கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஈழத்தமிழர் மறு வாழ்வுக்கு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் – திமுக கோரிக்கை

karunanithi.jpg ஈழத் தமிழர் மறு வாழ்வுக்கு மத்திய அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை இரு தலைவர்களையும் நேரில் சந்தித்த திமுக எம்.பிக்கள் வலியுறுத்தினர்.

கருணாநிதி நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப்பிறகு டெல்லி சென்ற போது பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து இலங்கையில் ராணுவ தாக்குதலால் வீடிழந்தும் உடைமைகளை இழந்தும் தவிக்கும் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் மறுவாழ்வுக்காகவும் மத்திய அரசு குறைந்தது 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

காஷ்மீரில் துணைப்படையினருக்கு பதிலாக பொலிஸாரை மாற்றீடு செய்யுமாறு அமைச்சர் சிதம்பரம் உத்தரவு

காஷ்மீரில் இரு இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொலை செய்யப்பட்டதற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களை அடுத்து, அங்கு பாதுகாப்பு மறு பரிசீலனை ஒன்றைச் செய்வதற்காக இந்திய உட்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இராணுவ, பொலிஸ் மற்றும் துணைப்படை உயர் அதிகாரிகளுடனான சந்திப்புக்களை அடுத்து, காஷ்மீரில் உள்ள துணைப்படையினர் படிப்படியாக பொலிஸாரினால், மாற்றீடு செய்யப்பட வேண்டும் என்று சிதம்பரம் அழைப்பு விடுத்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த இந்த கொலைகளுக்கு துணைப்படையினரே பொறுப்பு என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். படையினர் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார்கள். ஆனால், அந்தப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தடயவியல் சோதனைகள் கூறுகின்றன.

வஸிரிஸ்தான் மாகாணத்தின் எஞ்சிய பிரதேசங்களை மீட்கும் இராணுவ நடவடிக்கை ஆரம்பம்

தலிபான் களின் மறைவிடங்கள் முகாம்களைத் தேடி அழிக்கும் இராணுவ நடவடிக்கையில் நேற் றிரவு இருபது தலிபான்கள் உயிரிழந்தனர். தலி பான்களின் முக்கிய தலைவர்கள் அல்கைதாவின் தலைவர்கள் மறைந்துள்ளதாகக் கருதப்படும் பான்னா மாவட்டத்தில் இராணுவ நடவடிக்கைகள் அரம்பமாகியுள்ளன.

வஸிரிஸ் தான் பிர தேச இராணுவ நடவடிக்கைகள் வெற்றியடை ந்து வரும் நிலையில் இராணுவத்தினர் முக்கிய கட்டத்துக்குள் வந்துள்ளனர். பான்னூ மாவட்ட த்தில் அல் கைதாவின் தலைவர்கள் மறைந்திருந்து மேற்குலகிற்கும் அமெரிக்காவுக்கு எதிராகத் திட்டமிடுவதாக அமெரிக்கா கருதுகின்றது. இத னால் பான்னூ மாவட்டத்தில் முன்னெடுக்கப்ப டும் இராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவின் கண்கள் அகலத் திறந்துள்ளன.

இரண்டு தினங்களுக்கு முன்னர் பான்னூ மாவட்டத்துக்குள் இராணுவம் நுழைந்த போது தலிபான்கள் கடும் தாக்குதலைத் தொடுத்தனர். கடுமையான மோதலின் பின் இராணுவம் அப்பகுதிக்குள் பிரவேசித்தது. இச்சண்டையில் அறுபது தலிபான்கள் பலியானதுடன் பெருந்தொகையானோர் காயமடை ந்தனர். பின்னர் பான்னூ மாவட்டத்திலுள்ள தலிபான்களின் மறைவிடங்கள் முகாம்களைத் தேடும் நடவடிக்கை இராணுவத்தால் தீவிரப்படுத்தப்பட்டது.

வஸிரிஸ்தான் மாகாணத்தை தலிபான்களின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானதிலிருந்து இதுவரை மூன்று மாவட்டங்கள் மீட்கப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள பான்னூ மாவட்டத்தை மீட்கும் இராணுவ நடவடிக்கை நேற்றிரவு ஆரம்பமா னது. இதன் முதற்கட்டத்தில் இருபது தலிபான்களும் மூன்று படைவீரர்களும் உயிரிழந்தனர்.

ஏர் பிரான்ஸ் விமான விபத்துக்கு தீவிரவாதம் காரணமா?

airfrancetail.jpgஅட்லான்டிக் கடலில் விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் விமானம், தீவிரவாதிகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற புதிய சந்தேகம் எழுந்துள்ளது.

