கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய விதிமுறைகள் குறித்து விவாதிக்க இன்று(03.11.2020) பாராளுமன்றம் கூடியிருந்தது. இன்றைய கலந்துரையாடல்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போகும் முஸ்லீம்களின் உடலை எரிப்பது தொடர்பான விவாதங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.
இன்றைய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ “கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம் நபர்களை தமது மத சம்பிரதாயங்களின் பிரகாரம் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், அரசாங்கம் இனவாத செயற்பாடுகளை கொரோனா விடயத்திலும் காண்பிப்பதாகவும்” முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் தமது பதிலை நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதன்போது பதில் கூறிய நீதி அமைச்சர் அலி சப்ரி,
கொவிட் -19 என்பது மிகவும் அச்சுறுத்தலான நோயாகும். இலங்கைக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்கும் இது அச்சுறுத்தலான நோயாகவே உள்ளது.
நாம் அனைவரும் இந்த நோய்க்கு முகம் கொடுத்து வருகின்றோம். கொவிட் -19 வைரஸ் தொற்று நோய் தாக்கத்தில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதில் முஸ்லிம் மக்களிடையே சில முரண்பாடுகள் உள்ளது என்பதையும் நாம் நன்கறிவோம். ஆனால் இதனை அரசியலாக்குவது தகுதியான செயற்பாடாக அமையாது.
முஸ்லிம் மக்களின் வேண்டுகோள் குறித்து வைத்தியர்களிடம் மீண்டும் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்தோம். ஆறுமாத காலத்திற்கு முன்னரே நாம் இந்த வேண்டுகோளை விடுத்தோம்.
எனினும் விஞ்ஞான அல்லது மருத்துவ ரீதியில் இது தாக்கத்தை செலுத்தலாம் என வைத்தியர்களிடம் அச்சம் நிலவியது. அது என்னவென்றால் தகனம் செய்வதில் முஸ்லிம் சமூகம் கேட்பதை போல நடவடிக்கை எடுத்தால் அது வைரஸ் பரவலுக்கு ஏதுவாக அமையலாம் என்ற அச்சம் நிலவியது.
எனினும் ஆறுமாத காலத்தில் இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து பார்ப்பதாக வைத்தியர்கள் எமக்கு கூறினர். இப்போது மீண்டும் நாம் இது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.
எனவே இதனை அரசியல் சுயநலன்களுக்காக கையாள வேண்டாம். மனிதாபிமான ரீதியில் இதனை கையாள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் எனவும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விவாதங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்குமு் போது “கொரோனா வைரஸ் தொற்றால் முஸ்லிம்கள் உயிரிழக்கும்பட்சத்தில் அவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி தரவேண்டும் எனவும், தான் உயிரிழந்தால்கூட தன்னையும் எரிக்கும் நிலை ஏற்படும் எனவும், ஆகவே இந்த தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் மீள்பரிசிலனை செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.