உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

பண்டையகாலத்து மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் விஜயம் !

மன்னார் – நானாட்டான் வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக் குற்றிகள், சட்டி ,பாணை ஓட்டுத் துண்டுகளும் அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்டு முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் விஜயம் செய்ததுடன் ,யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ட பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் ,யாழ்ப்பாண கோட்டை புனர்நிர்மான உத்தியோகத்தர்ப.கபிலன் , யாழ்.கோட்டை அகழ்வாய்வு உத்தியோகத்தர் வி.மணிமாறன் , தொல்லியல்துறை மாணவர்கள் சிலருடனும்  கலந்துரையாடியுள்ளார்.

மேலும் வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் இவ் நாணயக்குற்றிகள் வரலாற்று நூல்களின் படி மீன் மற்றும் வாள் சின்னங்கள் பாண்டிய மன்னர்களுடைய முடியாட்சிக்கு உரியவையாக அறிய முடிகிறது எனவும் குறிப்பிட்டதுடன், இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இச்சந்திப்பில் நானாட்டான் பிரதேச சபை உப தவிசாளரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஸ்தம்பித்தது வடக்கு கிழக்கு – தமிழ்தேசிய கட்சிகளின் ஹர்த்தாலிற்கு வடக்கு – கிழக்கு மக்கள் பூரண ஆதரவு !

ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலிற்கு யாழ்ப்பாணம் மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

இன்றைய தினம் ஹர்த்தாலினாள் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியது. யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள்,பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வீதிகளில் பயணிக்கவில்லை, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இன்றைய தினம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு கிழக்கில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அழைப்பிற்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி தமது ஆதரவினை அளித்துள்ளார்கள், எனினும் நேற்றைய தினத்தில் இன்றைய ஹர்தாலுக்கு எதிராக போராட்டம் இடம்பெற்ற போதும், தமிழ் மக்கள் ஹர்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்கி உள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

“தியாகி திலீபன் நினைவேந்தலை நடத்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 பேரில் யாரும் என்னை முன்னிலையாகும்படி கோரவில்லை” – எம்.ஏ.சுமந்திரன்

“தியாகி திலீபன் நினைவேந்தலை நடத்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 பேரில் யாரும் என்னை முன்னிலையாகும்படி கோரவில்லை” என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தியாகி திலீபன் நினைவேந்தலை நடத்தக் கூடாதென யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 பேரில் யாரும் என்னை முன்னிலையாகும்படி கோரவில்லை. வழக்கொன்றில் முன்னிலையாகுவதெனில் அந்த தரப்பினர் சட்டத்தரணியை அணுக வேண்டும் அப்படி அணுகாததால் நான் முன்னிலையாகவில்லை.

கடந்த முறை யாழ்.மாநகரசபை முதல்வர் ஆல்நோட் என்னை தொடர்பு கொண்டு முன்னிலையாகும் படி கேட்டுக் கொண்டார். அதனால் முன்னிலையானேன். நினைவேந்தலிற்கு நீதிமன்றம் அனுமதித்தது. அடுத்த முறையும் அனுமதித்தது.

இதே நீதிமன்றம் தான் நினைவேந்தலிற்கு அனுமதியளித்தது. அந்த வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டியிருந்தாலே நினைவேந்தலிற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும்.

நீதிமன்றத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரே, என்னை ஆல்நோட் அணுகினார். ஆனால், அனைத்தும் முடிந்த பின்னரே அவர் அணுகினார். அதனால் பலனிருக்கவில்லை.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க வேண்டுமென மக்கள் தன்னெழுச்சியாக விரும்பியிருந்தனர். மாறாக திலீபன் நினைவேந்தலை நடத்த வேண்டுமென்ற அதிகளவு உணர்வு தமிழ் மக்களிடம் இருப்பதாக தெரியவில்லை.

சில அரசியல் கட்சிகள் அதை ஒழங்கு செய்கிறார்கள். ஆனால், நினைவேந்தலை செய்யும் உரிமை தமக்கு இருப்பதாக மக்கள் உணர்கின்றார்கள். யாராவது நினைவேந்தலை ஒழுங்கமைத்தால் மக்கள் அதில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

“புலிகளின் ஆதரவாளர்களையாவது வளைத்துப் பிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் திலீபன் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“காத்திரமான அரசியல் வேலைத் திட்டம் ஏதுமின்றி மக்கள் ஆதரவை இழந்துள்ள நிலையில் புலிகளின் ஆதரவாளர்களையாவது வளைத்துப் பிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் திலீபன் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, ஈழ விடுலைப் போராட்ட இயக்கங்களின் ஆரம்ப கால உறுப்பினரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறித்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “திலீபனை நினைவுகூருவது தொடர்பாக தற்போது பேசி வருகின்ற அரசியல் தலைவர்கள் சுயநல அரசியல் நோக்கங்களுக்காக பேசுகின்றார்களே தவிர, எவரும் உளப்பூரவமாக பேசவில்லை.