அந்த விமானத்தில் பயணம் செய்து இறந்து போன பயணிகளில் இருவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக பிரான்ஸ் ரகசிய போலீஸார் கண்டுபிடித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீவிரவாத தாக்குதலாக இது இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிரெஞ்சு ரகசியப் போலீஸாரும், உளவுப் பிரிவினரும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட இரு பயணிகளின் பெயர்களும், அல் கொய்தா தீவிரவாதிகளின் பெயர்களைப் போலவே உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபாகரனே வந்தாலும் இனி ஆயுதம் வேண்டாம் அகிம்சையே வேண்டும் – தமிழருவி

thamilaruvi.jpgஈழத்தில் வாடும் தமிழரும், புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். “அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்” என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வாரம் இருமுறை வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் ‘தமிழா… உன் கதி இதுதானா?’ எனும் தலைப்பில் தமிழருவி மணியன் எழுதிய கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :  

“உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர்.
ஆளரவமற்ற இருட்புலத்தில்
அவர்கள் புதைக்கப்பட்டனர்.
யாரும் கண்ணீர் சிந்தவில்லை.
யாரோ அவர்களைக்
கல்லறைக்கு எடுத்துச் சென்றனர்.
அவர்தம்
புகழ்வாய்ந்த பெயர் கூறிட
அங்கே சிலுவையோ…
சமாதியோ… மண்டபமோ
ஏதுமில்லை.
புல் முளைத்திருக்கிறது அங்கே.
தாழ்ந்திருக்கும் புல்லிதழ் ஒன்று
அந்த இரகசியத்தைத் தாங்கியிருக்கிறது.
கரை மீறிச் சீறியடிக்கும்
அலைகள் மட்டுமே சாட்சியம்.
வல்லமை வாய்ந்த
அவ்வலைகள் கூட
தொலைதூர இல்லத்துக்கு
செய்தியைக் கொண்டுபோக முடியாது…”

என்ற வி.என்.ஃபிக்னரின் கவிதை ஒன்று, வன்னிப் பகுதியில் நிகழ்ந்து விட்ட சோகத்தைச் சொல்வதற்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது..!

விடுதலைப் புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டதாக ராஜபக்சவின் இராணுவம் அறிவித்துவிட்டது. பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை அரசு எக்காளமிடுகிறது. பிரபாகரன் செத்துவிட்டதாக ஒரு சான்றிதழ் பெற நாராயணனும், சிவசங்கர மேனனும் புதுடில்லியிலிருந்து கொழும்புக்குப் பறந்தனர். ராஜபக்சவின் வெற்றிச் சிரிப்பில், இருவரும் முகமலர்ந்து நிற்பதை செய்தித்தாள்கள் படமாக்கின. ஒரே நாளில் பல்லாயிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டது, நம் பிரதமரின் தூதுவர்களைத் துளியும் பாதிக்கவில்லை. தமிழினத்தின் உயிர் அவ்வளவு அற்பமாகப் போய்விட்டது!

சிங்களர்கள் அனுராதபுரத்திலும், கொழும்பிலும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதயத்தை அழுத்தும் சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாமல் தமிழ்க் குடும்பங்கள் ஒடுங்கின. இனி எல்லாம் நலமாக நடந்தேறும் என்று இந்திய அரசும், உலக நாடுகளும் ‘நாடி ஜோசியம்’ சொல்வதை நாம் நம்ப முயல்வோம்!

ஹிட்லரின் இன அழிப்புப் படையால் ஆஸ்விட்ச் வதை முகாமிலும், புச்சன்வால்ட் மரண முகாமிலும் சொற்களில் இறக்கிவைக்க முடியாத சோகங்களை அனுபவித்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எலீ வீஸல் தன், ‘இரவு’ என்ற படைப்பில் வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே நினைவுக்கு வருகின்றன.

‘என் வாழ்க்கையையே சபிக்கப்பட்ட ஒரு நீண்ட இரவாக மாற்றிய அந்த நாளை நான் என்றுமே மறக்கமாட்டேன். அந்தப் புகையை, மௌனமான நீலவானத்தின் கீழ் புகை வளையங்களாக மாறிய அக்குழந்தைகளின் சிறிய முகங்களை என்னால் மறக்க முடியாது.

