உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

சொகுபேருந்தும் உழவு இயந்திரமும் மோதி விபத்து!

சொகுபேருந்தும் உழவு இயந்திரமும் மோதி விபத்து!

 

பனங்கொட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த உழவு இயந்திரமும் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தும் நேற்று அதிகாலை கொடிகாமத்தில் மோதி விபத்தில் சிக்கின. இவ் விபத்தில் இவ்விரு வாகானங்களையும் செலுத்தி வந்த சாரதிகள் உட்பட 4 நான்கு பேர் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்தானது ஏ9 வீதியில் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. பெரும்பாலும் இவ்வாறான விபத்துக்கள் அதிகாலை வேளையிலேயே நடைபெறுகின்றது. அதற்கான வாய்ப்புகளே அதிகம். நித்திரைத் தூக்கமும் சோர்வும் அதற்கான காரணங்கள். இது தொடர்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகின்றது. விபத்திற்கான காரணம் முழமையாகத் தெரியவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை தொடர்கின்றனர்.

ஜனாதிபதியின் இந்திய விஜயமும் எதிர்க்கட்சியினரின் சந்தேகமும்!

ஜனாதிபதியின் இந்திய விஜயமும் எதிர்க்கட்சியினரின் சந்தேகமும்!

நேற்று பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின் போது எதிர்கட்சி உறுப்பினர் நளின் பண்டார முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட “எட்கா ஒப்பந்தம்” தொடக்கம் அனைத்திற்கும் அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுமதி வழங்கியதா? அல்லது எட்கா (ETCA – Economic and Technology Cooperation Agreement) ஒப்பந்தத்தை செய்ய ரணில் விக்கிரம சிங்கவிற்கு மக்கள் ஆணை இல்லை என்று கூறி அவ்வொப்பந்தத்தை எதிர்த்து வந்த என்பிபி தற்போது எதிர்ப்பதை நிறுத்தி விட்டதா? எனக் கேட்டார். எட்கா ஒப்பந்தம் எனப்படுவது இலங்கை இந்தியாவிற்கிடையிலான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகும்.

எட்கா ஒப்பந்தம் பற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து இலங்கை கடும்போக்குடைய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இதனை எதிர்த்து வந்திருக்கின்றார்கள். எட்கா ஒப்பந்தத்தின் படி இலங்கை – இந்தியா இரு நாடுகளுக்குமிடையே பொருட்கள் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் வர்த்தகம் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்குதல் பற்றியதாகும். எட்கா ஒப்பந்தம் வருவதை எதிர்த்தவர்கள், கைச்சாத்தானால் இலங்கை இந்தியாவின் கொலனியாகிவிடும் என சிங்கள மக்கள் மத்தியில் பீதியையும் கிளப்பியிருந்தனர்.

இந்தநிலமையிலேயே அநுராவின் இந்தியப் பயணம் தொடர்பில் இக்கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தியாவுடனான வலுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் தீர்மானம் எடுக்க அநுரகுமார திஸ்ஸநாயக்காவிற்கு மக்கள் ஆணை உள்ளது. அதன்படி மேலதிகமாக உற்பத்தி செய்யும் வலுசக்தியை பிம்ஸ்டெக் வலயத்திற்குள் ஏற்றுமதி செய்து நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுப்போம் என்றார். அத்துடன் நாட்டை காட்டிக்கொடுக்கும் எந்த ஒப்பந்தத்திலும் நாங்கள் இந்தியாவுடன் கையொப்பம் இடவில்லை என்றும் அறிவுள்ளவர்கள் அதனைப் படித்துப் பாருங்கள் என்றும் காட்டமாக பதிலளித்தார்.

கஜேந்திரகுமாருக்கும் அறளைபெயருகிறது: சங்கரி ஐயாவுக்கு போட்டியாக கடிதம் எழுதுகிறார்!

கஜேந்திரகுமாருக்கும் அறளைபெயருகிறது: சங்கரி ஐயாவுக்கு போட்டியாக கடிதம் எழுதுகிறார்!
தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்துமாறு கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணி சங்கரி ஐயா தான் கடிதம் எழுதுவதில் வல்லவர். அவருக்குப் போட்டியாக கஜேந்திர குமாரும் கடித எழுத ஆரம்பித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அனுரவுடன் எவ்வித ஆக்கபூர்வமான பேச்சுகளையும் இதுவரை முன்னெடுக்காத நிலையில், இந்தக் கடிதத்தை கஜேந்திரகுமார் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், இலங்கை ஒற்றையாட்சிக் கருத்தைக் கைவிட்டு தமிழ் மக்களை உள்ளடக்கிய பெடரல் அரசியலமைப்பை தயாரிக்க, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்துமாறு மோடியை அவர் கோரியுள்ளார்..
கடந்த எழுபத்தைந்து வருடங்களில் இலங்கையின் கொள்கை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க தவறியமையே நாடு இவ்வளவு கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வீழ்ச்சியை எதிர்கொள்வதற்கு காரணம் என அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தை தன்னுடைய நலன் தவிர வேறு எதற்காகவும் இந்தியா கையிலெடுக்கப் போவது இல்லை. தமிழர்களுக்கான தீர்வு தொடர்பில் இலங்கை அரசின் மீது அது எவ்வித அழுத்தத்தையும் பிரயோகிக்கப்போவதும் இல்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது ஆட்சியிலுள்ளவர்களுடன் தமிழ்ப் பிரதிநிதிகள் ஆக்கபூர்வமாக தொடர் பேச்சுக்களை முன்னெடுத்து புரிந்துணர்வின் அடிப்படையில் அணுகப்பட வேண்டிய ஒன்று. பேசிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தயாராகவுள்ள தலைவராக அனுரகுமார திசநாயக்க காணப்படுகின்றார். ஆனால் அதைச் சரிவர பயன்படுத்தாது வெறும் கண்துடைப்புக்காக இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்.
தமிழர் விவகாரத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தம்முடைய அரசியல் இருப்புக்காகவே பயன்படுத்துகின்றனர் என்பது மீண்டும் இந்த சம்பவத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர்களுடைய அரசியல் சாயம் வெழுத்து வாக்கு வங்கி கவிழ்ந்து ஒரு ஆசனம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னணியினர் தொடர்ந்தும் பூகோள அரசியல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றினால் அடுத்த ஆசனமும் பறிபோகும் என்கின்றனர் அரசியல் அவதானிகள். இந்தியாவை வைத்து இலங்கைக்கு குட்டலாம் என்ற போர்மிலா காலாவதியாகிப் போனது காலாவாதியாகிப் போய்க்கொண்டிருக்கின்ற பொன்னம்பலம் சஜேந்திரகுமாருக்குப் புரியவில்லையா அல்லது அவருக்கும் அறளைபெயருகிறதா? என்கிறார் ஆய்வாளர் மாவடி ஏஆர் சிறிதரன்.

சர்வதேச அரசியல் நெருக்கடிக்குள் இலங்கை சிக்குகின்றது! இஸ்ரேலிய போர்க்குற்றவாளி இலங்கையில்!  

சர்வதேச அரசியல் நெருக்கடிக்குள் இலங்கை சிக்குகின்றது! இஸ்ரேலிய போர்க்குற்றவாளி இலங்கையில்!

 

சர்வதேச கிரிமினல் நீதிமன்றினால் குற்றச்சாட்டப்பட்ட இஸ்ரேலிய குற்றவாளி இலங்கையில் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ஹின்ட் ராஜாப் பவுண்டேசன் என்கின்ற அமைப்பு அறிவித்துள்ளது. பாலஸ்தீன குடிமகனின் கொலையில் குற்றவாளியாகக் கருதப்படும் இஸ்ரேலிய சிப்பாய் கால் பெரென்பு என்பவர் கொழும்பிலுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த நபரைக் கைதுசெய்யுமாறும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு ஒத்துழைக்குமாறும் ஹின்ட் ராஜாப் பவுண்டேசன் இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த விடயத்தில் இலங்கை அரசு எதிர்வினையாற்றினாலோ அல்லது எதிர்வினையாற்றமாலிருந்தாலே இது ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கும். சம்பந்தப்பட்டவரை இலங்கை அரசு கைது செய்யாவிட்டால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்குச் செய்கின்ற ஒரு துரோகமாக அது அமையும். குறிப்பாக தென்னாபிரிக்காவின் முயற்சியினாலேயே சர்வதேச குற்றிவியல் நீதிமன்றம் இஸ்ரேலியப் பிரதமர் மற்றும் இராணுவ அதிகாரிகள், வீரர்களுக்கு எதிராக இனப்படுகொலைக்குற்றச்சாட்டை கொண்டு வந்து அதில் வெற்றியும் கண்டது. அதற்கு இலங்கை தன்னுடைய பக்கத்தில் ஆதரவு வழங்க வேண்டிய கடமைப்பாட்டை உடையது.

ஆனால் சம்பந்தப்பட்ட இஸ்ரேலிய போர்க் குற்றவாளி கைது செய்யப்பட்டால், இஸ்ரேலும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் இலங்கையில் ஜனாதிபதி அனுரா தலைமையிலான ஆட்சிக்கு ஆப்பு வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அதற்கு பொன்னம்பலம் கஜேந்திரகுமார் போன்றவர்கள் அரசியல் ரீதியில் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஜனாதிபதி அனுராவுக்கு கொலை அச்சுறுத்தலும் உருவாகலாம். அதனால் இவ்விடயம் தொடர்பில் மிக அவதானமாக இலங்கை அரசு செயற்பட வேண்டும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

கால் பெரென்புக் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொலி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கவச வாகனம் ஒன்றின் திரையினூடாக சிதைவடைந்து இறந்திருந்த பாலஸ்தீன குடிமகன் ஒருவரின் உடலத்தைப் பார்க்கின்றார். இன்னொரு நபருடன் அராபிய மொழியில் சிரித்து கேலி செய்கின்றார். அவர்களது உரையாடலில் சிதைவடைந்த உடலை போர் வெற்றியின் அடையாளமாக கையாளுவது தெரிகின்றது.

 

காணொலியின் அடிப்படையில், காஸா பகுதியில் கால் பெரென்பு இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை, மனிதாபிமான சட்டங்களை மீறிய செயல்களில் அவர் நேரடியாக ஈடுபட்டிருந்தமை, யுத்த விதிமீறிய கொலையில் ஈடுபட்டமை மற்றும் இறந்தவரின் மதிப்பை தாழ்த்திய சம்பவங்கள் வெளிப்படையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

 

பிடிக்கப்போன பிள்ளையாரை குரங்காக்கிய ஊசி அர்ச்சுனா!

பிடிக்கப்போன பிள்ளையாரை குரங்காக்கிய ஊசி அர்ச்சுனா!

சமீப வாரங்களாக கொழுந்துவிட்டெரியும் யாழ்ப்பாண வைத்திய சாலையில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றிய 170 மருத்துவ ஊழியர்களின் பணி நியமனப் பிரச்சினையை கையிலெடுத்துள்ள எம்பி அர்ச்சுனா நேற்றைய தினம் பாராளுமன்றதில் இவ்விடயத்தை சொதப்பினார். மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு என்று நேர ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்ட அர்ச்சுனா எடுத்துக் கொண்ட விடயத்தலைப்பிற்கு அப்பால் போய் தனிமனித தாக்குதல்களில் ஈடுபட்டு சபையின் நேரத்தை வீணடித்தார்.

எம்பி அர்ச்சுனா கொண்டு வந்த விடயத்தின் கனதியின் பொறுப்பையுணர்ந்து செயற்படவில்லை என மக்கள் விசனமடைந்துள்ளனர். நேற்றைய தினம் எம்பி அர்ச்சுனா பாராளுமன்றத்தில் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் மற்றும் தொண்டர் அடிப்படையில் வேலை செய்கின்ற பணியாளர்கள் பல சிரமங்களையும் துன்பங்களையும் எதிர்கொள்வதாக தன்னிடம் பலர் முறையிட்டு அவற்றுக்கு தீர்வு பெற்றுத் தரும்படி கேட்டுள்ளதாகவும், இவ் விடயங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக ஊசி அர்ச்சுனாவுக்கு முன்னதாகவே சமூக செயற்பாட்டாளர் தம்பி தம்பிராஜா அந்த ஊழியர்களை கொழும்பிற்கு அழைத்துச் சென்று, சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன், அவர்கள் தங்கள் முறைப்பாட்டை சொல்வதற்கு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனா தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தொடங்கிய விடயத்தை விட்டு விலகி யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம், பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, முன்னாள் அமைச்சர்கள் குறிப்பாக டக்ளஸ் தேவாநந்தா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா என ஒவ்வொருவர் மீதும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை வைத்து கூச்சலிட்டார். இக் கூச்சல்களின் நடுவே எதிர்கட்சியினரைப் பார்த்து கடுமையாக விமர்சித்தார். நீங்கள் டக்ளஸ் தேவாநந்தாவை வைத்து தமிழ் மக்களை கொன்று போட்டீர்கள் என்றும் எதிர்கட்சித் தலைவர் O/L பரீட்சையில் சித்தியடையவில்லை எனவும் ஆதாரங்களை கொண்டு வராமல் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்தார். இதே டக்ளஸ் தேவானந்தாவை தனது தந்தை என்றும் சில மாதங்களுக்கு முன் துதி பாடியதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

மேலும் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தன்மீது மக்களுக்காக குரல் கொடுத்ததற்காக 19 வழக்குகள் போடப்பட்டுள்ளாதாகவும், பாராளுமன்றத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தான் தாக்கப்பட்டதாகவும் முறையிட்டார். தன்னுடைய பாதுகாப்புத் தொடர்பில் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே சபாநாயகர் அடிக்கடி குறுக்கிட்டு அர்ச்சுனாவை சமர்ப்பித்த விடயம் தொடர்பில் பேசும்படி எச்சரித்தார். அதை எதையும் காதில் வாங்காது அர்ச்சுனா தான் விடயத்திற்குள் நின்று கொண்டு தான் பேசுகிறேன் என்று கோபமாக கத்திக் கொண்டு “என்னுடைய கருத்துக்களை சபையில் முன்வைக்க எனக்கு சரியான வாய்ப்புக்கள் வழங்க முடியாவிட்டால், நான் சபைக்கு வராது வீட்டில் இருக்கிறேன்” என முரண்பட்டுக் கொண்டார். அத்தோடு நிற்காமல் எதிர்க்கட்சித் தலைவரை அவதூறாக பேச முற்பட்டார். அப்போது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அர்ச்சுனா கிண்ணியாவில் சஜித் பிரேமதாசா தலைமையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மேடையில் அமர்ந்திருந்தை ஞாபகப்படுத்தியோடு, “அது யாருடைய அரசியல் மேடை?” என சிலேடையாக கேட்க அனைவரும் நளினத்தோடு சிரிக்க ஆரம்பிக்க அர்ச்சுனா தனது குறளி வித்தையை நிறுத்தினார்.

பிந்திய செய்திகளின்படி சபாநாயகர் எம்பி அர்ச்சுனா சபைக்கு முரணாக வரம்பு மீறி உளறியவையை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படியே ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்தொடரிலும் எம்பி அர்ச்சுனா சபையின் கவனத்தை திசை திருப்பி சர்ச்சைகளில் ஈடுபட்டுக் கொண்டு வந்தால் அர்ச்சுனாவை தெரிவு செய்த மக்களுடைய பிரச்சினைகள் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படாது. பாராளுமன்றம் மக்களுக்கான பிரச்சினைகளை பேசி மற்றும் விவாதித்து தீர்வு காணுமிடம். ஊசி அர்ச்சுனா மாறாக தனது தனிப்பட்ட பகை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமான தனி மனிதர்களுக்கிடையான பிணக்குகளை பேசும் இடமாக மாற்றி வருகின்றார்.

இப்படியிருக்க யாழ்ப்பாண வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி நேற்றைய தினமான டிசம்பர் 18 அர்ச்சுனா மீது 100 கோடி நட்ட ஈடு கேட்டு மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், அவ்வாறு 100 கோடி கிடைக்கும் போது அதனை யாழ்ப்பாண வைத்தியசாலை அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் என முகநூலினூடாக அறிவித்துள்ளார்.

பொதுவாக இலங்கையில் உள்ள தமிழ் மருத்துவர்களுக்கு ஒரு உயர்வுச் சிக்கல் மனோநிலையுண்டு. தாங்கள் ‘டொக்டர்ஸ்’ என்பதால் தங்களுக்கு அறிவுப் புலமை அதிகம் எனத் தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் உரையாடல்களில் நடவடிக்கைகளில் அடிமுட்டாள் தனமாகவும் சகிக்க முடியாத அளவுக்கு மோசமான கருத்தியல் நிலைப்பாடுடையவர்களாகவும் உள்ளனர். தங்களை ‘சேர்’ என அழைக்க மற்றவர்களை வற்புறுத்துவது, நான் ‘டொக்டர்’ நான் டொக்டர் என தங்களுக்கு தாங்களே அழைத்துக்கொள்வது போன்ற தாழ்வுச் சிக்கல்களும் இவர்களிடம் உண்டு. நிறைகுடம் தழும்பாது என்பார்கள். இந்த வெற்றுக் குடங்களின் குடைச்சல் தாங்க முடியிதில்லை என்கிறார் ‘சும்மா’ டொக்டர் பொன்னம்பலம்.

சமஷ்டியாட்சி அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இடமளிக்க மாட்டோம் – சரத் வீரசேகர

இந்தியாவின் விருப்பத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படக் கூடாது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின்போது மாகாணசபைத் தேர்தல்களை அடுத்த வருட நடுப்பகுதியில் நடத்துவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியமா, அவசியமற்றதா என்பதை இலங்கையர்களே தீர்மானிக்க வேண்டும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இந்தியாவினால் பலவந்தமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆகவே இந்தியாவின் விருப்பத்துக்கமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது முறையற்றது.

மாகாண சபைத் தேர்தல் குறித்து மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என்பதை அரசாங்கமும், இந்தியாவும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டுக்கும், தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த பணிகளை நிறைவு செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சமஷ்டி முறைமையிலான அரசியலமைப்பு உருவாக்கத்துக்கே நல்லாட்சி அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. சமஷ்டியாட்சி முறைமை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அம்சங்களை இல்லாதொழிக்கும்.

ஆகவே எக்காரணிகளுக்காகவும் சமஷ்டியாட்சி அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் சரத் வீரசேகர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

தந்தை ஜனாதிபதி என்பதால் பரீட்சை சட்டத்திட்டங்களை மீறி சட்டமாணி பரீட்சை எழுதிய நாமல் ராஜபக்ஷ !

தந்தை ஜனாதிபதி என்பதால் பரீட்சை சட்டத்திட்டங்களை முழுமையாக மீறி தனி அறையில் இருந்து சட்டமாணி பரீட்சை எழுதிய நாமல் ராஜபக்ஷ பல்கலைக்கழகங்களில் கடினமாக படித்து பட்டம் பெற்றவர்களின் கல்வித் தகைமையை கேள்விக்குள்ளாக்குகிறார்.
முறையான விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாடசாலை மாணவர்களின் கல்வி தொடர்பான குறை நிரப்பு பிரேரணையின் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வி தகைமை பற்றி பேசப்படுவது சிறந்ததொரு மாற்றமாகும். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கல்வித் தகைமை பற்றி ஏன் பேசப்படுவதில்லை என்று பலர் கேள்வியெழுப்புகிறார்கள்.
நாமல் ராஜபக்ஷவுடன் சட்டக்கல்லூரியில் கல்வி கற்றவர் வெளிநாட்டில் இருந்து இவ்விடயம் குறித்து பேசியுள்ளார். நாமல் ராஜபக்ஷ இந்தியாவில் பெற்றுக் கொள்ள ஏதேனுமொரு கல்விச் சான்றிதழை பயன்படுத்தியே சட்டக்கல்லூரிக்கு தேர்வாகியுள்ளார். நாமல் ராஜபக்ஷ பிரத்தியேக அறையில் இருந்து 2010 ஆம் ஆண்டு சட்டமாணி இறுதி பரீட்சையை எழுதியதாகவும் அவருக்கு வினாத்தாள் முன்கூட்டியதாகவும் சுவிஸ்லாந்தில் அரசியல் அடைக்கலம் பெற்றுள்ள துசார என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ முறையற்ற வகையில் பரீட்சைக்கு தோற்றியமை தொடர்பில் துசார என்ற நபர் முறைப்பாடளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏனெனில் நாமல் ராஜபக்ஷவின் தந்தை அப்போதைய ஜனாதிபதி. இதன் பின்னர் நாமல் ராஜபக்ஷ ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டத்தின் பின் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் உயர் பீடம் நாமல் ராஜபக்ஷவின் முதல் பட்டத்தை கேள்விக்குள்ளாக்கி அவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இதுவே வரலாறு தந்தை ஜனாதிபதி என்பதால் பரீட்சை சட்டத்தை முழுமையாக மீறியே நாமல் ராஜபக்ஷ சட்டமாணி பரீட்சை எழுதினார். முறையாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகத்தில் கடினமாக படித்து பட்டம் பெற்றவர்களை இவர் இன்று கேள்வியெழுப்புகிறார் என்றார்.

போப்பாண்டவருக்கான போட்டியில் கொழும்பு கார்டினல் மல்கம் ரஞ்சித்!

போப்பாண்டவருக்கான போட்டியில் கார்டினல் மல்கம் ரஞ்சித்!

தற்போதைய 88 வயதடையும் போப்பாண்டவர் பலவீனமாகவும் நோயாளியாகவும் ஆகும் நிலையில் அடுத்த போப்பாண்டவருக்கான தெரிவு விரைவில் இடம்பெறலாம் எனவும், அடுத்த போப்பாண்டவருக்கான போட்டியில் கொழும்பு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்களும் போட்டியிடுவார் என வத்திகானோடு தொடர்பான இணையத்தளம் தெரிவித்துள்ளது. இப்போட்டியில் 12 கார்டினல்கள் போட்டியிட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்டினல் மல்கம் ரஞ்சித் வெளிப்படையான கருத்துக்களை முன்வைத்து வருபவர். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரிவருபவர். தற்போதைய போப்பாண்டவர் பிரன்ஸிஸ் ஒப்பீட்டளவில் லிபிரல் கொள்கையுடையவர். லத்தீன் அமெரிக்காவில் வளர்ச்சியடைந்த விடுதலை இறையியலூடாக மேலே வந்தவர்.

பொதுவாக அடுத்து வரும் போப்பாண்டவர் முன்னையவருடைய வழியில் செல்லமாட்டார் என்ற கருத்து இருப்பதாகவும் அதனால் அடுத்த போப்பாண்டவர் சற்று இறுக்கமான பழமைத்துவவாதியாக அமையலாம் எனவும் கருதப்படுகின்றது. போப்பாண்டவரை கார்டினல்கள் தெரிவு செய்வர். ஆனால் அவர்கள் 80 வயதுக்கு குறைவானவர்களாகவும் இருக்க வேண்டும். 253 கார்டினல்களில் 140 பேர் எண்பது வயதுக்குக் குறைந்தவர்கள். இவர்கள் நேரடியாக வத்திக்கானுக்கு வந்து வாக்களிக்க வேண்டும். இந்த வாக்களிப்பு நீண்ட நாட்களுக்கு நடைபெறும். ஆனால் வாக்களிக்கப் போகும் கார்டினல்களுக்கு போட்டியிடும் கார்டினல்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கான சூழலும் இல்லை. போட்டியில் உள்ளவர்கள் தாம் எதிர்காலத்தில் கத்தோலிக்கத்துவத்தை எப்படிக் கொண்டு செல்லப்போகின்றார்கள் என்ற அவர்களுடைய பார்வையின் அடிப்படையிலேயே தங்கள் வாக்குளை வழங்குவார்கள். தற்போதுள்ள போப் நோய்காரணமாக, முதுமை காரணமாக ஓய்வுபெற்றாலே அடுத்த போப்பாண்டவருக்கான தெரிவு நடைபெறும். தன்னால் முடியாத போது தாங்கள் ஓய்வுபெறுவோம் என போப்பாண்டவர்கள் உடன்பட்டே வருகின்றனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையின் பொருளாதார இருள் மெல்ல விலகுகின்றது!

இலங்கையின் பொருளாதார இருள் மெல்ல விலகுகின்றது!

இலங்கைக்கு சர்வதேச தனியார்கள், நிறுவனங்கள் வழங்கிய பணமுறியை 27 சதவீதத்தால் குறைத்து புதிய பணமுறியை ஏற்றுக்கொள்ள உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி புதிய பணமுறி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது. ஜனாதிபதி அனுர ஆட்சிக்கு வந்தது முதல் பொருளாதார ரீதியில் இலங்கை ஸ்தீரத் தன்மையடைந்து வருகின்றது. 2022இல் இலங்கை தன்னுடைய 46 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்த முடியாமல் இன்னல்பட்டதையடுத்து பொருளாதார நெருக்கடி ஏற்ப்பட்டு எரிபொருள் போன்ற அத்தியவசிய பொருட்களை வாங்குவதற்கான டொலர் கையிருப்பில் இல்லாமல் போனது. அதனையடுத்து மக்கள் பெற்றோலுக்கு காத்துக்கிடந்ததும், சர்வதேச நாடுகள் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் நியமித்ததும் வரலாறு. அதனால் மேலதிக கடன்களைப் பெறாமல் டொலர் கையிருப்பை அதிகரிப்பதில் தற்போதைய அரசு மிகத்தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.

அதனால் ஜனாதிபதி அனுராவின் ஒவ்வொரு அசைவும் சுற்றுலாத்துறையை வளர்ப்பது, முதலீட்டாளர்களைக் கவருவது, நாட்டை டிஜிற்றலைஸ் ஆக்குவது, தொழில்முனைவோரை ஊக்குவிப்பது என்பதை நோக்கியதாக உள்ளது. இந்திய விஜயத்தின் போது இவ்விடயங்கள் மிக அழுத்தம் திருத்தமாக உரையாடப்பட்டுள்ளது. உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுராவின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது. இந்திய முதலீட்டாளர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இந்திய முதலீட்டளர்கள் துறைசார் விற்பனர்களுடனான சந்திப்பில் இலங்கை தொழில்முனைவோருக்கான நட்பு நாடு எனச் சொல்லி அவர்களை வரவேற்றுள்ளார்.

அரசாங்கம் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டங்களுக்கு அப்பால் சென்று கடன் பெறவில்லலை எனவும் நிர்ணயிக்கப்பட்ட 3.7 ரில்லியன் ரூபாய்களே கடன்வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதுவரை 2 ரில்லியன் ரூபாய்களே உள்ளுரளவில் பெறப்பட்டுள்ளதாகவும் ரெரிட்டே ரிசேர்ச் என்ற சுயாதீன சிந்தனை மையம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் தேவையானால் இன்னும் 1.7 ரில்லியன் ரூபாய்களை உள்ளுர் பணமுறியைக் கொடுத்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை நெருக்கடியைச் சந்தித்த போது அதன் மொத்தத் தேசிய உற்பத்தி – ஐpடிபி 1.2 சதவிகிதத்திலிருந்து தற்போதைய கடைசிக் காலாண்டில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகரத்திற்கு வந்தபோது 5.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இலங்கையின் அனைத்துத் துறைகளும் வளர்ச்சியைக் காட்டினாலும் கட்டிட நிர்மானம் 23.8 சதவீதமாகவும் சேவைத்துறை 18.8 விகிதமாகவும் தேயிலை 16.3 விகிதமாகவும் எரிசக்தித்துறை 15.2 விகிதமாகவும் துணித்தொழில் 13.5 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. இவற்றின் பிரதிபலிப்பாக இலங்கை நாணயத்தின் பெறுமதியிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரிக்ஸில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பத்திற்கான ஆதரவை தாங்கள் முழுமையாக வழங்குவோம் என இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிறி விக்கிரம் மிசிறி தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் இலங்கை பிரிக்ஸில் இணைவது என்பதனைக் காட்டிலும் பிரி;க்ஸினுடைய புதிய அபிவிருத்தி வங்கியினூடாக நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்கான மூலதனத்தை பெறுவதிலேயே அது ஆர்வமாக உள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, பிரித்தானியர் சங்கர் விடுதலை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, பிரித்தானியர் சங்கர் விடுதலை!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பிரித்தானியப் பிரஜையான விஜயசுந்தரம் சங்கர் திங்கட்கிழமை 15ம் திகதி நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார். தன்னுடைய தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நவம்பர் 30 இலங்கை வந்த இவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் நிர்வாகிகளுடனும் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள்உருவாக்கத்திற்காக பணம் சேர்த்ததாக இவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. 2012 இல் குற்றப் புலனாய்வுத் தடுப்புப் பிரிவினர், இவ்வாறானவர்களின் பட்டியலைத் தயாரித்து நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. விஜயசுந்தரம் சங்கர் சார்பில், அண்மையில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவுக்காகப் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா முன்னிலையாகி வாதிட்டார்.

“விஜயசுந்தரம் சங்கர் 2010 பிரித்தானியாவுக்குச் சென்று வாழ்கின்றார். 2012இல் அவர் பிரித்தானிய பிரஜையுமானார். அவர் பிரித்தானியா சென்ற பின் நாட்டுக்கு தன்னுடைய தாயாரின் இறுதிக் கிரியைகளுக்காக நாடு திரும்பியவர். 2009 ஆண்டுக்குப் பின் இவ்வாறு பல புலம்பெயர் தமிழர்கள் ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்யப்படுகிறார்கள். இது சம்பந்தப்பட்டவர்களை மிகவும் பாதிக்கின்றது. நாட்டினது நற்பெயரையும் பாதிக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை வர அஞ்சுகின்றனர். இதனால் சுற்றுலாத்துறையும் பாதிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்தவர்கள் நாட்டில் முதலீடு செய்வதையும் தடுக்கின்றது” போன்ற காரணங்களை முன் வைத்து கே வி தவராசா வாதிட்டார். அவர் பணத்தை அனுப்பியது உண்மைதான். அது அவருடைய தாய் தகப்பனுக்கு அதுவுமொரு குற்றமா எனவும் கேள்வி எழுப்பினார். இறுதியில் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி விஜயசுந்தரம் சங்கரை விடுதலை செய்தார்.