குறித்த அரசியல் தலைவர்களை இதுதொடர்பான பகிரங்க விவாத்திற்கு வருமாறு அழைக்கின்றேன். குறிப்பாக ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற அமைப்புக்களை புலிகளின் தலைமை அழித்தபோது யாழ்ப்பாணத்தில் அதனை நேரடியாக திலீபன் வழிநடத்தியிருந்தார்.

அதேபோன்று, தமிழரசுக் கட்சித் தலைவர்களும் புலிகளின் தலைமையினால் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதுமாத்திரமல்ல, தற்போது குறித்த அமைப்புக்களின் தலைவர்களாக திலீபனை நினைவுகூர வேண்டும் என்று கையொப்பம் இட்டவர்களும் புலித் தலைவர்களின் கொலைப் பட்டியலில் இருந்தவர்கள்தான்.

இவ்வாறானவர்களினால் உளப்பூர்வமாக திலீபனை நினைவு கூரமுடியாது. எனினும் காத்திரமான அரசியல் வேலைத் திட்டம் ஏதுமின்றி மக்கள் ஆதரவை இழந்துள்ள நிலையில் புலிகளின் ஆதரவாளர்களையாவது வளைத்துப் பிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் திலீபன் தொடர்பில் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

”ராஜபக்ச அரசு கொடூர அரசு என்பது உலகறிந்த உண்மை . இந்த அரசு தமிழர்களை நாளுக்குநாள் வதைக்கின்றது” – சஜித் பிரேமதாஸ , அநுரகுமார திஸாநாயக்க காட்டம் !

“ஒவ்வொரு தினமும் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர உரிமையுண்டு. அதை எவரும் பறிக்கவே முடியாது. அதேவேளை, ஓர் இனம் தமது உரிமைகளை வலியுறுத்தி அறவழியில் போராட இந்த நாட்டின் சட்டத்தில் இடம் உண்டு. அதையும் எவரும் தடுக்கவே முடியாது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ராஜபக்ச அரசு கொடூர அரசு என்பது உலகறிந்த உண்மை. இந்த அரசின் அடாவடிகள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. அதிலும் தமிழர்களை இந்த அரசு மேலும் வதைக்கின்றது.

தமிழ் மக்களின் ஆணையுடன் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ள தமிழ்த் தலைவர்கள் தங்கள் இனத்தின் உரிமை சார்ந்த விடயங்களை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. அதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். நாடாளுமன்றத்திலும் எமது கண்டனங்களை நேரில் தெரிவித்துள்ளோம்.

ஆயுதப் போரில், அறவழிப் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரவும், அந்த உரிமை மறுக்கப்படுகின்றபோது அதற்கு எதிராக அறவழியில் போராடவும் தமிழர்களுக்கு உரிமையுண்டு. அதை இராணுவத்தைக்கொண்டு அல்லது பொலிஸாரைக் கொண்டு அல்லது நீதிமன்றத்தைக் கொண்டு தடுத்து நிறுத்தும் ஈனத்தனமான செயலை இந்த அரசு உடன் கைவிட வேண்டும்” – என்றார்கள்.

தடைகளையும் தாண்டி மட்டக்களப்பு  கல்லடி விஸ்ணு ஆலயத்தில் மட்டக்களப்பு இளைஞர்களால் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி !

தியாகிதிலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிக்க கூடாது என நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.சாவகச்சேரியில் தமிழ்தேசிய கட்சிகள் கூடி உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

திலிபனின் நினைவுதின அனுஸ்டிப்பை தடைசெய்ய பொலிஸாரும் கண்காணிப்புக்குழுவினரும் தடைசெய்ய மும்முரமாக செயற்பட்டு வருகின்ற போதிலுமு் கூட  இலங்கை அரசின் பல தடைகளையும் தாண்டி மட்டக்களப்பு  கல்லடி விஸ்ணு ஆலயத்தில் மட்டக்களப்பு இளைஞர்களால் தியாக தீபம் திலீபனுக்கு மலர்தூவி பிராத்தனை அஞ்சலி அனுஸ்டிப்புப்பு இடம்பெற்றுள்ளது.

1 38

”பொலிஸார் மற்றும் அரச புலனாய்வு பிரிவினரின் கெடுபிடிகளுக்கும் கண்காணிப்புகளுக்கும் மத்தியில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் உண்ணாநோன்பு போராட்டம் !

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலிலும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலின் இறுதி நாளான இன்று (26.09.2020) அடையாள உண்ணாநோன்பு இடம்பெற்று வருகின்றது.