என் நம்பிக்கையை முற்றிலும் விழுங்கிய அத்தீச்சுவாலைகளை, வாழும் ஆசையை முற்றாகப் பறித்துவிட்ட, ஆதியும் அந்தமும் அற்ற அந்த இருண்ட அமைதியை எப்படி மறப்பேன்? எனது கடவுள் நம்பிக்கையையும் ஆன்மாவையும் கொன்று, எனது கனவுகளை சாம்பலாக்கிய அந்தக் கணங்களை நான் என்றும் மறக்கமாட்டேன். கடவுளைப் போல் நான் வாழ விதிக்கப்பட்டாலும், அந்த நாளை என்றென்றும் மறக்கமாட்டேன்!’ என்று அவர் வெளிப்படுத்திய அதே உணர்வுகளுடன்தான் ஒவ்வொரு ஈழத்தமிழரும் இறுதி வரை இருப்பர் என்பது நிஜம். ‘பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகளால்தான் ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது. அது மட்டும் நிறைவேறியிருந்தால், இன்று ஈழத் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் வந்துசேர்ந்திருக்கும்!’ என்று சொல்லிவந்தவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கனிந்திருக்கிறது. பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் விடுதலைப் புலிகளை வென்றுவிட்டதாகவும் பிரகடனம் செய்திருக்கும் இலங்கை அரசு, சிங்களருக்கு சமமாக அனைத்து உரிமைகளையும் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழருக்கு வழங்க, இப்போது இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு இப்போது நடைமுறையில் இருக்கும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழருக்கு சம உரிமை சாத்தியமா? இலங்கை முழுவதும் சிங்களத்துடன் தமிழும் ஆட்சி மொழியாக இதயசுத்தியுடன் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் வழி கற்றவர்கள் அரசு நிர்வாகத்தின் சகல துறைகளிலும் அமர்ந்து பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுமா? முழுமையான கூட்டாட்சி மலராமற்போனாலும், தமிழக அரசுக்குரிய ஆட்சியுரிமைகளாவது வடக்கிலும் கிழக்கிலும் அமைக்கப்படும் அரசுகளுக்குக் கிடைக்கக்கூடுமா? கிழக்குப் பகுதியில் திருகோணமலைப் பக்கம் திட்டமிட்டு சிங்களரைக் குடியேற்றி தமிழர் நிலங்களை அபகரித்தது போன்று, வடக்கில் வன்னிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடக்காமல், தமிழரின் வரலாற்று வாழ்வாதாரப் பகுதிகள் பாதுகாக்கப்படுமா? இராணுவத்திலும் காவல்துறையிலும் தமிழர் கணிசமாக இடம்பெற சிங்களப் பேரினவாதப் பௌத்த வெறியர்கள் அனுமதிப்பார்களா? இந்த வினாக்களுக்கெல்லாம் இவர்கள் முதலில் விடை காணட்டும்.

“பிரபாகரன்தான் வன்முறையை வளர்த்தெடுத்தார். விடுதலைப் புலிகளால்தான் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஈழம் அமைதி இழந்ததற்கு இவர்களுடைய இரத்த வெறியே காரணம்!” என்று இங்குள்ள காங்கிரஸ் நாட்டாமைகள் கிளிப்பிள்ளைபோல் இன்று வரை கூறி வருகின்றனர். நூறு எலிகளை விழுங்கிய பூனை தீர்த்த யாத்திரை போன கதைதான் சிங்கள வெறியர்களின் செயல் என்பதை இவர்களுக்கு யார்தான் புரியவைப்பது?

சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று 1956 இல் அறிவிக்கப்பட்டதும், நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழினத் தலைவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, கொழும்பில் தமிழர் சொத்துகளைச் சூறையாடியது யார்? பண்டா – செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி 1958 இல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக்கிரையாக்கியது யார்? தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரம் தமிழர் தமிழகத்துக்கும், ஈழ நிலத்துக்கும் புகலிடம் தேடி ஓடச்செய்தது யார்? யாழ்ப்பாணத்தில் 1974 இல் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது, வெடிகுண்டு வீசி மோசமான தாக்குதலை முன்நின்று நடத்தியது யார்? மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977 இல் வெறித் தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார்? பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவந்து 1970 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது யார்? ‘தமிழரின் அறிவுக்கோயில்’ என்று கொண்டாடப்பட்ட யாழ். நகர் நூலகத்தின் 95 ஆயிரம் நூல்களை எரித்துச் சாம்பலாக்கியது யார்? 1983 ஜூலை 25 அன்று வெலிக்கடை சிறையில் 37 தமிழ் இளைஞரும் 27 ஆம் நாள் 18 தமிழரும் குரூரமாகக் கொல்லப்பட்டது யாரால்?

