“நாங்கள் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதற்காக யாரிடமும் சண்டையிடவில்லை” என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்றைய தினம் (25.11.2020) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் பேசிய அவர்,
எந்தவொரு உறுப்பு நாட்டிற்கும் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து வாய்மூல அறிவிப்பின் ஊடாக விலகிச் செல்வதற்கு உரிமையிருக்கின்றது. மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுவது முற்றிலும் பொய்யாகும்.
நாங்கள் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதற்காக யாரிடமும் சண்டையிடவில்லை. அனைத்து விடயங்களையம் நியாயப்படுத்திய பின்னரே அமைச்சர் தினேஸ் குணவர்தன ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார். அதற்காக ஏனைய உறுப்பு நாடுகள் எம்மை எதிர்க்கவில்லை. இந்த நாட்டு மக்கள் எதிர்ப்பார்த்த விடயத்தையே அரசாங்கம் செய்திருக்கிறது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஜெனீவா விவகாரம் குறித்தோ அல்லது இணை அனுசரணை விடயத்திலோ நான் இந்த விவகாரத்துடன் தொடர்புபடவில்லை. அப்போதைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன என்னை ஜெனீவா செல்லும்படி கோரிய போதிலும், அதனையும் நான் நிராகரித்திருந்தேன்.
எமக்கு மிகச் சிறந்த வெளிநாட்டுத் தூதுவர்கள் இருக்கின்றனர். அதேபோல இறுதிப்போரில் சிவிலியன்களை காப்பாற்ற வெளிநாடுகள் கப்பல் அனுப்ப கோரியபோது அப்போதைய அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அதனை நிராகரித்ததாக நான் கடந்தமுறை நாடாளுமன்றில் கூறியிருந்தேன். பொதுமக்களையும் நாங்கள் போரில் பாதுகாக்க மறக்கவில்லை. 15 ஆயிரம் பேர் வரை இறுதிப்போரின்போது எம்மிடம் சரணடைந்தார்கள். அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தினோம். சர்வதேச நெறிமுறைகளுக்கு அமைய இதனை நடத்திமுடித்தோம்.
இலங்கை இராணுவமே வடபகுதியில் கன்னி வெடிகளை அகற்றியது. மாறாக வெளிநாடுகளில் இருந்து எவரையும் அழைத்துவரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்