 முதல் 24 வரை ஏற்கப்பட உள்ளதோடு தேர்தல் ஆணையாளர் இது தொடர்பான அறிவித்தலை ஜூன் 4ஆம் திகதி அறிவிக்க உள்ளார். இந்த நிலையில் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் உட்பட பல பிரதான கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றன. அவை வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இரு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட உள்ளன.

‘ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது’ டெஸ் பிரவுண் : தொகுப்பு த ஜெயபாலன்

Des_Brown_27May09‘புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தை தவிர்த்து அரசியல் பேச்சுவார்த்தையூடாக இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்க வேண்டும்’ என்று இலங்கைக்கான பிரித்தானிய அரச பிரதிநிதியான டெஸ் பிரவுண் லண்டன் இல்போர்ட்டில் மே 27ல் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்தார். ‘ஆயுதப் போராட்டத்திற்கு நிதி வழங்கி அதனை ஊக்கப்படுத்துவதைத் தவிர்த்து மக்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்’ என்றும் தெரிவித்தார். இச்சந்திப்பில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அரசியல் போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை டெஸ்பிரவுண் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசியல் சூழலை தெளிவுபடுத்திய டெஸ் பிரவுண் ‘புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகள் பற்றி ஆராய வேண்டும்’ எனத் தெரிவித்தார். ‘அடுத்த தலைமுறையினருக்கு இப்பிரச்சினையை சுமத்தாமல் இப்பொழுதே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வட அயர்லாந்துப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டிய டெஸ் பிரவுண் 800 ஆண்டுகள் பழமையான இப்பிரச்சினையில் கடந்த 50 அண்டுகளில் முதற் தடவையாக வன்முறையற்ற சூழலுக்குள் ஒரு புதிய தலைமுறை வளர்ந்து வருகின்றது’ எனத் தெரிவித்தார்.

‘நான் பக்கம் சார்ந்து செயற்பட முடியாது’ எனத் தெரிவித்த அவர் சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் மிக மோசமான யுத்தக் குற்றங்களைப் புரிந்து உள்ளனர்’ அதற்கு ‘தகுந்த ஆதாரங்கள் உண்டு’ எனக் கூறினார். ‘இரு தரப்பினரதும் பிரச்சாரங்கள் மோசமானது. பயங்கரமானது.’ என்பதை வலியுறுத்திய டெஸ் பிரவுண் ‘இது இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மிகவும் தடையாக இருக்கின்றது’ எனத் தெரிவித்தார். ‘இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும் என் போன்றவர்களுக்கு இரு தரப்பிடம் இருந்தும் ஆதரவு கிடைப்பதில்லை’ என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர் ‘நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்ப என்னால் பேச முடியாது’ என்றும் ‘எது சாத்தியமானதோ அதனையே நான் பேச முடியும்’ என்றும் தெரிவித்தார்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டது. பெரும்பாலும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இடம்பெயர்ந்த முகாம்களுக்கு மனிதாபிமானப் பணியாளர்கள் சுயாதீனமாக அனுமதிக்கப்படவில்லை. முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் நடைபெறுகின்றது. என்பது போன்ற விடயங்களே மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது.

‘இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்க எதிராக எனது அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. ஆனால் நான் நியுயோர்க் சென்றிருந்த போது எமக்கு கோசங்கள் வைக்கப்படுகிறது. ஆனால் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுபவர்களுக்கு எவ்வித கோசங்களும் காணப்படவில்லை’ என டெஸ் பிரவுண் தெரிவித்தார்.

தான் இலங்கை சென்றிருந்தபோது கண்டவை உலகின் ஏனைய எப்பாகத்திலும் கண்டிராத கொடுமைகள் என விபரித்தார். ‘ஒரு சிறிய துண்டு நிலப்பரப்பில் 100 000 முதல் 150 000 மக்களை வைத்துக் கொண்டு ஒரு மிக மோசமான யுத்தம் நடத்தப்பட்டு இருக்கின்றது’ எனத் தெரிவித டெஸ் பிரவுண் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தவர்களைச் சந்தித்து அங்கு அவர்கள் புலிகளின் பிடியில் அனுபவித்தவை பற்றியும் அறிந்தள்ளதாகத் தெரிவித்தார். மனிக்பாம் முகாமைப் பார்வையிட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது சபையில் இருந்த ஒருவர் அது அரசு சர்வதேச நாடுகளுக்கு காட்டுவதாக வைத்துள்ள முகாம் என்றார் இன்னுமொருவர் தானும் அம்மகாம்களில் உள்ளவர்கள் பலருடன் பேசியதாகவும் அவர்களுடைய அனுபவம் வேறாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். ஒரு முகாமிற்கு சென்று ஒரு சிலருடைய வாக்கு மூலத்தை வைத்து முடிவுக்கு வர முடியாது என்று இன்னுமொருவர் குறிப்பிட்டார்.

இவற்றுக்கு பதிலளித்த டெஸ் பிரவுண் ‘நான் ஒரு முட்டாள் அல்ல. எனக்கு என்ன செய்கின்றேன் சொல்கின்றேன் என்பது தெளிவாகவே தெரியும். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதைச் சொல்ல என்னால் முடியாது. நான் கண்டதைக் கேட்டதை இங்கு சொல்கிறேன். இதனை வைத்துக்கொண்டு நான் எந்த முடிவுக்கும் வரவில்லை. ஆனால் அவர்கள் என்னிடம் சொன்னதை நான் மற்றவர்களுக்கும் சொல்கிறேன். அதனை யாரும் தடுக்க முடியாது’ என்று நறுக்காகத் தெரிவித்தார்.

மற்றுமொருவர் புலிகளிலும் பார்க்க இலங்கை அரசே கூடுதலான யுத்தக் குற்றங்களை புரிந்தள்ளது என்று குறிப்பிட்ட போது ‘இங்கு யார் கூடுதலாக மனித உரிமை மீறினார்கள் என்று போட்டி வைக்கவில்லை’ எனப் பதிலளித்தார் டெஸ் பிரவுண்.

எவ்வாறான ஒரு தீர்வை நீங்கள் முன் மொழிகிறீர்கள் என ஒருவர் கேட்கப்பட்ட போது ‘நான் தமிழர்களினதோ சிங்களவர்களினதோ பிரதிநிதியல்ல. இலங்கையில் ஒரு சமாதானம் வரவேண்டுமானால் அதற்கு நீங்கள் சமாதானம் வேண்டும் என்பதை விரும்ப வேண்டும். தீர்வும் இலங்கையர்களிடம் இருந்துதான் வரவேண்டும். நாங்கள் தீர்வு சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அதனை நீங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டிர்கள் அவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் நீங்கள் பேசுவதற்கான சூழலைத் தான் ஏற்படுத்தித் தருவோம்’ என்றார் டெஸ் பிரவுண். அப்போது அதில் குறிக்கிட்ட ஒருவர் இலங்கை அரசு இனவாத அரசு அதனுடன் பேச முடியாது என்றார். அதற்குப் பதிலளித்த டெஸ் பிரவுண் ‘நாங்கள் யாரும் நண்பர்களுடன் சமாதானத்தைக் கோருவதில்லை. எதிரியுடனேயே சமாதானத்தைக் கோர வேண்டும்’ என்று கூறிய அவர் ‘அரசுடன் பேச முடியாவிட்டால் யாருடன் பேசி சமாதானத்தை ஏற்படுத்தப் போகிறீர்கள்’ என்றும் கேள்வி எழுப்பினார்.

‘நான் சொல்லவில்லை. எல்ரிரியின் அறிக்கையே சொல்கிறது ஆயுதங்களைக் கைவிட்டு அரசுடன் அரசியல் பேச்சுவார்த்தையினூடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்று’ என்பதைச் சுட்டிக்காட்டிய டெஸ் பிறவுண் அதுவே சரியான வழியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

‘தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை வெளிப்படையான விவாதங்களுடாக ஒன்றாக முடிவு செய்ய வேண்டும்’ என்றவர் ‘அது எதிர்மறையானதாக அமையாமல் (ஏகபிரதிநிதித்துவம் ஆயுதப் போராட்டம் தமிழீழம்) சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டதற்கு ‘என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்ட அவர் எல்ரிரிஈ இன் தற்போதைய நிலைப்பாடு மதிக்கத்தக்கது எனத் தெரிவித்தார். மேலும் ‘புலம்பெயர்ந்தவர்கள் வழங்கும் ஒவ்வொரு பெனியும் பொருளாதார நோக்கங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார். கடந்த காலங்களில் புலம்பெயர்ந்தவர்களின் உதவிகள் எல்ரிரிஈ இன் யுத்த நோக்கங்களுக்குச் சென்றதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய அவர் ‘அமெரிக்க ஐரிஸ் பிரஜைகளின் நிதி ஐஆர்ஏ க்கு வழங்கப்பட்டது தடைப்பட்டதும் வட அயர்லாந்தில் சமாதானச் சூழல் தோன்றுவதற்கு ஒரு காரணம்’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ‘இலங்கை மக்களைப் பலப்படுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக தேசம்நெற் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த டெஸ் பிறவுண் பிரித்தானிய மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மாற்றியமைக்கப்படுவதன் மூலமே மனித உரிமையை மீறுபவர்களை தண்டிக்க வாய்ப்பு அதிகமாகும் எனத் தெரிவித்தார்.

பெரும்பாலும் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் இருந்த 200க்கும் அதிகமான மக்கள் மத்தியில் மிகவும் உணர்வுபூர்வமான கேள்விகளுக்கு டெஸ் பிரவுண் பதிலளித்தார். அவருடைய பதில்கள் பெரும்பாலும் புலம்பெயர்ந்த தமிழர்களின் அபிலாசைகளை திருப்திப்படுத்தாது என்பதை மிகவும் தெளிவாகவே அறிந்து வைத்திருந்ததை அவரின் பதில்களில் காணக் கூடியதாக இருந்தது. அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் பதிலளிக்கவும் அவர் முற்படவில்லை. ஸ்கொட்லன்ட் பகுதி பாராளுமன்ற உறுப்பினரான அவருக்கு இல்போர்ட் வாக்கு வங்கி பற்றிய அக்கறையும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் அவருடை பதில்கள் எவ்வித பூசி மெழுகலும் இன்றி வெளிப்படையானதாக அமைந்திருந்தது.

ஐ நா மனித உரிமைக் குழுவின் தீர்மானம் ராஜபக்ச அரசுக்கு மற்றுமொரு அரசியல் வெற்றி:

இலங்கை அரச படைகளின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் மேற்கு நாடுகளின் கூட்டினால் கொண்டுவரப்பட இருந்த தீர்மானம் இலங்கை அரசின் இராணுவ வெற்றியை வரவேற்கும் வகையில் அமைந்தது. இலங்கை அரச படைகளின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக பலத்த எதிர்பார்ப்புடன் கொண்டு வரப்பட இருந்த தீர்மானம் புஸ்வாணமாகியது. மாறாக புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவித்ததை பாராட்டும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானத்திற்கு சாதகமாக 29 நாடுகள் வாக்களித்தன. எதிராக 12 நாடுகள் மட்டுமே வாக்களித்தன. 47 உறுப்பினர்களைக் கொண்ட இந்த மனித உரிமைக் கவுன்சிலில் 6 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்: 29 நாடுகள் – Angola, Azerbaijan, Bahrain, Bangladesh, Bolivia, Brazil, Burkina Faso, Cameroon, China, Cuba, Djibouti, Egypt, Ghana, India, Indonesia, Jordan, Madagascar, Malaysia, Nicaragua, Nigeria, Pakistan, Philippines, Qatar, Russian Federation, Saudi Arabia, Senegal, South Africa, Uruguay, and Zambia.

தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள்: 12 நாடுகள் – Bosnia and Herzegovina, Canada, Chile, France, Germany, Italy, Mexico, Netherlands, Slovakia, Slovenia, Switzerland, and United Kingdom.

வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்கள்: 6 நாடுகள் – Argentina, Gabon, Japan, Mauritius, Republic of Korea, and Ukraine.

மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முடிந்த கையோடு இல்போர்டில் இடம்பெற்ற சந்திப்பில் ‘இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதராகக் குரல் கொடுக்கும் பாராளுமன்றத்திற்கு முன் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆனால் அதற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக எந்தப் போராட்டங்களும் இடம்பெறவில்லை’ என இலங்கைக்கான பிரித்தானிய அரச பிரதிநிதி டெஸ் பிறவுண் தெரிவித்தார். மே 27 மாலை இடம்பெற்ற சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே அவரிடம் இருந்து இக்கருத்து வெளிப்பட்டது.

குறைந்தபட்சம் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இடப்பெயர்வு முகாம்களுக்கு சுயாதீனமாகச் செல்லக் கூடிய அனுமதியைக் கூட அத்தீர்மானத்தினுள் கொண்டுவர முடியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்குழு மிகவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாறியுள்ளதை இத்தீர்மானத்தின் வாக்களிப்பு வெளிப்படுத்தி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நாடாகப் பார்க்கப்பட்ட தென் ஆபிரிக்காவும் அரசுக்கு ஆதரவான தீர்மானத்திற்கு ஆதரவாகவே வாக்களித்தது புலிகளின் ஆதரவாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தென் ஆபிரிக்காவின் பொருளாதார நலன்கள் இந்தியாவில் தங்கி உள்ளதால் தென் ஆபிரிக்கா இலங்கை – இந்திய அரசுகளுக்கு ஒத்து வாக்களித்து இருப்பதாக கொள்ளப்படுகிது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் அண்மைய இரு விடயங்கள் அங்கத்துவ நாடுகளிடையே பாரிய விரிசல் ஏற்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. ஏப்ரலில் ஈரானிய அதிபர் அஹமதிநிஜா உரையாற்றிக் கொண்டிருக்கையில் பெரும்பாலான மேற்கு நாட்டு ஐரோப்பிய ராஜதந்திரிகள் எதிர்ப்புத் தெரிவித்து மண்டபத்தைவிட்டு வெளியேறினர். அதே போன்று மே 27 இலங்கை அரசு தொடர்பான தீர்மானத்திலும் மேற்கு நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு எதிராக வாக்களிக்க வளர்ச்சி அடைந்துவரும் நாட்டுகள் இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களித்து உள்ளன.

இந்த அரசியல் முரண்பாடுகளிடையே மனித உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து வாக்களித்த பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இஸரேலும் மனித உரிமைக் காவலர்கள் அல்லர் என்பதும் உண்மையே. மனித உரிமைகள் என்பதும் அரசியல் பேரம் பேசலுக்கான ஒரு விடயமாகவே உள்ளது.

லாஹூர் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி!

பாகிஸ்தானின் லாஹூர் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரும் மீட்பு பணியாளர்களும் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களையும் காயமடைந்தவர்களையும் அருகிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானின் முக்கிய நகரங்களிலும் வெளியிடங்களிலும் தொடர்ச்சியான குண்டு வெடிப்புக்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள்  இடம்பெற்றுவருவதன் காரணமாக பெருந்தொகையான சிவிலியன்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பிரெஞ்ச் ஓபன்-முதல் சுற்றில் சானியா தோல்வி

27-saniamirza.jpgபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வியடைந்தார். நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் இரண்டாவதான பிரெஞ்ச் ஓபன் பாரிசில் நடக்கிறது. பெண்களுக்கான ஓற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானை சேர்ந்த கலினா வஸ்கோபோயேவாவை எதிர்கொண்டார்.

போதுமான பயிற்சியில் இல்லாமல் இந்த போட்டியில் பங்கேற்ற சானியா துவக்கத்தில் தவறு மேல் தவறு செய்தார். இதையடுத்து அவர் முதல் செட்டை 4-6 என பறிகொடுத்தார். அடுத்த செட்டில் சானியா வெற்றிக்காக கடுமையாக போராடினார். ஆனால், இவரது முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இரண்டாவது செட்டை கடும் போராட்டத்துக்கு பின் 6-7 என இழந்தார். இறுதியில் 4-6, 6-7 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.சானியா அடுத்ததாக பெண்கள் இரட்டையரில் சீன தை பேவை சேர்ந்த ஜியா ஜங் சுவாங்குடன் இணைந்து விளையாடுகிறார்

இலங்கையில் உள்ள புலிப் போராளிகளை கைகழுவும் புலம்பெயர் புலிகள்!!! : த ஜெயபாலன்

Protest_Londonதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுப்பபட்டு வந்த நிதி புலிகளின் தலைவர் வே பிரபாகரன் கொல்லப்பட்டது அறிய வந்தபின் சென்றடையவில்லை என இலங்கையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இராணுவ ரீதியாக பலத்த அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நூற்றுக் கணக்காண போராளிகள் புலம்பெயர் புலிகளினாலும் கைவிடப்பட்டு விட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது. இதன் காரணமாக சரணடையும் வழிகள் பற்றி சிந்திக்க முற்படுவதாக தெரியவருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு பகுதியினர் இலங்கை இராணுவத்திடம் சரணடைவது பற்றிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்பேச்சுவாரத்தையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டு அம்பாறைப் பொறுப்பாளரும் தற்போது அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தன்னுடன் சரணடைவது பற்றி தொடர்பு கொண்டிருப்பதை முரளீதரன் உறுதிப்படுத்தி உள்ளார்.

Reggie_TROதமிழீழ விடுதலைப் புலிகளின் துணை அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கயஸ்தர் ரெஜி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி விடயங்களுக்கு பொறுப்பானவர்கள் ஐரோப்பாவிலே குறிப்பாக லண்டனிலேயே உள்ளனர்.

ஏற்கனவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரில் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் யுத்தத்தில் கொல்லப்பட்டனர் அல்லது இயக்கங்களிடையே இடம்பெற்ற மோதலில் படுகொலை செய்யப்பட்டனர். ஒவ்வொரு இயக்கமும் தடைசெய்யப்பட்ட போது அதன் போராளிகள் அனைவராலும் கைவிடப்பட்டு உதிரிகளாகி பல தவறான வழிகளில் ஈடுபட்டனர். பிழையான அரசியல் சக்திகளால் உள்வாக்கப்பட்டு மீண்டும் அவர்கள் ஆயுத பாணிகளாக்கப்பட்டனர். அவர்களது குடும்பங்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டு குடும்பங்களைக் காக்கவும் தங்கள் உயிர்களைக் காக்கவும் ஆயுதக் குழுக்களாக உருவெடுத்தனர். இதனை புலிகளில் இருந்து கருணா அம்மான் பிரிந்து சென்ற போதும் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் உலகிலேயே மிகவும் செல்வந்தமான ஒரு இயக்கம். இதன் ஆண்டு வருமானம் 300 மில்லியன் டொலர்கள் என சில ஆண்டுகளுக்கு தி எக்கொனமிஸ்ற் தெரிவித்து இருந்தது. அப்படி இருந்தும் இந்த நிதிக் கையாள்கை சிலருடைய கரங்களில் மட்டுமே உள்ளது.

தற்சமயம் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பல நூற்றுக் கணக்கானவர்கள் பல்வேறு பகுதிகளில் சிதறுண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வே பிரபாகரன் உயிருடன் உள்ளாரா இல்லையா என்ற வாதம் தொடர்கையில் இப்போராளிகளின் எதிர்காலம் பற்றிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவாதா? அவ்வாறு சரணடைந்தால் அவர்களது வாழ்வுக்கான உத்தரவாதம் என்ன? அல்லது அவர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருவதற்கான வாய்ப்புகள்? இவை பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர்கள் அவசரமான ஆனால் தெளிவான முடிவுகைள அறிவிக்க வேண்டும்.

மேலும் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கு உதவுவது ஊனமுற்ற போராளிகளுக்கு உதவுவது போன்ற காத்திரமான நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலிகளின் கைவசமுள்ள நிதி பயன்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தற்போது கைவிடப்பட்டுள்ள சக போராளிகளின் எதிர்காலம் பற்றி தங்கள் நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து அப்போராளிகளின் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்த முயற்சி எடுப்பது மிக மிக அவசியம்.

பெரும் தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் முல்லைத்தீவில் படையினரால் மீட்பு – இராணுவப் பேச்சாளர் தகவல்

udaya_nanayakkara_brigediars.jpgபெரும் தொகையான ஆயுதங்கள் மற்றும் ஐநூறு கிலோவுக்கும் அதிகமான அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகளை முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகளில் தேடுதல்களை மேற்கொண்டு வரும் இராணுவத்தினர்,  மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

மீட்டெடுக்கப்பட்ட பொருட்களில் ரி-என்.ரி ரக அதிசக்திவாய்ந்த வெடிமருந்து – 260 கிலோ, ரி.என்.ரி. சிலப் 85 கிலோ,  குண்டுகளை வெடிக்கவைக்க பயன்படுத்தப்படும் மூலவெடிமருந்து – 83 கிலோ,  பெட்ன் ரக வெடிமருந்து – 11 கிலோ,  சி – 4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிமருந்து – 36 கிலோ,  கறுப்புப் பவுடர் – 13 கிலோ,  வெடிமருந்துகள் – 16 கிலோ,  ஆகிய பலதரப்பட்ட வெடிமருந்துகளை மீட்டெடுத்துள்ளனர்.

குண்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு குண்டுகள் – 530 கிலோ,  அலுமினியக் குண்டுகள் – 25 கிலோ,  குண்டுகளை வெடிக்கவைக்க பயன்படுத்தப்படும் கறுப்பு மற்றும் சிவப்பு நிற சுவிட்சுகள் – 17,300 மற்றும் 517 பியுஸ்களையும் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, 55 கிலோ எடையுள்ள இனங்காணப்படாத இரசாயனப் பவுடர்களையும் படையினர் இந்தப் பிரதேசத்திலிருந்து கண்டெடுத்துள்ளனர். இவற்றில் 35 கிலோ கறுப்பு நிற இரசாயனப் பவுடரும் 20 கிலோ வெள்ளை நிறப்பவுடரும் அடங்கும்.

ஆர்.பி.ஜி. குண்டுகள் – 44,  கைக்குண்டுகள் – 29, கிளேமோர் குண்டுகள் – 8, ஜொனி ரக கண்ணிகள் – 108, மிதி வெடிகள் – 98,  ரி. 56 ரக துப்பாக்கிகள் உட்பட பெருந் தொகையான ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு பொருத்தப்படும் பல்வேறு உபகரணங்கள் என்பவற்றையும் இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப் படையணியினர் கண்டெடுத்துள்ளனர். இதேவேளை இராணுவத்தின் 58 வது படையினர் வெள்ளைமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போது.

ரி-56 ரக துப்பாக்கிகள் – 206,  வெடிக்கவைக்கும் கருவிகள் – 1000,  வெடிமருந்து பொதிகள் – 11,  தற்கொலை அங்கிகள் – 03,  சினைப்பர் ரக துப்பாக்கிகள் – 02,  40. மி. மீ. ரக கிரனைட் லேஞ்சர் குண்டுப் பெட்டிகள் – 03,  ஒட்சிசன் சிலின்டர்கள் – 13,  அசிட் கலன்கள் – 15 அதாவது 5 லீட்டர்   கடல் கண்ணிகள் – 06   சுழியோடி உடைகள் 120 மி.மி. மோட்டார் குண்டுகள் – 44   81 மி.மீ. மோட்டார் குண்டுகள் – 13   60 மி.மீ. மோட்டார் குண்டுகள் – 39 உட்பட ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
 
 

நேபாளம், ஒரு நம்பிக்கையூட்டும் புரட்சிகரமான முன்னெடுப்பு. : சமிர் அமின்

Nepal_Maoistஉண்மையான புரட்சிகர முன்னேற்றம்.

விவசாயிகளின் பொதுவான புரட்சியை ஆதரித்து வரும் ஒரு விடுதலை இராணுவம் தலைநகரத்தின் வாயிலை எட்டுவதாகவும், நகர்ப்புற மக்கள் தம்பங்கிற்கு கிளர்ந்தெழுந்து மன்னராட்சியை அதிகாரத்திலிருந்து துரத்தியடித்துவிட்டு, தமது மீட்பர்களாக இந்த புரட்சிகர இராணுவத்தை வரவேற்பதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். நேபாள கொம்யூனிஸ்ட்டுக் கட்சியினரின் (மாவோ) புரட்சிகர மூலோபாயத்தின் திறமைக்கு வேறு சான்றுகள் தேவையிருக்காது. எமது சகாப்தத்தின் மிகவும் தீவிரமான, வெற்றிகரமான புரட்சிகர முன்னெடுப்பை இது வெளிப்படுத்துவதனால், இது மிகவும் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.

நேபாள கொம்யூனிஸ்ட்டுக் கட்சியினரின் இந்த வெற்றியானது நேபாளத்தில் தேசிய மற்றும் மக்கள் ஜனநாயக புரட்சிக்கான நிலைமைகளை உருவாக்கியிருப்பதுடன், நேபாள கொம்யூனிஸ்ட்டுக் கட்சி வரையறுத்திருப்பது போல, இந்த புரட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு பண்புகளையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. நகர்ப்புறத்தின் இந்த பொது எழுச்சியானது, வறிய வர்க்கங்களை நடுத்தர வர்கங்களுடன் இணைத்ததானது, ஏனைய நேபாள அரசியற் கட்சிகளை, தம்மைத்தாமே “குடியரசுப் புரட்சியாளர்கள்” என்று பிரகடனப்படுத்திக் கொள்ள நிர்ப்பந்தித்துள்ளது. புரட்சியாளர்களின் இந்த வெற்றிக்கு முன்னதாக, ஏனைய அரசியற் கட்சிகள் யாவும் சீர்திருத்த பாதையில் நம்பிக்கை வைத்து, பாராளுமன்ற தேர்தல்களில் இறங்கி, “அமைதிவழி” போராட்டங்களின் மூலமாக தமது இலக்குகளை அடைபவர்களாக, தம்மை மட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். மற்றய கொம்யூனிஸ்ட்டுக் கட்சியான நேபாள கொம்யூனிஸ்ட்டுக் கட்சி ( ஐக்கிய மார்க்சிச லெனினிஸ்ட்டுகள்) 2004 இல் முடியரசுவாத அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு மாவோயிஸ்ட்டுகளின் “சாகசவாதத்ததை” கண்டிப்பவர்களாக இருந்தார்கள்.

இந்த புரட்சியுடன் தம்மை இனங்காட்டிக் கொண்டதன் மூலமாக நேபாளி கொங்கிரஸ், ஐக்கிய மார்க்சிய லெனினிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்ட குறைந்தபட்ச அங்கிகாரத்தை மறுத்துவிட முடியாது என்பதை புரிந்து கொண்ட கொம்யூனிஸ்ட்டுக் கட்சியானது இந்த கட்சிகளுடன் தானாக முன்வந்து ஒரு சமரச உடன்பாட்டை செய்து கொண்டது.

“சமாதான உடன்படிக்கை” என ஐ.நா அதிகாரிகளால அழைக்கப்பட்டு புரட்சியாளர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த சமரச உடன்படிக்கையானது, புதிய ஜனநாயக மக்கள் குடியரசின் அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஒரு அரசியலமைப்புச் சபையை நிறுவுவதை கோருகிறது. ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கொம்யூனிஸ்ட்டுக் கட்சியானது, பலகட்சிகள் கலந்துகொண்ட தேர்தலில் வெற்றி பெற்று முதன்மையான இடத்தைப் பெற்றதுடன், இதன் தலைவர் பிரசந்திரா பிரதம மந்திரியாக ஆனார். இந்த நாட்டின் வரலாற்றிலேயே முதல் தடவையாக (ஏன் ஆசிய உபகண்டத்தின் வரலாற்றிலேயே முதல் தடவையாக) ஏழை விவசாயிகளும், ஒழுங்கமைக்கப்படாத நகர்ப்புற தொழிலாளர்களும், தலித்துக்களும், மற்றும் வெகுஜன வர்க்கங்களைச் சேர்ந்த பெண்களும் விகிதாசார எண்ணிக்கையில் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

எதிர்காலத்திற்கான ஐந்து பெரும் சவால்கள்.

கொம்யூனிஸ்ட்டுக் கட்சி செய்து கொண்ட சமரச உடன்படிக்கையானது எல்லா எதிர்கால பிரச்சனைகளையும் தீர்த்துவிடவில்லை. மாறாக, அது இந்த முரண்பாடுகளின் பரப்பெல்லையை வெளிப்படுத்திக் காட்டியது. இந்த கோணத்தில் பார்த்தால், புரட்சிகர மக்கள் சக்திகளை எதிர்கொள்ளும் சவால்கள் மிகப்பெரியவையாகும். இவற்றை நாம் அடுத்துவரும் ஐந்து பகுதிகளில் பரிசீலனை செய்வோம்.

1. நிலச்சீர்திருத்தம்

கொம்யூனிஸ்ட்டுக் கட்சியானது செயற்பாடுகளின் மூலமாக உருவான விவசாயிகளின் எழுச்சியானது, நிலப்பிரச்சனை தொடர்பாக கட்சி மேற்கொண்ட சரியான ஆய்வுகள் மற்றும் இந்த ஆய்வுகளின் அடிப்படையிலிருந்து புரட்சியாளர்கள் வந்தடைந்த சரியான மூலோபாயரிதியான முடிவுகள் ஆகியவற்றின் விளைவாகும். இந்த முடிவுகளின் அடிப்படையிலேயே பெரும்பான்மையான விவசாயிகளை ஐக்கிய முன்னணியில் ஒழுங்கமைப்பதும், இதனூடாக ஆயுத போராட்டத்தை நோக்கி முன்னேறுவதும் சாத்தியமாயிற்று. நிலங்களை கையகப்படுத்துவது, நில வாடகையை குறைப்பது அல்லது ஒழிப்பது, கந்துவட்டிக்காரர்களை கிராமங்களை விட்டு வெளியேற்றுவது போன்றவை அனைத்துமே இந்த ஆய்வுகளிலிருந்து தொடங்கியதால் மட்டுமே சாத்தியமாயிற்று. இதன் மூலமாக மட்டுமே இந்த கிளர்ச்சியானது நாடுதழுவிய அளவிலும், அதன் படையினுள்ளும் படிப்படியாக பரவத் தொடங்கியது. கொம்யூனிஸ்ட்டுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டமானது அரச படைகளை தோற்கடித்தது. தலைநகரத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியானது கொம்யூனிஸ்ட்டுக் கட்சிக்கு கதவுகளை திறந்துவிட்டபோது, புரட்சிகர இராணுவமானது இந்திய அரசினாலும் ஏனைய ஏகாதிபத்தியங்களினாலும் பலமாக ஆதரிக்கப்பட்ட அரச இராணுவத்தை முற்றாக அழித்திருக்கவில்லை என்பது உண்மைதான்.

“சமரசத்தின் உடன்படிக்கையில்” கையெழுத்திட்டுள்ள அரசியல் சக்திகள், தம்மை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் மூலமாக இண்டுவிதமான போக்குகளை முன்வைக்கப்படுகின்றன. கொம்யூனிஸ்ட்டுக் கட்சியினால் முன்மொழியப்படுவதானது தீவிரமான, புரட்சிகரமான நிலச்சீர்திருத்தம் ஆகும். இது நாட்டில் பெரும்பான்மையாக உள்ள அனைத்து வறிய விவசாயிகளுக்கும் நிலமும், அதில் உழைப்பதற்கு அவசியமான சாதனங்களும் கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் அதேசமயம், நடுத்தர மற்றும் பணக்கார விவசாயிகளது நிலங்கள் அப்படியே அவர்கள் கரங்களியே தொடர்ந்தும் இருப்பதை உத்தரவாதப் படுத்துகிறது.

நேபாளி கொங்கிரஸ் கட்சியோ ஒரு திட்டவட்ட மற்ற, மிதவாத நிலச்சீர்திருத்தை முன்வைக்கிறது. இதன்படி, எந்த புதிய நிலச்சீர்திருத்த முன்னெடுப்புகளும் மேற்கொள்வதற்கு முன்பாக, கடந்த காலத்தில் விவசாயிகளால் புரட்சியின் மூலமாக வெளியேற்றப்பட்ட நிலப்பிரபுத்துவ, கந்துவட்டி முறைமைகள் அந்த பகுதியில் மீண்டும் நிலைநாட்டப்படுவது அவசியம் என்று வலியுறுத்துகிறது. அதன் பின்பே நிலச்சீர்திருத்தம் பற்றிய எந்த பேச்சுக்களையும் தொடங்களாம் என்கிறது. இது விவசாய புரட்சியின் பலன்களை மீண்டும் அதே அக்கிரமக்காரர்களிடத்தில் திருப்பி ஒப்படைத்துவிட்டு மீண்டும் பழையபடி வேண்டிக் கேட்டுக் கொள்ளம் நிலைக்கு விவசாயிகளை தள்ளிவிடும்.

2. ஆயுத படைகளின் எதிர்காலம்

தற்போது இரண்டு ஆயுத படைகள் அருகருகே இருக்கின்றன. இப்படிப்பட்ட இருப்பானது தொடர்ந்து நீடித்திருப்பது சாத்தியமற்றது. இந்த இரண்டு படைகளும் ஒன்றிணைக்கப்படுவதை கொம்யூனிஸ்ட்டுக் கட்சி வலியுறுத்துகிறது. ஆனால் எதிர்தரப்பாரோ இதனைக் கண்டு வெளிப்படையாகவே பயப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு செயல் அரச படைகளின் அணிகள் மாவோயிச சித்தாந்தத்தின் “தொற்றுதலுக்கான” நிலைமைக்கு இட்டுச் செல்லும் என்று பகிரங்கமாகவே குறிப்பிடும் இவர்கள், மக்கள் படையின் அங்கத்தவர்களுக்கு “புனர்வாழ்வு கொடுப்பது” என்பதற்கு மேலாக அர்த்தமுள்ள எதனையும் முன்வைக்க முடியவில்லை.

3. முதலாளித்துவ ஜனநாயகமா அல்லது மக்கள் ஜனநாயகமும்

இந்த பிரச்சனைதான் எல்லா விவாதங்களையும் உசுப்புகிறது. நேபாள சமுதாயத்தில் ஜனநாயகத்தின் சம்பிரதாயமான சூத்திரங்களை நியாயப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். இவர்களது கருத்துப்படி ஜனநாயகம் என்பது, பலகட்சி கலந்துகொள்ளும் பாரளுமன்ற தேர்தல் முறைகள்: அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிவதை தடுப்பதாக கூறப்படும் சட்டவாக்கம், நிர்வாகம், மற்றும் நீதித்துறை ஆகியவற்றை பிரித்துவைக்கும் முதலாளித்துவ பொறிமுறைகள்: மனித உரிமை மற்றும் அடிப்படை அரசியல் உரிமைகள் பற்றிய பிரகடனங்கள் என்பவற்றுடன் இந்த ஜனநாயகம் குறுகிவிடுகிறது. மேற்கு நாடுகளில் இருந்து உலகளாவியரீதியாக அவர்களது தொடர்பு சாதனங்கள் மூலமாக பரப்பப்படும் இந்த மேலாதிக்க கருத்தானது இந்த விவாதத்திலும் தலையெடுக்கிறது.

ஜனநாயகம் பற்றிய இந்த சம்பிரதாயபூர்வமான வரையறுப்பை விமர்சிக்கும் புரட்சியாளர்கள், முதலாளித்துவ ஜனநாயகத்தை வலியுறுத்துபவர்களது “ஜனநாயக” சொல்லாடல்களில் தனிச்சொத்துடமை என்பது தலையாய அம்சமாக முதன்நிலைப்படுத்தப்படுதை சுட்டிக்காட்டுகிறார்கள். இதற்கு எதிர்மறையாக, புரட்சியாளர்கள் சமூக உரிமைகளை வலியுறுத்துகிறார்கள். ஒவ்வொரு மனிதரும் சாதாரணமாக தமது அன்றாட வாழ்வை நடத்துவதற்கு அவசியமாக உணவு, உடை, இருப்பிடம், வேலை, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்விற்கான உரிமைகள் என்பவை இந்த சமூக உரிமைகளில் அடிப்படையானவை என்கிறார்கள். தனிச்சொத்துடமை என்பது ஒன்றும் புனிதமானது அல்ல. அதன் எல்லை என்பது சமூக உரிமைகளினால் வரையறுக்கப்படுவதாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு பிரிவினர் சமூக முன்னேற்றம் பற்றிய அக்கறையில்லாத, தனிச்சொத்துடமை என்பதனால் வழிநடத்தப்படும், ஜனநாயகம் பற்றிய முதலாளித்துவ, ஆதிக்க கருத்தாக்கத்தை நியாயப்படுத்துகிறார்கள். மறுதரப்பினரோ, சமூக முன்னேற்றம் என்பதுடன் இணைந்துதான் ஜனநாயகத்தைப் பற்றி வாதிடுகிறார்கள்.