சிங்கள வெறியர்களின் படுபாதகச் செயல்களை ஒரு பட்டியலில் முடித்துவிட முடியாது. புத்த பூமியை இரத்த பூமியாக்கியவர்கள் சிங்களர்கள். அவர்களுடைய வன்கொடுமைக்கு எதிராக வந்து நின்றவர்கள் விடுதலைப் புலிகள். இதுதான் வரலாறு.

எள் முனை உரிமையும் பெறாமலேயே ஏராள மான இழப்புகளைச் சந்தித்துவிட்டது ஈழத் தமிழினம். தமிழீழம் காணும் கனவில் பல்லாயிரம் வீர இளைஞர்கள் களத்தில் பலியாகிவிட்டனர். வான்படை, கடற்படை, தரைப்படையென்று முப்படைகளை உருவாக்கி… ஒரு வலிமை மிக்க, கட்டுப்பாடான இராணுவத்தைக் கட்டமைத்த பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. வீடிழந்து, உறவிழந்து, மன அமைதியை முற்றாக இழந்து, மூன்று லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் இரக்கமற்ற இராணுவத்தின் முன் மார்பெலும்பு தெரியும் மழலைகளுடன் கையேந்தி நிற்கின்றனர். போதும் இந்தப் போர்!

சிங்களருக்கு சமமான உரிமைகளுடன் தமிழரை வாழ வைக்க முடியும் என்று சர்வதேச நாடுகள் நம்புகின்றன. நிறைவேறாத முயற்சி அது என்று அந்த நாடுகளின் அதிபர்களுக்கு விரைவில் புரிந்துவிடும். ‘புத்த மதத்துக்கு முக்கியத்துவம் தராமல் தமிழரோடு ஒப்பந்தம் போடுகிறாயா?’ என்று பண்டாரநாயகாவை சுட்டுக்கொன்ற புத்த சந்நியாசிகளின் பூமியில், தமிழருக்குக் குறைந்தபட்ச உரிமைகள் கொடுக்க ராஜபக்சவே முன்வந்தாலும் ஒன்று கொல்லப்படுவார்… அல்லது அதிகார நாற்காலியிலிருந்து அகற்றப்படுவார். பிரபாகரன் இல்லாத நிலையில், கொழும்பில் இருக்கும் ஆறு லட்சம் தமிழர் வாழ்வில் எந்த நேரத்திலும் அமைதி பறிக்கப்படும். காலம் பின்னாளில் நடத்தவிருக்கும் பாடம், நம் பிரதமருக்கும் சர்வதேசத் தலைவர்களுக்கும் உரிய ஞானம் தரும்.

இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு, ஈழத் தமிழருக்கு இந்தியா அரசியல் அதிகாரங்களை இனி வாங்கித் தரும் என்று நாம் நம்புவோமாக! அதற்குமுன்பு வதை முகாம்களில் ஆடு-மாடுகளைப் போல் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்குப் போதிய உணவும் குடிநீரும் மருந்தும் கிடைக்க வழி செய்ய வேண்டும். இருப்பிடங்களை இழந்து நிற்கும் பத்து லட்சம் பேரும் மிக விரைவில் தங்கள் சொந்தக் குடியிருப்புகளுக்குத் திரும்ப வழி காணவேண்டும். நிவாரண உதவிகளை நேரடியாக சர்வதேச நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் வழங்க அனுமதிக்க வேண்டும். ராஜபக்ச வாக்களித்தபடி, ஆறு மாதங்களில் ஈழத் தமிழரின் இதய ரணங்கள் ஆறும் வகையில் அரசியல் தீர்வை அளிக்க வேண்டும்.

பிரபாகரன் மீது பழியைப் போட்டு நம் சொந்தங்களை சாவுப் பள்ளத்தில் தள்ளியதை வேடிக்கை பார்த்த இந்திய அரசு, இனியாவது செயலில் இறங்க வேண்டும். ஆனால், மன்மோகன் அரசோ ராஜபக்ச சகோதரர்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பதைத் தடுப்பதில் தீவிரமாக இருக்கிறது. தமிழினம் எங்கே போய், யாரிடம் தன் விதியை நொந்து கொள்வது?!

