போப்பாண்டவருக்கான போட்டியில் கார்டினல் மல்கம் ரஞ்சித்!
தற்போதைய 88 வயதடையும் போப்பாண்டவர் பலவீனமாகவும் நோயாளியாகவும் ஆகும் நிலையில் அடுத்த போப்பாண்டவருக்கான தெரிவு விரைவில் இடம்பெறலாம் எனவும், அடுத்த போப்பாண்டவருக்கான போட்டியில் கொழும்பு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்களும் போட்டியிடுவார் என வத்திகானோடு தொடர்பான இணையத்தளம் தெரிவித்துள்ளது. இப்போட்டியில் 12 கார்டினல்கள் போட்டியிட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்டினல் மல்கம் ரஞ்சித் வெளிப்படையான கருத்துக்களை முன்வைத்து வருபவர். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரிவருபவர். தற்போதைய போப்பாண்டவர் பிரன்ஸிஸ் ஒப்பீட்டளவில் லிபிரல் கொள்கையுடையவர். லத்தீன் அமெரிக்காவில் வளர்ச்சியடைந்த விடுதலை இறையியலூடாக மேலே வந்தவர்.
பொதுவாக அடுத்து வரும் போப்பாண்டவர் முன்னையவருடைய வழியில் செல்லமாட்டார் என்ற கருத்து இருப்பதாகவும் அதனால் அடுத்த போப்பாண்டவர் சற்று இறுக்கமான பழமைத்துவவாதியாக அமையலாம் எனவும் கருதப்படுகின்றது. போப்பாண்டவரை கார்டினல்கள் தெரிவு செய்வர். ஆனால் அவர்கள் 80 வயதுக்கு குறைவானவர்களாகவும் இருக்க வேண்டும். 253 கார்டினல்களில் 140 பேர் எண்பது வயதுக்குக் குறைந்தவர்கள். இவர்கள் நேரடியாக வத்திக்கானுக்கு வந்து வாக்களிக்க வேண்டும். இந்த வாக்களிப்பு நீண்ட நாட்களுக்கு நடைபெறும். ஆனால் வாக்களிக்கப் போகும் கார்டினல்களுக்கு போட்டியிடும் கார்டினல்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கான சூழலும் இல்லை. போட்டியில் உள்ளவர்கள் தாம் எதிர்காலத்தில் கத்தோலிக்கத்துவத்தை எப்படிக் கொண்டு செல்லப்போகின்றார்கள் என்ற அவர்களுடைய பார்வையின் அடிப்படையிலேயே தங்கள் வாக்குளை வழங்குவார்கள். தற்போதுள்ள போப் நோய்காரணமாக, முதுமை காரணமாக ஓய்வுபெற்றாலே அடுத்த போப்பாண்டவருக்கான தெரிவு நடைபெறும். தன்னால் முடியாத போது தாங்கள் ஓய்வுபெறுவோம் என போப்பாண்டவர்கள் உடன்பட்டே வருகின்றனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.