நேபாளத்தைப் பொறுத்தவரையில் இந்த விவாதத்தில் மயக்கத்திற்கு இடமில்லை, ஆனால் இந்த விடயமே அடிக்கடி காரசாரமான விவாதப் பொருளாக அமைந்துவிடுகிறது. “மேற்கத்தைய ஜனநாயகத்தின்” ஆதரவாளர்கள், அசலான பிற்போக்காளர்களை மட்டுமன்றி, வெகுஜன வர்க்கங்கள் பற்றியும் படும் துயர்கள் பற்றியும் போதிய விழிப்புணர்வற்ற, ஆனால் ஜனநாயகத்தின் பால் உண்மையான அக்கறையுள்ள நடுத்தரவர்க்க ஜனநாயக சக்திகளையும் கூட தம்பக்கத்திற்கு இழுக்க முயல்கிறார்கள். இந்த “ஜனநாயக உரிமைகளை காப்பதற்காக” தன்னார்வக் குழுக்களுக்கு பல வெளிநாட்டு சக்திகள் அதிகளவிலான நிதிவளங்கள் மற்றும் பெருமளவிலான அமைப்பாக்கல் வளங்களையும் கொடுத்து இந்த தன்னார்வ குழுக்கள் மூலமாக இந்த அந்நிய சக்திகள் பெருமளவில் செயலாற்றுகிறார்கள்: தம்மால் இயன்றவரையில் மிதவாத போக்கிற்காக அறைகூவல் விடுக்கிறார்கள். அந்நிய சக்திகளால் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவரப்படும் இந்த அரைகுறை ஜனநாயகத்திற்கு மேலாக எதுவுமே செய்ய இயலாது என்பது போல சிலரோ. எதுவுமே இல்லாமல் இருப்பதிலும் பார்க்க, மரபார்ந்த வரையறுக்கப்பட்ட ஜனநாயகமே போதும் என்பது போல வாதிடுகிறார்கள். இன்னும் சிலரோ கொம்யூனிஸ்ட்டு கட்சிக் கெதிராக குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். “இறுகிப்போன கொம்யூனிஸ்ட்டுக்கள்” , ஸ்டாலினிஸ்ட்டுகள், எதேச்சாதிகாரிகள், சீன அதிகாரவர்க்க முறைமைகளை அப்படியே பின்பற்றுபவர்கள் என்று பட்டஞ் சூட்டுகிறார்கள்.

தங்களது நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதில் கொம்யூனிஸ்ட்டுகள் சிறப்பானதொரு பணியை செய்கிறார்கள். தாம் விவசாயிகளது தனிச்சொத்துடமையையோ, அல்லது முதலாளித்துவ சொத்துடமையையோ -அவை தேசிய மற்றும் வெளிநாட்டவரது சொத்துடமைகளாக இருப்பினுங்கூட – கூட கேள்விக்குள்ளாக்கவில்லை என்பதை அனைவருக்கும் நினைவூட்டுகிறார்கள். ஆனால் தேசிய நலன்களுக்கு அவசியமாக இருக்கும் பட்சத்தில் தாம் சொத்துக்களை தேசியமயப்படுத்த தயங்கமாட்டார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, அந்நிய வங்கிகள் தமது நாட்டை உலகலாவிய நிதிச்சந்தையுடன் கட்டிப்போட முயல்வதை தடைசெய்வதை குறிப்பிடுகிறார்கள். அடுத்ததாக வருவது நிலப்பிரபுத்துவ சக்திகளது உடமைகள் பற்றிய பிரச்சனையாகும். அடுத்தடுத்து வந்த மன்னர்களால் தமது பரிவாரங்களுக்கு அள்ளிக் கொடுத்த, விவசாயிகளை உடமையிழக்கச் செய்யக் காரணமாக அமைந்த நிலப்பிரபுத்துவ அதிகாரத்ததை இவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். இந்த அதிகாரங்கள் மூலமாக அரசரது பரிவாரங்கள் அபகரித்துக் கொண்ட “நிலப்பிரபுத்துவ” நிலங்களையும், கட்டிடங்கள் பற்றிய பிரச்சனை பற்றியே கொம்யூனிஸ்ட்டுகள் பேசுகிறார்கள். தனிமனித உரிமைகளையும், அதனை உத்தரவாதப்படுத்தக் கூடிய நீதித்துறையின் சுயாதீன தன்மையையும் இவர்கள் கேள்விக்குள்ளாக்கவில்லை. இந்த உரிமைகளை குறைக்காமல், இன்னும் கூடுதலாக, உயர்ந்தபட்ச சமூக உரிமைகளையும், அதனை நடைமுறைப்படுத்த அவசியமாகும் சமூக சீரமைப்புக்களையும் உருவாக்குமாறு இவர்கள் அரசியலமைப்புச் சபையை கோருகிறார்கள். இப்படியாக மக்கள் ஜனநாயகத்தை வரையறுக்கும் இவர்கள், அரசியலும் வெகுஜன வர்க்கங்களின் சுய-ஒழுங்கமைப்பிலும் இடையீடு செய்வதன் மூலமாக இதனை படிப்படியாக நடைமுறைக்கு கொண்டுவர முயல்கிறார்கள்.

கொம்யூனிஸ்ட்டுக் கட்சியின் நடைமுறைகள் எதிர்காலத்தில் நேபாளம் பின்னோக்கி சறுக்கிச் செல்லவே மாட்டாது என்பதை உத்தரவாதப்படுத்திவிட முடியாது என்பது உண்மைதான். உதாரணமாக, எதேச்சாதிகார அதிகாரவர்க்க அரசை நோக்கியோ, அல்லது ஏனைய மிதவாத சந்தர்ப்பவாத சக்தியளுடனான கூட்டணிகளில் மூழ்கிவிடுவதையோ எதிர்காலத்தில் சாத்தியமற்றதென இப்போதே நாம் அடித்துக் கூறிவிட முடியாது. இங்கே எழுப்பப்படும் பிரச்சனைகள் கட்சிக்குள் தீவிரமான விவாதத்திற்கும், அக்கறை கூடிய ஆய்விற்கும் உரிய விடயங்கள் என்பதை காணும் ஒருவர் இந்த பரீட்சார்த்த முயற்சிகளை கண்டிக்க தனக்கு உரிமை உள்ளதாக கருதத்தலைப்பட மாட்டார். இப்படிப்பட்ட பலதரப்பட்ட சிந்தனைகளும் கட்சிக்குள் இருக்கின்றன.

நேபாள புரட்சியாளர்களின் இந்த விதமான ஆய்வுகளும், மூலோபாயங்களும் கடந்தகால தேசிய விடுதலை பற்றிய ஜனரஞ்சக சித்தாந்தங்களை (1955 இல் தொடங்கிய பாண்டுங் மாநாட்டுகால சிந்தனைகளை) கடந்த செல்லும் நோக்கில் போராட்டத்தை முன்னோக்கி தள்ளுகிறது. அந்த காலகட்டத்தில் ஆசிய, ஆபிக்க மக்களது நியாயமான, வெகுஜன போராட்டங்களில் இருந்து எழுந்த அரசுகள் மிகவும் குறைந்தளவு முற்போக்கானவையாகவே இருந்தன. தமது அதிகாரத்திற்கான நியாயாதிக்கத்தை எந்த சித்தாந்தங்களிலிருந்து பெற்றுக்கொண்டனவோ, அந்த சித்தாந்தங்கள் புரட்சிகர கோட்பாடாகிய மார்க்சியத்தை அடிப்படையாக கொண்டனவாக இருக்கவில்லை. அப்போது கொலனித்துவ ஆட்சியிலிருந்து புதிதாக விடுதலை பெற்றிருந்த இந்த நாடுகள் அங்கொண்றும் இங்கொண்றுமாக பல்வேறு சிந்தனை முறைகளிலிருந்து துண்டுகளை எடுத்து ஒட்டுப் போட்ட, ஒருவித கதம்பவாதத்தையே தமது சித்தாந்தமாக வரித்துக் கொண்டன. தமது வரலாற்றின் பொற்காலங்களாக தாம் கருதிய பகுதிகளை மறுவாசிப்பு செய்து, அவற்றை நவீன காலத்தின் முற்போக்கான கொள்கையாக முன்வைக்கப்பட்டது: புராதன சமூகத்தின் ஜனநாயக வடிவங்களை மீளமைப்பது மற்றும் ஒப்பீட்ளவிலான மதரீதியான வியாக்கீனங்களுடன் கூடிய தேசியவாத கற்பனை உள்ளடக்கியதாக இது கட்டமைக்கப்பட்டதாக இருந்தது. நவீன யுகத்தின் தேவைகளுக்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் அரசியல் நவீனமயப்படுத்தல்களின் அவசியம் பற்றிய விமர்சன பார்வையற்ற ஒருவித காரியவாதமாக இது இருந்தது. பாண்டுங் மாநாட்டுகால அரசுகளால் முன்வைக்கப்பட்ட “சோசலிசமானது” மிகவும் தெளிவற்றதொன்றாகவே இருந்தது. மறுவிநியோகம் மூலமாக “சமூக நீதியை” உத்தரவாதப்படுத்தப் போவதாக கூறும் ஜனரஞ்சக அரச கட்டுப்பாடு என்பதிலிருந்து வித்தியாசப்படுத்தப்பட முடியாததாக இருந்தது.