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை கோரி இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் தியாக தீபம் திலீபன் அவர்களின் வழியில் இடம்பெற்று வருகின்றது.

பொலிஸார் மற்றும் அரச புலனாய்வு பிரிவினரின் கெடுபிடிகளுக்கும் கண்காணிப்புகளுக்கும் மத்தியில் உண்ணாநோன்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

unnamed 27

இந்த உண்ணாநோன்பு போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா , முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் , கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

புரட்டாதி சனி விரதம் இன்றைய நாளில் அனுஷ்டிக்க பட்டு வரும் நிலையில் ஆலயத்துக்கு அதிகளவான மக்கள் வருகைதருகின்ற நிலையில் இந்த உண்ணாநோன்பு முன்னெடுக்க பட்டு வருகின்றது.

தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்பு !

தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

போராட்ட இடத்தில் கண்காணிப்புக் கடமையில் இருக்கும் பொலிஸார், மாணவர்களை போராட்ட இடத்துக்கு அனுமதியளிக்க மறுத்தனர். எனினும் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா பொலிஸாருக்கு விடயத்தை எடுத்துக் கூறியதன் அடிப்படையில் பின்னர் அனுமதித்தனர்.
உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்.பல்கலை. மாணவர்களும் இணைவு | Muthalvan  News
சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இன்று காலை 9 மணி தொடக்கம் இடம்பெற்று வரும் இந்தப் போராட்டத்தில் பலரும் பங்கேற்றுள்ளனர்.

தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த போதும் வல்வெட்டித்துறை பொலிஸாரால் நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டது.

இந்த நிலையிலேயே அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகிறது.

பௌத்த தேரர்களுக்கு ஆங்கிலம், கணணி மற்றும் தொழில்நுட்ப அறிவு மேம்பாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை !

பௌத்த தேரர்களுக்கு ஆங்கிலம், கணணி மற்றும் தொழில்நுட்ப அறிவு மேம்பாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

தேரர்களுக்கு ஆங்கிலம், கணணி மற்றும் தொழில்நுட்ப அறிவு மேம்பாடு உட்பட பிரிவினா ஆசிரியர்களின் நியமனங்கள் , சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் குறித்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும் யோசனைகளையும் திட்டங்களையும் முன்வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை விடுத்துள்ளார்;.

இது குறித்த பேச்சுவார்த்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அதற்கு சகல சமய ரீதியிலான பதிவு செய்யப்பட்ட அறநெறி பாடசாலைகளில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் ஒழுங்கு படுத்துவதற்கும் ராஜாங்க அமைச்சின் பூரண தலையீடு காணப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் தேவைகளை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை கண்டறிந்து அதனை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

பல்கலைக்கழகங்களுக்கும், தொழில்களுக்கும் இணைத்துக்கொள்ளும் போது அறநெறி சான்றிதழுக்கு முக்கியத்துவம் வழங்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

“உயிர் நீர்தவர்களை நினைவு கூர்வதற்கு உள்ள அடிப்படை உரிமையினை அரசாங்கம் மறுக்கக்கூடாது” – வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம் !

உயிர் நீர்தவர்களை நினைவு கூர்வதற்கு உள்ள அடிப்படை உரிமையினை அரசாங்கம் மறுக்கக்கூடாது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத் தீர்மானம் உடனடியாகவே ஜனாதிபதிக்கு கிடைக்கத்தக்கவாறு ஜனாதிபதி செயலகத்திற்கு தொலைநகல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (25.09.2020) நடைபெற்றது. இவ் அமர்வில் தவிசாளர் தியாகராஜா நிரோஷினால் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்வதற்கான விசேட பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது.

இப்பிரேரணைக்கு சபை ஆதரவு கோரப்பட்ட போது சபையில் பிரசன்னமாயிருந்த உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரித்து ஏற்றுக்கொண்டனர்.

இவ்விடயத்தில் பிரேரணையினைச் சமர்ப்பித்து கருத்துரைத்த தவிசாளர், போரில் நேரடியாகத் தொடர்பு பட்டும் தொடர்புராமலும் உயிர் நீத்தவர்களை அஞ்சலிப்பதற்கு எமது மக்களுக்கு உரிமை உண்டு. நினைவு கூர்தல் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். சர்வதேச சமவாயங்கள் ரீதியிலும் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்வதற்கான சகல உரிமையும் எமக்கு இருக்குறது.

இந் நிலையில் தற்போது நினைவு கூர்தலுக்கு பல்வேறுபட்ட இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந் நிலையில் அரசாங்கம் நாட்டில் நினைவு கூர்தலுக்கான உரிமையைக் கேள்விக்குட்படுத்துவதையும் நிறுத்தவேண்டும் என மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி அலகு என்ற வகையில் நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது