உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“இறந்தவர்கள் மீது இவ்வளவு பயம் எதற்கு? அவர்களில் பலரை சர்வதேச விதிகளை மீறிக் கொலை செய்தமையா?” – மாவீரர் தின தடை தொடர்பாக சுமந்தின் கேள்வி !

“இறந்தவர்கள் மீது இவ்வளவு பயம் எதற்கு? அவர்களில் பலரை சர்வதேச விதிகளை மீறிக் கொலை செய்தமையா?” என மாவீரர் தின நினைவேந்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் இறைமை என்பது அனைத்து மக்களுக்கும் உரித்தானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (25.11.2020) இடம்பெற்ற இலங்கையின் 75ஆவது வரவு- செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“போரினால் இறந்தவர்களை நவம்பர் மாதத்தில் நினைவு கூருவது உலக வழமை. தமிழர்களும் இலங்கை அரசோடு போராடி உயிர் நீத்த தம் உறவுகளை கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக நவம்பர் மாதமே நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

அரசாங்கம் இந்த வருடம் இந்த நினைவு கூரலை முடக்கக் கடுமையான முயற்சியெடுக்கிறது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் சிறப்பு ஹெலிகொப்டர்களில் வட-கிழக்கெங்கும் பயணித்து நினைவு கூரல் தடை கோரி வழக்காடுகிறார்கள்.

சட்டமா அதிபர் திணைக்களம் உயர் கோவிட்-19 தொற்றுப் பிரதேசத்தில் இருக்கிறது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களச் சட்டத்தரணிகளோ எதுவித தனிமைப்படுத்தலுமின்றி வட-கிழக்கெங்கும் சிறப்பு விஜயம் செய்து கொண்டிருக்கிறார்கள். காரணம் என்ன? இறந்தர்வகளின் உறவுகள் தம் தந்தை, தாய், சகோதர-சகோதரிகளை நினைவு கூருவதைத் தடை செய்ய வேண்டும். இதுதான் நோக்கம். இறந்தவர்கள் மீது இவ்வளவு பயம் எதற்கு? அவர்களில் பலரை சர்வதேச விதிகளை மீறிக் கொலை செய்தமையா?

இறைமை என்பது அனைத்து மக்களுக்கும் உரித்தானது. பெரும்பான்மை மக்கள் மாத்திரம் இறைமையை அனுபவிக்கும் போது, ஏனையோர் தமக்கான உரிமையைத் தாமே தேடிக் கொள்ளும் நிலையை அரசாங்கமே உருவாக்குகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அரசாங்கம் கூலிக்கு மாரடிக்கும் ஊடகங்களுக்கு நிறைய சலுகைகளை கொடுக்கிறது ஆனால் உண்மையான செய்திகளை சொல்கின்ற ஊடகங்களை அழிக்கிறது”  – மனோகணேசன்

“அரசாங்கம் கூலிக்கு மாரடிக்கும் ஊடகங்களுக்கு நிறைய சலுகைகளை கொடுக்கிறது ஆனால் உண்மையான செய்திகளை சொல்கின்ற ஊடகங்களை அழிக்கிறது”  என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் இதனை தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கினுடைய பக்கத்திலேயே வெர் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

இது பற்றி அவர் தெரிவித்ததாவது,

இந்த நாட்டிலே இரண்டுவகையான ஊடகங்கள் உள்ளன. ஒன்று கூலிக்கு மாரடிக்கும் ஊடகங்கள் மற்றது உண்மைக்காக, ஜனநாயகத்திற்காக போராடுகின்ற ஊடகங்கள். இவ்வாறான ஊடகங்களைத்தான் அரசாங்கம் தாக்கமுயற்சிக்கிறது. இதே அரசாங்கம் கடந்த முறை ஆட்சியில் கூட இந்த ஊடகங்களை கண்டித்து ,எரித்து, ஒழித்தது. இருந்தும் அந்த ஊடங்கங்கள் நெருப்பிலே இருந்து எழுந்துவரும் பீனிக்ஸ் பறவைகள் போல மீண்டும் எழுந்து வந்தன.