நேபாள கொம்யூனிஸ்ட்டுகள் சோசலிசம் தொடர்பாக மிகவும் வேறுபட்ட கண்ணோட்டத்தை உருவாக்கியுள்ளார்கள். தீவிர நிலச்சீர்திருத்தம், மக்கள் இராணுவம் மற்றும் மக்கள் ஜனநாயம் போன்றவற்றை உள்ளடக்கிய தற்போதய உயர்ந்தபட்ச திட்டம் நிறைவுபெறுவது என்பதுடன் இவர்கள் தமது “சோசலிச நிர்மாணம்” நிறைவுபெறுவதாக குறுக்கிக் கொள்வதை இவர்கள் தவிர்த்துவிட்டுள்ளார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் “தேசிய ஜனநாயக வெகுஜன” திட்டமானது சோசலிசத்திற்கான நீண்ட பயணத்தின் வெறும் தொடங்கு புள்ளியாகவே இவர்கள் கருதுகிறார்கள்.

4. சமஷ்டி பற்றிய பிரச்சனை

நேபாள சமூகத்தின் மிகவும் வித்தியாசமான பல்தரப்பட்டட விவசாய சுமூகங்களின் வெளிப்பாடாக இமாலயத்தின் சமவெளிகளின் பௌதீக மற்றும் மனித புவியியல் அமைகிறது. இது வெறுமனே இரண்டு, மூன்று அல்லது நான்கு இனக்குழுமங்கள் பற்றிய பிரச்சனை அல்ல. மாறாக நூற்றுக்கணக்கான சமூகங்கள் பற்றிய பிரச்சனையாகும். வெவ்வேறு கால கட்டங்களில் பல்வேறு இராணுவ தலைவர்கள், வெவ்வேறு மன்னர்களின் பெயரால் இந்த பகுதிகளை வெற்றி கொண்டுள்ளார்கள். வெற்றி கொண்ட இராணுவத் தலைமைகளின் விசுவாசிகளால், தாம் மன்னருக்கு ஆற்றிய சேவையின் பரிசாக இந்த சமூகளிடமிருந்து பறித்தெடுக்கட்ட நிலங்களை பயன்படுத்திக் கொள்வதற்கான தமது உரிமையை மீடடெடுபது எவ்வாறு என்பதே இவர்களது பிரச்சனையாகும். அத்தோடு அவர்கள் தாம் கௌரவமாகவும், சமத்துவமாகவும் நடத்தப்படுவதையும் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு மேலாக இவர்கள் அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் நோக்கம் கொண்டவர்கள் அல்லர். இந்தியாவை அண்டியுள்ள சமவெளிகளில் வசிக்கும் பல்வேறு சமூகங்களின் நிலைமையும் இதுதான். இவர்களே அண்மைக் காலங்களில் அந்நிய தலையீடுகளின் பிரதான இலக்காகவும் இருந்திருக்கிறார்கள்.

புரட்சியாளர்களால் முன்வைக்கப்படும் சமஷ்டிக் குடியரசு எனும் நிலைப்பாடானது இந்த நேபாளிய மக்களை நிச்சயமாக திருப்பதிப் படுத்தக் கூடியதாகும். ஆனால் இப்படிப்பட்ட ஒரு ஏற்பாடானது, மையப்படுத்தப்பட்ட அரச அதிகாரத்தை எதிர்ப்பவர்களால் சூழ்ச்சித்திரத்துடன் கையாளப்பட மாட்டாது என்பதை உத்தரவாதப்படுத்திவிடவும் முடியாது.

5. நாட்டின் பொருளாதார சுதந்திரம் குறித்து

ஐ.நா. நேபாளத்தை வளர்ச்சி குறைந்த நாடாகவே வகைப்படுத்தியிருக்கிறது. அரசின் நவீன நிர்வாக முறைமைகள், சமூக சேவைகள், மற்றும் நவீன உள்ளக கட்டுமானங்களை உருவாக்குவது போன்றவை அனைத்தும் வெளியாரது உதவிகளிலேயே தங்கியுள்ளது. இப்போது பொறுப்பிலுள்ள அரசாங்கமானது, இந்தவிதமாக நாடு அந்நிய சக்திகளில் முற்றாக தங்கியிருப்பதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி மிகவும் பிரக்ஞையுடன் இருப்பதாக தோன்றுகிறது. ஆனால் இவ்விதமாக விடுவித்துக் கொள்வதானது மெதுவாகவும் படிப்படியாகவுமே சாத்தியப்படும் என்பது குறித்தும் அறிந்திருக்கிறது. உணவில் தன்னிறைவு காண்பது என்பது நேபாளத்தின் பிரதான பிரச்சனையா இப்போது இல்லாதபோதிலும், இந்த தன்னிறைவானது மிகப்பெரும்பாலான சந்தர்ப்பங்பளில் வருந்தத்தக்க அளவிற்கு மக்கள் குறைந்நதளவு உணவையே உட்கொண்டு வருகின்றனர் என்ற உண்மையுடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய தொண்றாகும். மிகவும் திறமையானதும், அதிக செலவில்லாததுமான ஒரு சந்தை வலைப்பின்னலை உருவாக்குவதன் மூலமாக கிராமப்புற உற்பத்தியாளர்களும், நகர்ப்புற நுகர்வோரும் பயன் பெறுவது என்பதில் முக்கியமான பிரச்சனைகள் இருக்கின்றன. ஏனெனில் இங்கு இடைத்தரகர்களது நலன்களும் சம்பந்தப்பட்டுள்ளன. பகுதியளவில் கைத்தொழிலாகவும், பகுதியளவில் தொழில்துறை சார்ந்ததாகவும் இருக்கும ஒரு சிறு பண்ட உற்பத்தி முறையை வளர்த்தெடுப்பதற்கு அதிக அளவிலான உழைப்பையும், காலத்தையும் தேவைப்படும்.

20 சதவீத மக்களுக்கு சுபீட்சத்தையும் 80 சதவீத மக்களை வறுமையில் என்று கூறாவிடடாலும் தேக்கத்தில் வைத்திருக்கும் இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் பிரத்தியே சமூக முன்மாதிரித் திட்டத்திற்கு மாறாக, அனைவத்து மக்களையும், உள்ளடக்கும் வகையிலான ஒரு பொருளாதார அபிவிருத்தி முன்மாதிரித் திட்டத்தை புரட்சியாளர்கள் முன்வைக்கிறார்கள். இந்திய திட்டத்திற்கு நேரெதிரான வகையில் நேபாள புரட்சியாளர்களது திட்டமானது ஒவ்வொரு கட்டத்திலும், அனைத்து வெகுஜன வர்க்கங்களுக்கும் நேரடியாக பலனளிப்பதாக இருக்கும். கொள்கைப்பற்றுள்ள எவருமே இந்த விதமான ஒரு திட்டத்தையே ஆதரிக்க முடியும். ஆனால் இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என்பது இன்னும் செய்து முடிக்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது.

இவற்றை செய்து முடிக்கப் போவது யார்?