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன், பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளின் முயற்சியில் ஹிட்லரோடு இணைந்து மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்தவர்களுக்கு எதிராக ‘நூரம்பர்க் விசாரணை’ நடத்தப்பட்டு, தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

போர்க் குற்றங்களுக்காகவும் மனிதகுல உரிமைகளுக்கு மாறான அத்துமீறல்களுக்காகவும் யாரையும் விசாரணைக் கூண்டில் நிறுத்தி, தண்டிப்பதற்காக சர்வதேச நாடுகள் முன்வந்தன. ‘சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்’ உருவானது. ‘உலகின் நீதிக்கும் அமைதிக்கும் அடித்தளம், மனித குலத்தின் கண்ணியம் காக்கப்படுதலே’ என்று தெளிவுபடுத்துகிறது. ‘சித்ரவதை, வன்கொடுமை, இழிவாக நடத்தப்படுதல் ஆகியவை மனித உரிமை மீறல்’ என்கிறது அந்தப் பிரகடனத்தின் ஐந்தாவது பிரிவு.

‘ஒரே நாளில் பல்லாயிரம் தமிழரைப் படுகொலை செய்த ராஜபக்ச அரசைக் கண்டித்து ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளும் வேண்டின. டென்மார்க் முயன்று 17 நாடுகளின் ஆதரவைத் திரட்டி மனித உரிமை சபையைக் கூட்டச் செய்தது. ஆனால், இலங்கை அரசு நிராயுதபாணிகளைக் கொன்று குவித்ததை நியாயப்படுத்தி, கம்யூனிச வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்திய ரஷ்யாவும் சீனாவும் கியூபாவும், இந்தியத் தமிழரின் எதிர்ப்பு வருமே என்று சிறிதும் கவலைப்படாமல் மன்மோகன் அரசும், ராஜபக்சவைக் காப்பாற்றக் களம் அமைத்தன!

வியன்னாவில் ஒரு சீக்கிய மதகுரு படுகொலை செய்யப் பட்டதும், பஞ்சாப் பற்றி எரிந்தது. மன்மோகன் சிங் பதறுகிறார். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வியன்னாவுடன் பேசுகிறார். ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழரின் பிணங்கள் விழுந்து மண் முழுவதும் மயானமானது. இந்திய அரசின் இதயம் மட்டும் இரங்கவில்லை. மன்மோகனின் மனம் பதறவில்லை; சோனியாவிடமிருந்து ஒரு சொல் வரவில்லை!

‘சகோதரன் ஒருவனை விலங்கு பிணைத்திருப்பது உங்களை வருத்தாவிட்டால், நீங்கள் உண்மையில் இழிந்த அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும். வல்லமையற்றவர்க்கும் வாயில்லாதவர்க்கும் பரிந்து பேச அஞ்சுவோர் அனைவரும் அடிமைகளே!’ என்றார் ஜேம்ஸ் ரஸ்ஸல். இங்குள்ள தமிழர்கள் இனவுணர்வற்ற அடிமைகள். ஐந்நூறு ரூபாய்க்குத் தங்கள் வாக்கை விற்பவர்கள். வாய்வீரம் பேசுவதில் மட்டும் வல்லவர்கள். பதவி தரும் சுகத்துக்காக ஏங்குபவர்கள். சொந்த நலனுக்காக இனநலனை இழப்பவர்கள்.

ஈழத்தில் வாடும் தமிழரும், புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். ‘அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்’ என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது.

முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் என்று எந்த உரிமை மறுக்கப்பட்டாலும் உறக்கத்திலிருந்து எழாத தமிழரையும், பல்லாயிரம் ஈழத் தமிழர் பலியான நாளில் குடும்ப உறவுகளை மத்திய அமைச்சர்களாக்க புதுடில்லி புறப்பட்ட தமிழினத் தலை வரையும், நம் இந்திய அரசு சரியாகவே இனம் கண்டு வைத்திருக்கிறது. அதனால்தான் அது ராஜபக்சவுக்கு அரியணை தாங்கி ஆலவட்டம் வீசுகிறது. தமிழினத்தின் புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.

‘பாண்டியனின் வழி நீயா? இமயக்கோட்டில் பறந்திருந்தது உன் கொடியா? இலங்கை நாட்டை ஆண்டவர்கள் உன்னவரா? கலிங்கர் மண்ணை அதிரடித்தது உன்குலமா? கடல்கள் மூன்றைத் தாண்டியவர் பரம்பரையா? புட் பகத்தில், சாவகத்தில் கொடி போட்டான் பிள்ளையா நீ? மாண்ட வரலாற்றினுக்கும் உன்றனுக்கும் மயிரளவும் தொடர்பில்லை, எதற்கு வார்த்தை?’ என்று சரியாகத்தான் சொன்னார் கண்ணதாசன்! என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி அவலமும் ஜிரிவி, தீபம், ஐபிசி, ஒரு பேப்பர் புலிகளுடன் செய்த கூட்டுக் கலவியும்.

உயிழிழந்த பொதுமக்கள் 20 000
காயமடைந்த பொதுமக்கள் 60 000
உயிரிழந்த சிறுவர்கள் 3600 (மார்ச் வரை)
காயமடைந்த சிறுவர்கள் 7650 (மார்ச் வரை)
உயிரிழந்த இராணுவத்தினர் 6200
காயமடைந்த இராணுவத்தினர் 30 000
உயிரிழந்த வி புலிகள் ?
காயமடைந்த வி பு ?
புனர்வாழ்வு முகாம்களிலுள்ளோர் 7500
இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ளோர் 275000

‘300 000 வன்னி மக்களுக்கும் மரணத்துள் வாழ்வு’ என்ற தலைப்பில் பெப்ரவரி 11ல் வெளியான லண்டன் குரலில் முன் பக்கச் செய்தியை வெளியிட்டு 10 000 வரையான பொது மக்கள் கொல்லப்படலாம் என்றும் அச்சம் வெளியிட்டு இருந்தோம். அந்த அச்சம் நிஜமானது மட்டுமல்ல கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 000க்கும் அதிகம் என ஐநா செய்மதிப் புகைப்படங்களை ஆராய்ந்தும் ஏனைய தகவல்களின் மூலமும் யுகே ரைம்ஸ் பத்திரிகை ஆய்வுகளை வெளியிட்டுள்ளது.

பெப்ரவரி முற்பகுதியிலேயே விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாததைச் சுட்டிக்காட்டியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டி இலங்கை இராணுவத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வன்னி மக்களை மரணத்தின் விளிம்புக்கு தள்ளி உள்ளது என்பதையும் எச்சரித்து இருந்தோம். யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் பொதுமக்கள் பற்றி எவ்வித அக்கறையையும் கொண்டிருக்கவில்லை.

பெப்ரவரி முற்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து அரசியல் தீர்வுக்கு முன்வர வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி இருந்தோம். ஆனால் இவைபற்றி கருத்தில் எடுக்காமல் இந்தியத் தேர்தல் முடிவுக்காக காத்திருந்து அனைத்தும் முடிவுக்கு வந்தபின் சரணடைந்து தங்கள் உயிர்களை இழந்துள்ளனர் புலிகளின் தலைமை. இவர்களின் முட்டாள்தனமான அரசியல் முடிவுகளுக்கு 20 000 பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதனைப் போன்று பல மடங்கினர் காயத்திற்குள்ளாகி உள்ளனர். ஒட்டுமொத்த வன்னி மக்களும் 275 000 பேர் அகதிகளாக்கப்பட்டு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணை மூடிக்கொண்டு பாழ்ங் கிணற்றில் வீழ்தது மட்டுமல்ல அதற்கு முன் வன்னி மக்களை அப்பாழ்ங்கிணற்றில் தள்ளிவிட்டுள்ளனர். புலிகள் மட்டுமல்ல புலம்பெயர்ந்த புலி ஆதரவுக் குழுக்களும் குறிப்பாக புலி ஆதரவு ஊடகங்கள் இந்த அழிவுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

யுத்தப் பிரதேசத்தின் யதார்த்த நிலையை விளங்கிக் கொள்ளாமல் புலிகளின் தலைமைக்கு எதுவெல்லாம் மகிழ்ச்சியைக் கொடுக்குமோ அவற்றை மட்டுமே தொலைக்காட்சியில் காட்டியும் வானொலியில் முழங்கியும் பத்திரிகையிலும் இணையங்களிலும் எழுதியும் வந்தனர். ‘வன்னி மக்கள் பெரும் அவலத்திற்குள் தள்ளப்படுகின்றனர். அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தக் கூடாது. இலங்கை அரச படைகளின் மூர்க்கத்தனமான தாக்குதலில் மக்கள் கொல்லப்படுவார்கள். அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.’ என்ற எண்ணம் இந்த ஊடகங்களிடம் இருக்கவில்லை. மாறாக கொல்லப்பட்டவுடன் அதனைப் பிரச்சாரப்படுத்தி அரசியல் செய்யவே முற்பட்டனர்.

இந்த மக்களின் குருதியில் அரசியல் பிரச்சாரம் செய்த ஜி ரிவி தீபம், ஐபிசி, ஒரு பேப்பர் மற்றும் புலிகளின் ஊது குழல்களான ஊடகங்கள் மக்களின் உயிரிழப்புகளும் அவலமும் தவிர்க்க முடியாதது என்ற வகையிலும் அவ்வாறான அழிவுகளே தமிழீழ உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்றும் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டன.

வன்னி மக்கள் எதிர்நோக்கிய மரண வாழ்வுக்கும் அவலத்திற்கும் இலங்கை இராணுவமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சம பொறுப்புடையவர்கள் என்பதே சுயாதீன அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் இதனை முற்றாக மறைத்து வன்னி மண் பூர்வீக மண். அந்த மக்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது என்று ஐரோப்பிய மற்றும் மேற்குநாடுகளில் உள்ள இந்த ஊடகங்கள் வன்னி மக்களை மரண வாழ்வுக்குள் இருக்க நிர்ப்பந்தித்தனர். இந்த மக்களின் அவலத்தில் புலிகளுக்கும் சம பொறுப்பு இருப்பதை தட்டிக் கேட்காமல் புலிக் கொடிகளையும் எங்கள் தலைவர் பிரபாகரன் என்று பிரபாகரனின் படத்தையும் தாங்கி நடத்தப்படும் ஊர்வலங்களுக்கு வக்காலத்து வாங்கினர்.

இலங்கை இராணுவம் மூர்க்கத்தனமான செல் தாக்குதலை நடத்த அதிலிருந்து தப்பி ஓடும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றனர். இங்குள்ள ஊடகங்கள் இதனைக் கண்டு கொள்ளவேயில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் திருப்திப்படுத்த இவர்கள் செய்த ஆய்வுகளும் விமர்சனங்களும் கானல் நீர் போலாக இன்று புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டு வன்னி மக்களும் அவலத்திற்குள் தள்ளி விடப்பட்டுள்ளனர்.

புலிகளின் தலைமை அழிப்பதற்கு இருபத்திநான்கு மணிநேரத்திற்கு முன்னரும் தமிழீழத்தை அடைவதற்கு நெருங்கிவிட்டோம் என்று ஆய்வுகளும் விமர்சனங்களும் செய்த இந்த ஊடகங்களால் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டது என்பதைக் கூடச் சொல்ல முடியவில்லை.

புலிகளை தட்டிக்கொடுக்கும் இடத்தில் தட்டிக்கொடுத்து இடித்துரைக்க வேண்டிய இடத்தில் இடித்துரைத்து இருந்தால் புலிகளின் தலைமையும் காப்பாற்றப்பட்டு இருக்கும் வன்னி மக்களும் இந்த அவலத்திற்கு உட்பட்டிருக்க மாட்டார்கள்.

ஆனால் காட் விற்பனையையும் விளம்பரத்தையும் மட்டும் நோக்காகக் கொண்டு சிற்றின்பத்திற்காக ஜி ரிவி தீபம் ஐபிசி ஒரு பேப்பர் போன்ற ஊடகங்கள் புலிகளுடன் செய்த கூட்டுக்கலவியே புலிகளுக்கு உயிராபத்தான நோயை ஏற்படுத்தியது. இறுதியில் சடுதியான அழிவையும் ஏற்படுத்தியது.

இந்நோய் புலிகளின் மூளையின் நரம்புத் தொகுதியைத் தாக்கி அவர்களின் சிந்தனைத் திறனை அழித்து கற்பனையுலகில் உலாவிட்டது.

இந்நோய்குரிய அறிகுறிகள் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் ஜனனி ஜனநாயகத்திலும் தென்படுகிறது. ஊடகங்களுடனான இந்தக் கூட்டுக் கலவியில் இருந்து விலத்தி யதார்த்தை புரிந்துகொண்டு செயற்படுவது ஜனனியின் அரசியல் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.

ராஜீவ்காந்தியுடன் பலியான பொலிசாருக்கு நினைவு தூண்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த 9 பொலீசாரும் இறந்தனர்.

அவர்களுக்கு ராஜீவ் காந்தி நினைவிடம் அருகில் 7 லட்சத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டு வருகிறது. நினைவுத்தூணில்,  பலியான எஸ்பி முகமது இக்பால், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்ட் ஜோசப், தமிழக சப் இன்ஸ்பெக்டர் எத்திராஜ், டெல்லி சப் இன்ஸ்பெக்டர் குப்தா மற்றும் பொலிஸ்காரர்கள் தர்மன், முருகன், ரவி, பெண் காவலர் சந்திரா ஆகிய 9 பேரின் பெயர்கள் பதிக்கப்படுகின்றன.

’டுவென்டி 20’ உலக‌கோப்பை: இலங்கை வெற்றி

muralitharan-sri-lankas.jpgஇங்கி லாந்தில் ’டுவென்டி 20’ உலக‌கோப்பை கிரிக்கெட்‌ போட்டித்தொடரில் ‌கடைசி லீக் சுற்றின் ’சி’ பிரிவில் இலங்கை ‌வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் எடுத்தது. ஜெயசூர்யா (81) தில்சன்(74) ஓட்டங்கள் எடுத்தார்.. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிம்மன்ஸ் 4 விக்கெட்டுகள் விழ்த்தினார்.