ஜனநாயகத்தைப்பாதுகாப்பதற்கு, மக்களாட்சியைப் பாதுகாப்பதற்கு நான்கு தூண்கள் இருக்கின்றன. ஒன்று நிறைவேற்று அதிகாரம், இரண்டு பாராளுமன்றம், அடுத்தது நீதுத்துறை ,நான்காவது பிரதித்துவம் தான் ஊடகம். கடந்த காலங்களில் 50 க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்,பெரும்பான்மையானோர் தமிழ் ஊடகவியலார்களாக இருந்திருக்கிறார்கள் அது உன்மை. ஆனால் கொள்ளப்பட்ட ஊடகவியலாளர்கள் மக்களுக்காக குரல் கொடுத்தவர்கள்.

மேலும் இந்த அரசாங்கம் கூலிக்கு மாரடிக்கும் ஊடகங்களுக்கு நிறைய சலுகைகளை கொடுக்கிறது ஆனால் உண்மையான செய்திகளை சொல்கின்ற ஊடகங்களை அழிக்கிறது. ஆகவே இவற்றுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் எனவும் அவர் தன்னுடைய பதிவில்  தெரிவித்துள்ளார்.

பிட்டு தொடர்பாக கருத்து தெரிவித்ததற்கு மன்னிப்பு கோரினார் பிரசாத் பெர்ணான்டோ…!

“பிட்டு, வடை, சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களை பீட்சா உண்ணும் நிலைமைக்கு கொண்டு வந்தோம்” என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ சில நாட்களுக்கு முன் யாழ் நீதிமன்றில் மன்றுரைத்திருந்தார்.

இவரின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டதுடன் நாடாளுமன்றத்தில் கூட பிரசாத் பெர்னாண்டோக்கு எதிரான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனால், நேற்று இடம்பெற்ற மாவீரர் நாள் வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையன அரச சட்டவாதி, “இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட சமயத்தில் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்த கருத்து, எந்த இன மக்களின் உணவு பழக்க வழக்கம் அல்லது நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் விதமாக இருந்தால், அதற்கு அவர் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்” என அறிவித்தார். இதன்போது எழுந்த பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ, தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரினார்.

“நாங்கள் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதற்காக யாரிடமும் சண்டையிடவில்லை” – அமைச்சர் மகிந்தசமரசிங்க

“நாங்கள் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதற்காக யாரிடமும் சண்டையிடவில்லை” என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் (25.11.2020) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் பேசிய அவர்,

எந்தவொரு உறுப்பு நாட்டிற்கும் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து வாய்மூல அறிவிப்பின் ஊடாக விலகிச் செல்வதற்கு உரிமையிருக்கின்றது. மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுவது முற்றிலும் பொய்யாகும்.

நாங்கள் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதற்காக யாரிடமும் சண்டையிடவில்லை. அனைத்து விடயங்களையம் நியாயப்படுத்திய பின்னரே அமைச்சர் தினேஸ் குணவர்தன ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார். அதற்காக ஏனைய உறுப்பு நாடுகள் எம்மை எதிர்க்கவில்லை. இந்த நாட்டு மக்கள் எதிர்ப்பார்த்த விடயத்தையே அரசாங்கம் செய்திருக்கிறது.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஜெனீவா விவகாரம் குறித்தோ அல்லது இணை அனுசரணை விடயத்திலோ நான் இந்த விவகாரத்துடன் தொடர்புபடவில்லை. அப்போதைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன என்னை ஜெனீவா செல்லும்படி கோரிய போதிலும், அதனையும் நான் நிராகரித்திருந்தேன்.

எமக்கு மிகச் சிறந்த வெளிநாட்டுத் தூதுவர்கள் இருக்கின்றனர். அதேபோல இறுதிப்போரில் சிவிலியன்களை காப்பாற்ற வெளிநாடுகள் கப்பல் அனுப்ப கோரியபோது அப்போதைய அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அதனை நிராகரித்ததாக நான் கடந்தமுறை நாடாளுமன்றில் கூறியிருந்தேன். பொதுமக்களையும் நாங்கள் போரில் பாதுகாக்க மறக்கவில்லை. 15 ஆயிரம் பேர் வரை இறுதிப்போரின்போது எம்மிடம் சரணடைந்தார்கள். அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தினோம். சர்வதேச நெறிமுறைகளுக்கு அமைய இதனை நடத்திமுடித்தோம்.

இலங்கை இராணுவமே வடபகுதியில் கன்னி வெடிகளை அகற்றியது. மாறாக வெளிநாடுகளில் இருந்து எவரையும் அழைத்துவரவில்லை எனவும்  குறிப்பிட்டுள்ளார்

“சுகாதார நாப்கின்களுக்கு எவ்வித வரி அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை” – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

பெண்கள் பயன்படுத்தும் சுகாதார நப்கின்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக நேற்று பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலுவாகக் குரல் எழுப்பிய நிலையில், சுகாதார நாப்கின்களுக்கு எவ்வித வரி அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு 15 சதவீத வரி முன்மொழியப்பட்டுள்ளமைக்கு எதிராக நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடுந்தொனியில் தங்களது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் டயானா கமகே மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் கீதா குமாரசிங்க ஆகியோர் இதுவிடயத்தில் வலுவான கருத்துக்களை முன்வைத்தனர்.

‘இந்த நாட்டில் நூற்றுக்கு 52 சதவீதமானோர் பெண்களாவர். அவ்வாறிருக்கையில் வரவு – செலவுத்திட்டத்தில் சுகாதார நாப்கின்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இது பெண்களின் சுகாதாரப்பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என்பதால், சுகாதார நாப்கின்களை அத்தியாவசியப்பொருளாக அறிவிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்’ என்று சபையில் டயானா கமகே தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

“எனது வீட்டை அண்மித்த பகுதிகளில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல எமது மக்களை அச்சப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” – த.கலையரசன்

“எனது வீட்டை அண்மித்த பகுதிகளில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல. எமது மக்களை அச்சப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை மாவீரர்தின அனுஷ்டிப்பு நடவடிக்கைகள் நீதிமன்ற தடையுத்தரவுகள் மூலமாக முழுமையாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“விடுதலைக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூறும் இந்த மாதத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதை தடுக்கும் வகையில் அரசியல் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபி மற்றும் மாவீரர் கல்லறைகளை உடைத்து வருவதோடு பொது மக்கள் குறித்த பகுதிக்குள் இராணுவத்தினரின் கெடுபிடிகள் இருப்பது மீளவும் எம் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

மரணித்தவர்களை நினைவு கூற முடியாமல் தடுக்கின்ற விடயம் என்பது மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட சக்தியாகவே பார்க்கின்றேன். அஞ்சலி செலுத்த முடியாமல் தடுக்கின்ற செயற்பாடுகள் இந்த அரசாங்கம் தமிழ் மக்களை எவ்வாறு கையாளுகின்றது என்பதை உணர்த்துகிறது. மக்கள் உள்ளங்களில் இருக்கின்ற தியாகங்களை உள்ள குமுறல்களை வெளிப்படுத்த முடியாத வகையில் இந்த அரசு தடையாக இருக்கின்றது.இந்த அரசு பதவியேற்ற கையோடு இறுக்கமான கெடுபிடிகளை கையாள்வது இந்த நாட்டில் ஜனநாயகம் தமிழ் மக்களுக்கான தீர்வு ,தமிழ் மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் எதிர்காலத்தில் உருவாக போகின்றது என்பதற்கான அடி அத்தியாயமாகத்தான் இந்த விடையம் விளங்குகின்றது.

எனது வீட்டை அண்மித்த பகுதிகளில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல எமது மக்களை அச்சப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆலயங்களில் பூஜை  செய்யக்கூடாது என ஆலய குருமார் ,நிருவாகத்தினரை அச்சுறுத்தி வருகின்றனர்.  ஜே.வி.பி கட்சியின் மறைந்த தலைவர் ரோஹண விஜேயவீர  போன்றோரை அனுஷ்டிக்க முடியும் என்றால் ஏன் தமிழ் மக்கள் அனுஷ்டிக்க முடியாது .

அம்பாறை மக்களுக்கு விடிவை பெற்று தர போகின்றேன் என்ற கருணா முடிந்தால் அனுஷ்டிக்க அனுமதியை பெற்றுத்தர முடியுமா? இதனை விடுத்து பொத்துவில் கனகர் கிராம மக்களை குடியேற்றம் விடையத்தில் அரச அதிபருடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று அந்த மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது இதனை குழப்பும் வகையில் கருணா அந்த இடத்திற்கு சென்றுள்ளார். எமது மக்களை குழப்ப வேண்டிய தேவை கருணாவிற்கு இல்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை விடையம் மிகவும் விஸ்வரூபம் எடுத்துள்ளது . அந்த மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அராஜக செயற்பாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தீர்வை பெற்றுதர முடியாதவர் அம்பாறை மக்களுக்கு எதனை சாதிக்க போகின்றார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவருடன் சுமந்திரன் சந்திப்பு !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஆபிரகாம் சுமந்திரன், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து புதிய தூதுவர் டொமினிக் ஃபர்க்லரை இன்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சுவிட்சர்லாந்து தூதுவருடன் ஐ.நா. தீர்மானம், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் இலங்கையின் சமகால நிலைமைகள் குறித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்

இதேவேளை இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை வலுப்படுத்த சுவிட்சர்லாந்து முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று இதன்போது தூதுவர் வாக்குறுதியளித்தார் என்று அவர் மேலும் கூறினார்.

“அரசை ஆதரித்த காரணத்தால்தான் பிள்ளையான் பிணையில் விடுதலையாகியுள்ளார்” – சார்ள்ஸ் நிர்மலாநாதன்

“அரசை ஆதரித்த காரணத்தால்தான் பிள்ளையான் பிணையில் விடுதலையாகியுள்ளார்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, இராஜாங்க அமைச்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் பயங்கரவாதத் தடைச் சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் சாட்சி இல்லாமல் சிறையில் இருந்துள்ளார் என்ற தர்க்கத்தை அரச தரப்பினர் முன்வைக்கின்றனர்.

இவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால், எமது இளைஞர்கள் சாட்சிகள் இல்லாது வெறும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்துடன் 20 வருடங்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதனையும் அனைவரும் மறந்துவிடக்கூடாது. பிள்ளையானுக்குப் பிணை கொடுக்க முடியும் என்றால் 20 வருடங்களாக சிறையில் உள்ள எமது அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்தவர்களுக்குப் பிணை வழங்க முடியாது என அரச தரப்பினர் எம்மிடம் கூறினார்கள். அப்படியென்றால் பிள்ளையான் எவ்வாறு பிணையில் விடுதலையாக முடியும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் எமது தமிழ் இளைஞர்கள் பொய்க் குற்றச்சாட்டில் வெறுமனே குற்ற ஒப்புதல் சாட்சியங்களை வைத்துக்கொண்டு தடுத்து வைத்திருப்பது நியாயமானதா? இது வெறுமனே அரசின் நிகழ்ச்சி நிரலில் நடைபெறும் செயற்பாடாகும். அரசை ஆதரித்த காரணத்தால்தான் பிள்ளையான் பிணையில் விடுதலையாகியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

“மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க முடியும்” – லக்ஷ்மன் கிரியெல்ல

” பகிர்வினை வழங்கினால் நாடு பிளவுபடாது. மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க முடியும்” என லக்ஷ்மன் கிரியெல்p தெரிவித்துள்ளார்.

என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று (25.11.2020) இடம்பெற்றுவரும் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாததில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் பேசிய அவர் ,

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஆராய உள்நாட்டு விசாரணைக்கு இணங்கி இருக்காவிட்டால் சர்வதேச விசாரணை இடம்பெற்றிருக்கும்.

அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்று நிரைவேற்றப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. இருப்பினும் தற்போது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் அதே நிலைமை தொடராது.

மேலும் அதிகார பகிர்வினை வழங்கினால் நாடு பிளவுபடாது. மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ரிசாத் பதியுதீனுக்கு பிணை வழங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு !

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனுக்கு பிணை வழங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த உத்தரவை நீதிமன்றம் இன்று (25.11.2020) வழங்கியுள்ளது.

ரி9சாத் பதியுதீன் கடந்த ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி காலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் இடம் பெயர்ந்தோரை அழைத்து சென்றமை தொடர்பாக பொது நிதியை தவறான முறையில் பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றசாட்டுகள் ரிசாத் பதியுதீன் மீது சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.