நேபாளத்தின் பிரதான அண்டை நாடான இந்தியாவுடன் நேபாள புரட்சியாளர்கள் தீவிரமான பகைமையுடன் மோதிக் கொண்டிருக்கிறார்கள்: நேபாளத்தின் புரட்சியானது இந்தியாவுக்குள்ளும் பரவிவிடும் அபாயம் பற்றிய பயம் இந்தியாவுக்கு இருக்கிறது. இந்தியாவில் தீவிரமாக பரவிவரும் நக்சலைட்டுகளது புரட்சியானது, அதன் ஆரம்ப படிப்பினைகளை நேபாளத்தில் கிடைத்த வெற்றியிலிருந்து பெற்றுக் கொண்டாலும், இந்திய உப கண்டத்தில் நடப்பிலுள்ள சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளையும், அதன் ஸ்திர தன்மையையும் தீவிரமாக கேள்விக்குள்ளாக்க வல்லது.

இந்த பகைமையை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தோன்றியுள்ள இராணுவ நல்லிணக்கத்திற்று இது ஒரு முக்கியமான காரணமாகும். கணிசமான அளவில் அரசியல் மற்றும் பொருள்வகை வளங்களை இந்தியா இந்த நோக்கில் நகர்த்தியுள்ளது. இவற்றுள் முக்கியமான அம்சம் ஒன்றுதான் ஒரு மாற்று இந்து அரசியல் கட்சியை, இந்து மதவாத பாரதிய ஜனதா கட்சியின் பாணியில், பாகிஸ்தானிய இஸ்லாமிய அரசியல் கட்சிகளை ஒத்த, தலாய் லாமாவின் பௌத்த அரசியலின் சாயலில், அமைப்பதற்கு இந்தியா முயற்சிப்பதாகும். அமெரிக்காவினதும் ஏனைய மேற்கத்திய நாடுகளதும் – குறிப்பாக பிரித்தானியாவினதும் – ஆரதவானது இப்படிப்பட்ட பிற்போக்கான வேலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நேபாளத்தின் புரட்சியின் பயன்கள் கைகூடுவது நீண்ட காலத்திற்கு இழுபட்டுப் போனால் இப்படிப்பட்டதொரு பலமான இந்துத்துவ அரசியல் சக்தியொன்று உருவாக்கும் முயற்சியானது வெற்றி பெறுவது தவிர்க்க முடியாததாகியும் விடலாம். முழுமையாக இல்லாவிட்டாலும் பகுதியளவிலாவது. இத்தகைய அந்நிய தலையீடுகள் நேபாளத்ததின் பிற்போக்கு சக்திகளை உரமூட்டி, பிரிவினைவாத இயக்கங்களின் தோற்றங்களுக்கு தூண்டுகோளாய் அமைந்துவிடலாம். வெளிச்சக்திகளின் உதவிகளை பெறுவது என்பது எப்போதுமே நிபந்தனைகளுடன் கூடியவைதாம்: ஆனால் பல சந்தர்ப்பங்களில் இது பகிரங்கமாக பேசப்படுவதில்லை. தன்னார்வ குழுக்களின் வலைப்பின்னல்களால் (NGOக்கள்) முன்வைக்கப்படும் மனித உரிமைகள் , மற்றும் ஜனநாயகம் பற்றிய ஆரவாரமான பேச்சுக்கள் எதிரியின் மூலோபாயத்தில் அவற்றிற்கே உரிய இடத்தை பெற்றுக்கொள்கின்றன.

புரட்சியாளர்களது மக்கள் செல்வாக்கிற்கு ஆதாரமாக விளங்கும் தீவிரமான சீர்திருத்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதானது, தற்போது அமுலிலுள்ள சமரச உடன்பாடுகளின் இழுபறிகளினால் கால தாமதங்களுக்குள்ளாகிறது. இந்த சூழ்நிலையானது அரசியல் தலைமையின் ஒரு பகுதியினரிடத்திலேயே குறிப்பிடத்தக்க சில போக்குகளை உருவாக்குகிறது: எதிர்தரப்பினர் தொடுக்கும் ஆரோக்சமான தாக்குதல்களினால் தடுமாறும் சிலர், சமரச உடன்பாடிக்கை எந்தளவிற்கு அனுமதிக்கிறதோ, அந்தளவிற்குள்ளேயே சீர்திருத்த நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் வலியுறுத்துகிறது: மாறாக இந்த பின்வாங்கள்கள், பிற்போக்கு சக்திகள் தமது எதிர் தாக்குதலை நடத்துவதற்கான தயாரிப்புக்களை செய்து கொடுத்துவிடுகிறது.

ஆனால் இது தொடர்பாக நாம் நம்பிக்கையிழக்கத் தேலையில்லை. மக்கள் அமைப்பாக செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், தமது வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்தும் போராட வேண்டியதன் அவசியம் குறித்தும் புரட்சியாளர்கள் வெகுஜன வர்க்கங்களுக்கு பகிரங்கமாகவே திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறாhகள்: அரசியல் நிர்ணய சபையின் முடிவுகள் எப்படியாக இருந்தபோதிலும் இது தொடரப்படுவது அவசியமானதாகும். எல்லாவற்றுக்கும் மேலாக வாக்குகளை கேட்பதையே ஒரே வழிமுறையாக கொள்ளும் பாரளுமன்ற அரசியல் பொறிக்குள் புரட்சியாளர்கள் சிக்கிக் கொள்ள வில்லை. இவர்கள் மிகவும் கவனமாக தமது சமூக அடித்தளத்தையும் (“social constituency”) -அதாவது, ஏழை விவசாயிகள், நகர்ப்புற் தொழிலாளாகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தேசபக்த மற்றும ஜனநாயக பிரிவினரை உள்ளடக்கிய மத்திய தர வர்க்கங்கள் போன்ற அமைத்தையும் உள்ளடக்கிய ‘வெகுஜன வர்க்கங்களை’,அரசியல் தளத்தில் அடிக்கடி ஏற்ற இறக்கத்திற்குள்ளாகிவரும் அரசில் அடித்தளத்தையும் ( “political constituency”) வேறுபடுத்தியே பார்க்கிறார்க்ள். புரட்சியின் மூலமாக அதிகாரத்திலிருந்து தூக்கி யெறியப்பட்ட நிலப்பிரபுத்துவ – தரகு முதலாளிய குழுமத்திற்குப் ( feudal – comprador block) பதிலாக தமது வெகுஜன சமூக அடித்தளத்தை, அமைப்பாக்கப்பட்ட ஆளும் குழுமமாக ( ruling organized social block) அமைப்பதே புரட்சியாளர்களது நீண்டகால வேலைத்திட்டத்தின் இலக்காக அமைகிறது.

நன்றி : Monthly Review
தமிழாக்கம் : மனோ.

நேபாளத்தின் புதிய பிரதமாரானார் மாதவ் குமார்

madhav_nepal.jpg நேபாளத்தில் மூத்த கம்யூனிஸ அரசியல்வாதியான மாதவ் குமார் நேபாள் நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

நேபாளத்தில் பிரதமர் பதவியில் இருந்து பிரசண்தா பதவி விலகியதை ஒட்டி உருவான அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் இந்த பதவியேற்பு நடந்துள்ளது. பிரதமரைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தில் மிகப் பெரியக் கட்சியாக விளங்கும் மாவோயியவாதிகள் கலந்துகொள்ளாமல் போனதை அடுத்து மாதவ குமார் நேபாள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இராணுவத்தின் தலைவரை பதவி நீக்கம் செய்ய முந்தையப் பிரதமர் பிரச்சண்டா செய்த முயற்சியை நாட்டின் அதிபர் ராம் பரன் யாதவ் தடுத்ததை அடுத்து மாவோயியத் தலைவர் பிரச்சண்டா பதவி விலகியிருந்தார்.