வெற்றி இலக்கு 193 ஓட்டங்கள் என்ற நிலையில் அடுத்து துடுப்பாடிய  வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது. இலங்கை அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிராவோ அதிகபட்சமாக 51 ரன் எடுத்தார்.

போர் ஓய்ந்தும் கூட ஈழத்தில் தமிழர்கள் கஷ்டம் தீரவில்லை – கனிமொழி

kani-mholi.jpgஇலங் கையில் போர் ஓய்ந்தும் கூட அங்கு தமிழர்களின் கஷ்டங்களுக்கு இன்னும் விடிவு பிறக்கவில்லை. அங்கு நிலையான தீர்வு ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி, ராஜ்யசபாவில் கோரினார். ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு, கனிமொழி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

இலங்கை தமிழர்களின் பாடுகள் பற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கையில் போர் முடிந்து விட்டது. மக்களின் கஷ்டங்கள் தீரவில்லை. ஏனெனில், அங்கு தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படுகிறது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமையும் மறுக்கப்பட்டு உள்ளது. அவர்களை சம குடிமக்களாக கருதப்படும் உரிமை மறுக்கப்படுகிறது.

எனவே, இலங்கையில் தற்போது போர் முடிந்துள்ள நிலையில் இந்திய அரசுக்கு பெரும் பங்கு உண்டு. அந்த மக்களை தங்கள் இல்லங்களில் குடிஅமர்த்த செய்வது, பரம்பரை வீடுகளில் வாழ வைப்பது, நிலையான அரசியல் தீர்வு காண்பதில் மத்திய அரசுக்கு பெரும் பொறுப்பு உள்ளது.

தாய்லாந்து பள்ளிவாசலுக்குள் துப்பாக்கிப் பிரயோகம் – 11 பேர் பலி; 12 பேர் காயம்

10thai-mos.jpgதாய் லாந்து பள்ளிவாசலில் சென்ற திங்கட்கிழமை இனந் தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோரில் சிலரது நிலைமைகள் கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிவாசல் தொழுகை நடாத்தும் இமாமும் இதில் பலியானார். மாலை நேரத்தொழுகையில் ஈடுபட்ட வேளையில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்குள்ளான தாய்லாந்து பள்ளிவாசல் முன்னால் திரண்டிருந்த மக்கள். இங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இறை வணக்கத்திலிருந்த 11 பேர் உயிரிழந்தனர்.

ஆயுதம் தாங்கிய ஐந்து பேர் இந்த தாக்குதலை நடாத்தியுள்ளனர். பள்ளிவாசலின் முன்புறமாக சிலரும் பின்புறமாக சிலரும் நுழைந்து சரமாரியாக வேட்டுக்களைத் தீர்த்து விட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் கூறினர். இவ்வேளை சுமார் ஐம்பது பேர் பள்ளிவாசலினுள் இறை வணக்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த மாதத்தில் நடந்த மிகப்பெரிய வன்முறை இதுவாகும். மலேசியாவை அண்மித்துள்ள தாய்லாந்துப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றது. தாய்லாந்தில் முகாம்களில் சுய அதிகாரம் கோரிப் போராடுகின்றனர்.

இதுவரை இப்போரில் மூவாயிரத்து எழுநூறு பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் மோதல்கள் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்ற திங்கட்கிழமை வீதியோரக் குண்டு வெடிப்பில் ஒரு பொலிஸார் கொல்லப்பட்டார். இதனால் ஆந்திர மடைந்த பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை இந்தப் பிரதேசத்தில் குண்டொன்று வெடித்தது. இதில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந் தன. இதன் எதிரொலியாக இப்பள்ளிவாசல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் சந்தோகிக்கப்படுகின்றது.

இதுவரை தாக்குதல்காரர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டிருக்கலாமென தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்து. முஸ்லிம்கள் எவ்வாறாயினும் பள்ளிவாசலு க்குள் தாக்குதல் நடாத்தமாட்டார்கள்.

எனவே, இது தாய்லாந்து இராணுவ வீரர்களின் வேலை தான் என நம்பச் செய்யும் வகையில் இப்பள்ளிவாசல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. யார் இதைச் செய்திருந்தாலும் அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கத்துடனே செய்துள்ளனர் என இராணுவ அதிகாரி கூறினார். தாய் லாந்தில் பெளத்தர்கள் பெரும்பான்மையினராகவுள்ளனர்.